மனிதனின் பண்புகளும் திறமைகளும்….
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் சொன்னது அவ்வை. எழுத்து இல்லாத மொழிகள் கூட உலகில் உண்டு. ஆனால் எண்கள் இல்லாமல் கணிதமே இல்லை. கணிதம் இல்லையென்றால் வர்த்தகம் இல்லை; தொழில் இல்லை; பொருளாதாரம் இல்லை; ஏன், உலக இயக்கமே இல்லை. எண்களைப் பற்றி சற்று எண்ணிப்பார்ப்போம். கணித ரீதியாக அல்ல, மனது ரீதியாக.
மூல எண்கள் மொத்தம் பத்துதான். 1,2,3,4,5,6,7,8,9,0. 1 முதல் 9 வரை உள்ள எண்களுக்கு, அவைகளுக்கென்று ஏதோ மதிப்பு, தனியான மதிப்பு இருக்கிறது. ஆனால், பூஜ்யத்திற்கு என்று ஒரிஜினலாக எந்த மதிப்பும் கிடையாது. வேறு எந்த எண்ணுடனாவது ஒட்டிக்கொண்டால் தான், அதுவும் அந்த எண்ணுக்குப் பின்னால் போய், அடக்க ஒடுக்கமாக நின்றால் தான் அதற்கு ஒரு கௌரவம் கிடைக்கிறது; உயிர் கிடைக்கிறது.
ஒரு மனிதனுக்கு எத்தனையோ திறமைகள் இருக்கலாம். அத்தனை திறமைக்கும் ஒரிஜினல் மதிப்பு பூஜ்யம் தான்.
திகைக்காதீர்கள் மேலே படியுங்கள்.
நூற்றுக்கணக்கான திறமைகள் மனிதனிடம் இருக்கின்றன. பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, ஆடல் திறமை, பாடல் திறமை, கணிப்பொறித் திறமை, மருத்துவத்திறமை, வாகனம் ஓட்டும் திறமை, இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் திறமை…..இப்படிப் பல.
அத்தனைக்கும் ஒரிஜினல் மதிப்பு பூஜ்யம் தான்.
சற்றுப் பொறுங்கள்.
ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு திறமைகள் முக்கியம் தான். ஆனால் திறமைகள் மட்டுமே அவனை உயரத்தில் கொண்டு போய் உட்கார வைத்து விடாது. அப்படியே வைத்தாலும், அந்த உயரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு அவனிடம் நல்ல பண்புகள் இருந்தால் தான் முடியும்.
எப்படித் தெரியுமா?
வாழ்க்கைக்கு பணம் மிகவும் அவசியம். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது எனபதைப் போலத்தான் இது.
மனிதனிடம் இருக்க வேண்டிய சில நல்ல பண்புகளைப் பார்ப்போம்.
1. இன்சொல் 2. நேர்மை 3. பரோபகாரம் 4. சொல் தவறாமை 5. அடக்கம், 6. நன்றி 7. மனைவியைத் தவிர மற்ற பெண்களை நாடாமை 8. கோபம் கொள்ளாமை 9. ஒழுக்கம்.
இந்த ஒன்பது பண்புகளுக்கும் முறையே 1,2,3,4,5,6,7,8,9 என்று வரிசையாக ஒரு மதிப்புக் கொடுப்போம். சரி.
சில மனிதர்களைப் பார்ப்போம்.
ஒரு மனிதன் அவனிடம் இன்சொல் என்பது சுத்தமாக இல்லை. யாரிடமும் எடுத்தெறிந்து பேசுகிறான். எப்போதுமே, எதற்குமே கடுமையான வார்த்தைகளையோ, தரம் குறைந்த வார்த்தைகளையோ சர்வ சாதாரணமாகப் பேசுவதே அவனது வழக்கம். அவனிடம் ஒரு திறமை, இசைத்திறமை இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம்.
எந்த சபாவினர், விரும்பி அவனை பாடுவதற்குக் கூப்பிடுவார்கள்? வேறு யாருமே கிடைக்காத போது, வேண்டாவெறுப்பாகத் தானே அவனைக் கூப்பிடுவார்கள்? கடைசி வாய்ப்புத்தானே அவனுக்கு? ஆக இங்கே அவனுடைய திறமையின் மதிப்பு பூஜ்யம். பூஜ்யம் எப்படி வளரும்?
இன்னொருவன் மின்சார சாதனங்களைப் பழுது பார்ப்பதில் திறமையுள்ளவன். ஆனால் சொல்தவறாமை என்ற பண்பு சுத்தமாகக் கிடையாது. சொன்ன நேரத்திற்கு வரமாட்டான். வந்தால், சொன்ன நேரத்துக்கு முடிக்கமாட்டான். வளரமுடியுமா இவனால்?
இன்னொருவன் பைக், ஸ்கூட்டர் பழுது பார்ப்பதில் கெட்டிக்காரன். ஆனால் நேர்மை கிடையாது. பெட்ரோல் திருடுவான். நல்ல பாகங்களை மாற்றிவிடுவான். இவனுடைய திறமைக்கு மதிப்புக் கொடுத்து, வண்டிகளைக் கொண்டு வந்தவர்கள், தானாக, நாளாக, வேறு மெக்கானிக்குகளைத் தேடிப் போய் விட்டார்கள். என்றால்……
இவன் எப்படி வளர்வான்?
இன்னொருவன், மருத்துவம் பார்ப்பதில் மகாதிறமைசாலி…. இவனிடம், பிறன் மனைவி நாடாமை என்ற பண்பு கிடையவே கிடையாது. என்ன பிரயோஜனம்? ஏதோ வளர்ந்தான்.
வளர்ந்த வேகத்திலேயே தேய்ந்தான். இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான்.
ஆக, முன்னேற்றம் என்பது திறமைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. அதுபோல பூஜ்யங்கள் மட்டுமே கணிதம் அல்ல.
பண்புகள் தான் நிஜமான முன்னேற்றத்திற்கு நிச்சயமான தேவை. 1,2,3,.. என்ற எண்களால் தான் கணிதத்திற்காக முழுமை கிடைக்கிறது. என்பதைப் போல.
ஒருவனிடம், இன்சொல், நேர்மை, சொல் தவறாமை என்ற எல்லாப் பண்புகளும் இருந்து தொழில் திறமை, நிர்வாகத்திறமை என்று இரண்டு திறமைகளும் இருந்து விட்டால், அவனுடைய மதிப்பு, மேலே சுட்டிக் காட்டியபடி, 12400 ரூபாய் (அல்லது) டாலர் என்று வைத்துக் கொள்ளலாம்.
அந்த மூன்று பண்புகளும் இல்லாமல் இருந்து, அந்த இரண்டு திறமைகள் மட்டும் அவனிடம் இருந்தால், அவனுடைய மதிப்பு இரண்டு பூஜ்யங்கள் மட்டும்தான்.
இங்கே ஒரு சந்தேகம் வரவேண்டுமே?
மேற்சொன்ன அதே மனிதனிடம், அடக்கம் என்ற நல்ல பண்பு இல்லாமல், ஆணவம் என்ற தீய பண்பு இருந்து விட்டால்…..? அவனுடைய மதிப்பு இப்போது என்ன?
124000 x 0 இப்படி!
இதன் மதிப்பு என்ன? பூஜ்யம்தான்.
ஆமாம் சில நல்ல பண்புகள் இருந்தாலும், அவைகளுக்கு எல்லாம் எதிராகச் செயல்படும் வகையில் ஒரு தீய பண்பு இருந்து விட்டாலும் போதும் அழிவு நிச்சயம்.
வாழ்க்கை என்ற மரம் செழித்து வளர வேண்டுமானால், திறமைகள் என்ற நில வளங்களோ, உரச்சத்துக்களோ வலிமையாக இல்லை யென்றால், மரம் வளராது என்பது மட்டுமல்ல, பட்டுப்போகவும் வாய்ப்பு உண்டு.
No comments:
Post a Comment