Wednesday, April 24, 2013

வெற்றியை அளந்தால்தான் விபரம் புரியும்

வெற்றியின் அளவுகோல்கள் விதம் விதமானவை. வித்தியாசமானவை. இருந்தாலும், நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்களா என்பதைக் கண்டறிய சில எளிய அளவு கோல்கள் உண்டு.

ஒரு துறையில் ஈடுபடும்போது, அதில் உங்கள் வளர்ச்சி அனைத்துப் படிநிலைகளிலும் ஏற்பட்டிருக்கிறதா என்று முதலில் பாருங்கள். உதாரணமாக – நீங்கள் செய்யும் பணிகளால் உங்களுக்குப் பாராட்டு கிடைக்கிறது. புகழ் வளர்கிறது. எல்லோரும் உங்களை நாடி வருகிறார்கள். இதெல்லாம் சரி, உங்களுக்கு இதனால் பொருளாதார நன்மை ஏற்படுகிறதா?

“மற்றவை எல்லாம் கிடைக்கிறது. பணம் கிடைக்கவில்லை. அதனால் என்ன! ஆத்ம திருப்தி கிடைக்கிறதே” என்று நீங்கள் சொல்வீர்களேயானால், உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்கிறீர்கள்.

எந்த ஒரு வேலைக்காக நீண்ட நேரம் செலவிடுகிறீர்களோ, அதில் எல்லாம் கிடைப்பது போலவே பொருளாதார நன்மையும் வேண்டும். நிறைய சம்பாதித்தவர்கள், மனநிறைவுக்காக சமூக சேவை செய்பவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

ஆனால் எதைத் தொழிலாகச் செய்கிறீர்களோ அதில் பொருளாதார நன்மையும் ஓர் அம்சம். பொருளாதார நன்மை கிடைக்காமல் இருப்பது இரண்டு காரணங்களில் நிகழ்ந்திருக்கலாம்.

1. நீங்கள் செய்யும் பணிகள் நல்ல பெயரையும் புகழையும் நோக்கி செய்யப்படும் அளவு பொருளாதார நன்மை தரவில்லை என்றால், அந்த வேலையே அப்படித்தான் – அதன் மூலம் பெரிய அளவில் பொருளாதார நன்மைகள் கிடைக்காது என்று பொருள்.

2. அல்லது, உரிய அளவில் பொருளாதார நன்மைகள் கிடைத்தாலும் அந்த நன்மைகளை சரியாகப் பயன்படுத்தி வளங்களைப் பெருக்கும் வழி உங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பொருள்.

இதில் முதலாவது காரணம்தான் உங்கள் வாழ்க்கையில் காணப்படும் நடைமுறை உண்மையென்றால், உங்கள் உழைப்புக்கான விலையை நிர்ணயிக்க நீங்கள் தயங்குகிறீர்கள் என்று கருதலாம்.

இது மிகவும் ஆபத்தான அணுகுமுறை. மற்றவர்கள் தவறாகக் கருதுவார்கள் என்று மகத்தான பணிகளை செய்து அதற்குரிய ஊதியத்தைப் பெறவோ, அல்லது நீங்களே உங்கள் ஊதியத்தை நிர்ணயம் செய்து கேட்கவோ தயங்குவது பிற்காலத்தில் விரக்தியிலும் தன்னிரக்கத்திலும்கொண்டு போய்விடும். எனவே இந்த மனநிலையை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக உள்ள காரணம்தான் உங்களைப் பொறுத்தவரை உண்மை என்றால், நிதி ஆதாரங்களை சரிவரக் கையாள்வதில் உங்களுக்குப் பயிற்சி இல்லையென்று பொருள். இத்தகைய சூழ்நிலையில் சரியான ஒருவரை நியமித்து உங்கள் நிதி ஆதாரங்களை சீர்செய்ய வேண்டும்.

வெற்றியின் இன்னோர் அளவுகோல் வெற்றிகளைத் தொடர்கதையாக்குதல். ஒரு வெற்றி வந்த மாத்திரத்திலேயே, தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கிற வேகம் வரவேண்டும். முதல் வெற்றி வந்தபிறகு, அடுத்த கட்டமாக முயற்சிகள் செய்து, தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வது என்கிற அச்சம் ஏற்பட்டுவிடுமென்றால், சிலர் முயற்சிகளைத் தொடரமாட்டார்கள்.

வெற்றியை நிகழ்த்திக் காட்டிய யாருக்கும், அந்த வெற்றியை உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. தொடர்ந்து வெற்றிகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டே இருக்கிற போதுதான் ஒருவர் வெற்றியாளர் என்கிற அங்கீகாரத்தைப் பெறுகிறார்.

வெற்றிக்கு மற்றுமோர் அளவுகோல், அந்த வெற்றியைப் பெற்ற வழி. உழைப்பு, திட்டமிடுதல், சமயோசிதம், துணிவு, முடிவெடுக்கும் ஆற்றல் ஆகிய அடித்தளங்கள் மீது கட்டப்படுகிற வெற்றியின் கட்டிடம்தான் உங்களுடைய வெற்றி என்று கொண்டாடத்தக்கது.

மற்றவர்கள் மூலம் கிடைக்கும் வெற்றி, யானை மாலை போட்டு ராஜா ஆன கதையாகத்தான் இருக்கும்.

வெற்றியின் மற்றோர் அளவுகோல் மேம்பாடு. முதல் வெற்றிக்குப் பிறகு உங்கள் உழைப்பின் தரம் மேம்பட்டிருக்கிறதா? உங்கள் தயாரிப்பின் தரம் மேம்பட்டிருக்கிறதா? உங்கள் நம்பிக்கையின் தரம் மேம்பட்டிருக்கிறதா? நீங்கள் பழகும் இயல்புகளில் மேம்பாடு தெரிகிறதா? என்றெல்லாம் இந்தச் சமூகம் கவனிக்கும்.

ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும், நீங்கள் விளையாடும் களம் மாறிக்கொண்டேயிருக்க வேண்டும். தொடங்கும்போது யாரைப் போட்டியாளர் என்று நீங்கள் கருதினீர்களோ அவரைத்தாண்டி வெகுதூரம் நீங்கள் வந்திருக்க வேண்டும். எட்டவே முடியாத உயரத்தில் இருக்கிறார் என்று யாரை நீங்கள் அண்ணாந்து பார்த்தீர்களோ, அவர் உங்கள் அடுத்த போட்டியாளராக இருக்க வேண்டும். அவரையும் வென்றுவிட்டு, “மளமள” வென்று அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டும்.

வெற்றியை உறுதிப்படுத்தும் இன்னோர் உன்னதமான அளவு கோல் எது தெரியுமா? நீங்கள் பெற்ற வெற்றிகள் பற்றியும் அதற்குக் கையாண்ட வழிமுறைகள் – தாண்டி வந்த தடைகள் பற்றியும் உங்களுக்கு ஒரு தெளிவு இருப்பதுதான். இந்த இடத்திற்கு எப்படி வந்தீர்கள் என்று யாராவது கேட்டால், துல்லியமாக சொல்லத்தெரியும் என்றால்தான் உங்கள் வெற்றி நீங்களே முயன்று பெற்றது என்பதை உலகம் ஏற்கும்.

உலகத்திற்காக வாழ வேண்டுமா என்ற கேள்வியைப் புறந்தள்ளுங்கள் – மிக நிச்சயமாக உலகம் ஒவ்வொரு மனிதனையும் உன்னிப்பாக கவனிக்கிறது. உண்மையாக உழைத்து ஜெயிப்பவனை மற்றவர்களுக்கு சுட்டிக் காட்டுகிறது. அவனைப் பற்றிய விபரங்களை சேகரிக்கிறது. உங்கள் வெற்றியின் போக்கை நீங்களே அளந்து பாருங்கள்! மேலும் மேலும் வெற்றிகள் வசப்பட்டே தீரும்!!

No comments:

Post a Comment