Wednesday, April 24, 2013

வெற்றிப்பாதை


இருக்கையில் அமர்ந்து, ஆணைகள் ஓச்சி, ஒரு சிலர் வென்றிடலாம்;

இறங்கிப் பழகி அன்புடன் அணைத்தால் என்றும் நிலைத்து நின்றிடலாம்.

இந்தக் கட்டுரையை நான் எழுத ஆரம்பிக்கும்போது, தமிழக அரசியல் களத்தில் கூட்டணிக்கூத்துக்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த மகா கேவலமான ஜனநாயகத் தாழ்வைப்பற்றி விமர்சிக்க நிறைய ஊடகங்கள், விமர்சகர்கள் உள்ளனர். நாம் கவனிக்க வேண்டிய ஒரே ஒரு செய்தி. “கூட்டணி பேசச்சென்ற எங்களை அவமதித்துவிட்டார்கள்.

தலைமையைச் சந்திக்கவே முடியவில்லை” என்ற கருத்துக்கள். ‘காட்சிக்கு எளியன். கடுஞ்சொல்லன் அல்லன்’ என்பதே தலைமைக்கு இலக்கணம். நேரில் கண்டு பேச முடியாது என்ற நிலை உருவாகும்போது என்னதான் திறமையான தலைமையாக இருந்தாலும் சுற்றியுள்ளவர்கள் ‘தலைமை’யின் பெயரைச் சொல்லி எதுவும் செய்யலாம். நல்லதும் நடக்கலாம். கெட்டதும் நடக்கலாம்.

பாதிக்கப்படுவது தலைமையும் மக்களும். இந்த இடையில் உள்ள ஒட்டுண்ணிகள், ஓட்டுண்ணிகளாக மாறி நாட்டைச் சூறையாடி அழிவுக்குப் பாதை வகுக்கின்றன. நாம் கண்கூடாகக் கண்டு வேதனை அடைகிறோம்; விரக்தி அடைகிறோம்.

இது அரசியலுக்கு மட்டுமல்ல; தொழிலுக்கும் பொருந்தும். உலகமயமாக்கலுக்குப் பின்னால் நம் பாரத நாட்டில் பல்வகையான தொழில்களும் பெருகி வருகின்றன. வெற்றிகரமாக வளர்ந்து வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் நினைக்க முடியாத அளவிற்கு பிரமிக்க வைக்கும் வளர்ச்சி தொழில் முனைவோர்களின் எண்ணிக் கையைப் பல மடங்கு உயர்த்தியிருக்கின்றது. இதைத் தவிர சேவைத்துறையில், கணினித் துறையில், எண்ணற்ற மிக நூதனமான தொழில்கள் படு வேகமாக வளர்ந்து வருகின்றன. இதில் பல ஆரம்பிக்கப்பட்ட வேகத்திலேயே மூடுவிழா நடத்தி விடுகின்றன. சில தடுமாறிக் கொண்டுள்ளன.

ஒரு சிலவே வெற்றியடைகின்றன. என்ன காரணம்? அறிவு, தொழில் திறமை, நுட்பம், உருவாக்கும் விதம், அதற்குண்டான மூலப்பொருட்கள், இயந்திரங்களின் தரமறிந்து தேர்ந்தெடுக்கும் கல்வி, முதலீடு, வங்கித் தொடர்பு, சந்தை அறிவு, அரசுத் துறைகளின் தொடர்பு, விதிமுறைகளில் தெளிவு போன்றவை ஒவ்வொரு தொழில் முனை வோருக்கும், தொழிலதிபருக்கும் இன்றிமையாத ஒன்று. ஆரம்ப காலங்களில் சிறியதாக ஆரம்பித்த தொழில் பெருகும்போது நிர்வாகச் சுமை பெருகுகின்றது. எனவே தனி மனிதனிலிருந்து ஆரம்பமாகும் தொழில், வளரும் போது அதை நிர்வகிக்க சிறந்த நிர்வாகிகள் தேவைப்படுகின்றனர்.

விற்பனை; மார்க்கெட்டிங்; தயாரிப்பு; வாடிக்கையாளர் தொடர்பு; தேவைப்பட்டால் முகவர்கள் தேர்வு; தொடர்பு; தரஆய்வுப்பிரிவு; ஸ்டோர்ஸ்; பொருட்களை வாடிக்கையாளருக்கு அனுப்பி வைப்பது; மூலப்பொருட்கள், உதிரிப் பொருட்கள் வாங்குவது; கலால்வரி, சுங்கவரி, விற்பனை வரி, வருமானவரி கணக்குப் பார்ப்பது; வங்கித் தொடர்பு; தணிக்கை; பணப்பட்டுவாடா; பணியாளர் தொடர்புத்துறை; சேமநல நிதி; வருங்கால வைப்புநிதி; பராமரிப்பு; ஏற்றுமதி; இறக்குமதி போன்ற பல துறைகள் உள்ளன. கணினித்துறை மிகவும் இன்றிமையாதது. மிகச் சிறிய நிறுவனங்களில் ஒரு மேலாளரே இவை யனைத்தையும் சில உதவியாளர்களுடன் நிர்வகிப்பார்.

நடுத்தர நிறுவனங்களில் இரண்டு அல்லது மூன்று நிர்வாகிகள் தேவை. பெரிய நிறுவனங்களில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு மேலாளரும் பல உதவியாளர்களும் இருப்பார்கள்.

மேலாளர்கள் அந்தந்தத் துறைகளில் கல்வி மூலமாகவும், அனுபவரீதியாகவும் பயிற்சி பெற்று இன்று தங்கள் திறமை முழுவதையும் பணியாற்றும் நிறுவனத்தில் காட்டி நிறுவன வளர்ச்சிக்கு உதவத் தங்கள் பணியில் தீவிரமாகச் செயல்படுவார்கள். அனுபவம் இவர்களது முடிவுகளிலும், சாதுர்யம் திறமையாக உதவியாளர்களைச் செயல்பட வைப்பதிலும் வெளியாகும். ஆயினும், அவர்களும் அன்றாட நடைமுறைச் செயல்பாடுகள் தவிர, சில முக்கியமான முடிவுகளை, நிர்வாக இயக்குனரிடமோ அல்லது முதலாளியிடமோ கேட்டுத்தான் எடுக்க வேண்டும். ஒரு தொழிலின் வெற்றி, தொழிலதிபரின் வெற்றி, தொழில் முனைவோரின் வெற்றி இந்தச் சமயங்களில்தான் தீர்மானிக்கப்படுகின்றது.

“நான் சொன்னதைச் செய்”- வழக்கமாக உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் தங்களுக்குக்கீழ் பணியாற்றுபவர்களிடம் சொல்லும் வார்த்தை. எடுத்த எடுப்பிலேயே இந்த வார்த்தையை சொல்லி விடுகின்ற அதிகாரிகளிடம் பணியாற்றுபவர்கள் எந்தப் பிரச்சினையையும் இவரிடம் எடுத்துச் செல்லத் தயங்குவார்கள். “தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்றே சொல்வாரப்பா. ஐயோ. நம்ப எதை எடுத்துச் சொன்னாலும் கேட்கமாட்டாரே. எதுக்கப்பா வம்பு. அந்த ஆளு என்ன சொல்றாரோ அதைச் செய்துட்டுப் போய்க்கிட்டே இரு.”

“உனக்கென்ன நிறுவனத்தையா எழுதிக் கொடுக்கப் போகிறார்கள்? பேசாம சம்பளத்தை வாங்கிட்டு அவர் என்ன சொல்றாரோ, வாயை மூடிட்டு அதைச் செஞ்சிட்டுப்போப்பா.”

“சே! அந்தாளு ரூமுக்குப் போயிட்டு வந்தாலே ‘மூட்’ ‘அவுட்’ ஆகிப் போகுதப்பா. எல்லாம் தலை யெழுத்து.”

இப்படிப்பட்ட எண்ணங்கள் பணி யாற்றும் தொழிலாளர்கள், கீழ் மட்ட அதிகாரி களிடம் சர்வ சாதார ணமாகத் தோன்றி விடும். இது தலைமைக்கு ஆபத்து. தலைமை பல விஷயங் களில் எடுக்கக் கூடிய முடிவுகள் வெற்றி கரமாக நிறைவேறி யிருக்கலாம். அது ஒன்று மட்டுமேதான் எடுக்கும் முடிவுதான் சரியானது என்ற சுய அங்கீகாரத்திற்கு வலுவூட்டும் படியாக அமைந்து விடாது.

“நான் சொல்வதைச் செய்” என்ற வார்த்தையை எப்போது உபயோகப்படுத்த வேண்டும்?

கீழே பணிபுரிபவர்கள் தன்னிடம் கொண்டு வரும் பிரச்சினைகளை முதலில் அவர்களுக் குள்ளும் அவர்களிடம் பணிபுரிபவர்களிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

பின்னர் பிரச்சினைக்குண்டான தீர்வாக இரண்டு மூன்று தீர்வுகளையும் குறிப்பிட்டு, ஒவ்வொரு தீர்வையும் சரி என்று எடுத்துக் கொண்டால் அந்தத் தீர்வுகள் அந்தப் பிரச்சினைக்குண்டான முழு விடையாக இருக்குமா என்பதையும் குறிப்பிட்டு என்ன பாதிப்புகள் ஏற்படலாம் என்பதையும் குறிப்பிட வேண்டும். பெருவாரியானவர்கள் எந்தத்தீர்வை, என்ன காரணத்திற்காக வரவேற்கிறார்கள் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

பின்னர் உயர் அதிகாரியிடம் சென்று அந்த ஆவணத்தை ஒப்படைக்க வேண்டும். அவர் விருப்பப்பட்டால் அவரது கருத்தையும் கடைசியாகப் பதிவு செய்து அதன் சாதக பாதகங்களையும் எழுத வேண்டும். இப்போது உயர் அதிகாரியின் பொறுப்பு கூடுத லாகிறது. எல்லாத் தீர்வு களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அவருக்கும் குழப்பம் ஏற்படலாம். அல்லது உடனே இந்தத் தீர்வுதான் சரியானது என்ற தெளிவும் ஏற்படலாம். இருப்பினும் அனைவரையும் அழைத்து ஒரு விவாதம் மாதிரி கலந்துரையாடி, ஏதாவது ஒரு தீர்வை அனைவரும் கடைப்பிடிக்கலாம் என்று கூறலாம். அப்போது அந்த முடிவையும் ஒத்துக் கொள்ளாது போனால், “நான் சொல்வதைச் செய்” என்று ஆணையிடலாம்.

இந்த வழிதான் வெற்றியாளர்களின் வழி. தீர்வு தவறாக இருந்தாலும்கூட உடன் பணியாற்று பவர்களது கருத்துக்கள் கவனமுடன் கேட்கப் பட்டு, வாதிட அவர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டு பின்னர் எடுக்கப்பட்ட முடிவு என்பதால், உயர்அதிகாரிமீது மரியாதையும் பணிப் பெருமையும் உயரும்.

உயர்அதிகாரியைப் பொறுத்தவரை, வேறு பல பணிகளுக்கும் இவரது பொறுப்பு சம்பந்தப் பட்டிருப்பதால், அந்தந்தத் துறையைச் சேர்ந்தவர் களது கருத்துக்களை அறிவதனால் தீர்வு ஒளிந்து கொண்டிருப்பதைக் காணும் வாய்ப்பு கிடைக்கிறது. முடிவும் அங்கேயே தீர்மானமாவ தோடு அனைவரும் தங்களது முக்கியத்துவமும் மதிக்கப்பட்டதாக உணருவார்கள். தீர்வு சரியாக உள்ள பட்சத்தில், உயர் அதிகாரி அனைவரையும் அழைத்துப் பாராட்டி ஒரு டின்னரோ, லஞ்ச்சோ, அவர்களுடன் சேர்ந்து உண்ணலாம். மிக லாபகரமான தீர்வாக இருந்தால், ஒரு ‘பார்ட்டி’ ஏற்பாடு செய்து அனைவருடனும் கொண்டாடி(?!) மகிழலாம்.

கோவையிலுள்ள ஒரு மிகப்பிரபலமான நிறுவனத்தில் நான் விற்பனைப்பிரிவில் பணியாற்றி வந்த காலம். அதன் நிர்வாக இயக்குநர் மிகப் பெரிய, அனைவராலும் மதிக்கப்பட்ட நிர்வாகி. தினமும் அலுவலகம் வரும்போது தனது சட்டைப் பையில் துண்டுச்சீட்டுக்களில் முக்கியமான விஷயங்களைக் குறித்துக்கொண்டு வருவார். அவரது நிர்வாகத்தில் பல நிறுவனங்கள், பல துறைகள் சம்பந்தப்பட்டிருந்ததால் அனைவரையும் அழைத்து விவாதித்து முடிவெடுப்பார்.

சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, ‘நீ சொல்வது தவறு. நான் சொல்கிறபடி செய்யப்பா’ என்பார். அது சரியான முடிவாகவே இருக்கும். ஒரு சமயம் அலுவலகம் வந்த உடனேயே என்னையும், என்னுடன் மேலதிகாரியாக இருந்த நண்பரையும் அழைத்து, ‘நேற்று நான் சொன்ன தீர்வு சரியல்ல. இரவு முழுவதும் யோசித்துப்பார்த்தேன். நீங்கள் சொன்னதுதான் சரியானது. அப்படியே செய்து விடுங்கள்’ என்றார்.

அவரது உயரத்திற்கும் அவரது தகுதிக்கும் எங்களை அழைத்து அப்படிச் சொன்னது எப்பேர்ப்பட்ட குணம். மேன்மக்கள், வெற்றியாளர் களிடம் இந்தக்குணம் இருக்கும். அவர்களது வெற்றி அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்லாது, நிறுவனத்திற்கும் நாட்டுக்கும் நற்பலன்களைக் கொடுக்கும். அந்த மாபெரும் தொழிலதிபர், அமரர் திரு.எல்.ஜி.வரதராஜ் அவர்கள். எல்.ஜி நிறுவனங்களின் தூணாக விளங்கிப் பல்வேறு பொருட்களில் தனது முத்திரையைப் பதித்த மகத்தான தொழில்நுட்ப மேதையிடம் பணியாற்றிய, யாரைக்கேட்டாலும் இந்தக் கருத்தைத்தான் சொல்வார்கள். கோவை நகரமே பெருமைப்படும் இப்படிப்பட்ட நிர்வாகிகளால் தான் நமது நாட்டு நிறுவனங்களின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அந்த வெற்றி வெளிச்சம் தான், இன்றைய இளைஞர்கள் எப்படி அனை வருடனும் பழகுவது, முடிவெடுப்பது என்பதை விளக்கமாகக் காட்டுகின்றது. வாருங்கள். கலந்துரையாடி கருத்துக்களை விவாதித்து, அன்போடு பேசி வெற்றிப்பாதையின் புதிய எல்லைகளை விரிவுபடுத்துவோம்.

No comments:

Post a Comment