நம்புங்கள்..! நீங்கள்தான் சிறந்தவர்..!!!
“நீங்கள்தான் உலகிலேயே அழகானவர். அறிவுள்ளவர். அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர். உங்கள் திறமையில் எந்தச் சந்தேகமுமில்லை. நீங்கள் படிக்கின்ற பாடக் கல்வியில் தலை சிறந்தவர்.” என்று உறுதியாக நம்புங்கள்.
ஆனால், நீங்கள் படிக்கின்ற கல்வியின் கூடவே கொள்ள வேண்டிய மென் திறன்தான் உங்களைத் தனித்திறனுள்ளவர்களாகக் காட்டி மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி, உங்களை உயர்நிலையை அடையச் செய்யும்.
நாம் நம் முன்னேற்றத்தில் கவனம் கொள்ளாமல் அடுத்தவர்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோம். நமக்குப் பிடித்த நபர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறோம். அது நண்பர்களாக இருக்கலாம், அல்லது பிடித்த நடிகர்களாகவோ, அல்லது விளையாட்டு வீரர்களாகவோ இருக்கலாம்.
ஆனால் நம் பலம் என்ன, பலவீனம் என்று ஆராயத் தொடங்குவதில் நமக்கு இன்று ஆர்வம் இல்லை. உங்களுக்குப் பிடித்தவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளச் செலவிடும் நேரத்தில் பாதியாவது உங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் செலவிடுங்கள்.
மென் திறன் தகுதிகள் என்பது, படிப்பைத்தவிர, உங்களுடைய பேச்சுத் திறன், தலைமைப் பண்பு, நம்பகத்தன்மை, உங்களுடைய தனிப்பட்ட குணாதிசயங்கள், நீங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வல்லவரா, நீங்கள் பயந்தாங்கொள்ளியா, பொது இடங்களில் பேசுவதற்குக் கூச்சப்படுவீர்களா, எதிர் பாலினத்தவரிடம் பேச யோசிப்பீர்களா போன்றவையாகும்.
இது தவிர, நேரக்கட்டுப்பாடு, எதுவும் முடியும் என்ற பாசிட்டிவ்வான எண்ணம், கூர்ந்து கவனிக்கும் திறன், உங்களுடைய ஆளுமைத் திறன், தன்னையும் மற்றவரையும் எந்நேரமும் உத்வேகப்படுத்துதல் உள்ளிட்டவையே. இன்றைய சூழ்நிலையில் அவசியமாகின்றன.
இந்தத் தகுதிகள் அனைத்து மனிதர்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு இருந்தே ஆக வேண்டும்.
#யதார்த்தமாக வாழப் பழகிக்கொள்வது
#கல்வியோடு கூட மென் திறன்களையும் தெரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவது
#நம்மால் முடியும் என்ற முழு தன்னம்பிக்கை
என்ற மூன்றையும் கடைபிடித்தால் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்.
ஒரு நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடைபெறும்போது, இவ்வளவு பேர்கள் நம் அலுவலகத்தில் பணி புரிந்தால் போதும். மற்றவர்களை அனுப்பிவிடலாம் என்று எதை வைத்துத் தீர்மானிக்கிறார்கள்.
வேலை செய்பவர்களில் யாருக்குப் பாசிட்டிவ்வான எண்ணம் இருக்கிறது, மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள் யார், கம்பெனி மேல் நம்பிக்கை வைப்பவர்கள் யார் என்ற தகுதிகளை அலசியபின்பே நிறுவனம் அவர்களைத் தக்க வைத்துக்கொள்கிறது.
வேலை தருகிற முன்னணி நிறுவனங்கள் இளைஞர்களுக்கு ஏற்கனவே இருக்கிற படிப்பைத் தவிர. மென் திறன் தகுதிகள் இருக்கும் என்று கணக்கிடுகிறது.
இந்த மூன்று அம்சத் திட்டங்கள் இருந்தால் இவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்து விடுகிறது. விவரம் அறிந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமின்றி, இந்த மென்திறன் தகுதியை வைத்துத்தான் பெரும்பாலும் வேலை தருகிறார்கள்.
அது தவிர நீங்கள் விரும்பும் வேலையைப் பெறுவதற்கு மட்டுமின்றி அதனைத் தக்க வைத்துக்கொள்ளவும் பெரிதும் உதவும்.
நடைமுறை வாழ்க்கையில் பார்த்தால், ஒருவருடைய உறவைப் பெறுவது மிகவும் சுலபம். ஆனால் அந்த உறவை வெகுகாலம் தக்க வைத்துக்கொள்வது கடினம். நீங்கள் தனி நபரல்ல. நாளை நீங்கள் உயர்ந்த பதவியை அடையப் போகிறீர்கள். உங்களிடம் பலர் வேலை செய்யப் போகிறார்கள்.
ஏன், நீங்களே சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. அத்தகைய நிலையில், நீங்கள் தலைவராக இருந்து கொண்டு வழி நடத்தும் நேரம் வரலாம். அந்நேரத்தில் நீங்களும், உங்களுடன் பணிபுரிபவர்கள் இந்தத் தகுதியைக் கொண்டிருந்தால்தான் குழுவாக நீங்கள் செயல்பட முடியும்.
உலகம் முழுவதும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் நம் வெற்றி கை கூட, மற்றவர்களிடம் எவ்வாறு நாம் பழகுகிறோம், அவர்கள் மதிக்கத்தக்க நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் மென்திறனால் மட்டும் சாத்தியம்.
நீங்கள் மனிதர்களாகப் பிறந்து, மனிதர்களாகவே மறைந்து விடக்கூடாது. நீங்கள் தலைவராகப் பிறந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில், ஒவ்வொரு இளைஞர்களுக்குள்ளும் ஒரு தலைவன் இருக்கிறான்.
No comments:
Post a Comment