Thursday, October 8, 2015

புதிய மனிதர்களாக மாற உதவும் பொன் மொழிகள்…

 புதிய மனிதர்களாக மாற உதவும் பொன் மொழிகள்…

01. ஒவ்வொரு மனிதரும் நான் சுடர்விடும் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்று நாள் முழுவதும் நம்பியபடி வாழ வேண்டும். மாறாக நான் ஆரோக்கியத்தை இழந்துவிட்டேனே என்ற தகவலை மனதுக்குக் கொடுத்தால் அது உடலுக்கு எதிரியாகிவிடும். மறந்துவிடாதீர்கள் மனமே ஆரோக்கிய வாழ்வின் அருமருந்து.

02. மருத்துவர் தரும் மருந்துகளுக்கு அமைவாக உடல் தேறுகிறது என்ற கருத்தை வழங்கி, உடலைச் சுகப்படுத்த வேண்டும். அதற்கு தடையாக மனத்தையும் அறிவையும் பயன்படுத்தினால் மருத்துவத்தால் பக்கவிளைவே உண்டாகும்.

03. உடம்பு எந்த நோயையும் வென்று தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. அது தினமும் புதிதாக மாறுவதால் தான் உயிர் வாழ்கிறது. அந்த மாற்றம்தான் உயிர் அது நிற்பதுதான் மரணம். எப்போதுமே புதுப்பித்தலுக்கு இடையூறாக மனம் இருக்கும், அதை உணர்ந்து மனதைச் சரிசெய்து வாழ்வதே வாழ்க்கையின் வெற்றிக்கான அடிப்படை.

04. நமது உடம்பைப் பிடித்திருந்த நோய்கள் எல்லாம் அகன்று, எப்படி இளமையாக இருக்க வேண்டுமென நினைக்கிறோமோ அந்தக் காட்சியை மனத்திரையில் காண வேண்டும். கண்டால் அந்தக் காட்சி படிப்படியாக நிஜமாகக் காண்பீர்கள்.

05. உடல் இறை சக்தியின் இருப்பிடம் அதை வருத்துதல் கூடாது, இழிவு செய்யக்கூடாது. அது நல்ல முறையில் செயலாற்ற என்னவெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்கிறார் திருமூலர்.

06. உடலின் ஒவ்வொரு உறுப்பும் இலகுவாக, லேசாக உள்ளது என்ற நிலையில் அவற்றை வைத்திருக்க வேண்டும். உடலை மறந்து பணியாற்றும் நிலை இருந்தால் அதுவே நலமான நிலை.

07. ஒவ்வொரு நோயாளியும் தனக்கான சொந்த மருத்துவரை தனக்குள்ளே வைத்திருக்கிறான். அதை அறியாத காரணத்தால்தான் தம்மிடம் வருகிறார்கள் என்று உலகப் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவருடைய வாழ்க்கைக் குறிப்பு கூறுகிறது.

08. உங்களைப் பார்த்தால் முதுமையாக இருக்கிறது.. அடடா நோயாளியாக மாறிவிட்டீர்கள் என்று மோசமான கருத்துக்களை மற்றவர்களை நோக்கி துப்பக்கூடாது. குப்பைத் தொட்டிக்குள் போடும் அருவருப்பான வார்த்தைகளை மற்றவரை நோக்கி உழிழக்கூடாது. அப்படிச் செய்தால் பாதிக்கப்படுபவரை விட உங்கள் மனமே அழுக்குக் கூடையாகும்.

09. மற்றவர்களை நோக்கி தகாத தூஷண வார்த்தைகளை சொல்லித் திட்டிய எவரும் தன்னளவில் நலமாக இருந்தாக சரித்திரம் கிடையாது. ஆகவே நல்ல வார்த்தைகளை பேசுங்கள் நீங்கள் நல்லவர்களாக மாறுவீர்கள். நாகாஸ்திரம் என்பது நாக்கில் இருந்து வரும் நஞ்சு தடவிய வார்த்தைகளே என்பதை உணர வேண்டும்.

10. தீமை தரும் வார்த்தைகளை ஒரு காலமும் உணர்ச்சி வசப்பட்டு சொல்லக்கூடாது, சொன்னால் இதயத்தின் ஆழத்தில் விழுந்து அது தீமைகளை விளைவிக்கும்.

11. இயல்பாகவோ எதிர்மறையாகவோ உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதை கட்டளையாக எடுத்துவிடும் ஆழ்மனம்… ஆகவே உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விடவேண்டாம்.

12. பரம்பரை நம்பிக்கை ஒன்று நமது நாட்டில் உண்டு. நம்மைச் சுற்றி கண்ணுக்கு தெரியாமல் தேவதைகள் பறந்து கொண்டிருப்பார்கள். நாம் எதையாவது உணர்ச்சி வசப்பட்டு சொன்னால் அப்படியே ஆகட்டும் என்றுவிடுவார்கள், அது நடந்துவிடும். எனவேதான் நல்ல விஷயங்களை பற்றியே பேசுங்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.

13. எரிச்சல் தரும் வார்த்தைகளை உடல் உறுப்புக்களின் மீது செலுத்தவே கூடாது. அவன் வந்தாலே தலைவலிதான் என்று கூறினால் அவன் வரும்போது தலைவலி வந்துவிடும். நமது உற்சாகம் குன்றிய வார்த்தைகளை உடல் உறுப்புக்கள் சுமக்கும்படியாக கதைக்கக்கூடாது. அவன் கதைப்பதைக் கேட்டால் இரத்தம் கொதிக்கிறது.. அவ்வளவுதான் இரத்தக் கொதிப்பு தானாக வந்துவிடும்.

14. நல்ல வார்த்தைகளை நல்ல எண்ணங்களை பேசினால் நல்ல கனவு வரும்.. கனவில் அதிகமாக சாக்ளேட் சாப்பிடுவோருக்கு அதிகாலையில் சர்க்கரை அளவு கூடியிருக்கும் என்பார்கள். நாம் பேசிய கெட்ட வார்த்தைகள் கனவுகளாக மாறி மனித உடலை நெறிப்படுத்துகின்றன என்பதை மறந்துவிடலாகாது.

15. உடல் மனதைச் சீரழிப்பதைவிட மனம் உடலைச் சீரழிப்பதே அதிகமாக நடைபெறுகிறது. எனவேதான் மனத்தை எரிச்சலடையவும், வெறுப்படையவும் வைக்கக் கூடாது.

16. எனது உறுப்பு ( உறுப்பின் பெயர் ) செவ்வனே தன் பணியை செய்கிறது, அதை நான் வாழ்த்துகிறேன் என்று சொல்ல வேண்டும். உடல் உறுப்புக்களை இகழ்ந்தால் உடனே அதை வாழ்த்த வேண்டும்.

17. இந்த உலகம் பாதுகாப்பானது, நட்பானது, நான் அமைதியான வாழ்வை பெற்றிருக்கிறேன் என்று நம்பிக்கை மொழிகளை சொல்லி வாழ வேண்டும்.

18. உடலை ஆராதிக்க வேண்டும், உடம்பை வளர்த்து உயிர் வளர்க்க வேண்டும், உடம்பு இழுக்கல்ல. உடலுக்கு மனமும், மனதிற்கு உடலும் ஆதாரம். ஆனால் இரண்டுக்குமே நல்லெண்ணங்களே ஆதாரம் என்பதை என்றும் மறக்கக்கூடாது.

19. பின்வரும் நான்கு மந்திரங்களையும் தினசரி காலையும் மாலையும் சொல்லி புதிய மனிதராக மாற்றமடைய உங்களை இரு கரம் கூப்பி வாழ்த்துகிறோம் : இவை உடல் நலத்திற்கான மந்திர மொழிகளாகும் :

அ. இறையருளே எனது பலம்..! எனது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் இறையருள் நலமடைய செய்கிறது..! புதுப்பிக்கிறது, வீரியம் பெறச் செய்கிறது..!

ஆ. இறையின் நலமாக்கும் அருளானது என் வாழ்வில் நிறைந்திருக்கிறது. இறையருளால் என் மனம், வாக்கு, உடல் ஆகியன நலமும், பொலிவும், வளமும் பெற்றுள்ளன.

இ. இறையருள், அன்பு, அழகு, ஆற்றல், ஊக்கம், திறன், மகிழ்ச்சி, வலிமை ஆகியவற்றை எனது உடலில் உள்ள எல்லாச் செல்களிலும் நிரப்புகிறது. எனவே எனது உடலில் உள்ள எல்லா உறுப்புக்களும், திசுக்களும், செல்களும் அளப்பரிய தேஜஸ்சையும், ஓஜஸ்சையும், பலத்தையும், வீரியத்தையும், தெய்வீகத்தையும் பெறுகின்றன.

ஈ. இறையன்பு என்னை சூழ்ந்துள்ளதால் அமைதியுடன் வழி நடக்கிறேன். தெய்வீக ஈர்ப்பு, அளப்பரிய ஆர்வம், சுடர்விடும் உடல் நலம் யாவும் என்னிலிருந்து வெளிப்பட்டு பரவுகின்றன.

20. உடல் நலம் பெரும் செல்வம். சிறு நோய்க்கும் பெரும் துயரடைதல் அறிவீனம்.

21. நோயை நினைத்து கவலைப்படுவதே இன்று பலருடைய வாழ்க்கை. அப்படி கவலைப்பட்டால் பெரிய பாத்திரத்தில் துளை விழுந்ததைப் போல கவலை உடலின் அபார சக்தியை உறிஞ்சி எடுத்து, உயிர்ப்பின் முளையை கிள்ளி உங்களை தெருவில் வீசிவிடும் கவனம்.

22. வார்த்தைகள் உண்மை நிலையைக் காட்டுவது மட்டுமல்ல அவையே உண்மை நிலையையும் படைக்கின்றன.

23. உடன்பாட்டு வார்த்தைகள் என்ற டானிக் உருக்குலைந்த மனிதனை சீராக்கும், மனம் திருந்திய மனிதனாகவும் மாற்றிவிடும்.

24. நமக்குள்ளே ஒரு மனிதன் எப்போதும் உரையாடலை நடாத்திக் கொண்டிருப்பான் இவன் ஒரு பச்சோந்தி மனிதன். கோபம் வந்தால் கோபத்தை அதிகரிப்பான் மகிழ்ச்சி வந்தால் அதையும் அதிகரிப்பான் இந்த உள்மனிதன் ஒரு சந்தர்ப்பவாதி பச்சோந்தி மனிதன் என்பதை அடையாளம் கண்டு பிடியுங்கள். உங்களை திருத்துவதற்கு முதலில் இவனை அடையாளம் காண வேண்டும். இன்றுள்ள மனிதர்கள் நேரத்திற்கு ஒரு நாடகமும், நிமிடத்திற்கு ஒரு தாளமும், செக்கனுக்கு ஒரு கூத்தும் ஆட இந்த பஞ்சோந்தி மனிதனே காரணம். இவனை திருத்தி நல்லவனாக்குவதே வாழ்க்கை போராட்டமாகும்.

25. பின்வரும் நல்ல சொற்களை எப்போதும் வார்த்தைகளில் சேருங்கள் :
அன்பு – அறம் – அறிவு – அமைதி – அருட்பேராற்றல் – ஆக்கத்திறன் – ஆர்வம் – ஆறுதல் – ஆளுமை – ஆற்றல் – இணக்கம் – இலட்சியம் – ஈகை – உடல்நலம் – உண்மை – உழைப்பு – உறுதி – உற்சாகம் – ஊக்கம் – ஒழுங்கு – கற்றல் – கருணை – காலந்தவறாமை – சங்கற்பம் – சக்தி – சாதனை – சாந்தம் – சிந்தனை – சிரத்தை – சிக்கனம் – சுதந்திரம் – சுத்தம் – சுறுசுறுப்பு – செல்வம் – செழிப்பு – சேவை – ஞானம் – தன்னம்பிக்கை – தன்னடக்கம் – தானம் – தியானம் – தீர்மானம் – துணிவு – தூய்மை – தைரியம் – தெளிவு – தெய்வீகம் – நட்பு – நன்றி – நியாயம் – நம்பிக்கை – நிறைவு – நேர்மை – பக்தி – பணிவு – பொறுமை – மகிழ்ச்சி – மலர்ச்சி – மன ஒருமை – மரியாதை – முழுமை – முயற்சி – முன்னேற்றம் – மேன்மை – மௌனம் – வளமை – வாழ்த்து – வெற்றி – ஜீவகாந்தம்

இவற்றை படித்து, மற்றவர்களுக்கும் சொல்லி எல்லோரும் நலம் வாழ உதவுங்கள்…யாருடனும் பகை வேண்டாம்… கடவுளின் படைப்பில் எல்லோரும் நல்லவரே..

No comments:

Post a Comment