பயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்
இந்த உலகின் மிகப் பெரிய சக்தி எது என்று கேட்டால், அறிஞர்களிலிருந்து , ஞானிகள் வரை பல்வேறு விடைகளை அளிக்கின்றனர். நதிநீர் ,மின்சாரம், காற்று , நெருப்பு, கணினி, இயற்கை, கடவுள் என்று விடைகள்தான் அவை. இவை அனைத்தும் பெரிய சக்திகள் என்பது மறுக்க இயலாத உண்மைதான். எனினும், இவை அனைத்தையும்விட மிகப் பிரம்மாண்டமான சக்தி ஒன்று உள்ளது.
அதுதான் ‘மன ஆற்றல்’ (Mind Power) இதை உருவாக்கி, இயக்குவதுதான், மனிதமூளை . ஒரு மனிதன் வாழ்வதும், அழிவதும் மூளையின் இயக்கத்தினால்தான். மூளையைச் சரியாகப் பயன்படுத்தியவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். சரியாக பயன்படுத்தாதவர்கள் தோல்வியடைகின்றனர்.
அடிப்படையில் அனைத்து மனிதர்களின் மனங்களும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். பயிற்சியும்,முயற்சியும்தான் பலருடைய மனங்களை ஆற்றல் பெற்ற மனங்களாக உருவாக்குகின்றன. முயற்சியும், பயிற்சியும் இருந்தால் ,ஒருவர் தனது மனத்தையே மூலதனமாக்கலாம். வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம் .மனதை வளப்படுத்துவதற்கும் மூலதனமாக்குவதற்க்கும் பலவற்றை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
முதலாவதாக ஒரு இலக்கை நிர்மாணித்துக் (Goal Setting) கொள்ள வேண்டும் . பிறகு அந்த இலக்கை அடைவதற்கு (Goal Attaining ) பல்வேறு திட்டங்களை தீட்டிக்கொள்ள வேண்டும்.
ஒருவர், ஒரு முக்கியமான கட்டத்தில் எடுக்கும் ஒரு முடிவுதான் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். ஆகவே முடிவெடுக்கும் ( Decision Making) திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.
நேரம் மிகவும் முக்கியமானது .தேவையில்லாதவற்றில் கவனம் செலுத்தி நேரத்தை வீணடிப்பதைவிட, தேவையானதில் கவனம் செலுத்தி நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள ( Time Management ) வேண்டும். அணிகின்ற உடையில் கவனம் செலுத்தி , உடல் மொழியை ( Body Language ) வளப்படுத்தி, அனைவரிடமும் பழகும் திறன்களை வளர்த்துக் கொண்டு , இவை அனைத்திலும் புதுமைகளைப் புகுத்துவதில் மனத்தை ஈடுபடுத்த வேண்டும்.
இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தலைமைப் பண்புகளையும் ( Leadership Skills) மற்றும் ஆளுமைத் திறனையும் ( Personality Development) மிகச் சிறப்பாக அமையும் வண்ணம், தகுதிகளையும், திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது ஒருவரின் மன ஆற்றலால் தான் ( Mind Power) இயலும்
மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு கட்டங்களில், இன்பம்,சோகம்,பயம்,கோபம் ஆகிய பல்வேறு உணர்ச்சிகள் தோன்றும். பயம், கோபம் ஆகிய உணர்ச்சிகள் ஒருவரின் வெற்றியை வெகு சீக்கிரம் அழித்துவிடும். இந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு, பய மேலாண்மை ( Fear Management), கோப மேலாண்மை ( Anger Management) ஆகிய உத்திகள் மிகவும் பயன்படும்.
இதற்கும் மன ஆற்றல் மிகவும் உதவும். இதைவிட ஒருவருடைய மன அழுத்தம், மன உளைச்சல் ( Mental Stress,Mental Agony) ஆகியவற்றால்தான், தற்போதுள்ள வாழ்க்கைச் சூழலில் , ஒரு சாதாரண யு.கே .ஜி வகுப்பில் பயிலும் குழந்தை முதல் , ஒரு பெரிய தொழில் அதிபர் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும், இந்த மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றால் பல்வேறு மன வியாதிகளும் , அவைகளைத் தொடர்ந்து தீராத உடல் நோய்களும் வருகின்றன. இவைகள் வராமல் தடுக்கப்பட வேண்டுமானால் , இவர்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த (Stress Management) முறையான பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் . இதற்கும் மன ஆற்றல் ( Mind Power) தான் மிகவும் உதவும்.
எனவே, ஒருவர் தனது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், மன அழுத்தம் இன்றி தொடர்ந்து பணியாற்றிட வேண்டுமானால், அவர், அவரது மன ஆற்றலை(Mind Power ) வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த மன ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கு முயற்சியும்,முறையான பயிற்சிகளும், தன்னம்பிக்கையும் இருந்தால்,ஒருவரது மன ஆற்றல் அதிகரித்து, அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது நிச்சயம்!
No comments:
Post a Comment