Tuesday, October 6, 2015

செய்வன திருந்தச் செய் !.....

செய்வன திருந்தச் செய் !..... 
சுத்தம் சுகம் தரும் .அதுபோல் வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும்  மிகுந்த அவதானம் இருக்க வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு முன் எங்கள் சிந்தனை ஓர் நிலையான இடத்தில் நிற்க வேண்டும் புகழுக்காகவோ அல்லது பிறரை இழிவு படுத்த வேண்டும் என்ற தவறான நோக்கங்களுடனோ நாம் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது. காரணம் எமது வாழ்க்கை என்பது ஒரு நல்ல சமூகத்துடன் பின்னிப் பிணைந்து இருக்க வேண்டும் எனில் பிறர் மதிக்கத் தக்க வகையில் எம் பண்பு இருக்க வேண்டும் எந்த ஒரு மனிதனும் ஒருவருடன் பழக நினைக்கும் போதே அவரது பண்பு குறித்த கேள்விக்குறிகள் அவசியம் எழும். எழ வேண்டும். அவ்வாறு இல்லையேல் காலப்போக்கில் இவர்கள்தான் எம்முடன் இத்தனை காலமும் நட்புப்  பாராட்டி வந்தவர்கள்  இவர்களது செயல் நாம் எதிர் பார்க்கும் இடத்தில் இல்லை என்று தெரிய வந்தால் அதை விடவும் துன்பம் வேறு இல்லை எனலாம். நல்லவர்களாக வாழ்பவர்கள் கிடைத்தல் என்பது நாம் செய்த புண்ணியம். அதே போன்று தீய ஒழுக்கம் உடையவர்களின் நட்பு கிடைத்துவிட்டால் காலனும்  நம் வருகைக்காகக் காத்திருக்க  வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கட்டத்தில் நாமே காலனை அழைக்க நேரிடும் அதனிலும் இன்றைய கால கட்டங்களில் மனிதன் எதைச் சிந்திக்கின்றான் அவன் மனம் எம்மிடம் இருந்து எதை எதிர் பார்க்கின்றது ,அடுத்த கட்டமாக அவன் எமக்கு என்ன செய்வான் என்பனவற்றைக் கூட எம்மால் அறிய முடிவதில்லை.  அவ்வளவு தூரம் நம்பிக்கைத் துரோகத்தில் மனித இனம் மிக மிக முன்னேறி விட்டதென்றே கருத முடிகிறது .இதனால்தான் எங்கு பார்த்தாலும் சினிமாவிலோ அல்லது தொலைக் காட்சி நாடகங்களிலோ அல்லது பிற செய்தித் தளங்களிலோ வரும் செய்திகள் தகவல்கள் எல்லாமே பார்த்து எம்மால் யீரணிக்க முடிவதில்லை .ஏன் இவைகள்தான் இன்று எம் அன்றாட வாழ்வில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன !....
     
மகிழ்ச்சிப் பூக்கள் பூக்க வேண்டும் என்றே மனிதன் பிற உறவுகளைத் தேடி அடைகின்றான்  அங்கே கண்ணீர்ப்  பூக்களைக்  கலக்க விடாமல் இருக்க எமக்கு மிகுந்த கவனம் தேவை என்பதில் நாமேதான் உறுதியாக இருக்க வேண்டும் பிறர்    பேச்சைக் கேட்டு அவர்களை நல்லவர்கள் என்ற முடிவுக்கு நாம் அவசரப்பட்டு வந்துவிடக் கூடாது .எமது ஒவ்வொரு செயலுக்கும் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் விளக்கம் கேட்பதோ அல்லது விளங்கப்படுத்துவதோ கூடவே கூடாது .சில சமயம் உங்கள் நண்பர்கள் மீது உங்களுக்கு சந்தேகம் எழலாம்  அவ்வாறன சமயங்களில் பொறுமை காப்பதோ அல்லது மறை முகமாக மன்னித்து விடுவதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள் .காரணம் நட்புக்கிடையில் ஒளிவு மறவு தேவை இல்லை .மிகப் பெரிய குற்றங்கள் செய்தவர்களை அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் செயலை அவதானித்து மெதுவாக நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் மற்றபடி சிறு சிறு தவறுகளை உடனுக்குடன் தெளிவு படுத்தி வாழப் பழகுங்கள் .அதை விட்டு விட்டு இவ்வளவு காலமும் நண்பர்களாக  வாழ்ந்ததை மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமலும் இருந்து விடாதீர்கள் .  இந்த விட்டுக்கொடுப்புகளை தவறாக ஒருவர் புரிந்துகொண்டால்  இதை விடவும் பெரும் தவறுகளை செய்து விட்டு அவர்களும் ஒரு நேரத்தில் உங்களுக்கு துரோகிகளாக மாறலாம் .எதற்கும் முன்னெச்சரிக்கையாக உங்கள் நண்பர்களின்  விபரங்களை உங்கள் வீடில் உள்ள பெரியவர்களுடன் ஓர் அறிமுகம் செய்து வைத்துக்கொள்ளுங்கள் .இதனால் உங்கள் நட்பு ஆரோக்கியமானதா, அவர்கள் நல்லவர்கள்தானா,  யாருடன் நாம் எப்படிப் பழக வேண்டும் என்ற பெரியவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் கிட்டும். அவை உங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .   ஒளிவு மறைவு அற்ற நட்பே உகந்தது இக் காலத்திற்கு என அனைவரும் உணர வேண்டும். நண்பர்களின் தொகைகளை விடவும் நட்புப் புனிதமானது அதை மதிக்கும் ஒருவரே எமக்கு நண்பராக வர வேண்டும் என்ற   குறிக்கோள்  இங்கு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்துடன் இன்றைய என் ஆக்கத்தினை நிறைவு செய்கின்றேன் .மிக்க நன்றி உறவுகளே வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும்  .  

No comments:

Post a Comment