Monday, October 5, 2015

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே .

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே . 

இன்றைய உலகம் எங்கு போய் முடியும் !!.. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவுமில்லை. நான் அதிகம் நேசிப்பதும் சுவாசிப்பதும் என் தாய்மொழியான தமிழையும் நல் இதயங்களையும் தான் .

இந்த வேதனை இன்று எம்மில் பலருக்கும் இருக்கின்றது .காரணம் நாம் வாழ்ந்த வாழ்க்கை முறைகள் வேறு இன்று இருப்பவைகள் முற்றிலும் வேறுபட்டவைகளே. இந்த வேறுபட்ட கலாச்சாரத்துடன் நாம் அவசியம் ஒத்துழைத்துத்தான்  வாழ வேண்டுமா என்ற கேள்வி எழும்போது பலருக்கும் இதில் உடன்பாடு என்பது கிடையாது இருந்தும் என்ன செய்வது சிலதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப் படுகின்றோம் என்பதே ஒரு பெரும் வேதனைக்குரிய விசயம் இந்த இடத்தில்தான் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதன் பிறப்பது இறப்பது இவைகள் வேண்டுமானால் இறைவனது சித்தம் எங்கள் தலை எழுத்து என்று நாம் வரும் எல்லாவற்றையும் சமாளித்து வாழலாம் ஆனால் எங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமைகளை மட்டும் அதிக பட்சம் அடுத்தவர்கள் எண்ணம்போல் விட்டு விடக் கூடாது. காரணம் இன்றைய உலகம் அத்தனை நம்பிக்கை வாய்ந்ததாக இருப்பதில்லை நல்லவைகளை நாம் அவசியம் ஏற்றுக்கொள்ளத்தான்  வேண்டும். அதற்காக பொறுப்பற்று எந்தக் கவலையும் அற்று எல்லாம் எமது  நன்மைக்காகவே  என்று இருந்துவிடக் கூடாது என்பதே என் கருத்து. அவ்வாறு இருக்கும்போது ஒரு உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்  இன்றைய காலத்தில் உள்ள அண்ணன், தம்பி ,அக்கா மாமா ,மாமி  ஏன் அம்மா அப்பா கூட பல இடங்களில் தங்கள் சுயநலத்துக்காக பலதையும் செய்வதை நாம் கேள்வியுற்ற வண்ணம்தான் இருக்கின்றோம். அதற்காக எல்லா இடத்திலும் எல்லோரும் தப்பானவர்கள் என்று பொருள் கிடையாது. அதே சமயம் எங்கள் துரதிஸ்ரம் ஏதோ ஒரு காரணத்துக்காக இவர்கள் கூட யாரோ ஒருவரின் பேச்சைக் கேட்டோ அல்லது நம்பக் கூடாதவர்களை நம்பியோ எமக்கு நல்லதயே  செய்வதாக  எண்ணிக்கொண்டு இந்த இடத்தில் தவறு இளைத்துவிடலாம். இல்லையா ?.....இந்த விசயத்தில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள்  பெண் பிள்ளைகள்தான். இதற்க்கு முக்கிய காரணம் எமது கலாச்சாரமும் பெண்களுக்கென உரிய பாதுகாப்பு இன்மையும்தான்.ஒரு பெண் தன் மழலைப் பருவத்தைத் தாண்டும்போதே பெற்றவர்களுக்கு மனதில் பயமும் சுமையும் அதிகரித்து விடுகின்றது .இதனால் அவளின் பாதுகாப்பு கருதி அவளை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் அல்லது விட்டு வைக்க வேண்டும் என எண்ணுவார்கள் .இதே சமயம் ஒரு சிலர் தங்கள் குடும்ப வறுமை நிலையைப் போக்கவும்  தன் பிள்ளையை ஒரு பெரிய பணக்காரனுக்குக்  கட்டிக் கொடுக்க முன்வருவார்கள் .இந்த இடத்தில்தான் எமது விருப்பு வெறுப்புகள் புறக்கணிக்கப் படுகின்றது அல்லது கவனத்தில் எடுத்துக்கொள்ள நினைப்பதில்லை என்று சொல்லலாம். இந்தமாதிரி விடயங்கள் ஒரு பெண்ணின் திருமண வாழ்வில் மட்டும் அல்ல .அவளது படிப்பு ,அவளது தேவைகள் ,அவளது சந்தோசம் என பல்வேறுபட்ட எண்ணங்களிற்கு தடையாக அமைதுவிடுகின்றது .
வாழ்க்கையில் வேறு எந்த ஒரு விசயத்தில்  இழப்பு வந்தாலும்  அதை சமாளித்து விடலாம் .ஆனால் ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை என்பது அவ்வாறு யோசிக்க முடியாத ஒரு விடயம் .இந்த விசயத்தில் இப்போது அதிகமாக வெளிநாடுகளில் உள்ள பெற்றோரும் மிகுந்த  அவசரப்போக்கைக் கையாளுவதாக உணர முடிகின்றது . இதனால் எந்த ஒரு அனுபவமோ பக்குவமோ இந்தப் பிள்ளைகளுக்கு இருக்கும் என்றால் அது மிக மிகக் குறைவெனவே சொல்லிக் கொள்ளலாம் .காரணம் இங்கு வாழும் பிள்ளைகள் பெரும்பாலும் பெற்றவர்களின் கைக்குள் வளரும் சந்தர்ப்பங்கள் அதிகம் கிடையாது. அனேகமாக இங்கு உள்ளவர்கள் வேலைக்கு போகும் பெற்றோர்களே. பாடசாலையில் வேண்டுமானால் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி பல விசயங்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் .இந்த இடத்திலும் பிள்ளைகள் தவறிப் போவது வழக்கமாக உள்ள ஒரு நிலைப்பாடுதான் இதனால் இன்று எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக திருமணங்கள் நிகழ்த்தப் படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு வேகமாக விவாகரத்தும் பெறப்படுகிறது இதனால்தான் பெண் பிள்ளைகள் மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புடனும் வாழக்  கற்றுக்கொள்ள வேண்டும் .இதையே பெற்றவர்களும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் .பெண் பிள்ளைகளை சிறுபிள்ளைத் தனமாக நடக்க விட்டு விட்டு பின் வேதனைப் படுவதிலும் அர்த்தம் இல்லை .நாம் எந்த ஒரு முடிவை எடுப்பதானாலும் அவளின் விருப்பு வெறுப்புகளைக் கருதில்க் கொண்டே எடுக்க வேண்டும் .இதுவே அந்தப் பிள்ளையின் எதிர்காலத்துக்கு மிகச் சரியான தேர்வாக அமையும். அத்துடன் பொதுவாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு  இடையில்       எப்போதும் ஓர் புரிந்துணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு இருக்கும்போதே பிள்ளைகளுக்கும் தங்கள் நிலைப்பாட்டை எந்த ஒரு அச்சமோ அல்லது கூச்சமோ இன்றி தெளிவு படுத்த ஏதுவாக இருக்கும் .பிள்ளைகளை அதிக கண்டிப்புடன்  நடத்துவதும்  தவறாகும் .இந்தக் கண்டிப்புகள் கூட எமக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஒரு விரிசலைக் காலப் போக்கில் உருவாக்கி விடும் .எதற்கும் மனம் திறந்து பேசும் ஆற்றல் எம் எல்லோருக்கும் இருத்தல் வேண்டும். இந்தக் குணாதிசயங்களால் நிட்சயமாக எல்லோருமே சந்தோசமாக வாழ முடியும் அத்துடன் எமது பொழுதுபோக்கு நேரங்களை அதிகமாக பிள்ளைகளுடன் நாம் செலவிடுவோமானால் பிள்ளைகளின் தேவைகளை அவர்களின் உணர்வுகளை அவர்கள் சொல்லாமலே நாமாகப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக்க இது அமையும் .உங்கள் பிள்ளைகளை காக்க வேண்டிய காலம் அறிந்து காத்துக்கொண்டீர்களானால் பின் வெற்றி என்றும் உங்களுக்கே .வாழ்த்துக்கள் உறவுகளே எல்லோர் வாழ்விலும் சந்தோசம் பொங்கிட .

No comments:

Post a Comment