Thursday, October 15, 2015

மகிழ்வோடு வாழ்வதே என் குறிக்கோள்!

மகிழ்வோடு வாழ்வதே என் குறிக்கோள்!
நமது மகிழ்ச்சிக்கு மாபெரும் தடையாக இருப்பது நமது கடந்த காலம் பற்றிய சிந்தனைகளே! அவற்றை மூட்டையாகக் கட்டி நம் மேல் ஏற்றிக் கொண்டு, இறக்கி வைக்கமுடியாமல் இம்சைக்கு உள்ளாகிறோம்.
 
நண்பர் ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும்போதுகூட, 'நேற்று இவர் நம்மிடம் எரிச்சலுடன் நடந்துகொண்டாரே?' என்ற கடந்த கால நினைவு, கதவைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறது. அவரோடு நம்மால் சகஜமாகப் பழகமுடிவதில்லை. செயற்கையான பிளாஸ்டிக் புன்னகையுடன் மனிதர்கள் வாழ ஆரம்பித்தால், வாழ்க்கை வறண்டு விடும்.

மகிழ்ச்சியுடன் மனிதன் வாழ வேண்டும் என்பதற்காகவே, மறதியை நமக்கு வரமாக அளித்திருக்கிறது இயற்கை.

ஆனால், நினைவாற்றலை மேம்படுத்தும் முயற்சிகளில் அந்த வரத்தைத் தொலைத்துவிட்டு, தேவையானவற்றை வழியவிட்டு, தகுதியற்றவற்றைத் தக்கவைத்துக் கொள்கிறோம். விலங்குகள் எப்போதும் மகிழ்ச்சியுடன் விளையாட காரணம், அவை நிகழ்காலத்தில் மட்டுமே நீடித்திருக்கின்றன. நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் ஏற்படுத்திக்கொள்கிற இணக்கமே, நமது மகிழ்ச்சியை மெருகேற்றுகிறது.

வன்மம் நிறைந்த மனத்துடன் இருப்பவர்கள், மாநகராட்சி குப்பைகளைக் கொட்டும் இடத்தில் இருப்பதைப் போன்ற மனநிலையுடன் இருப்பார்கள்.

சூழலைச் சுகந்தமாக்குபவர்களால் மட்டுமே வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொள்ளமுடியும். 'நேற்று நம்மிடம் கோபப்பட்ட மனிதன் வேறு; அவனிடம் வருத்தத்தை வரவு வைத்த மனிதன் வேறு' என்கிற புரிதல் வந்தால், மகிழ்ச்சி மட்டுப்படுவ தில்லை. வருத்தம் வரும்போதெல்லாம்,

 உடனே அதை வடிகாலாக்குகிற வாழ்க்கை முறை முன்பு இருந்தது. குடும்பம் அதற்கு வழிவகுத்தது. யாரிடமாவது பகிர்ந்துகொண்டால், நமது சோகங்கள் பஸ்பமாகிவிடும் அனுசரணை இருந்தது. ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்வில் பகிர்தல் குறைவு. 'உனது சோகம் உன்னுடன்! என்னுடையதை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்பதே இன்றைக்கு உறவுகளுக்குள் இருக்கும் மேம்போக்கான, மிக மெல்லிய உறவு இழைகள். எப்போது வேண்டுமானாலும் இற்றுப் போகிற நிலையில் ஊசலாடும் உறவுகளில், உண்மை ஊஞ்சலாட மறுக்கிறது. இன்றைக்கு எல்லாக் கதவுகளும் சாத்தப்பட்டே இருக்கின்றன.
 
நமது உலகே சுருங்கிப்போன சூழலில், கடந்த காலத்தை ஊதி ஊதிப் பெரிதாக்கி, இறக்கி வைக்க முடியாமல் தவிக்கின்ற மனநிலையில், ஆனந்தக் குழந்தைகள் ஓடிவரும்போது, அவற்றை அள்ளி எடுத்து அரவணைக்க முடியவில்லை.

நான் படித்த ஒரு சம்பவம் : 

அரண்மனையையட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.

திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர். ''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந் துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.

அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார். கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,

மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்துவிட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.
 
வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை. அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.

அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர். இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது. அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்துவிடுகிறது.

அரண்மனைகளில்கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.

மனதில் இருக்கிறது மகிழ்ச்சி. வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது. நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை. நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன.

அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.

இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை. மகிழ்ச்சியாக இருப்போம்; அப்போது காரணங்கள், தாமாகத் தோன்றி தோரணங்களாகித் துணை நிற்கும்.

No comments:

Post a Comment