உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..!
நம்மில் பலருக்கும் உள்ள பிரச்சினையே நமக்கான திறமையை உரிய நேரத்தில் வெளிப்படுத்தத் தெரியாதது தான். அந்த வீட்டுக்கு புதிதாக வந்த மருமகள் பிரார்த்தனை அறையில் மனமுருக இறைவனை துதித்து பாடிக் கொண்டிருந்தாள். அப்போது வெளியில் வாக்கிங்கை முடித்து விட்டு வந்த மாமனார் தன் மகனிடம், “எத்தனை அருமையான பாட்டு… இன்னும் கொஞ்சம் டிவி வால்யூமை கூட்டி வை” என்றார்.
மகன் சொன்னபிறகு தான் தன் மனம் உருகப் பாடியது தன் அன்பான மருமகள் என்பதை தெரிந்து கொண்டார். “சினிமாவில் பாடியிருந்தால் திரைக்கு இன்னொரு பி.சுசிலா கிடைத்திருக்கக் கூடுமே! ஏன் மருமகளே உன் திறமையை இத்தனை நாளாக குடத்திலிட்ட விளக்காக வைத்திருந்தாய்?” என்று மருமகளிடம் கேட்டார், மாமியார்.
மருமகளோ, “எனக்கு எங்கள் வீட்டில் அந்த அளவுக்கு சுதந்திரம் இல்லை மாமா. நாளைக்கு இன்னொரு வீட்டில் போய் சமையலைக் கவனிக்கப் போகிற பெண்ணுக்கு பாட்டு என்ன வேண்டிக்கிடக்கிறது என்று அம்மா சொல்லி விட்டார். அதனால் என் பாட்டு `அதுபாட்டுக்கு’ இருந்து விட்டது என்றாள்.
இந்தப் பெண் என்றில்லை, பலரும் தங்கள் திறமையை சரிவர அரங்கேற்ற முடியாமல் கடைசி வரை தங்கள் திறமைகளை தங்களுக்குள்ளே புதைத்துக் கொள்ளும் அவலம் தான் நடந்து வருகிறது. சிலரது அபூர்வ திறமைகளை பள்ளிக்கூடம் தட்டிக் கொடுக்கும். கல்லூரி முத்தம் கொடுக்கும். ஆனால் கல்லூரிப்படிப்பை முடித்த பிறகு நண்பர்களிடம் இருந்து இந்தக் கலையாளர்கள் அந்நியமாகி விடுகிறார்கள். கடைசியில் எந்த கலைக்காக கல்லூரி முழுக்க அறியப்பட்டார்களோ, அந்தக் கலையை தங்களிடம் இருந்து முற்றிலும் விலக்கி வைத்தபடி கம்பெனி கம்பெனியாய் வேலைக்கு அலைந்து கொண்டிருப்பார்கள்.
இந்த நாட்களில் மறந்தும் அவர்கள் தங்கள் கலை பற்றிப் பேசுவதில்லை. அப்புறம் ஒருவழியாய் வேலை கிடைத்து கொஞ்சி மகிழ ஒரு குடும்பம் கிடைத்து அவர்கள் சந்தோஷத்தில், கவலையில் தங்கள் எஞ்சிய வாழ்நாளை கரைத்துக் கொண்டிருப்பார்கள். கடைசி வரை கலை மட்டும் அவர்களிடம் இருந்து விலக்கப்பட்ட கனியாகவே இருந்து விடும்.
இப்படித்தான் ஒரு வயலின் வித்வான் இருந்தார். அவர் குடும்பத்தின் அன்றைய சூழலில் `கலையாவது கத்தரிக்காயாவது’ என்ற சொல்லக்கூடிய அளவுக்கு குடும்பத்தில் வறுமை ஆட்டிப் படைத்தது. அதனால் வயலினை பரணில் தூக்கிப் போட்டவர், குடும்பத்துடன் கூலி வேலைக்குப் போய்விட்டார். அந்தக் கூலி வேலை முதலில் பெற்றோர் சார்ந்த குடும்பத்தையும், பிறகு மனைவி, பிள்ளைகள் கொண்ட குடும்பத்தையும் பொருளாதாரத்தில் சற்றே தாங்கிப் பிடிக்க உதவிற்று. அவ்வளவு தான்.
ஆனாலும் அவருக்குள் ஓரு ஏக்கம். நமக்குள் இருந்த வயலின் கலைஞனை தொலைத்து விட்டோமே என்று உள்ளுர மறுகிக் கொண்டிருந்தார்.
அன்று மாலையில் கிடைத்த நேரத்தில் பக்கத்து ஊரில் நடக்கும் வாரச்சந்தைக்கு போனார். அங்கே ஒரு இளைஞன் பழைய வயலின் ஒன்றை ஏலத்தில் விட இருந்தான். அந்த வயலினை வாசித்தே பல நாட்களாகி இருக்கலாம். விற்க வேண்டிய அவசியம் வந்தபோது சந்தைக்கு வந்து விட்டான். அவன் முதலில் பத்து ரூபாயில் இருந்து ஏலத்தை ஆரம்பித்தான். `பழமை மாறாத வயலின்’ என்று சொல்லி அவன் ஏலம் விட்டதில் அடுத்தவர் 20 ரூபாய்க்குக் கேட்டார். இன்னொருவர் ஏலத்தை 30 ரூபாயாக உயர்த்தினார்.
மேற்கொண்டு கேட்க ஆளில்லை. இளைஞனும் கிடைத்தவரை லாபம் என்ற எண்ணத்தில் ஏலத்தை முடித்துக் கொள்ளும் மனநிலைக்கு வந்தான்.
அப்போது தான் நமது வயலின் வித்வான் அந்தக் கூட்டத்திற்குள் நுழைகிறார். இளைஞனை நெருங்கியவர், `வயலின் ஏலம் விடும்போது அதை வாசித்துக் காட்டுவது தானே சரியாக இருக்கும்’ என்றபடி, தன் நெஞ்சோடு வயலினை அணைத்தபடி இசை மீட்டத் தொடங்கினார்.
அடுத்த சில நிமிடங்களில் அந்த இசை சந்தைக்கு வந்த மொத்தக் கூட்டத்தையும் அங்கே வரவழைத்து விட்டது. கேட்டவர்கள் மெய்யுருகினார்கள். அடுத்த பாட்டு, அடுத்த பாட்டு என்று தொடர்ந்து மூன்று பாட்டுக்கு வாசித்து முடித்தவர், ஜனங்களை நோக்கி, `இப்போது ஏலம்கேட்கிறவர்கள் கேட்கலாம். ஏலத்தை முதலில் இருந்து ஆரம்பிப்போம்’ என்றார். அவரே வயலின் ஏலம் நூறு ரூபாய் என்று ஆரம்பித்தார்.
வயலின் இசை கேட்டு ஏற்கனவே உருகிப் போயிருந்தவர்கள் பலரும் ஏலத் தொகையை கூட்டிக் கொண்டே போனார்கள். கடைசியில் எண்ணூறு ரூபாய்க்கு கேட்டவருக்கு வயலின் கிடைத்தது. இளைஞன் இப்போது அந்த பெரியவரை தன் வயலினை விற்றுத்தர வந்த தெய்வமாகவே கருதினான். ஏலப்பணத்தில் 300 ரூபாயை அவருக்கு கொடுக்க முன் வந்தான். அவரோ `என்ஆத்ம திருப்திக்கு இசைத்தேன். அதற்கு விலை வைக்காதே’ என்று பணத்தை வாங்க மறுத்து விட்டார்.
அது மன்னர் ஆட்சிக்காலம். அந்த பெரியவர் அங்கிருந்து நாலடி நடந்திருக்க மாட்டார்.அதற்குள் அரண்மனை வீரர்கள் அவரை சுற்றி வளைத்தார்கள். “எங்கள் மன்னரின் அரசவைக்கு தேர்ந்த இசைக்கலைஞர்கள் தேவை. அப்படி ஒருவருக்காக நாங்கள் நகரை வலம் வந்தபோது தான் உமது இசையை கேட்டோம். இப்போதே அரண்மனைக்கு எங்களுடன் வந்து எம் மன்னரை பார்க்கிறீர்” என்று அழைத்து சென்றார்கள். அவருக்குள் புகுந்து கொண்டிருந்த அந்தக் கலை கடைசியில் அவரை அரண்மனை இசைக்கலைஞராக்கி அழகு பார்த்தது. இது தான் கலையின் சிறப்பு.
கற்ற கலைக்கு காலம் கடந்தாலும் மரியாதை நிச்சயம். அதனால்கலை தெரிந்தவர்கள் அதை மறைபொருள் போல் மூடி வைக்காமல் வெளிப்படுத்துங்கள், வெளிப்படுங்கள். உலகை வெல்லுங்கள்.
No comments:
Post a Comment