Friday, October 2, 2015

கடந்த காலத்தை வெளியேற்றுங்கள்!

கடந்த காலத்தை வெளியேற்றுங்கள்!

வேண்டும் என்பதற்காகப் போராடுவதை விட, வேண்டாம் என்பதற்குத்தான் நாம் வாழ்வில் அதிகம் போராடு கிறோம். கடன் வேண்டாம், நோய் வேண்டாம், மனக்கஷ்டம் வேண்டாம், பிரச்சினை வேண்டாம்... இப்படி நிறைய ‘வேண்டாம்’கள் உண்டு. நமது அத்தனை சக்தியையும் திரட்டி எதை வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அதில் செலுத்துகிறோம். பிறகு சொல்வோம்: “எது வேணாம்னு நினைச்சோமோ அது அப்படியே நடந்தது!” வேண்டாம் என்று நினைப்பதையும் நம் மனதின் சக்தி கவர்ந்து இழுத்து வரும்!

வேண்டாத வெளிநாடு


என் உறவினர் ஒருவர் தன் ஒரே பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் போது ஒரே நிபந்தனை தான் வைத்தார்: “பையன் வெளிநாடு போகக் கூடாது. உள்ளூரிலேயே வேலை இருக்கணும்.” காரணம், கடைசிக் காலத்தில் தன் பெண் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம். நல்ல பணக்காரரான அவர் அமெரிக்க மாப்பிளைகள் பலரை நிராகரித்தார். கடைசியில் ஒரு உள்ளூர் பையனாகப் பார்த்து மணம் முடித்தார்.

சில ஆண்டுகளிலேயே எதேச்சையாக ஒரு பெரிய வேலை அமெரிக்காவில் கிடைக்க, அவரது மாப்பிள்ளை மனைவியுடன் பிடிவாதமாய் அமெரிக்கா போய்விட்டார். 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திரும்பவில்லை. “எது நடக்கக் கூடாதுன்னு காலம் பூரா பிரார்த்தனை பண்ணினேனோ அதையே இறைவன் எனக்கு கொடுத்துட்டான்!” என்பார் விரக்தியாக.

அருகிலேயே மகள் இருக்க வேண்டும் என நினைத்து வேண்டியிருந்தால் பலித்திருக்கும். ஆனால், மகள் அமெரிக்கா போகக் கூடாது என்றே அவர் வேண்டியுள்ளார். அவரின் உள்மனப் பிரார்த்தனையில் அமெரிக்கா மட்டும்தான் வலிமையாக இருந்திருக்கிறது.

நேற்றைய சங்கிலி

கடவுள் என்பது உள் மனம்தான். பிரார்த்தனை என்பது உங்கள் எண்ணங்கள் தான். நம்பிக்கை எப்போதும் நேர்மறை சக்தி. நம்பிக்கையுடன் ஒன்றைச் செய்தால் அது பலிக்கிறது. காரணம், நம்பிக்கை எண்ணங்களும் ஊக்க உணர்வுகளும் அதற்கான மனிதர்களையும் நிகழ்வுகளையும் அழைத்து வரும்.

அதனால் கடன் வேண்டாம் என்று எண்ணுவதைவிட செல்வம் வருகிறது என்று நம்புவது முக்கியம். நோய் வேண்டாம் என்று எண்ணுவதைவிட ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது முக்கியம். சண்டை வேண்டாம் என்று எண்ணுவதை விட சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது முக்கியம்.

“கடங்காரன் நாளை அஞ்சு லட்சம் கேட்டு கழுத்தை நெறிப்பான். எப்படி செல்வம் வரும் என நம்புவது?” என்று கேட்கலாம். “எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை. எப்படி ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது?” என்பதும் நியாயமான கேள்வி. “என்ன பேசினாலும் சண்டையில்தான் முடிகிறது. எப்படி சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது?” வாஸ்தவம்தான். எல்லாமே சரியான கேள்விகள்தான்

உங்கள் நேற்றைய எதிர்மறை சக்தியின் விளைவு இன்றைய நிலை. அதைச் சான்றாக வைத்து இன்று நேர்மறையாக யோசிக்க மறுத்தால் இந்தச் சங்கிலி தொடரும். எனவே, தர்க்க சிந்தனையில் மாட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு நல்லதை நினையுங்கள்.

பட்டியலிடுங்கள்

அம்பேத்கர், பாரதியார், மார்க்ஸ் என யாருடைய செயல்பாட்டை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். தன்னைச் சுற்றி நடக்கும் நிதர்சனங்களில் நீர்த்துவிடாமல் அதற்கு மாற்றான செயல்பாடுகளில் நம்பிக்கையோடு செயல்பட்டதால்தான் அவர்கள் சரித்திர நாயகர்கள் ஆனார்கள்.

நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விட நீங்கள் வலிமையானவர் என்று நம்புகிறீர்களா? அப்படி என்றால் நம்பிக்கையோடு எதிர்வினையைத் துவங்குங்கள்.

எங்கிருந்து துவங்கலாம்? இப்படி ஆரம்பிக்கலாம்... உங்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதற்கு நீங்களும் ஒரு முக்கியமான காரணம் அல்லவா? உங்கள் எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள் என உங்களால் நிகழ்ந்தவை என்னென்ன என்று யோசித்துப் பட்டியலிடுங்கள்.

ரிலீஸ் செய்யுங்கள்

குற்ற உணர்ச்சியில்லாமல், அவற்றுக்காக வருந்தாமல் அவற்றை வெளியேற்றுங்கள். “இந்த கடனுக்குக் காரணமான என் அனைத்து எண்ணங்களையும் உணர்வு களையும் நான் முழுமையாக வெளியேற்றுகிறேன்!”

இதைத் தொடர்ந்து ஜபிக்கும்போது, எழுதும்போது உங்கள் எண்ணம்-செயல்-பிரச்சினை என்ற முறையில் நீங்கள் வடித்துள்ள வடிவம் உடையத் தொடங்கும். இதற்கு “Release technique” என்று பெயர்.

“இந்த வலிக்குக் காரணமான என் அனைத்து எண்ணங்களையும் உணர்வு களையும் நான் முழுமையாக வெளியேற்றுகிறேன்!”

‘வேண்டாம்’ என்று நினைக்கிற விஷயங்கள் அனைத்துக்கும் இந்த ரிலீஸ் டெக்னிக்குடன் கூடிய அஃபர்மேஷனைப் பயன்படுத்தலாம்.

இதில் முக்கியமான விஷயம்: நடந்ததற்கு வருத்தம் அல்லது குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை. அது நடந்தபோது உங்களுக்குத் தெரிந்ததை, உங்களுக்கு முடிந்ததைச் செய்தீர்கள். இன்று இந்தப் புதிய கற்றல் மூலம் புதிய எண்ணத்தோடு புதிய செயல் புரிய நினைக்கிறீர்கள். அவ்வளவு தான்.

நாமே மாற்றலாம்

எண்ணம் மாறக்கூடியது என்றால் செயலும் மாறக்கூடியது. நம் விதியும் மாறக்கூடியது. விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வது இதைத்தான்.

நீங்கள் உருவாக்கிய நோயையும், நீங்கள் உருவாக்கிய உறவுப் பிரச்சினையையும், நீங்கள் உருவாக்கிய நிதிப் பிரச்சினையையும், நீங்கள் உருவாக்கிய மனக் கஷ்டங்களையும் நீங்களே சரி செய்துகொள்ளலாம் என்பதை விட வேறு நல்ல செய்தி இருக்கிறதா?

No comments:

Post a Comment