Monday, October 12, 2015

முன்மாதிரியாய் இருங்கள் பெற்றோர்களே!

முன்மாதிரியாய் இருங்கள் பெற்றோர்களே!

‘குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லையே, அவர்களது பழக்க வழக்கங்கள் சரியில்லையே… இவர்களை எப்படி திருத்துவது…’ என்று கவலைப்படும் பெற்றோர், உலகில் அதிகம். ‘தாயைப் போல் பிள்ளை’ என்று ஒரு சொலவடையே உண்டு. பெற்றோர் எப்படி செயல்படுகின்றனரோ, அதையே குழந்தைகளும் பின்பற்றுவர். ஒருவர் கூட பசித்திருக்கக் கூடாது என்பதில், அதிக கவனம் செலுத்தினார் ராமலிங்கம் அடிகளார். இக்குணம் அவருக்கு வரக் காரணம் அவரது பெற்றோர் தான்.

கடலூரில் இருந்து, 48 கி.மீ., தூரத்தில் உள்ளது மருதூர். இங்கு வாழ்ந்த ராமைய்யா – சின்னம்மை தம்பதியின் புதல்வராக, அக்.,5, 1823ல் ஞாயிற்றுக்கிழமை பிறந்தார் ராமலிங்கம். தினமும் ஒரு அடியாருக்கு அன்னமிட்ட பின்பே, தான் உண்பது, சின்னம்மையின் வழக்கம். தாயின் இக்குணமே, பிள்ளைக்கும் ஏற்பட்டது. இதுவே, பிற்காலத்தில், அவர் ஏழைகளுக்கு அன்னமிடும் தருமச்சாலை அமைப்பதற்கு, அடித்தளமாக அமைந்தது.

மே 23, 1867ல் வடலூரில் இந்த தருமச்சாலை அமைக்கப்பட்டு, அன்னதானம் துவங்கியது. இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது; இது, 21 அடி நீளம், 2.5 அடி அகலம் கொண்டது.

இந்த அடுப்பை அணைக்கக் கூடாது என்பதற்காக, சமையல் செய்யாத இரவு வேளையிலும் கூட, நெருப்பு அணையாமல் இருக்க, பணியாளர் ஒருவர் விறகுகளை இடுவார்.

ஏறத்தாழ, 148 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒரு அடுப்பு, பிறர் நலனுக்காக எரிந்தபடி இருக்கிறது என்றால், அது அதிசயம் தான். உணவு தயாரிக்க பக்தர்களே அரிசியை தருகின்றனர். தினமும் காலை, 6:00 மற்றும் 8:00 மணி; பகல், 12:00 மணி; மாலை, 5:00 மணி மற்றும் இரவு, 8:00 மணிக்கு என, ஐந்து முறை அன்னதானம் நடக்கிறது. தைப்பூசம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், நாள் முழுவதும் அன்னதானம் நடக்கும்.

அக்டோபர் மாதத்தில் இன்னொரு விசேஷமும் உண்டு. வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், அக்.,1873ல் சன்மார்க்க கொடியேற்றி, அடியார்களுக்கு உபதேசம் செய்தார் வள்ளலார். சில நாட்களுக்குப் பின், சித்தி வளாகத்தில் ஒரு தீபம் ஏற்றி, ஜோதியை இறைவனாக வழிபடும்படி அறிவுறுத்தினார்.

வள்ளலார் கூறிய மந்திரமான, ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ எனச்சொல்லி வழி படுவர் பக்தர்கள்.

இன்று பெரும்பாலான பெற்றோர், ‘டிவி’ இன்டர்நெட் மற்றும் அலைபேசி என, வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்; இதைப் பார்க்கும் பிள்ளைகளும், அவர்களையே பின்பற்றுகின்றனர். மனதைக் கெடுக்கும் நிகழ்ச்சிகள், படங்கள், தேவையற்ற பேச்சுகள், குழந்தைகளை பாதிக்கின்றன. பின், தங்கள் குழந்தைகள் கெட்டுப் போனதாக புலம்புகின்றனர்.

நவீன பொருட்கள் காலத்தின் கட்டாயமாக இருக்கலாம்; ஆனால், அது எல்லை மீறாத வகையில், பயன்பாட்டில் இருக்க வேண்டும். வள்ளலாரின் தாயைப் போல, உயர்ந்த பழக்கங்களுடன் பெற்றோர் நடந்து கொண்டால், பிள்ளைகளும் அதை பின்பற்றுவர். முயற்சித்து பாருங்கள்; பலன் கிடைக்கும்!

No comments:

Post a Comment