Tuesday, April 7, 2015

சந்தோசம் எனும் சவாரி!!!

சந்தோசம் எனும் சவாரி!!!

சந்தோசம் எனும் சவாரி போவோம்…
சந்தோசத்தை தன்னுள்ளே வைத்திருக்கிறவன் அதை வெளியே தேடிக்கொண்டிருக்க மாட்டான். அதற்காக அவன் அலையப்போவதுமில்லை.
சந்தோசம், சந்தோசமாக இருக்கவேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில்தான் இருக்கிறது. கவலைப் படுவதற்கான காரணிகளைத்  தேடித்தேடி கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிற நீங்கள்தான் அங்கிருக்கும் சந்தோசத்திற்கான வெளியை மறைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

கேவலம் டிபன் பாக்ஸில் இருக்கிற உப்புமாவிற்கு ..உங்கள் சந்தோசத்தைக் கெடுக்கும் வல்லமை இருக்குமென்றால் உங்களின் சந்தோஷ உணர்வு எவ்வளவு பலவீனமானதாக இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள்.

ஏன் இப்படித் தேடித்தேடிக் கவலையை அனுபவிக்க நீங்கள் உங்கள் சக்தியை செலவிடுகிறீர்கள். காரணம் உங்கள் சந்தோசத்தை நீங்கள் தீர்மானிப்பதில்லை… அதுதான் நிதர்சனமான உண்மை.

சந்தோசத்தை உங்களுக்குள் வைத்திருங்கள்..அப்படி வைத்திருந்தால்  யாராலும் அதை தொந்தரவு செய்ய முடியாது. நீங்களும் சந்தோசத்தை நிறையப் பேருக்குக் கொடுக்கலாம்.

நம் அக்கறை சிரிக்கக் கூடாது என்பதில்இல்லை…உண்மையில் பார்த்தால் அதுஅழக்கூடாது என்கிற நம் அச்சத்தின் மீதுதான் இருக்கிறது.

சிரிப்பு வந்தால் சிரியுங்கள். நாளைக்கு அழுகை வந்தால் அழுது கொள்ளலாம். கொஞ்சமாகச் சிரித்து கொஞ்சமாக அழுவதை விட… நிறையச் சிரித்து நிறைய அழுங்களேன்

நாம் மகிழ்வோடு இருப்பதற்காக படைக்கப்பட்டவர்களா… இல்லை அழுது  கொண்டுதிரியட்டும் என்று சொல்லி படைக்கப்பட்டவர்களா? நிச்சயமாக அழுது புலம்புவதற்காக மட்டும் படைக்கப் பட்டிருக்க மாட்டோம்.

‘இங்கே சந்தோசங்கள் நிறைய இருக்கின்றன. அனுபவிக்கத் தான் ஆள் இல்லை‘என்கிறது ஒரு சீனப் பழமொழி.

நாளை உலகம் இல்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்..? அநேகமாய்.. நாளைக்குஉலகம் இருக்காதா ? அய்யய்யோ அப்படி உலகம் இல்லையானால் என்ன செய்வது என்று இப்போதே கவலைப்பட ஆரம்பித்துவிடுவீர்கள்.

நாளை குறித்த எல்லாக் கவலைகளுக்கும் பின்னால் இருப்பது.. தோல்வி குறித்த பயம்தான் ஜெயித்துக்கொண்டு இருக்கவேண்டுமானால் நீங்கள் வெற்றியை பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும்..

தோல்வியைப் பற்றியல்ல. தோற்காமல் இருக்க வேண்டுமே என்பதற்காக நீங்கள் ஜெயிக்கப் பார்த்தால், தோல்விதான் உங்களுக்குமிஞ்சும்.

எதையும் செய்யாமல் தன்னுடைய பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் இருந்தான். அவன் அதிகமாகக் கவலைப்பட்ட போது அவனுடைய அதைரியமும்அதிகமாயிற்று. முடிவில் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தான்.

தன்னுடைய இந்த முடிவு தன்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியக்கூடாதுஎன்று அவன் விரும்பினான். கட்டடத்தைச் சுற்றி சுற்றி ஓடி இயற்கையான மாரடைப்பை உண்டாக்கி மரணம் அடைய வேண்டும் என்று எண்ணினான்.

ஆகவே ஓட ஆரம்பித்தான். ஓடிக் கொண்டே இருந்தான். அதிகமாக ஓட ஓட அவனுடைய களைப்பும் அதிகமாயிற்று. களைப்பு மிகுதியாகவே களைப்பைத் தவிர வேறு எதையும் அவனால் உணர முடியிவில்லை. படுக்கைக்குச் சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று மட்டும்தான் அவனால் எண்ண முடிந்தது. படுக்கையில் படுத்து உறங்கிப் போனான்.

பன்னிரண்டு மணி நேரம் கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் அவன் கழித்தான். எழுந்த போது புத்துணர்ச்சியுடன் இருந்தான். எந்தப் பிரச்சனையும் சந்திக்க முடியும் என்கிற ஆர்வம் தன்னுள் தோன்றி இருப்பதையும் உணர்ந்தான்.

வெற்றியை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு ஓடுங்கள்… அதிவேகமாக.

தோல்வி உங்களைத் துரத்தட்டும்..பரவாயில்லை. ஆனால் தோல்வியைதுரத்திக்கொண்டு நீங்கள் ஓடாதீர்கள்…

No comments:

Post a Comment