சென்னை: ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பது மனித வாழ்விற்கான ஒரு பாதுகாப்பான திட்டம் ஆகும். இந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்திருக்கும் ஒருவர் எதிர்பாராத விபத்தில் தீடீரென்று காலமாகிவிட்டால் அவருடைய குடும்பம் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகமல் இருக்க இந்த காப்பீட்டுத் திட்டம் உதவி செய்கிறது. அவர் சேர்ந்திருந்த காப்பீட்டுத் திட்டம் அவர் சேமித்திருக்கும் தொகை மற்றும் அவற்றிற்கான கவரேஜ் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அவருடைய குடும்பத்திற்கு, ஆயுள் காப்பீட்டு நிறுவனமே பொருளாதார உதவிகளை செய்யும்.
(5 reasons to invest in the Mahindra Finance fixed deposit )
காப்பீட்டுத் தொகை முதிர்ச்சி அடைந்தாலோ அல்லது உயிருடன் இருக்கும் போதே காப்பீட்டுத் தொகையை பெற விரும்பினாலோ, அந்தத் தொகையைத் திட்டமிட்டு பெற முடியும். ஆனால் காப்பீட்டுத் தொகையச் செலுத்தி வந்தவர் இறந்துவிட்டால் அவர் செலுத்தியக் காப்பீட்டுத் தொகையைப் பெற திட்டமிட முடியாது. ஆகவே அப்படிப்பட்ட சோகமான சூழலில் இறந்தவருடைய காப்பீட்டுத் தொகையைப் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.
ஒருவர் இறந்த பின் அவருடைய ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
1. ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்தி வந்தவரின் மரணத்தை அறிவித்தல்
ஒருவர் இறப்பு என்பது ஒரு துக்கமான நிகழ்வாகும். அவருடைய இறப்பு அவருடைய குடும்பத்திற்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் அந்த அதிரிச்சியிலிருந்து விரைவில் மீண்டு வந்து, அவருடைய இறப்பை மிக விரைவாக, அவர் செலுத்தி வந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். கால தாமதம் செய்தால் அவருடைய பணத்தைப் பெறுவதில் கால தாமதம் ஏற்படும்.
ஆனால் பெரும்பாலோர், இறந்தவரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாலும், அவருடைய இறப்பை விரைவில் ஆயுள் காப்பீட்டுத் திட்ட முகவரிடம் தெரிவிக்காமல் இருப்பதாலும் இந்த கால தாமதம் ஏற்படுகிறது. கால தாமதம் ஏற்பட ஏற்பட, இறந்தவரின் ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்திருப்பவரின் இறப்பை மிக விரைவில் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிப்பது நல்லது.
2. ஆயுள் காப்பீட்டு முகவரை தொடர்பு கொள்ளுதல்
இறந்தவரின் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு உதவி செய்யக்கூடிய ஆயுள் காப்பீட்டு முகவரை மிக விரைவில் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து இறந்தவரின் காப்பீட்டுத் தொகையப் பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும். காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் பாலிசிதாரருக்கு முழு உதவி செய்ய வேண்டியது காப்பீட்டு முகவரின் தலையாய கடமையாகும். எனவே அவரை மிக விரைவில் தொடர்பு கொண்டு காப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு ஆவண செய்ய வேண்டும். ஒரு வேளை முகவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், காப்பீ்ட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
3. நாமினி சான்றிதழ்கள்
ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்திருப்பவர் இறந்துவிட்டால் அவர் யாரை நாமினியாக நியமித்திருக்கிறாரோ அவர் தான் இறந்தவரின் காப்பீட்டுத் தொகையை சட்ட ரீதியாகப் பெற தகுதியானவர். எனவே நாமினி யார் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இறந்தவருக்குப் பின் நாமினி தான் காப்பீட்டுத் தொகைக்கு உரிமையாளர் ஆகிறார். எனவே காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாமினி தேவையான படிவங்களை நிரப்பி, தொகையைப் பெற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. நாமினி வழங்க வேண்டிய சான்றிதழ்கள்
இறந்தவரின் காப்பீட்டுத் தொகையைப் விரைவாகப் பெற வேண்டும் என்றால் டாக்குமன்டேஷன் மிகச் சரியாக இருக்க வேண்டும். எனவே நாமினி தேவையான படிவங்களை மிகச் சரியாக நிரப்பி, தேவையான ஆவணங்களை காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். எந்தெந்த சான்றிதழ்களை நாமினி வழங்க வேண்டும்,
அ. இறந்தவரின் அசல் இறப்பு சான்றிதழ், நகல் கிடையாது.
ஆ. பாலிசி ஆவணம் அல்லது கடைசியாக பிரீமியம் செலுத்தியதற்கான சான்றிதழ்
இ. நாமினியின் அடையாளம் மற்றும் வயதை உறுதிப்படுத்தும் சான்றுகள்
5. வங்கி கணக்கு
இறந்தவரின் காப்பீட்டுத் தொகையைப் பெற வேண்டும் என்றால் நாமினி வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அவர் வங்கிக் கணக்கில் இருக்கும் பெயர் மற்றும் முகவரி, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர் மற்றும் முகவரியை ஒத்திருக்க வேண்டும். அப்போது தான் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் கால தாமதம் ஆகாது.
மேற்கூறிய அனைத்தும் சரியாக செய்யப்பட்டால் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் கால தாமதம் ஆகாது. மற்றும் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் பிரச்சனைகளும் ஏற்படாது.
No comments:
Post a Comment