ஒளவையாரின் ஆத்திச்சூடி
1. அறம் செய விரும்பு
எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது.
2. ஆறுவது சினம்
கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.
3. இயல்வது கரவேல்
நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும்.
4. ஈவது விலக்கேல்
பிறருக்கு உதவி செய்வதைத் தடுக்கக் கூடாது. அதாவது நம்மால் பிறருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, மற்றவர்கள் பிறருக்கு செய்யும் உதவியை செய்ய விடாமல் தடுக்கக் கூடாது.
5. உடையது விளம்பேல்
உன்னிடம் இருக்கும் நன்மை தீமைகளை பிறரிடம் கூறாதே. உன்னிடம் சில நல்ல குணங்களும் இருக்கும். சில கெட்ட குண்ங்களும் இருக்கும். நல்ல குண்ங்களைப் பற்றி கூறி பெருமை பீற்றிக் கொள்ளவும் கூடாது. கெட்ட குணங்களைப் பற்றி கூறி நம்மை சிறுமைப்படுத்திக் கொள்ளவும் கூடாது.
6. ஊக்கமது கைவிடேல்
எந்த ஒரு செயலில் ஈடுபடும்போதும் இடையில் சில தடங்கல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அந்த மாதிரி நேரங்களில் நாம் நம் மனதளவில் உற்சாகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் தைரியத்தைக் கைவிட்டு விடக்கூடாது. உடல் அளவில் இருக்கும் தைரியத்தை விட மனதளவில் கொள்ளும் தைரியம் வேகத்தையும் கொடுக்கும். வெற்றியையும் கொடுக்கும். ஆகவே எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும்.
7. எண் எழுத்து இகழேல்
எண்கள் சம்பந்தப்பட்ட கணிதம், எழுத்துகள் சம்பந்தப்பட்ட இலக்கியம் இவை இரண்டும் நம்முடைய இரண்டு கண்களைப் போன்றவை. இவற்றை இகழ்ந்து ஒதுக்கக்கூடாது. எந்த ஒரு பொருளையும் நாம் பார்க்கும்போதும் நம்முடைய இரண்டு கண்களையும்தான் பயன்படுத்துகிறோம். ஒரு கண்ணால் பார்த்தால் ஒரு பாதியைத்தான் காண முடியும். ஆகவே கணிதம், இலக்கியம் இவை இரண்டையுமே இகழ்ந்து ஒதுக்கக் கூடாது.
8. ஏற்பது இகழ்ச்சி
பிறரிடம் போய் யாசிப்பது இழிவாகும். சிலர் வீறாப்பாக பேசும்போது, ’நான் பிச்சை எடுத்து சாப்பிட்டாலும் சாப்பிடுவேனே தவிர உன்கிட்டே கையேந்த மாட்டேன்’ என்று சொல்வதை கேட்டிருப்போம். பேச்சுக்கு வேண்டுமானால் அப்படி பேசலாம். பிறரிடம் சென்று பிச்சை எடுத்து சாப்பிடுவது மிகவும் இழிவான ஒரு செயலாகும்.
9. ஐயம் இட்டு உண்
பிச்சை கேட்பவர்களுக்கு உணவு கொடுத்த பின்னர் சாப்பிட வேண்டும். பிச்சை எடுத்து சாப்பிடுவது இழிவான செயல்தான் என்றாலும் அவ்வாறு பிச்சை கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு கொடுத்து விட்டு பிறகு மீதி இருப்பதை நாம் சாப்பிடுவதுதான் நல்ல செயலாகும்.
10. ஒப்புரவு ஒழுகு
உலக அனுபவத்தை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள். ஊரோடு ஒத்துப் போ! என்று சொல்லக் கேட்டிருப்போம். நம்மை சுற்றி சில நல்ல விஷயங்களும் சில கெட்ட விஷயங்களும் நடந்து கொண்டேதான் இருக்கும். அந்தந்த சூழ்நிலைக்கேற்ப நாம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
11. ஓதுவது ஒழியேல்
நேரம் கிடைக்கும் போதெல்லாம் படியுங்கள். படிப்பதை மட்டும் விட்டுவிடவே கூடாது. செல்வம் இருக்கும் இடத்தில்தான் சிறந்தது. ஆனால் நாம் கற்றிருக்கும் கல்வியானது நாம் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பைக் கொடுக்கும். அதோடுமட்டுமில்லை நாம் கற்றதை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பது இன்னும் நல்லது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாம் நமது மூளையின் இரண்டு சதவீத அளவைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
12. ஔவியம் பேசேல்
மற்றவர்களைப் பற்றி பேசும்போது பொறாமையோடு பேசக் கூடாது. அவ்வாறு பேசுவதால் ந்ம்மை அறியாமலே அவர்களை நமது எதிரியாக உருவாக்கி விடுகிறோம். போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கக்கூடாது. போட்டி இருந்தால் அங்கே ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும். பொறாமை இருந்தால் அங்கே நிச்சயமாக அழிவுதான் இருக்கும். பொறாமை நம்மை அழித்து விடும். எனவே அடுத்தவர்களைப் பற்றி பெசும்போது பொறாமையை தவிர்த்து பெருமையோடு பேசுவது ந்ன்றாக இருக்கும்.
13. அஃகஞ் சுருக்கேல்
தானியங்களை தராசில் எடை போடும்போது அளவு குறைக்கக் கூடாது. நாம் சூப்பர் மார்க்கெட் செல்லும்போது அங்கே ‘எலக்ட்ரானிக் ஸ்கேல்‘ பார்த்திருப்போம். அதில் எடை போடும்போது துல்லியமாக மில்லி கிராம் அளவில் எடை போடுவர்கள். அதுவே காய்கறி கடையில் கை தராசில் எடை போடுபவர்கள் அளவுக்கு அதிகமாகவே போடுவார்கள். சில இடங்களில் தராசின் எடைக்கற்களின் அடியில் ஓட்டை போட்டோ, அல்லது தராசு தட்டின் அடியில் புளியை ஒட்டி வைத்தோ ஏமாற்றுவார்கள். அவ்வாறு செய்வது பாவம். (இந்த் காலத்தில் பாவ புண்ணியத்தைப் பற்றி யார் பார்க்கிறார்கள்?)
14. கண்டு ஒன்று சொல்லேல்
நம் கண்களால் பார்த்ததைத் தவிர வேறு எதையும் சொல்லக் கூடாது. எந்த ஒரு விஷயமும் நாம் மற்றவர்களிடம் சொல்லியதை, அவர்கள் வேறு ஒருவரிடம் சொல்லும்போது அதற்கு கண், காது, மூக்கு வைத்து ஒரு உருவமாக்கி, ஒன்றை பத்தாக்கிக் கூறி விடுவர்கள். அதனால் பலப்பல பிரச்சினைகள் உருவாகலாம். ஆகவேதான் நாம் ஏதாவது சொல்ல நினைத்தாலும் அதை மிகைப்படுத்தாமல் சொல்ல வேண்டும்.
15. நுப்போல் வளை
பெரும் சூறைக்காற்றிலும்கூட மூங்கில் மரம் தன்னைத்தானே வளைத்து, நெழித்துக் கொண்டு ஒடிந்து விழுந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளும். தமிழ் எழுத்துக்களில் 'ங' என்ற எழுத்தைப் போல அனைவரையும் இணைந்து செல்ல வேண்டும். அவ்வாறு இருந்தால் மற்றவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் நம்மையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
16. சனி நீராடு
நம் உடலின் வெப்பத்தைத் தணிக்க வாரம் ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். வாரக் கடைசி நாளான சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டால் அடுத்த வாரம் முழுவதும் சுறுசுறுப்பக இருக்கலாம்.
17. ஞயம்பட உரை
ஒரு விஷயத்தை, அது நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ, அதிர்ச்சியான விஷயமோ, துக்க விஷயமோ, அதை மற்றவர்களிடம் கூறும்போது மிகவும் கனிவான முறையில் கூறினால் நன்றாக இருக்கும். அதுவும் அறிவு சார்ந்த விஷயங்களைக் கூறும்போது இன்னும் இனிமையான, கனிவான முறையில் கூறினால் வேகமாக சென்றடையும்.
18. இடம்பட வீடு எடேல்
தேவைக்கு அதிகமாக வீட்டைப் பெரிதாக அமைக்காதே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது நம் வீட்டுக்கும் பொருந்தும். வீட்டைக் கட்டிப் பார் & கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். சுப விரயமான வீடு ஒரு வகையில் சேமிப்பு என்றாலும், அகலக்கால் வைக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. கை மீறி கடன் படாமல் தேவையான் அளவுக்கு கட்டிக் கொள்வது மிகவும் நல்லது. கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன். அந்த நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
19. இணக்கம் அறிந்து இணங்கு
ஒருவருடன் நட்புறவு கொள்ள நினைத்தால், அதற்கு முன் அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதைத் தீர அறிந்து, அதன் பிறகு நட்பு பாராட்ட வேண்டும். குறிப்பாக பெண்கள் & கண்டதும் காதல் என்பது மிகமிக கேவலமானது. அதனால் பிற்காலத்தில் அவதிபபடப் போவது பெண்கள் மட்டுமே. தராதரம் அறிந்து பழகுவது மிகவும் நல்லது. ஒருவர் நல்லவராயிருப்பாரேயானால் அவரைத் தேடிப்போய் பழகுவது நல்லது. கெட்டவராயிருந்தால் கோடி கொட்டிக் கொடுத்தாலும் அவரது நட்பை ஒதுக்கி விடுவது நல்லது.
20. தந்தை தாய் பேண்
நம்மைப் பெற்ற தாய், தந்தையரைப் பேணிக் காக்க வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் & இவர்களில் முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ள நம் பெற்றோரை & நம்மை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய நம் பெற்றோரை ந(£)ம் கடைசிக் காலம் வரை அவர்களை நன்றாக ஆதரித்து, கவனித்துக்கொள்ள வேண்டும்.
21. நன்றி மறவேல்
ஒருவர் நமக்கு செய்த உதவியை நாம் என்றும் மறக்கக் கூடாது. நாம் மற்றவர்களுக்கு செய்த உதவியை அன்றே அப்பொழுதே மறந்து விட வேண்டும். ஆனல் மற்றவர்கள் நமக்கு செய்த உதவியை எந்த காலத்திலும் மறந்து விடாமல் நன்றி பாரட்ட வேண்டும். அவ்வாறு மறப்பவர்களுக்கு எக்காலத்திலும் மன்னிப்பே கிடைக்காது.
22. பருவத்தே பயிர் செய்.
உரிய காலத்திலே உழுது பயிரிட்டால் விழைச்சல் நன்றாக இருக்கும். ஐந்தில் வழையாதது ஐம்பதில் வழையுமா? தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பர். குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் கற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு விஷயங்களும் குழந்தைகள் மனதில் பசுமரத்தாணி போல் ஆழமாக பதியும். அதுவே பிற்காலத்தில் குழந்தைகளை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் ஆக்கும். சிசு கருவிலிருக்கும்போதே அதன் தாய் தனது எண்ணங்கள் மூலமாக நல்ல விஷயங்களை விதைத்து, பிறகு குழந்தை பிறந்தபின் குரல் வழியாக சொல்லி வளர்த்தால் இன்னும் ஆழமாக பதியும்.
23. மண் பறித்து உண்ணேல்
அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது. அதிலும் மற்றவருடைய நிலத்தை அபகரித்து அதை மூலம் உண்டு வாழக்கூடாது. மண், பெண், பொன் & இம்மூன்றிலும் ஆசை வைக்கக் கூடாது. அடுத்தவர் இடத்துக்கு ஆசைப்பட்டாலும், அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்பட்டாலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டாலும், அது நம்மை அழித்து விடும்.
24. இயல்பு அலாதன வெயேல்
நம் உடலும் சரி, மனமும் சரி, அவை சில பழக்க வழக்கங்களுக்கு கட்டுப்பட்டிருக்கும். அத்தகைய வழக்கத்துக்கு மாறான காரியத்தைச் செய்யக்கூடாது. உடலைப் பொறுத்தவரை, நேரம் தவறாமல் சாப்பிடுவதும், மனதைப் பொறுத்தவரை பொய் சொல்லாதிருப்பதும் நல்லது. நேரம் தவறி சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்வதும், சொல்லிய ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்லி மனதைக் கெடுத்துக் கொள்வதும் தேவைதானா?
25. அரவம் ஆடேல்
பாம்போடு விளையாடினால் என்ன ஆகும்? பாம்பு கடித்தால் விஷம் ஏறி சாவு நிச்சயம். அது போலத்தான் தீயவர்களோடு உறவு வைத்துக் கொண்டால் அதன் பின்விழைவுகள் நிச்சயம் கெடுதலாகத்தான் இருக்கும். ஆகவே தீயவர் நட்பு என்றும் வேண்டவே வேண்டாம்.
26. இலவம் பஞ்சில் துயில்
தரையில் படுத்து தூங்கிப் பாருங்கள்! வெறும் கட்டிலில் படுத்து தூங்கிப் பாருங்கள்! பஞ்சு மெத்தையில் படுத்து தூங்கிப் பாருங்கள்! இலவம் பஞ்சு மெத்தையில் படுத்து தூங்கிப் பாருங்கள்! எது சுகம்? இலவம் பஞ்சு மெத்தைதானே. அது போலவே நம் மனதையும் மென்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நமக்கும், நம்முடன் பழகும் மற்றவர்களுக்கும் அது மென்மையாக, இனிமையாக இருக்கும்.
27. வஞ்சகம் பேசேல்
எண்ணம் போல் வாழ்வு என்பார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது. மனதில் வஞ்சம் வைத்துப் பேசுவது, பொறாமையோடு பேசுவது, கடுப்புடன் பேசுவது & இவையெல்லாம் மற்றவர்களிடம் நம்மைப் பற்றிய தவறான எண்ணங்களைத்தான் உருவாக்கும். கள்ளம் கபடம் இல்லாமல் பேசுவது குழந்தைத்தனமான அன்பான எண்ணங்களையே உருவாக்கும். ஆகவே மற்றவர்களை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசாமல் இயல்பாக பேசுவது நலம்.
28. அழகு அலாதன செயேல்
மற்றவர்களை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசாமல் இயல்பாக பேசுவது நலம். அது போலவே பிறர் இகழந்து பேசக்கூடிய செயலையும் நாம் செய்யாமல் இருப்பதும் நலம். அது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதற்கு சமமானது.
29. இளமையில் கல்
ஐந்தில் வழையாதது ஐம்பதில் வழையுமா? தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பர். குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் கற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு விஷயங்களும் குழந்தைகள் மனதில் பசுமரத்தாணி போல் ஆழமாக பதியும். அதுவே பிற்காலத்தில் குழந்தைகளை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் ஆக்கும். ஆகவே சிறு வயதிலிருந்தே கல்வியைக் கற்பது மிகச் சிறப்பாகும்
30. அரனை மறவேல்
கடவுளை வணங்க மறக்கக் கூடாது. இன்பமாக இருக்கும் போது மறந்து விடுவதும், துன்பம் வரும்போது மட்டும் கடவுளைத் தேடுவதும் மனித இயல்பு. அவ்வாறு இல்லாமல் எப்பொழுதும் கடவுளை மறக்காமல் வணங்கி வந்தால் கடவுள் அருள் நமக்கு கிடைக்கும்.
31. அனந்தல் ஆடேல்
கடலின் ஆழம் தெரியாமல் உள்ளே இறங்கக் கூடாது. அதோடு கடலின் அலைகள் எப்போது பெரிதாகும்? எப்போது சிறியதாக வரும் என்று தெரியாமல் நீந்தி விளையாடினால் ஆபத்து நேரிடும்.
32. கடிவது மற
கடுமையான சொற்களை பயன்படுத்தி பேசக்கூடாது. பிறருக்கு கோபம் உண்டாகக் கூடிய சொற்களை பயன்படுத்தக் கூடாது. ஒரு நண்பனை உருவாக்குவது மிகவும் கடினம். ஆனால் ஒரு எதிரியை உருவாக்க ஒரு கடுஞ்சொல் போதும். கடுமையான பேச்சு ஒரு நண்பனையே பகைவனாக்கிவிடும். ஆகவே எப்பொழுதும் கடுமையான சொற்களை தவிர்த்து இனிமையாக பேச பழகிக் கொள்ள வேண்டும்.
33. காப்பது விரதம்
மூன்று வேளை பட்டினி கிடந்து மூன்றாவது வேளையில் வயிறு முட்ட சாப்பிடுவது விரதம் அல்ல. பிற உயிர்களுக்கு ஆபத்து நேரிடாமல் அதைக் காத்து இரட்சிப்பதுதான் உண்மையான விரதம் ஆகும். இதை வேறு விதமாக சொல்வதென்றால் பிற உயிர்களை கொன்று தின்னும் வழக்கத்தைக் கைவிட வேண்டும்.
34. கிழமைப் பட வாழ்
தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் உதவியாக வாழ வேண்டும். ஏதோ பிறந்தோம். ஏதோ வாழ்ந்தோம் என்று இல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் வாழ வைப்பவனே மனிதன். முதலில் நம்மையும், நம் குடும்பத்தாரையும், பிற சொந்தக்காரர்களையும், அதன் பிறகு நண்பர்களையும் வாழ வைக்க வேண்டும். இறுதியாக முடிந்தால் ஊருக்காக உழைக்கலாம்.
35. கீழ்மை அகற்று
மற்றவர்கள் முகம் சுழிக்கக்கூடிய வகையில் கேவலமான, கீழ்த்தரமான செய்கைகளை செய்யக் கூடாது. அந்த மாதிரியான எண்ணங்களை நம் மனதிலிருந்தே அகற்றி விட வேண்டும்.
36. குணமது கைவிடேல்
நல்ல குணங்களை விட்டுவிடக் கூடாது. நல்ல குணம் என்பது நம்முடன் கூடப் பிறந்தது. பிறருக்கு உதவுவதும், நல்ல விஷயங்களையே நினைப்பதும், செய்வதும்தான் நல்ல குணங்கள். அத்தகைய நல்ல குணங்களைப் பெற்றவர்கள் சிலர் இருப்பதால்தான் இவ்வுலகில் சிறிதேனும் மழையாவது பெய்கிறது. அவர்கள் தங்கள் குணங்களை மாற்றிக்கொள்ளாமல் வாழ வேண்டும்.
37. கூடிப் பிரியேல்
நல்ல நண்பர்களை விட்டு பிரியக் கூடாது. நல்ல குணங்கள், பண்புகள் கொண்டவர்களோடு தொடர்பு கொண்டு நண்பர்கள் ஆன பிறகு எக்காரணம் கொண்டும் அவர்களை விட்டுப் பிரியக்கூடாது. ஆபத்தான காலகட்டங்களில் நமக்கு உதவி செய்ய, நாம் அழைக்காமலே ஓடி வருபவர்கள் நல்ல நண்பர்கள்தான்.
38. கெடுப்பது ஒழி
யாருக்கும் கெட்டது செய்யக்கூடாது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. கெட்டது செய்ய வேண்டாம். கெட்டதை செய்யும் எண்ணத்தை மனதாலும் நினைக்கக் கூடாது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் மனதில் அத்தகைய எண்ணங்கள் வராது.
39. கேள்வி முயல்
அறிஞர்கள் சொற்களை கேட்டுத் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும். எவ்வளவு புத்தகங்களைப் பார்த்திருந்தாலும், படித்திருந்தாலும்கூட நல்ல அறிஞர்களின் பேச்சுக்களை ஆவலுடன் காது கொடுத்து கேட்க வேண்டும். அதோடுமட்டுமல்ல & சந்தேகங்களை கேட்டு தெளிந்து அதை பின்பற்றி நடந்து கொள்ளவும் வேண்டும்.
40. கைவினை கரவேல்
கைத்தொழில்களை கற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். வேலை கிடைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட ஒரு தொழிலை செய்ய கற்றுக் கொண்டால் நம் சொந்த காலிலே நின்று கொள்ளலாம். அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகாமல் இருக்கும். அவ்வாறு கற்றுக்கொண்ட கைத்தொழிலை அடுத்தவர்களுக்கும் கற்றுக்கொடுத்தால் இன்னும் சிலருக்கு வாழ கற்றுக்கொடுத்த புண்ணியமும் கிடைக்கும்.
41. கொள்ளை விரும்பேல்
மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாதே. இருப்பதைக் கொண்டு இனிய வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பேராசைப்பட வேண்டாம். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட வேண்டாம்.
42. கோதாட்டு ஒழி
ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடாதே. அது நமக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஆபத்து ஏற்படுத்தும் என்று தெரிந்தால், அத்தகைய விளையாட்டுகளை தவிர்த்து விடலாம். தீ சுடும் என்று தெரிந்தும் சுட்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது அல்லவா?
43. சக்கர நெறி நில்
அரசு ஆணைகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும். நடைமுறை நெறிகளை வகுத்து அதை ஆணையாக மாற்றி தருவதுதான் அரசாங்கம். அரச கட்டளையை மதித்து நடப்பவனே நேர்மையானவன். நேர்மையானவன் வாழ்வில் என்றும் வெற்றி பெறுவான்.
44. சான்றோர் இனத்திரு
அறிஞர் பெருமக்களின் குழுவோடு சேர்ந்து இருப்பது பெருமை ஆகும். செல்வம் இருக்கும் இடத்தில்தான் பெருமை. ஆனால் கல்வி கற்றவைகளுக்கு செல்லும் இடமெல்லாம் பெருமை. பூவோடு செர்ந்த நாரும் மணம் பெரும். அதுபோல அறிவில் சிறந்த பெரியவைகளின் உறவால் நாமும் சிறப்பு பெறலாம்.
45. சித்திரம் பேசேல்
பொய்யை உண்மை போல பேசக் கூடாது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பப் பேசினால் அது உண்மையாகி விடும் என்பார்கள். ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்ல நேரிடும். அதன் விழைவு & நாம் கெட்டவர்களாவதுடன் அடுத்தவர் மனதை புண்படுத்துவதுடன், அடுத்தவர் வாழ்வை கெடுத்தும் விடும்.
46. சீர்மை மறவேல்
நல்ல செயல்களை மறந்துவிட வேண்டாம். மனம் போல் வாழ்வு என்பார்கள். மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்லதையே செய்ய நினைக்க வேண்டும். நல்ல எண்ணங்களே நல்ல செயல்களாக உருவெடுக்கும். நல்ல செயல்களை செய்யும் போது நல்ல நண்பர்களும், நல்ல உறவுகளும் உருவாவார்கள். நம்மைச் சுற்றி நல்லவர்கள் கூடும்போது நம் வாழ்வும் சிறப்பாக இருக்கும்
47. சுளிக்கச் சொல்லேல்
மற்றவர் முகம் கோணும்படியான சொற்களை பேசக்கூடாது. காதால் கேட்பதற்கே கூசும்படியான அருவெருப்பான, கேவலமான பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். கையால் ஒரு அடி அடித்துவிட்டாலும் அன்பால் அதை மறந்துவிட செய்யலாம். ஆனால் வாயால் பேசும் ஒரு தீய வார்த்தை மனதை விட்டு அகலாது.
48. சூது விரும்பேல்
சூதாட்டங்களில் ஈடுபட வேண்டாம். சூதாட்டங்களினால் பொருள் நஷ்டமும் மனக்கஷ்டமும்தான் உண்டாகும். சூதாட்டங்களில் விளையாடி மனைவியையும், நாட்டையும் இழந்த பாண்டவர்கள் கதையை கேட்டிருப்போம். சூதாட்டத்தில் வீட்டையும், பொருளையும் இழந்தவர்கள் ஏரளம்.
49. செய்வன திருந்தச் செய்
செய்யும் வேலையை திறம்படச் செய்ய வேண்டும். நாம் செய்ய நினைக்கும் வேலையை மனதாலும், உடலாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த வேலையில் நம் திறமையைக் காட்ட முடியும். நமக்கு திருப்தி வந்தால்தான் வாடிக்கையாளரை நாம் திருப்திப்படுத்த முடியும். ஆகவே நமக்கு கொடுத்த வேலையை சுத்தமாக செய்து கொடுக்க வேண்டும்.
50. சேரிடம் அறிந்து சேர்
நல்ல நண்பர்கள், நல்ல அறிஞர்கள் என்று தீர ஆராய்ந்து அவர்களோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும். ஆனால் பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும். எனவே தரம் அறிந்து அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.
51. சை எனத் திரியேல்
மற்றவர் நம்மை இகழ்ந்து பேசும்படி நடந்து கொள்ளக் கூடாது. ‘ச்சே! உன்னைப் போயி.....’ என்று வார்த்தையை முடிக்காமலே பேசுவார்கள். அந்த மாதிரி பேசுவதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும்.
52. சொல் சோர்வு படேல்
யார்கூட பேசினாலும் நம் பேச்சு இறுக்கமாகவோ அல்லது மனம் தளர்ந்த சோர்வான பேச்சாகவோ இருக்கக் கூடாது. இயல்பான பேச்சாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பான, தன்னம்பிக்கையான பேச்சு நம் வாழ்வில் உயர்வை கொடுக்கும்.
53. சோம்பித் திரியேல்
எப்போதும் சோம்பேறித்தனமாக இருக்கக் கூடாது. எந்த முயற்சியும் எடுக்காமல் சோம்பேறித்தனமாக ஊரைச் சுற்றித் திரியக் கூடாது. மற்றவர் எதிரில் நின்று பேசும்போது சோம்பல் முறிக்கக் கூடாது. சோம்பேறித்தனம் தூக்கத்தையே கொடுக்கும். வெற்றியை கொடுக்காது.
54. தக்கோன் எனத் திரி
நம்மை கௌரவமானவன் என்று பிறர் எண்ணும்படி நடக்க வேண்டும். நம்மை பார்க்கும்போதே நம் மீது ஒரு மரியாதை வரும்படியாக நடந்து கொள்ள வேண்டும். அது பயம் கலந்ததாக இருக்கக் கூடாது. கௌரவமான மரியாதையாக இருக்க வேண்டும்.
55. தானமது விரும்பு
இல்லாதவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். தானத்தில் சிறந்தது அன்னதானம். அடுத்தவர் பசியை போக்க அன்னதானம் செய்யலாம். அந்தணர்களுக்கு பசு தானம் செய்வது புண்ணியத்தைக் கொடுக்கும்.
56. திருமாலுக்கு அடிமை செய்
பெருமாள் கோவிலுக்கு சென்று சேவை செய்தால் புண்ணியம் கிடைக்கும். ஆக்கல், காத்தல், அழித்தல் & இம்மூன்றில் காத்தல் தொழிலை செய்யும் பெருமாளுக்கு சேவை செய்ய வேண்டும். ‘பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி‘. அப்போ வயதில் பெரிய முதியவர்களுக்கு செய்யும் சேவையும் பெருமாளுக்கு செய்த மாதிரிதானே?
57. தீவினை அகற்று
பிறருக்குத் தீமை உண்டாகும் செயல்களை அறவே செய்யக் கூடாது. நல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லை. தெரிந்தும் தீய செயல்களை செய்ய மனதாலும் நினைக்க வேண்டாம்.
58. துன்பத்திற்கு இடம் கொடேல்
பிறர் மனம் வருந்தும்படியாகவோ, மனம் புண்படும்படியாகவோ நடந்து கொள்ளக் கூடாது. பேசவும் கூடாது.
59. தூக்கி வினைசெய்
எந்தக் காரியத்தை செய்தாலும் அதை நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்ய வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் பொறுமையாக தீர ஆரய்ந்து அறிந்து செய்ய வேண்டும்.
60. தெய்வம் இகழேல்
நாம் வணங்கும் கடவுளை இகழ்ந்து பேசக்கூடாது. மாதா, பிதா, குரு, தெய்வம் & இவர்களை இகழ்ந்து பேசினால் பாவம் சேரும். இவர்களிடம் தலை வணங்கி பேச வேண்டும்.
61. தேசத்தோடு ஒத்து வாழ்
ஊரோடு ஒத்துப் போ! என்பார்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ஊர்கூடி தேர் இழுத்தால் தேர் நிலை வந்து சேரும். நாட்டு மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்தால் நமக்கு உயர்வு நிச்சயமகக் கிடைக்கும்.
62. தையல் சொல் கேளேல்
மனைவியின் இழிந்த சொற்களைக் கேட்டு நடக்கக் கூடாது. மனைவி மந்திரி மாதிரி என்பார்கள். நல்ல அறிவுரைகளை சொல்லி வழி நடத்துபவர்களே நல்ல மந்திரிகள். அவ்வாறில்லாமல் தவறான வழிகாட்டும் மனைவியின் சொல் கேட்டு நடப்பவர்கள் துன்பத்தையே சந்திக்க நேரிடும்.
63. தொண்மை மறவேல்
காலங்காலமாக செய்து வரும் பழமையான காரியங்களை மறந்து விடக்கூடாது. இன்றைக்கும் நாம் செய்யும் பல காரியங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது நம் மூதாதையர் தொன்று தொட்டு செய்து வரும் காரணகாரியங்களே! வயதில் மூத்த பெரியவர்கள் இருக்கும் வீடு நிச்சயம் சுபிட்சமாக இருக்கும்.
64. தோற்பன தொடரேல்
தோல்வி பயம் கூடாது. இருந்தாலும் தோல்வி நிச்சயம் உண்டாகும் என்று தெரிந்தும் அதில் ஈடுபடக்கூடாது. தீ சுடும் என்று தெரிந்தும் கையை சுட்டுக்கொள்வது முட்டாள்தனமானது அல்லவா?
65. நன்மை கடைப்பிடி
நல்ல காரியங்களை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் நன்மை தரும் செயல்களையே நாம் எப்போதும் செய்ய வேண்டும். மற்றவர்கள் நன்றாக இருந்தால்தான் அவர்களால் நமக்கு தொல்லைகள் இருக்காது. எனவே நாமும் நன்றாக இருப்போம்.
66. நாடு ஒப்பன செய்
நாட்டு மக்கள் ஒத்துக்கொள்ளக்கூடிய காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எதிரிகளைத்தான் சம்பாதித்துக்கொள்ள முடியும். நல்ல நண்பர்களை உருவாக்கிக்கொள்வதைவிட எதிரிகளை உருவாக்கிக்கொள்ளாமல் இருப்பது ரொம்ப நல்லது.
67.நிலையில் பிரியேல்
நம் தரத்தை விட்டுக் கொடுத்து கேவலமாக நடந்து கொள்ளக் கூடாது. நமக்கென்று ஒரு கௌரவம் இருக்கிறது. நம் பேச்சும், நடத்தையும் அதற்கு தகுந்தாற்போல இருக்க வேண்டும்.
68. நீர் விளையாடேல்
ஆபத்து நிறைந்த காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி நீந்தக் கூடாது. அவரவர் பலம் அவரவர்க்கு. தேங்கிக் கிடக்கும் நீரில் நீந்துவதும், காட்டாற்று வெள்ளத்தில் நீந்துவதும் வேறு வேறு. காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடுவதைவிட நீர் போகிறபோக்கில் சென்று கரை ஏறுவதே புத்திசாலித்தனம். வாழ்க்கையிலும் அப்படித்தான்.
69. நுண்மை நுகரேல்
நோயை உண்டுபண்ணும் உணவை உண்ணக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. உணவே மருந்து. தேவை அறிந்து உண்பது உடலுக்கு நல்லது.
70. நூல் பல கல்
நிறைய படிக்க வேண்டும். நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். அறிவு வளர்ச்சிக்கான வெவ்வேறு வகையான நூல்களை அதிகமாகப் படிக்க வேண்டும். செல்வம் இருக்கும் இடத்தில்தான் சிறப்பு. கற்றவர்க்கோ செல்லும் இடமெல்லாம் சிறப்பு.
71. நெல் பயிர் விளை
உழவன் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். மக்களின் உணவு ஆதாரனம் அரிசி. அதற்கு விழை ஆதாரமான நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மனிதனின் உணவு தேவை பூர்த்தியானால் மற்றவை தானாகவே நடக்கும்.
72. நேர்பட ஒழுகு
நேர்மையாக இருக்க வேண்டும். சொன்ன சொல் தவறக் கூடாது. வாக்கு சுத்தமாக இருக்க வேண்டும். உண்மை இருக்கும் இடத்தில் நேர்மை இருக்கும். உண்மை, உழைப்பு, உயர்வு. உண்மையாக உழைத்தால் உயர்வை அடையலாம்.
73. நைவினை நணுகேல்
இகழ்ச்சி தரும் விஷயங்களைச் செய்யக்கூடாது. நாமும் கேவலப்பட்டு அடுத்தவரையும் கேவலப்படுத்த வேண்டாம்.
74. நொய்ய உரையேல்
பிறர் மனம் நோகும்படியாக பேசக் கூடாது. எப்போதும் அன்பான வார்த்தைகளைப் பேச வேண்டும்.
75. நோய்க்கு இடம் கொடேல்
உடலில் நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுத்தம், சுகாதாரம் இருக்கும் இடத்தில் நோய் வராது. நம்மை நாமே பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்கான வழிவகைகளை நாமேதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
76. பழிப்பன பகரேல்
மற்றவர் சாபத்திற்கு ஆளாகாதே. அடுத்தவர் பழிக்கும்படியான இழிவான சொற்களை பேசவும் வேண்டாம். அவர் சாபத்திற்கு ஆளாகவும் வேண்டாம். கல்லடி பட்டாலும் படலாமே தவிர சொல்லடி படக்கூடாது. அளவாக, அன்பாக பேச வேண்டும்.
77. பாம்பொடு பழகேல்
பாம்போடு விளையாட வேண்டாம். எது நல்ல பாம்பு? எது கெட்ட பாம்பு? எது விஷமுள்ள பாம்பு? எது விஷமில்லாத பாம்பு? யாருக்கு தெரியும்? ஆபத்து என்று தெரிந்தும் பாம்போடு விளையாட முடியுமா? ஆனால் கெட்டவன் என்று தெரிந்த பின்பும் அவரோடு பழகுவது நல்லதல்ல.
78. பிழைபடச் சொல்லேல்
தவறான கருத்துக்களை தரும் பேச்சை பேச வேண்டாம். நாம் ஒன்று பேச, அடுத்தவர் அதை வேறு மாதிரி புரிந்துகொண்டு, அதற்கு கண், காது, மூக்கு வைத்து உருவமாக்கி விடுவார்கள். எதையும் நேரிடையாக பேச பழகிக்கொள்ள வேண்டும்.
79. பீடு பெற நில்
மற்றவர்கள் மதிக்கும்படியாக நாம் நடந்து கொள்ள வேண்டும். ஒருவனுடைய இறப்பில்தான் அவனுடைய உண்மையான மதிப்பு தெரியவரும். உயிரோடு இருக்கும் காலத்தில் முன் ஒன்று பேசுவார்கள். பின்னால் ஒன்று பேசுவார்கள். ஆகவே இப்போது நாம் வாழும் வாழ்க்கையை மற்றவர் மதிக்கும்படியாக வழ்ந்து காட்ட வேண்டும்.
80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
புகழோடு வாழ்ந்த பெரியோர்களை வணங்கி, அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டும். முன் ஏறு சென்ற தடத்தில் பின் ஏறு சென்றால் ஆழமாக உழ முடியும். கோடு போட்டால் ரோடு போட கற்றுக்கொள்ள வேண்டும். பெரியோர் காட்டிய வழியை பின்பற்றி வாழ்ந்தால் மேன்மை அடைய முடியும்.
81. பூமி திருத்தி உண்
நிலத்தைப் பண்படுத்தி, அதில் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும். அடுத்தவர் வாழ்வை வாழாதே. நீயே உழைத்து வாழ். உன் சொந்த காலில் நில். கால் வயிற்றுக் கஞ்சியானாலும் நீயே உழைத்துக் குடி. அடுத்தவரிடம் கையேந்தாதே!
82. பெரியாரைத் துணைக் கொள்
அறிவார்ந்த பெரியோர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். கோடி கொடுத்தேனும் பெரியோரை தேடிப்பிடி. அரிய பெரியோர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று, நட்பு பாராட்டி அவர்கள் அறிவுரையை கேட்டு நடந்தால் நம் வாழ்வில் எப்போதும் முன்னேற்றம்தான்.
83. பேதைமை அகற்று
மூடனாக வாழக்கூடாது. எதையும் சிந்தித்து ஆராய்ந்து நடக்க வேண்டும். மூட நம்பிக்கை வேண்டாம்.
84. பையலோடு இணங்கேல்
முட்டாளோடு பழகக் கூடாது. ‘ஒரு வாழப்பழம் இங்கேருக்கு. இன்னொன்னு எங்க? அதாண்ணே இது‘ & இதை கேட்கும்போது சிரிப்பு வரும். இந்த மாதிரி முட்டள்களோடு பழகினால் நம்மையும் அப்படித்தானே நினைப்பார்கள்.
85. பொருள் தனைப் போற்றி வாழ்.
சம்பாதிப்பது பெரிதல்ல. சம்பாதித்த பொன்னையும், பொருளையும் பாதுகாப்பது பெரிது. சேர்த்து வைத்த சொத்தை காப்பாற்றி வாழ வேண்டும். மற்றவர் கண்பட வாழக்கூடாது.
86. போர்த் தொழில் புரியேல்.
சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். போர் என்றாலே அங்கு அழிவு நிச்சயம். போர்க்குணம் என்பது மூர்க்க குணம். கோபப்பட்டு வார்த்தையை விடக் கூடாது. கோபமான நேரங்களில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது. அது நிச்சயம் தப்பாகத்தான் முடியும்.
87. மனம் தடுமாறேல்.
மனதில் குழப்பம் கூடாது. எந்த சூழ்நிலையிலும் மனம் கலங்கி, செய்வது அறியாமல் தடுமாற்றம் கொள்ள வேண்டாம். நின்று நிதானித்து பொறுமையுடன் எதையும் செய்வது நல்லது.
89. மிகை படச் சொல்லேல்
எதையும் அதிகப்படுத்தி பேசக் கூடாது. ஒன்றை பத்தாக்குவதோ, ஈறைப் பேன் ஆக்குவதோ கூடாது.
90. மீதூண் விரும்பேல்
அளவுக்கு அதிகமாக உண்ண வேண்டாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதேபோல அளவோடு பேச வேண்டும். அளவுக்கு மீறிய பேச்சும் நம்மீது நம்பிக்கையை குறைக்கும்.
91. முனை முகத்து நில்லேல்.
போர் முனைக்கு செல்பவன் ஆயுதம் இல்லாமல் செல்லக்கூடாது. கோவிலுக்கு செல்லும்போது மனதில் பக்தியுடன் செல்ல வேண்டும். அவ்வாறு நாம் செல்லும் இடம் அறிந்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும்.
92. மூர்க்கரோடு இணங்கேல்.
முரட்டுக் குணம் கொண்டவர்கள், அறிவில்லா மூடர்கள் & இவர்களோடு சேரக்கூடாது. ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவனது நண்பர்களைப் பற்றி விசாரித்தாலே போதும் என்பார்கள்.
93. மெல்லி நல்லாள்தோள் சேர்
நல்ல மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம். அத்தகைய நல்ல மனைவியோடு நன்றாக இணைந்து வாழ்ந்து வீட்டை கொவிலாக்க வேண்டும்.
94. மேன் மக்கள் சொல் கேள்.
பெற்றோர், சான்றோர், ஆசிரியர் போன்ற பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பெரியோர் சொல்பேச்சு கேட்டு நடந்தால் எப்போதும் நன்மையே உண்டாகும்.
95. மைவிழியார் மனை அகல்.
விலைமாதர் வீட்டுக்குப் போக வேண்டாம். ஒழுக்கம் தவறுவதின் முதல் படி விலைமாதர் பழக்கம்தான். அது குடும்ப உறவை சீர்குலைத்து விடும். அத்தகைய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருப்பதே நல்லது.
96. மொழிவது அற மொழி
சொல்வதை தெளிவாக சொல்ல வேண்டும். சொல்லலாமா? கூடாதா? என்கிற சந்தேகமின்றி தெளிவாகக் கூற வேண்டும்.
97. மோகத்தை முனி
பெண் மீது கொள்ளும் அளவுக்கு மிஞ்சிய ஆசையே மோகம். அதுவே அழிவுக்கு வழிவகுக்கும். ஆகவே ஆசையை குறைத்து விடு. ஆசையை வெறுத்து விடு. ஆசையை அடக்கி விடு.
98. வல்லமை பேசேல்
உன்னிடம் உள்ள திறமையைப் பற்றி நீயே புகழ்ந்து பேசக் கூடாது. அவ்வாறு தற்பெருமை பேசினால் மற்றவர்கள் நம்மை மதிக்கக்கூட மாட்டார்கள்.
99. வாது முற்கூறேல்
வலியப்போய் யாருடனும் விவாதம் செய்யக் கூடாது. வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம்.
100. வித்தை விரும்பு
ஆய கலைகளையும் கற்றுக் கொள்ள மனதில் எண்ணம் வேண்டும். கனவு காண். அப்போதுதான் நீ நினைப்பதை அடைய முடியும்.
101. வீடு பெற நில்
இறைவன் அடிபணிந்து முக்தி அடைய முயற்சி செய்ய வேண்டும். இறை பணியே முக்திக்கு வழி.
102. உத்தமனாய் இரு
ஒழுக்கம் முதலான நல்ல குணம் உள்ளவராக வாழ வேண்டும். அவ்வாறு வாழ்பவர்களே மற்றவர்கள் பின்பற்றி வாழும் உத்தம நிலையை அடைவார்கள்.
103. ஊருடன் கூடிவாழ்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ஊர் உறவோடு இணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும். ஒற்றுமையே உயர்வுக்கு வழி.
104. வெட்டெனப் பேசேல்
வெட்டு ஒன்னு. துண்டு ரெண்டு என்கிற மாதிரி பேசக்கூடாது. ‘வார்த்தையைக் கொட்டாதே! அள்ள முடியாது.‘ என்பார்கள். ஆகவே பேச்சில் கடுஞ்சொற்களைத் தவிர்ப்பது நல்லது.
105. வேண்டி வினை செயேல்
தெரிந்தே யாருக்கும் தீமை செய்யக் கூடாது. தெரியாமல் செய்வது தவறு. தெரிந்து செய்வது தப்பு. தவறு மன்னிக்கக்கூடியது. தப்பு தண்டனைக்குரியது.
106. வைகறைத் துயில் எழு
சூரிய உதயத்திற்குமுன் கண்விழிக்க வேண்டும். அவ்வாறு எழுபவர் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதிகாலை தூக்கம் குடும்பத்திற்கு ஆகாது.
107. ஒன்னாரைத் தேறேல்.
எதிரி என்று தெரிந்த பிறகு அவரிடம் நம்பிக்கை கொள்வது தவறு. தெரிந்தே கிணற்றில் குதிக்கலாமா?
108. ஓரம் சொல்லேல்
எதையும் யாருக்காகவும் ஒருதலைப் பட்சமாகக் கூறக் கூடாது அவ்வாறு கூறுவது நீதி தவறுவதாகும். நீதி தவறிய பாண்டிய மன்னனால் மதுரையே எரிந்தது.
No comments:
Post a Comment