Wednesday, October 28, 2015

வாழ்வின் பொது உண்மைகள் - 1

வாழ்வின் பொது உண்மைகள்  - 1

குடும்பம் ஏற்பட்டு, குழந்தைகள் பெற்று, தொழிலை செவ்வனே நடத்துவதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்று திருமணம் என்ற ஏற்பாட்டைச் சமூகம் செய்தது. திருமணம் என்ற ஒன்று இல்லாத காலத்து மனிதன் விலங்கு போலிருந்தான். விவசாயம் செய்யவும், வியாபாரம் செய்யவும் வீடு ஒன்று தேவை. வீடு நிலையாக, அழகாக, இலட்சணமாக இருக்க, வீட்டை இலட்சியமாக்குதல் அவசியம். அதை நிறைவேற்றுவது திருமணம். திருமணத்தின் அம்சங்கள் மக்கட்பேறு, முறையான தொழில், இலட்சியக் குடும்பம், இவையெல்லாம் ஏற்படும் பொழுது திருமண வாழ்க்கை இனிமையாகவும் இருப்பதுண்டு. இனிமையாகவே இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை.

குடும்பம் ஏற்பட்டால் அத்துடன் நிச்சயமாக வருவது உழைப்பு, கடமை, பொறுப்பு ஆகியவை. பொறுப்புகளை நிறைவேற்றச் செய்து கொள்ளும் திருமணம் ஓரளவு சந்தோஷத்தையும் கொடுப்பதுண்டு; கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதன் அடிப்படை அமைப்பில் இல்லை. அடிப்படை அமைப்பில் இல்லாததை நிலையாக எதிர்பார்க்க முடியாது.

கல்லூரியில் சேர்ந்தால் விளையாட்டு வீரனாக மாறலாம் என்பதுண்டு; மாற வேண்டும் என்ற அவசியமில்லை. கல்லூரிக்கு உரியது படிப்பு, பட்டம். அத்துடன் பெரும்பாலும் ஹாஸ்டல் வாழ்வு சேரும்; பேச்சாளனாகும் வாய்ப்புண்டு; விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் உண்டு; இவையெல்லாம் கல்லூரிப் படிப்பிலுள்ள அம்சங்கள். ஆனால் அத்தியாவசியமான அம்சங்கள் இல்லை.

இனிமையான பழக்கத்தாலும், இளமையின் நேர்த்தியாலும் திருமண வாழ்வு சந்தோஷம் கொடுக்கும். இளமை மறைந்த பின் இனிமை நீடிக்கலாம், நீடிப்பதுண்டு; நீடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை. ஆரம்பத்திலேயே இனிமை இல்லாமலும் இருக்கலாம்.

கல்லூரி வாழ்வில் விளையாட்டுக்கு எந்த அளவு இடம் உண்டோ, கிட்டத்தட்ட அதே அளவுக்குத்தான் திருமணத்தில் சந்தோஷத்திற்கு இடம் உண்டு.

கடமையைச் செய்யலாம்; திருப்தி செய்ய முடியாது. எவரையுமே திருப்தி செய்ய முடியாது. திருப்தி செய்ய எடுக்கும் முயற்சி சிறுபிள்ளைத்தனமானது. ஆசை திருப்திபடும் தன்மையுடையதன்று. திருப்தி செய்ய முயன்றால் அதிருப்திதான் வரும்.

நல்ல பிள்ளைகள் பெற்றோரைத் திருப்தி செய்ய முயல்வார்கள். பொதுவாகப் பெற்றோர்கள் அதை அன்போடு ஏற்றுக்கொள்வதைவிட ஒரு சௌகரியமாக ஏற்றுக்கொள்வதே அதிகம். பிள்ளைக்கு மனத்தில் பிணக்கு ஏற்படும்.

திருப்தி செய்வது சரியான கொள்கை என்று வைத்துக் கொள்வோம். தாயாரைத் திருப்தி செய்யும் நிலையில், தாயாருக்கும் தகப்பனாருக்கும் ஒரு விஷயத்தில் மனத்தாபம் வந்துவிட்டால், இப்பொழுது யாரைத் திருப்தி செய்ய முடியும்?

கடமையைச் செய், பொறுப்பை நிறைவேற்று, மனச்சாட்சிக்கு அடங்கி நட, திருப்தி செய்ய முயலாதே.

எதிரியிடமும் நேர்மையாக நடப்பதைவிட உயர்ந்த இலட்சியம் உலகிலில்லை. இதற்கு எல்லையுண்டு, இடமுண்டு. எல்லைக்குட்பட்டு உயர்ந்து நிற்பது, எல்லையைத் தாண்டினால் ஆபத்தாக முடியும்.

அரசியல், தொழில் (industry) ஆகிய இடங்களில் இக்கொள்கை பாதிக்கும். ஆன்மீகத்திற்கு இது ஒத்து வாராது.

சாதாரணக் குடும்பஸ்தன் உள்ளூரில் பெரிய குடும்பம் நடத்தும் வரை இது உயர்ந்த இலட்சியம். நாட்டுக்குச் சேவை, பெரிய திட்டங்கள், பொது ஊழியம் என்று ஆரம்பித்தால் இக்கொள்கை ஊறு செய்யும். கடவுள் தண்டிப்பதில்லை. தெய்வக் குற்றம் இருந்தாலும் கடவுள் தண்டிப்பதில்லை. குற்றத்தால் ஏற்பட்ட குறை நம்மைத் தண்டிப்பது, கடவுள் தண்டித்ததாகாது. சிறு தெய்வங்கள், துஷ்ட தேவதைகள் தண்டிக்கும் குணம் உடையவை.

6 பட்டதாரிகள் உள்ள குடும்பத்தில் ஒருவர், ‘பட்டம் எடுக்க மாட்டேன்’ என்று பிடிவாதம் செய்தால், அவர் வாழ்வு அவருக்குத் தண்டனையாகப் பல விதங்களிலும் மாறுகிறது. “நான் பட்டம் பெறவில்லை என்பதால் பட்டம் என் மீது கோபப்பட்டுத் தண்டிக்கின்றது” என்று அவர் சொல்வதில்லை. தன் குறையால் தனக்கு ஏற்படும் சிரமம் அது.

பொதுவாக வாழ்வு உயரும்பொழுது, உயர்வுகளைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் உயர்வுகளிலிருந்து விலகினால், சூழ்நிலை உயர்வாக இருப்பதால், நம் வாழ்வு தண்டனையாக அமையும். நம்மை யாரும் தண்டிக்கவில்லை. கடவுள் தண்டனை கொடுப்பதில்லை.

அவசரப்பட்டால் சீக்கிரம் காரியம் முடியும் என்பது ஓர் அபிப்பிராயம். நிதானமாக இருந்தால் காரியம் சீக்கிரம் முடியும், கெடாது. அவசரப்பட்டால் காரியம் கெடும். அத்துடன் அதிக நேரமாகும்.

பொதுவாக மனிதனுக்கும், குறிப்பாக நம்மவர்களுக்கும் உள்ள பல்வேறு அபிப்பிராயங்களை அறவே விட்டொழித்த பின்னரே, அன்னையை அடுத்த கட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்.

விலங்கு போல் வாழ்ந்த மனிதன், நாகரீகமடைந்து, நகரங்களை உற்பத்தி செய்து, பேசக் கற்றுக்கொண்டு, இலக்கியங்களை ஏற்படுத்தி, இயற்கையை வென்று, இன்று தேவலோகம் என ஆதி மனிதன் கருதும் அளவுக்கு மனித வாழ்வை மாற்றியுள்ளான்.

ஒவ்வொரு கட்டத்திலும் அவன் பழைய பழக்கங்களை விட்டுப் புதிய பழக்கங்களை ஏற்றுக்கொண்டதாலேயே அவனால் முன்னுக்கு வர முடிந்தது. ஒரு மாற்றத்திற்குப் புதிய முறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. விலங்கு போல் வாழ்ந்தவன் குடும்பத்தை ஏற்படுத்தினான். இன்று குடும்பம் இல்லாத நாடே இல்லை. காய், கனியைப் பறித்துத் தின்றவன் விவசாயத்தை மேற்கொண்டான். இன்று ஒரு நாட்டில் விவசாயத்தை மேற்கொள்ள முடியாது, காய்கனியால் வாழ்வோம் என்றால், அவர்கள் பஞ்சத்தால் சீக்கிரம் அழிந்துவிடுவார்கள்.

அபிப்பிராயப் பேதத்தை வாளை உருவி நிலைநிறுத்திய மனிதன், அதை விட்டு நியாயம், பஞ்சாயத்து, சட்டம், கோர்ட் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டான். அன்னை பக்தனாகி, அன்னையைப் பொதுவாக வணங்கும் நிலையிலிருந்து அன்னை முறைகளை ஏற்றுக்கொண்டு, அவரிடம் நெருங்கி வந்து யோகப் பலனான அருளை அதிகமாகப் பெற பழைய மனநிலைகளை விட்டுவிட வேண்டும்; பழைய அபிப்பிராயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். பழைய நம்பிக்கைகளை விட்டு அன்னையின் புதிய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைச் செய்யாமல் அடுத்த கட்ட பக்தர் நிலைக்கு வர முடியாது.

தேர்தலை ஏற்றுக்கொள்ளாமல் இன்று அரசியலில் இருக்க முடியாது. ஜமீன்தாருக்கும், ராஜாக்களுக்கும் உள்ள உரிமை இன்று செல்லாது. கம்ப்யூட்டரை ஏற்றுக்கொள்ளாமல் தொழிலை இன்று நடத்த முடியாது. இரசாயன உரமில்லாமல் இன்று விவசாயம் பலன் தாராது. முற்றம் வைத்து வீடு கட்டுவேன் என்ற பிடிவாதம் இன்று உன்னைச் சமூகத்திலிருந்து விலக்கும். பெண்களுக்குப் படிப்புக் கொடுக்காமல் இன்றையச் சமுதாயத்தில் வாழ முடியாது. பெண்களை வேலைக்கனுப்பாமல் குடும்பம் வசதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது வறட்டு வாதம். சொந்தத் தொழில் செய்யாமல் பெருஞ் செல்வம் பெற முடியாது. உள்ளூரை விட்டுப் போக மறுப்பவர்களுக்கு உத்தியோகம் சரி வாராது. ஆங்கிலம் அறியாமல் பார்லிமெண்டில் வேலையில்லை.

அன்னை புதிய உலகத்தை ஏற்படுத்த வந்தவர்கள். புதிய சமுதாயத்தை ஏற்றுக்கொள்ள நாம் படும் பாடு அதிகம். புதிய உலகத்திற்குப் புது ஜீவியம் தேவை. மனம் புதுப்பிக்கப்பட வேண்டும். புதிய நோக்கம் தேவை, புதிய மன நிலைகள் அவசியம், புதியதைப் போற்றும் மனப்பான்மை வேண்டும். பழையவற்றுள் எதுவும் புதிய உலகத்திற்கு வாராது. அது போல் அவசியமாக விட்டுவிட வேண்டியவற்றைப் பற்றிக் கீழே எழுதுகிறேன்.

    கர்மம் தவிர்க்க முடியாதது என்ற நம்பிக்கையை மாற்றி, கர்மம் அழியக்கூடியது என்று அறிய வேண்டும்.
    
    எதற்கும் ஓர் அளவுண்டு, எவர்க்கும் ஓர் அளவுண்டு.
    
    அதிர்ஷ்டமானாலும் நிதானமாகவே வரும்.
    
    அவசியமான கட்டங்களைத் தவறாமல் தாண்டி வர வேண்டும்.
    
    தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்.
    
    மனிதன் தான் மாறாமல், அதிர்ஷ்டம் வந்த பின் ஓரளவு மாறுவதுண்டு.
    
    கைக்கு மெய்யாய் கிடைப்பதே மேல்.
    
    மனிதனாய்ப் பிறந்தவன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நாம் பொதுவாக நினைக்கின்றோம். மனிதன் தன் சந்தோஷத்தைத் தானே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும் என்பதே வாழ்வின் அடிப்படை. சந்தோஷம் நம் பிறப்புரிமை என்று நாம் நம்புவது உண்மையன்று. உழைப்பே நமக்குப் பிறப்புரிமை. பிறந்தவன் உழைக்க வேண்டும் என்பதே வாழ்வின் சட்டம். பிறந்தவன் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று நாமே வைத்துக்கொள்கிறோம்.
    
    நல்ல காரியங்கள் நல்ல பலனைத் தரும் என்று நினைக்கின்றோம். நல்ல காரியங்கள் நல்ல பலனையும் தரும், கெட்ட பலனையும் தரும், பலன் தாராமலும் போகும் என்பதே உண்மை.
    
    வாழ்க்கையில் நியாயம் வேண்டும்.
    
    ஏனிந்தக் கஷ்டங்கள் எனக்கு வருகின்றன?
    
    திருமண வாழ்வு சந்தோஷமாக இருக்க வேண்டும்.
    
    எனக்கு அதிர்ஷ்டம் எப்பொழுது வரும்?
    
    பக்தியில்லாமல் கோயிலுக்குப் போனாலும் புண்ணியம்.
    
    வாயால் மந்திரத்தை உச்சரித்தால் பூரண பலன் வரும்.
    
    எப்படியாவது பெற்றோரைத் திருப்தி செய்ய வேண்டும்.
    
    எதிரியிடமும் நேர்மையாக இருக்க வேண்டும்.
    
    புதிய திறமை இனி ஏற்படப்போவதில்லை.
    
    அந்தஸ்து வந்துவிட்டால், பழைய குறைகளை உலகம் மறந்து விடும்.
    
    பணத்தைச் சேகரம் செய்தால், செல்வம் உற்பத்தியாகும்.
    
    கடமைகளை மறந்து, என் காரியங்களை நான் சாதித்துக் கொள்வேன்.
    
    கடவுளைப் புறக்கணித்தால், தண்டனை கிடைக்கும்.
    
    அவசரப்பட்டால் சீக்கிரம் முடியும்.
    
    இலட்சியம் என்பது அன்றாட வாழ்க்கைக்குரியதன்று.
    
    உனக்கு வந்த நல்லதை வெளியில் சொல்லாதே.
    
    செலவு சொத்தை அழிக்கும்.
    தவறான செலவு சொத்தை அழிக்கும். செலவு சொத்தை அழிக்காது. அளவுக்குட்பட்ட செலவு நல்லது. அளவுக்கு மீறினால் செலவு மட்டுமன்று, எதுவுமே ஆபத்தை விளைவிக்கும். நல்ல செலவை அறிவோடு செய்ய ஒருவன் கற்றுக்கொண்டால், அந்தச் செலவு சொத்தைச் சேர்க்கும்.
    
    கடமையைச் செய், நல்லவனாக இரு; எதுவும் உன்னைத் தொடாது.
    இதை நம்புபவர்கள் பலர். அது சரியன்று. கடமையுடன் நல்லது சேர்வது போல் வல்லமையும் சேர்ந்தால்தான் எதுவும் உன்னைத் தொடாது. வலிமை குறைந்தால், கடமையும், நல்லதும் உன்னைக் காப்பாற்றாது. கடமை தவறினாலும், நல்லது இல்லை என்றாலும், வல்லமை காப்பாற்றும். உன்னை எதுவும் தொடக்கூடாது என்றால் வலிமை வேண்டும்.
    
    அனைவரும் என் காரியத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
    
    இதுவரை யாரும் செய்யாததை நாம் செய்யக்கூடாது.
    
    பெரிய இடத்து மனிதர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்.
    
    ஏழை தவறானவன்.
    
    பிறப்பில் ஏற்பட்ட புத்திசாலித்தனம் இனி உயராது.
    
    ஒரு காரியத்தைத் திறமையாகச் செய்தால் புத்திசாலி என்று பெயர்.
    
    பிறர் உழைத்துச் சாதித்ததை வாய் சாதுரியத்தால் சாதிக்கலாம்.
    
    எனக்குச் சரியானது, அனைவருக்கும் சரியானதாகும்.
    
    நீ எனக்குச் சரி வரவில்லை என்பதால், நீ தவறான மனிதன்.
    
    சௌகரியமானது நல்லதாகும்.
    
    நியாயமாகப் பேசினால் உலகம் ஏற்றுக்கொள்ளும்.
    
    அனைவரும் செய்வதை மட்டுமே நாம் செய்ய வேண்டும்.
    
    உன் உரிமையைக் கேட்டுப் பெற வேண்டும்.
    
    மனத்தால் செய்த பாவம், கையால் செய்த பிராயச்சித்தத்தால் கரையும்.
    
    அவதாரப் புருஷனால் எதுவும் முடியும்.
    
    சொன்னால் போதும், செய்ய வேண்டாம்.
    
    ஆர்வமாகச் செய்தால், திறமையாகச் செய்வதாக அர்த்தம்.
    
    தெய்வம் நியாயம் வழங்கும்.
    மனிதன் தேடுவது மனித நியாயம். ஆனால் தெய்வம் நமக்கு மனித நியாயத்தை வழங்கும் என்று நாம் நிச்சயமாக நம்புகிறோம். தெய்வம் தெய்வ நியாயத்தை வழங்கும். பூகம்பம், புயல், பஞ்சம் ஆகியவை தெய்வம் உலகுக்கு வழங்கியவை. தெய்வ நியாயம் அதை ஏற்றுக்கொள்ளும். இன்று உலகில் நடக்கும் கொடுமைகள் அனைத்துக்கும் தெய்வம் சம்மதிக்கிறது. அரிச்சந்திரனுக்கும், நல்ல தங்கைக்கும், நள மகாராஜனுக்கும், திரௌபதிக்கும், கண்ணகிக்கும் நடந்தவை தெய்வ நியாயப்படி சரி. மனிதன் அவற்றையெல்லாம் தெரிந்திருந்தும், தெய்வம் நியாயம் வழங்கும் என எதிர்பார்க்கின்றான்.
    
    என் மனதிலுள்ளதை எவரும் அறியார்.
    
    தன்னைப் போல் மற்றவர்களிருப்பார்கள் என்பதை மறந்து விடுதல்.
    
    அதிகமாக அன்னையை (physical nearness) நெருங்கி வந்தால், அதிக அருள் கிடைக்கும்.
    பக்தியாலும், நம்பிக்கையாலும், பக்குவத்தாலும் நெருங்கினால் அதிக அருள் கிடைக்கும். Physical near உடன் உறைவதற்கு அப்பலனிருக்காது. தூரத்திலிருப்பதைவிட அருகிலிருப்பதால் அதிகப் பலன் ஏற்படும் என்பது உண்மை. அதற்கு எல்லையுண்டு (each plane has its limit of receptivity).
    
    குழந்தைகளைக் கண்டித்து வளர்க்க வேண்டும்.
    
    ஒரு திறமையுள்ளவர்க்கு மற்ற திறமைகளுமிருக்கும்.
    
    குறி சொல்லுபவர் ஞானி.
    
    உபாத்தியாயரைக் குருவாகக் கொள்ள வேண்டும்.
    இது ஓர் உயர்ந்த நோக்கம். பொதுவாக நல்ல பழக்கம். ஆன்மீக விஷயங்களைத் தீவிரமாகப் பின்பற்றும்பொழுது, விபரம் தெரிந்து கொள்ளுதல் அவசியம். பாடம் கற்பிப்பவர் உபாத்தியாயர். பண்பு கற்பிப்பவர் ஆசாரியர். யோகம் கற்பிப்பவர் குரு. இது முக்கியமான வித்தியாசம்.
    
    ஒவ்வொருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்; மகப்பேறு பெற வேண்டும். திருமணம், உத்தியோகம், வீடு போன்றவை ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும்.
    அவற்றுக்கு விலக்குண்டு. அடிக்கடி ஊர் மாறுபவர்கட்குச் சொந்த வீட்டில் சௌகரியமிருக்காது; தொந்தரவாக இருக்கும். இதைப் போன்றவர்கள் சொற்பம். ஆனால் அவர்கள், ‘சொந்த வீடு இல்லாவிட்டால் மரியாதையில்லை’ என்று ஒன்று வாங்கி, அதனால் சிரமப்படுவதுண்டு. அதே போல் திருமணம், மகப்பேற்றுக்கு விலக்கான ஓரிருவருண்டு. சமூகத்தின் நிர்ப்பந்தத்தால் அவர்கள் இவற்றை மேற்கொள்வது அவர்களுக்கு அவசியமில்லை; சமூகத்திற்குத் தேவையில்லை.
    
    கண் விழிப்பதுவும், உபவாசமும் பக்திக்குரிய முறைகள்.
    இவை பக்தியின் முதல் நிலையிலிருப்பவர்களுக்கு உதவும். அதைத் தாண்டி வந்தவர்களுக்குப் பயன்படாது.
    
    தெய்வத்திற்குப் பயந்து நடப்பதே, பக்திக்குரிய முறை.
    பயம் உள்ள இடத்தில் பக்தி சுரக்காது. பயம் போன பின்னரே பக்தி எழும். தெய்வத்தைக் கண்டு பயந்தது ஆதி மனிதன் நிலை. இனி நமக்கு அது தேவையில்லை.
    
    தலையணை மீது உட்கார்ந்தால் தரித்திரம்.
    
    அளவு கடந்து சந்தோஷப்படுதல் நல்லதன்று.
    
    பிறருக்காகப் பிரார்த்தனை செய்வது நல்லது.
    
    தெய்வத்திடம் எதையும் கேட்கக்கூடாது.
    தெய்வத்திடம் எதையும் கேட்கலாம் என்று அன்னை கூறுகிறார்; கேட்காமலிருப்பது உயர்ந்தது. தெய்வம் நமக்குரியதைக் கொடுக்கும். ஆனால் கேட்பது தவறாகாது. கேட்கும் மனப்பான்மை தவறானால், கேட்பது தவறு.
    
    மனிதன் என்றால் கவலையுண்டு.
    
    சைவ உணவு மனிதனைத் தூய்மைப்படுத்தும். அது ஆன்மாவுக்கு நல்லது.
    ‘நாம் சாப்பிடும் பொருள் நம் ஆன்மீகத்தை நிர்ணயிக்குமானால், அது சிறிய ஆன்மீகம்’ என்கிறார் அன்னை. ‘சாப்பாட்டிற்கும், ஜீவனின் ஆன்மீக நிலைக்கும் சம்பந்தமில்லை’ என்கிறார் அன்னை. நம் நாட்டில் சைவம் பரவியது இந்து மதத்தாலில்லை; புத்த மதத்தால் பரவியது.
    
    மனத்தின் ஆன்மீக நிலையை உணவின் தரம் நிர்ணயிக்கின்றது.
    
    ஆன்மீகத்திற்குப் பணம் எதிரி.
    
    வறுமையும், கடுமையும் துறவறத்திற்குரியவை. துறவறம் காட்டிற்குரியது.
    
    விரதங்கள் உயர்ந்தவை.
    
    தெய்வம் நல்லதை மட்டும் செய்யும்.
    தெய்வத்திற்கு நல்லதும், கெட்டதும் ஒன்றே. தெய்வம் ‘நல்லது’என்று நினைப்பதை மனிதன் ‘நல்லது’ என்று ஏற்றுக்கொள்ள மாட்டான். மரணம் தெய்வத்திற்கு தவறன்று. மனிதனால் அதை நினைத்துகூடப் பார்க்க முடியாது.

    அன்னையை, பக்தர்களாக, ஏற்றுக்கொள்பவர்களுக்கு அன்னை நல்லதை மட்டும் செய்வார். ஏனெனில் பக்தனுடைய நிலையில், அவன் மனதில் உள்ளதை மட்டும் அன்னை பூர்த்தி செய்கிறார். அதனால் அவனுக்கு நல்லது மட்டும் நடக்கும்.

    யோகத்தை மேற்கொண்டு, சாதகரானால், ‘அன்னை செய்வதே எனக்கு நல்லது’ என்ற மனப்பான்மை வேண்டும். அது இல்லாமல் யோகத்தை மேற்கொள்ள முடியாது. அன்னை அவருக்கு நல்லதாகப் பட்டதை நம் மூலம் உலகுக்குச் செய்வார். தனி மனிதனுக்கு அது நல்லதாக மட்டும் இருக்காது; எதிராகவும் இருக்கும்.

    மனிதன் தெய்வத்தோடு நேரடியான தொடர்புகொள்ளவில்லை என்பதால் தெய்வத்தின் மனத்தை அறியாமல், அவன் “தெய்வம் நல்லது மட்டும் செய்யும்” என்று நினைக்கின்றான். இது உண்மையன்று. பொதுவில், “அதிகமாகத் தெய்வத்திடம் ஈடுபட்டால் சோதனை வரும். அது குடும்பத்திற்கு நல்லதன்று” என்று மற்றவர்கள், “வழிபாட்டை அளவோடு நிறுத்திக்கொள்' என்பார்கள்.

    நல்லது மட்டும் நடக்க வேண்டுமானால், அது அன்னையிடம் நடக்கும். அதுவும் பக்தனான நிலைக்கு மட்டும் உரியது.
    
    கர்வத்தையும், பெருமையையுமே நாம் அகங்காரம் என்று அறிகிறோம்.
    ‘நம் ஆன்மா தவிர, நம் ஜீவனில் உள்ள அனைத்தும் அகங்காரத்திற்குரியன’ என்கிறார் அன்னை.
    
    தீமை என்பது தீயது. அதை விலக்க இயலாது.
    “தீமையும், நன்மையும் ஒன்றே. தீமையிலிருந்து நன்மை புறப்படுவதும் உண்டு”என்கிறார் அன்னை.
    
    அனுபவம் அறிவைத் தரும். வயதானால் விவேகம் வரும்.
    
    அறிவு மனத்தில் மட்டும் இருக்கிறது.
    உணர்வுக்கு அறிவுண்டு, உடலுக்கு அறிவுண்டு, ஆன்மாவுக்கு அறிவுண்டு என்கிறார் அன்னை.
    
    நெருங்கிய நண்பன் உயர்ந்த நண்பன்.
    உயர்ந்த மனிதனால்தான் உயர்ந்த நண்பனாக இருக்க முடியும். எவரும் நெருங்கியிருக்க முடியும். நெருங்கியிருப்பதால் மட்டும் உயர்வு வாராது.
    
    செல்வம் பெருகுவதை வளர்ச்சி என்று அறிகிறோம்.
    
    ஆனந்தம் தொடர்ந்திருக்காது.
    
    மறுத்துப் பேசுவது அறிவுடைமை.
    
    கடந்த காலம் பொற்காலம்.
    
    தியானம் ஆன்மீகத்தைப் பெற்றுத் தரும்.
    
    அடக்கமுள்ளவன் சந்தேகம் கேட்கமாட்டான்.
    
    எனக்குத் தெரிந்ததே முடிவான முடிவு.
    
    மன நிம்மதி வாழ்க்கையின் இலட்சியம்.
    
    குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
    வாழ்க்கையின் இலட்சியம் நமக்குரிய கடமைகளையும், பொறுப்புகளையும் பூர்த்தி செய்வது. பூர்த்தி செய்யும்பொழுது மன நிம்மதியை இழக்கலாம். பூர்த்தி செய்து, மன நிம்மதியைப் பெறலாம். கடமைகளே இலட்சியம். நிம்மதியை இலட்சியமாகக் கொண்டால், நிம்மதியைக் குலைக்கும் கடமைகளைப் பூர்த்தி செய்யமாட்டோம். நிம்மதி சிறந்தது. ஆனால் முடிவான இலட்சியமன்று. இலட்சியம் கடமையாகும்.

    குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் நல்லது. ஆனால் “ஒற்றுமையாகத்தானிருக்க வேண்டும்” என்று நினைப்பது சரி வாராது. குடும்பத்தின் குறிக்கோள் அனைவருக்கும் அதிகபட்ச நல்லது வர வேண்டும் என்பதே. அது ஒற்றுமையாலும் வரும், வேற்றுமையாலும் வரும். 5 சகோதரர்களில் ஒருவருக்கு அறிவு மட்டு. அதனால் வருமானம் குறைவு. அவருக்குத் தேவையானவற்றைக் குடும்பத்தில் இருந்து கொடுக்க ஒருவர் தவிர மற்றவர்கள் ஏற்றுக்கொண்டால், ஒரு பிரச்சினை எழுகிறது. "எதை முன் வைப்பது? வசதியற்ற தம்பிக்கு முழு வசதி செய்வது முக்கியமா? அவனுக்கு வசதி செய்வதால் ஓர் அண்ணன் ஒற்றுமையைக் குலைப்பார் என்றால், ஒற்றுமையை முன் வைப்பதா?” என்ற பிரச்சினை வரும். மன நிம்மதியைப் போலவே ஒற்றுமை சிறந்தது. ஆனால் குடும்பத்தின் இலட்சியம், வசதி அற்றவருக்குக் குடும்பத்தால் வசதி செய்வதே. ஆதரவு அளிப்பது குடும்பத்தின் கடமை. ஒற்றுமை என்பது (is a result) குடும்ப வாழ்வில் ஓர் அம்சம். கடமையை மீறி ஓர் அம்சத்தை வலியுறுத்தக் கூடாது.
    
    ஸ்தாபனத்தில் கருத்து வேற்றுமை கூடாது.
    ஸ்தாபனம் பலர் சேர்ந்து வேலை செய்யுமிடம். விகல்பம், விஷமம், விஷம் இருக்கக்கூடாது. வேற்றுமையைக் கூடாது என்று சொல்லக் கூடாது. பல எண்ணம், புதிய எண்ணம், மாறுபட்ட கருத்து, வேறுபட்ட கருத்து இருந்தால்தான் ஒரு திட்டம் சிறக்கும். வேற்றுமை இல்லாத இடத்தில் ஜீவன் இருக்காது.
    
    வேற்றுமையை விகல்பமாக நினைக்கும் மனப்பான்மை தவறு. மனத்திற்குப் பிடித்தது அபிப்பிராயம். அபிப்பிராயம் அறிவுடைமை.
    
    ஆன்மீக அனுபவமும், திருஷ்டியும் யோகத் தகுதியுடையவை.
    சூட்சுமத் திருஷ்டி பலருக்கும் உண்டு. அது ஞான திருஷ்டி ஆகாது. ஆன்மீக அனுபவம் என்பது சாந்தி, மௌனம், ஜோதி, ஆனந்தம் போன்றவற்றை அனுபவிப்பதாகும். இவையெல்லாம் உயர்ந்தவை. ஆனால் அனுபவங்கள் சித்தியாக மாற அநேக ஆண்டு யோகம் செய்ய வேண்டும். ஒரு பெரிய பதவியிலிருப்பவரைச் சிறிது நேரம் சந்திக்கும் வாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்காது. பாங்க் சேர்மன், கலெக்டர், முதன் மந்திரி, டாடா போன்ற செல்வரைச் சாதாரண மனிதன் சந்திக்க முடியாது என்பது உண்மை. சந்திப்பதால் அவர்களுடைய அந்தஸ்து இவர்களுக்கு வந்துவிடாது. அது போல் ஆன்மீக அனுபவம் சிறப்புடையது. அதற்கும் யோகத் தகுதிக்கும் உள்ள தூரம் இரவல் நகைக்கும், சொந்த நகைக்கும் உள்ள தூரம் ஆகும்.
    
    பிரார்த்தனை பலிக்கவில்லை என்றால், சக்தியில்லாத தெய்வம்.
    பிரார்த்தனை பலிப்பதால் சக்தியுள்ள தெய்வம் என்றும் சொல்ல முடியாது. இந்தப் பிரார்த்தனை பலிக்கும் அளவுக்குச் சக்தியிருப்பதே உண்மை. சக்தி வாய்ந்த தெய்வத்திடமும் வேறு பல காரணங்களால் பிரார்த்தனை பலிக்காமலிருக்கலாம்.
    
    சிறந்த நடத்தையிருந்தால், எல்லாம் இருப்பதாக அர்த்தம்.
    
    விளையாட்டு, குழந்தைகளுக்கு மட்டும் உரியது.
    
    ஆங்கிலம் தெரிந்தவன் புத்திசாலி; சமஸ்கிருதம் தெரிந்தவனுக்கு ஆன்மீகத் தகுதியுண்டு.
    
    நம் தெய்வங்களுடைய குறையை நாம் பாராட்டக்கூடாது.
    பிறருடைய குறையைப் பாராட்டாமலிருப்பது நல்லது என்பது போல் தெய்வங்களுடைய குறையையும் பாராட்டாமலிருப்பது நல்லது. ஆனால் தெய்வங்களை அறிய அவர்கள் சக்தியை அறிவது போல், குறைகளையும் அறிய வேண்டும்.
    
    மனிதனைவிடத் தெய்வம் எல்லா அம்சங்களிலும் உயர்ந்தது.
    
    கற்பு, நேர்மை, நாணயம் ஆகியவை ஆன்மீகத் தூய்மையாகும்.
    இவையில்லாமல் ஆன்மீகத் தூய்மை வாராது. இவை ஆன்மீகத் தூய்மைக்குச் செல்லும் வழி. இவையே ஆன்மீகத் தூய்மை ஆகாது. இவை ஆன்மீகத் தூய்மையின் பகுதிகள்.
    
    சமாதி உயர்ந்த ஆன்மீக நிலை.
    பகவான் ஸ்ரீ அரவிந்தர் சமாதி நிலையை, "unconscious spirituality தன்னையறியாத ஆன்மீகம்" என்கிறார்.
    
    பூர்வஜென்ம ஞானம் ஆன்மீகத்தால் வருகிறது.
    (It is a knowledge of vital) ‘உணர்வுக்குரிய ஞானம் இது’என்கிறார் அன்னை.
    
    கீழ்ப்படியும் மனிதன் நல்ல மனிதன்.
    (He is a good employee, not necessarily a good man) கீழ்ப்படிபவன் நல்ல தொழிலாளி. கீழ்ப்படிவதால் மட்டும் ஒரு மனிதனை நல்லவன் என்று சொல்லிவிட முடியாது.
    
    பேசாமலிருப்பது மௌனம்.
    சப்தமில்லாமலிருப்பது நிசப்தம். மனம் எண்ணமற்றிருந்தால், அதற்கு ‘மௌனம்' எனப் பெயர்.
    
    கண்ணால் கண்டது சத்தியம்.
    
    புரிந்துகொள்ள புத்தி அவசியமானது.
    புத்திக்குக் கீழ்ப்பட்ட உணர்வுக்கும், உடலுக்கும் புரிந்து கொள்ளும் தன்மையுண்டு. புத்திக்கு மேற்பட்டது, புத்தியை விலக்கி விஷயத்தைச் சொல்லில்லாமல் புரிந்துகொள்ளும் திறனுடையவை. ‘சொற்பதம் கடந்த தேவே’என்பது நாயனார் வாக்கு.
    
    ஆசனமும், தியானமும் யோகமாகும்.
    
    உடலைப் பேணுதல் தவறு.
    
    சாங்கியம் ஜீவனற்றது என்று தெரிந்தாலும், சாங்கியத்தைச் சரிவரச் செய்ய வேண்டும்.
    
    தனக்குத் தேவையில்லாததை மனிதன் கேட்கமாட்டான். தனக்கு அத்தியாவசியமானவற்றை மறுக்கமாட்டான் என நினைக்கின்றோம்.

இப்பகுதியிலுள்ளவற்றை நாம் விட்டுவிட முன்வர வேண்டும் என்பதை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளுதல் நல்லது. அவை பின்பற்ற வேண்டியவை அல்ல; விலக்கப்பட வேண்டியவையாகும்.

நான்காம் பகுதி

முதல் மூன்று பகுதிகளையும் ஏற்றுக் கடைப்பிடிக்கத் தேவையான குறைந்தபட்சத் தகுதிகளை இப்பகுதி விவரிக்கின்றது. இக்குறைந்தபட்சத் தகுதிகள் இம்மூன்று பகுதிகளின் பலனைப் பெற்றுத் தரும். இவற்றின் ஆன்மீகச் சாரத்தைப் பூரணமாக உணர்ந்தால், இந்த 6 சட்டங்களும் குறைந்தபட்சத் தகுதியாக இருப்பதற்குப் பதிலாக, அதிகபட்சப் பலனைப் பெற்றுத் தரும் கருவிகளாக அமையும். பக்தனின் மன நிலையையும், வாழ்வு நிலையையும் தவறாது உயர்த்துவது இதன் குறைந்தபட்சத் திறனானால், யோக வாழ்வின் பத்தாவது கட்டத்திற்குப் பக்தனை உயர்த்தும் திறனையும் உடையவை இவை என்பதையும் நாம் காண வேண்டும். அத்திறன் வெளிப்பட்டு நம் வாழ்வில் பலனளிக்க நாம் அவற்றை, அவற்றின் உச்சக்கட்டச் சிறப்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சத் தேவைகள்

    நல்லொழுக்கம்.
    
    மறுக்கவொண்ணாத நல்லெண்ணம்.
    
    சுத்தம், ஒழுங்கு, தணிவான குரல்.
    
    சுயநலமும், தாழ்ந்த உள்ளமும் அழிந்த நிலை.
    
    நம்பிக்கை, இடையறாத அன்னை நினைவு.
    
    செயலின் விற்பன்னன் என்ற அளவில் திறமை.

இவை பக்தன் மன நிலையையும், வாழ்வு நிலையையும் தவறாது உயர்த்தும்.

No comments:

Post a Comment