Thursday, October 15, 2015

விடா முயற்சி..... விஸ்வரூப வெற்றி..!

விடா முயற்சி..... விஸ்வரூப வெற்றி..! 
இப்பதிவு ஒரு விளம்பர நாளேட்டில் படித்தது. மையக்கருத்து பிடித்திருந்ததால் எமது சொந்த நடையில் பகிர்வுக்காக தங்களுடன் பகிர்கிறேன்.

ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் - காற்று பிரேக்.- 
ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் இளமையிலேயே இயந்திர அமைப்பில் நாட்டம் கொண்டவராம். இவரின் தந்தை பண்ணை இயந்திரங்கள் செய்யும் பட்டறை ஒன்றை வந்திருந்தாராம். ஹவுஸின் இலட்சியம் இரயில் வண்டியை உடனே நிறுத்த பிரேக் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதானாம். இதற்காகப் பற்பல வழிமுறைகளை வகுத்திருக்கிறாராம். ஆனாலும் இந்த முயற்சிகள் எல்லாம் முயல் கொம்பாகவே முடிந்தனவாம்.
 
பீட்ஸ் பர்க் நகரில் ஒரு இயந்திர தொழிற்சாலையில் தொடர்ந்து சோதனைகளைச் செய்து பார்த்தாராம். இரண்டு ஆண்டு காலமாக இலட்சியத்துடன் சோதனையைச் செய்து கொண்டே இருந்தாராம். அதன் பயனாக தன்னுடைய 25 வயதிலேயே காற்று பிரேக்கைக் கண்டுபிடித்து விட்டாராம்.
 
அதன் பிறகு, இரயில்வே கம்பெனியை நடத்திக் கொண்டிருந்தவரிடம் ஹவுஸ் பிரேக் கருவியைப் பற்றி விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தாராம். அப்போது அந்த பெரியவர் "ஓடுகின்ற இரயிலைக் காற்றைக் கொண்டு நிறுத்தி விடலாம் என்கிறீர்கள். அவ்வளவு தானே..!!" என்று கேட்க, இவரும் ஆமாம் என்று தலையசைத்திருக்கிறார்.  உடனே அவர் "உம்முடைய பைத்தியக்கார யோசனையைக் கேட்க நேரம் இல்லை..!" முதலில் இடத்தை காலி பண்ணுங்க என்று கடுமையாகக் கூறிவிட்டாராம்.
 
ஆனால் அவரது பேச்சைக் கேட்டு ஹவுஸ் மனம் தளர்ந்து விடவில்லை. மிகப்பெரிய அறிஞர்களின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் முதலில் எதிர்ப்பும், சாத்தியமற்றது எனவும், முட்டாளத்தனம் என்றும் அங்கிகாரம் மறுக்கப்பட்டிருப்பதை நாம் பல அறிஞர்களின் கண்டுபிடிப்புகளின் வராலற்றைப் படிக்கையில் அறிந்திருக்கிறோம். அவ்வாறே இவருக்கும் ஏற்பட்டு இருக்கிறது. சரி தகவலுக்கு வருவோம்.
 
ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் பல இடங்களுக்குச் சென்று "காற்று பிரேக்"கைப் பற்றி விளக்கினாராம். நாளடைவில் அமெரிக்கா முழுவதிலும் இவருடைய "காற்று பிரேக்" உபயோகத்துக்கு பயன்படுத்தப்பட்டதாம். இறுதியில் உலகம் முழுவதிலும் இவரின் காற்று பிரேக்கே பொறுத்தப்பட்டதாம்.  வெஸ்டிங்ஹவுஸின் இந்த விடா முயற்சிதான் விஸ்வரூப வெற்றியாக உலகம் முழுவதும் பரவி பயன்பாட்டுக்கு வந்ததாம்.
 
துன்பங்களுடன் போராடப் போரடத்தான் மனவலிமை உறுதி பெறும். இடரும் இன்னலும்தான் நம்முடைய திறனைச் சோதித்துக் கூர்மைபடுத்தும். தெளிவான இலக்குடனும், கடின உழைப்புடனும், தளராத தன்னம்பிக்கையுடன் விடாது முயன்றால், முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்து விஸ்வரூப வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் நம் பெயரையும் சேர்த்திடலாம்.

No comments:

Post a Comment