Wednesday, April 17, 2013

நீங்கள் புத்திசாலி ஆக வேண்டுமா ?

உலகில் எந்த ஒரு பொருளும் இயங்காமலோ அல்லது பயன்படுத்தப்படாமலோ இருந்தால், நிச்சயம் கெட்டுவிடும் அல்லது செயலற்றுவிடும். நாம் நமது உடம்பை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள பலவிதமான பயிற்சிகளை மேற்கொள்கிறோம். சீரிய இயக்கத்தையும், முறையான ஓய்வையும் உடம்பிற்கு அளித்து, அதை சமச்சீர் நிலையில் வைத்துக்கொள்ள முயல்கிறோம்.

புத்திசாலி ஆக வேண்டுமெனில், உடம்பிற்கு கொடுக்கப்படும் இந்த முக்கியத்துவமானது, சிந்தனை மற்றும் பரிணாமத்தின் மையமாய் இருக்கும் மூளைக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

மூளைக்கு பயிற்சியே கொடுக்காமல் இருந்தால், அது ஆற்றல் இழந்து, சோர்ந்து போய்விடும். மூளை சோர்ந்து போனால், நினைவாற்றல், கடினமானதை படித்து புரிந்துகொள்ளும் திறன், பகுப்பாய்வு திறன், படைப்பாற்றல், கணக்கிடும் திறன், முடிவெடுக்கும் திறன், சாமர்த்தியம் உள்ளிட்ட பலவித முக்கிய திறன்கள் மங்கி போய்விடும். எனவே மூளையை பட்டை தீட்டி வைத்திருக்க வேண்டியது இன்றைய வாழ்க்கை சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இல்லையெனில், நாம் முக்கியத்துவம் அற்ற மனிதராய் கருதப்பட்டு நமது சமூக மதிப்பை இழந்துவிடுவோம். மூளையை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்திருப்பதற்கான சில வழிமுறைகளை இங்கே தருகிறோம்.

தரமான புத்தகங்களை படித்தல்:
படிப்பதில் பொதுவாக பலருக்கும் ஆர்வம் உண்டு. படித்து புரிந்துகொள்ளும் நடவடிக்கையால் மூளை சுறுசுறுப்படைகிறது. ஆனால் நாம் படிக்கும் புத்தகங்கள் எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்பது இங்கே முக்கியம். சாதாரண பொழுதுபோக்கு நாவல்கள், ஜனரஞ்சக பத்திரிகைகள், மிக சாதாரண விஷயங்களைப் பற்றி மேலோட்டமாக எழுதப்பட்ட புத்தகங்கள் போன்றவைகள் மூளையின் வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும் துணைபுரியாதவை. அவற்றை சிறிதுநேரம் பொழுதுபோக்காக வேண்டுமானால் படிக்கலாம்.

மாறாக, உங்களுக்கு பிடித்த துறையிலிருந்து எழுதப்பட்டிருக்கும் ஆராய்ச்சி புத்தகங்களையோ, அல்லது வேறு துறைகளை சேர்ந்த பகுப்பாய்வு புத்தகங்களையோ படிக்கலாம். படிப்பதோடு இல்லாமல், ஏதாவது பத்திரிக்கைகளுக்கு தரமுள்ள கட்டுரைகளும் எழுதி அனுப்பலாம். படித்த விஷயங்களை யாரிடமாவது விவாதிக்கலாம். பொது அறிவு புத்தகங்களை படித்து விஷயங்களை மனனம் செய்து பழகலாம். பள்ளி மாணவர்களுடன் அது சம்பந்தமான வினாடி-வினா போட்டியில் ஈடுபடலாம். ஆங்கில மொழியின் வார்த்தைகளையும், அதன் அர்த்தங்களையும் படித்து மனனம் செய்யலாம். இதுபோன்று பலவித பயன்மிகுந்த செயல்பாடுகளால் மூளையானது சுறுசுறுப்பாகவும், திறன் மிக்கதாகவும் மாறும்.

டி.வி. பார்ப்பதை தவிர்த்தல்:
பொதுவாக நம்மை சாந்தப்படுத்திக்கொள்ள டி.வி. பார்ப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளோம். அதை ஒரு பொழுதுபோக்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ எடுத்துக்கொண்டாலும், டி.வி. பார்ப்பதால் உங்களின் மூளைத்திறன் மேம்பாடு அடையாது. டி.வி. பார்ப்பதில் உங்களின் சக்தி பெருமளவு செலவழிக்கப்படுகிறது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். டி.வி. பார்ப்பதற்கு பதிலாக ஏதாவது முக்கிய பத்திரிக்கைகளை படிக்கலாம் அல்லது நல்ல நண்பர்களுடன் அமர்ந்து பயனுள்ள விவாதங்களில் ஈடுபடலாம்.

ஒரு புதிய மொழியை கற்றல்:
மொழியை கற்கும் செயலானது மூளையின் திறனை அதிகரிப்பதிலும், அதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பயனுள்ள வகையில் ஒரு வெளிநாட்டு மொழியை தேர்வுசெய்து அதை கற்க தொடங்க வேண்டும். அதன்மூலம் நமக்கு இரட்டை நன்மை கிடைக்கிறது.

மூளைக்கான பயிற்சி:
மூளைக்கு பயிற்சி கொடுத்தலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, உடல்ரீதியிலான பயிற்சி மற்றும் பகுப்பாய்வு ரீதியிலான பயிற்சி. உடல்ரீதியிலான பயிற்சியில் யோகா உள்ளிட்ட சில உடற்பயிற்சிகள் அடங்கும். மூளைக்கு ஆக்சிஜனும், ரத்த ஓட்டமும் மிகவும் முக்கியம். எந்தளவிற்கு இந்த இரண்டும் கிடைக்கிறதோ அந்தளவு மூளை சக்திவாய்ந்ததாக மாறும். மேற்சொன்ன பயிற்சிகள் இந்த இரண்டையும் அதிகளவில் மூளைக்கு தருகின்றன. எனவே முறையான நபர்களின் ஆலோசனைகளைப் பெற்று அந்த பயிற்சிகளை செய்ய தொடங்கவும்.

பகுப்பாய்வு ரீதியான பயிற்சி என்பது, படம் வரைதல், வண்ண வேலைபாடுகளில் ஈடுபடுதல், எண் விளையாட்டுக்களில் ஈடுபடுதல், தோட்டம் வளர்த்தல், கைவினைப்பொருள் தயாரிப்பில் ஈடுபடுதல், நுணுக்கமான வேளைகளில் பங்கெடுத்தல் போன்று பலவகைப்படும். இவற்றில் நமக்கு பிடித்தமானவற்றிலோ அல்லது வாய்ப்பிருந்தால் அனைத்திலுமோ ஈடுபடலாம்.

மேற்கூறிய பயிற்சிகளையும், வழிமுறைகளையும் தொடர்ந்து பின்பற்றும்போது, நமது மூளை புதிய சக்திபெற்று, நாம் புத்திசாலி என்ற பெயரை வாங்கலாம்.

No comments:

Post a Comment