Friday, October 2, 2015

நம்பிக்கை பலிக்கும்

நம்பிக்கை பலிக்கும்

நம் வாழ்வில் அ ஃபர்மேஷன் வாக்கியங்களின் மூலம் வியக்கத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கிட்டத்தட்ட மாயாஜாலம் என்று சொல்லுமளவுக்கு அந்த மாற்றங்கள் இருக்கவும்கூடும். அதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

உடல் நலமும் தொழில் நலமும்

ஓசூரில் ஒரு பெரிய தொழிற்சாலையில் நிர்வாகத்துக்கும் தொழிலாளிகளுக்கும் இணக்கமில்லாத சூழலில் ஒரு பயிற்சி வகுப்பு நடத்த வேண்டியிருந்தது. தொழிற்சங்கத்துக்கு இந்த வகுப்பில் நம்பிக்கையில்லை. இந்த வகுப்பை எப்படிக்கொண்டுபோவது என்று மனிதவளத் துறைக்கும் புரியவில்லை.

நிர்வாகத்தினரிடம் “முதல் வகுப்பில் சங்க நிர்வாகிகள் மட்டும் உட்காரட்டும். நிர்வாகத்தைச் சேர்ந்த யாரும் இரண்டு நாட்களுக்கு வர வேண்டாம். இந்தப் பயிற்சி பயன் தரும் என்று சங்கத்தினர் சொன்னால் மற்றவர்களுக்குத் தொடரலாம்” என்று நான் சொன்னேன். எனது யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு பள்ளிக்கூடத்தில் இந்தப் பயிற்சி வகுப்பைத் தொடங்கினேன்.

வந்திருந்தவர்களின் உடல் நலப் பாதிப்புகளுக்கான அஃபர்மேஷன் வாக்கியங்களைத் தமிழில் முதல் முறையாகக் கொடுத்தேன். எப்படிச் செயல்படுகிறது என்று அறிவியல்பூர்வமாக விளக்கி அவர்களின் தொழிலகத்தின் உறவுச் சிக்கல் வரை இதில் தீர்க்க முடியும் என்று புரிய வைத்தேன். சங்கம் பரிந்துரைத்ததால் எல்லாத் தொழிலாளிகளும் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டார்கள்.

மாதக் கணக்கில் இழுபறியாக இருந்த சிக்கல் தீர்ந்தது. அந்தத் தொழிலாளர் குடியிருப்பில் அஃபர்மேஷன் அவ்வளவு பிரபலமானது. இந்த அனுபவத்துக்குப் பிறகுதான் தேவைப்படும் எல்லா இடங்களிலும் இந்த முறையை முழுவதுமாகப் பயன்படுத்த ஆரம்பித்தேன்!

கடிகளும் எண்ணங்களும்

ஒரு வகுப்பில் இருந்தவருக்குப் பூச்சிக்கடியால் கைகளில் தடிப்பு தடிப்பாக வீக்கம் இருந்தது. “நீங்கள்தான் எல்லாவற்றையும் நாம் கவர்கிறோம் என்று சொல்வீர்களே? இப்போது அஃபர்மேஷன் முறையில் இவரைச் சரிப்படுத்துங்கள்” என்று சவால் விடுவதுபோல, அவருக்குப் பக்கத்தில் இருப்பவர் கேட்டார்.

விஷக்கடிகள் பற்றியும் அவற்றைக் கவரும் உள்மனச் சிந்தனைகளையும் உணர்வுகளையும் பற்றி நான் அதிகம் அறிந்திராத காலகட்டம் அது. எனினும் இந்த அணுகுமுறையின் அடிப்படை அம்சங்களில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது.

“எனக்கு ஏன் என்று தெரியவில்லை. ஆனால், நீங்கள் அனைவரும் சென்ற பாதையில் இவர் ஒருத்தருக்கு மட்டும் இது ஏற்பட்டுள்ளது என்றால் நிச்சயம் இவர் இதைக் கவர்ந்துள்ளார். இது எதனால் என்று தெரியாவிட்டாலும் ஒரு பொதுப்படையான வாக்கியம் மூலம் இதைச் சரிசெய்ய முயலலாம்!” என்றேன். “பூச்சிக்கடிக்குக் காரணமான என் எண்ணங்களையும் உணர்வுகளையும் நான் முற்றிலுமாக வெளியேற்றுகிறேன்!” என்று ஒரு பக்கம் முழுதும் எழுதச் சொன்னேன்.

முழு நம்பிக்கையுடன் மனப்பூர்வமாக இதை எழுதினால் அதற்கான பலன்களை அடையலாம் என்பதுதானே அஃபர்மேஷன் வாக்கியங்களின் வலிமை?

எழுதியவரின் கைகளில் இருந்த தடிப்புகள் மெல்ல நீங்கின. அவருக்கும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை.

“பாம்பு கடிச்சா இது போல எழுதினா சரியாகுமா?” என்று குறும்பாகக் கேட்டார் அதே நண்பர்.

“நான் பயன்படுத்தவில்லை. ஆனால், கடிபட்டவருக்கு பாடம் போட்டு மந்திரம் சொல்லி விஷம் இறக்கும் ஆட்கள் இன்றும் கிராமங்களில் உள்ளனர். அவர்களின் வழிமுறைகளும் உடலைத் தாண்டிய மருத்துவம்தானே?” என்றேன் நான்.

நான் சொல்ல வருவது மந்திர சக்தி பற்றி அல்ல. ஆழ்ந்த நம்பிக்கையுடன் அஃபர்மேஷன் வாக்கியங்களைச் சொல்லும்போது அங்கே நம் மனமே சிகிச்சைக்கான வேலைகளைச் செய்கிறது. மனதின் அளப்பரிய ஆற்றல்களில் ஒன்று அது. அதை வெளிக்கொணர உதவுவதே அஃபர்மேஷன் வாக்கியங்களின் வேலை.

ஆழ்மனத் தியானம், அஃபர்மேஷன் முறைகள், ஹிப்னாஸிஸ் போன்றவை அலோபதிக்கு எதிரானவை அல்ல. எனக்குத் தெரிந்து சில அலோபதி மருத்துவர்கள் இத்தகைய மாற்று சிகிச்சைகளைச் சிபாரிசு செய்வது உண்டு. உடலை மட்டும் குணப்படுத்த முயலாமல் மொத்த உயிரையும் குணப்படுத்த நினைப்பவை இந்த வழிமுறைகள்.

ஒரு தவறான எண்ணம்கூட அதன் பாதிப்பை உடலில் காட்டிவிடும். எது விதை என்று தெரியாமல் மரமாகி வளர்ந்து நிற்கும்போதுதான் அதைக் கட்டுப்படுத்த நினைக்கிறோம். இதனால் தான் இத்தனை நோய்கள், இத்தனை பிரச்சினைகள், இத்தனை சேதங்கள்!

நேர்மறை மனம்

ஒவ்வொரு வலியும் நமது தவறான சிந்தனை ஒன்றை நமக்குக் காட்டிக் கொடுக்கிறது. வலி ஞானத்துக்கு வழி செய்கிறது.

ஒவ்வொரு உடல் உபாதையையும் உள் நோக்கிப் புரிந்துகொண்டு அதன் விதையான சிந்தனையை எதிர்கொண்டால் தான் முழுமையாக அதிலிருந்து விடுபட முடியும். அதனால்தான் இன்று யோகாவையும் ஹிப்னாஸிஸ் போன்ற வழிமுறைகளையும் மெல்ல மெல்ல அனுசரணையாக அலோபதி மருத்துவமும் பார்க்க ஆரம்பித்துள்ளது.

அஃபர்மேஷன் முறை எந்த முறைக்கும் எதிரானது அல்ல. உங்கள் மனதை நேர்மறையாகத் திருப்பும் முயற்சி. அவ்வளவுதான்.

விடை உங்களுக்குள்ளே

பல நோய்களுக்கான காரணம் மனதில்தான் உள்ளது. மனதின் கோளாறு உடல் கோளாறாக வெளிப்பட முடியும்.

தீராத மூல நோயால் அறுவைச் சிகிச்சைவரை சென்ற பெண்மணி தன் நோயின் உளவியல் காரணம் புரிந்து அஃபர்மேஷன் முறையில் பயிற்சி எடுத்தபோது மருத்துவர்கள் வியக்கும் வண்ணம் பூரணமான சுகம் பெற்றார்.

மூட்டு வலியை இனி ஒன்றும் செய்ய முடியாது என்று ஒரு தலைமைச் செயல் அதிகாரி நினைத்தார். தன் பெற்றோர்களுக்கும் தனக்குமான உறவு முறைதான் அந்த வலிக்கான காரணம் என்று தெரிந்துகொண்டார். அதன் பிறகு அஃப்ர்மேஷன் மூலம் மீண்டும் ஓட முடியும் அளவுக்கு குணமானார்.

அளவில்லாத கடன் சுமையில் இருந்தவர் ஒரு வருடத்தில் தன் நிதிநிலையைச் சீர் செய்தார். தன் எண்ணங்களால்தான் அத்தனை நஷ்டமும் என்று புரிந்ததும், அவர் அஃபர்மேஷன் எழுத ஆரம்பித்தார். எழுதும்போதே நிலைமை சரியாவதை உணர்ந்தார்.

விவாகரத்து வரை சென்ற தம்பதியினர் தங்கள் நிலைக்குக் காரணம் பொதுவான ஒரு எண்ணம்தான் எனப் புரிந்துகொண்டு அதை அஃப்ர்மேஷனில் மாற்றி ஒன்று சேர்ந்தனர்.

நிறைய நிஜ நிகழ்வுகள் ஆழ் மன அற்புதச் சக்தியை நமக்கு உணர்த்துகின்றன. உங்கள் பிரச்சினைக்கான விடை உங்கள் பிரச்சினைகளுக்குள்ளேதான் ஒளிந்துள்ளது. வெளியே இல்லை. அதை வெளிக்கொண்டுவந்து அதன் திசையை மாற்றும் அற்புத வழிமுறை தான் அஃபர்மேஷன் முறை.

நம்பினார் கெடுவதில்லை என்பது சத்திய வாக்கு. அந்த நம்பிக்கை ஆண்டவன் மீது இருந்தாலும் சரி. அல்லது அந்த ஆண்டவனே உங்களுக்குள்தான் என்று நினைத்து உங்களையே நம்பினாலும் சரி. நம்பிக்கை பலிக்கும்!

No comments:

Post a Comment