மனிதன் அறிவினால் மட்டுமே உயர்வாக முடியும்
மனிதன் அறிவினால் மட்டுமே உயர்ந்தவனாக முடியும். அறிவைக் கொண்டு நாம் நல்லதையும் தீயதையும் பிரித்தறிய வேண்டும் என்று ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எம்.வை.எம்.முஸ்லிம் தெரிவித்தார்.
இன்று மடவளை மதீனா மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற மடவளை மூத்த பிரஜைகள் சங்கத்தின் அங்குராப்பண வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது- பலத்தால் ஒருவன் பலசாலியாக முடியுமாயின் யானையின் பலத்துடன் தோல்வியடைய வேண்டிவரும்.வீரத்தால் சிங்கத்திடம் தோல்வியடைய வேண்டிவரும். தந்திரத்தால் நரியிடம் தோல்வி யடைய வேண்டிவரும். இப்படி எல்லாவற்றிலும் மனிதனை விட சக்தி படைத்தவை உண்டு . ஆனால் அறிவால் மனிதனை மிஞ்ச முடியாது.
இந்த அறிவைக் கொண்டு யானை, புலி, சிங்கம் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ விடயங்களை தம்முள் அடக்கிவைத்துக் கொள்ள முடியும். அறிதல், தெரிதல், புரிதல், பகிர்தல் என்ற நான்கு அம்சங்களின் அடிப்படையில் ஒன்றை நாம் அறிய வேண்டும். பின்னர் அதனை பகுத்தறிந்து நல்லதை தெரிவுசெய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது அதன் பலாபலன்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இது மட்டும் போதாது. அதனைப் பிறருக்கு பகிர்வு செய்யவும் வேண்டும். பிறருக்குக் கொடுப்பதே அறிவு. அதன் மூலமே அது சிறப்படைய முடியும்.என்றார்.
No comments:
Post a Comment