Wednesday, April 17, 2013

நீங்களும் ஜீனியஸ்தான்

அறிவாளிகள் ஒன்பது வகை.  அதில் நீங்கள் எந்த வகை ?

வீட்டிற்குள் உள்ள விலங்குகள் எல்லாம் சேர்ந்து ஒரு பள்ளி துவங்கியது. ஸ்கூல் என்றால் சாதாரண ஸ்கூல் இல்லை. அது ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூல்.

எல்லோரும் எல்லா திறமைகளையும் பெற வேண்டும் என்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட அந்தப்பள்ளியில் மரம் ஏறுதல், நீந்துதல், ஓடுதல், பறத்தல், பாடுதல் என பல பயிற்சிகள் வழங்கப் பட்டது.

பீஸை பற்றி கவலைப்படாமல் பறவைகள் மீன்கள் மற்றும் நாய்கள் முயல்கள் என விலங்கு களும் பெற்றோர்களுடன் வந்து வரிசையில் நின்று அட்மிஷன் பெற்றுச்சென்றன.

பள்ளியில் பயிற்சிகள் தொடங்கியது. பறவைகள் பாடும் வகுப்புகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியது. ஆனால் நீச்சல் வகுப்பிலும் மரம் ஏறுதலிலும் சொல்லிக் கொள்ளும்படி மதிப்பெண் இல்லை.

அணில்கள் அழகாக மரம் ஏறி அவ்வகுப்பில் கிளாஸ் பர்ஸ்ட் வந்தது. ஓடும் பயிற்சியிலும் அனைவரின் பாராட்டையும் பெற்றது. ஆனால் மற்றவற்றில் நிலைமை தலைகீழ். மீன்கள் நீந்தும் பயிற்சியில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. ஆனால் தரையில் நடக்கும் மற்ற பயிற்சிகளில் கலந்து கொள்ள முடியாமல் வகுப்புகளை கட் அடித்தே வந்தது.

ஆக, எல்லோரும் தங்களை திறமையற்றவர் களாக தாழ்வாகவே கருதி படித்து வந்தார்கள்.

காட்டிற்குள் உள்ள இந்த பள்ளிக்கும், நாட்டிற்குள் உள்ள பள்ளிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எல்லோரையும் எல்லா வற்றிலும் திறமைசாலிகளாக்குகிறேன் என்று இங்கேயும் கூட இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் எல்லா விஷயங்களிலும் புத்திசாலிகளாக இருக்க வேண்டியதில்லை என்ற வாதத்தை முன் வைத்ததுடன் அறிவாற்றலையும் பலவகையாக பிரித்து அறிவித்தார் டாக்டர் ஹோவர்டு கார்டனர்.

மேலும் எல்லோருமே ஜீனியஸ்தான். ஆனால் வேவ்வேறு துறைகளில்  என்கிறார் அதற்கான ஆதாரத்துடன்.

புத்திசாலித்தனத்தை அளவிட இன்றுவரை பலராலும் அறியப்பட்ட முறை ஐக்யூ டெஸ்ட். 9 விதமான அறிவு வகைகளில் ஒன்றிரண்டு அறிவை மட்டுமே சோதிக்கும் இம்முறையால் உண்மையில் ஒருவரை முழுமையாக மதிப்பிட்டு விடவே முடியாது.

டாக்டர் ஹோவர்டு கார்டனர் மனிதர்களின் தனித்தன்மைகளை ஆராய்ந்து அறிவாற்றலை 7 பிரிவுகளாக பிரித்து அறிவித்தார். பிறகு மேலும் இரண்டு பிரிவுகளை இணைத்தார். ஆக, மனிதர்களை 9 விதங்களுக்குள் அடக்கலாம்.

1. மொழி அறிவு : Linguistic Intelligence

மொழியை பயன்படுத்துவதில் ஆற்றல் மிக்கவர்கள். இத்தகைய திறமை பெற்றவர்கள் பேச்சாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் மலர் கிறார்கள். மொழித்திறன் உள்ளவர்கள் குறுக்கெழுத்துப் போட்டிகளில் ஆர்வம் உள்ளவர்களாக கவிதை எழுதுபவர்களாக எதையும் சுவாரஸ்யமாக மற்றவர்களுடன் பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். பேரறிஞர் அண்ணா, கவியரசர் கண்ணதாசன், எழுத்துச் சித்தர் பாலகுமாரன், சுஜாதா  போன்றவர்கள் இவ்வகை ஜீனியஸ்களே.

பெரும்பாலும் கேள்விகளால் வேள்வி நடத்துபவர்களாகவும், பேச்சில் ஈடுபாடு உடையவர்களாகவும், புத்தகப்பிரியர்களாகவும், வார்த்தைகளில் விளையாடி ஜெயிப்பதில் ஆற்றல் மிக்கவர்களாகவும், தன்னை அறிந்தவர்களாகவும், மற்றவர்களை புரிந்துகொள்பவர்களாகவும், புதிய மொழிகளையும் வார்த்தைகளையும் கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வமுடையவர்களாகவும் நீங்கள் இருந்ததால் நீங்கள் மொழி அறிவுலகில் ஜீனியஸ்.

2.காரண மற்றும் கணித அறிவு : Logical-Mathematical Intelligence

இவர்கள் கணிதத்தில் வல்லுனர்கள். எதையும் ஆழ யோசிப்பது இவர்களது பழக்கம். கணித வல்லுனர் களாக விஞ்ஞானிகளாக துப்பறியும் நிபுணர்களாக இவர்கள் பிரகாசிக்கிறார்கள். ராமானுஜம், சர்.சி.வி ராமன், செஸ் விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்கள் இவ்வகையை சேர்ந்தவர்கள்.

3. இசை அறிவு : Musical Intelligence

இசையில் அசைக்க முடியாத ஈடுபாடுள்ளவர்கள். அதன் ஒவ்வொரு நுணுக்கங்களையும் திறம்பட அறிந்தவர்கள். இவ்வறிவில் மேம்பட்டவர்கள் இசையமைப் பாளர்களாக, இசைக் கலைஞர்களாக, பாடகர்களாக பரிணாமம் பெறுகிறார்கள். இளையாராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹரிஹரன், எஸ்.பி. பாலசுப்பிரமணியன், எஸ்.ஜானகி போன்றவர்கள் இவ்வகையினரில் சிலர்.

4. இயற்கை அறிவு : Naturalist Intelligence

இவர்கள் இயற்கை விரும்பிகள். காடுகள் விலங்குகள் இவற்றில் ஆர்வம் கொண்டவர்கள். இயற்கையை ஆராய்வதிலும் அவற்றை பாதுகாப்பதிலும் ஈடுபாடு கொண்டவர்கள். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றவர்களை இத்துறை மேதைகளுக்கு உதாரணமாக சொல்லலாம்.

5.தொடர்புத்திறன் அறிவு : Interpersonal Intelligence

யாரையும் எளிதாக தன் வசப் படுத்துபவர்கள். சுலபமாக மற்றவர்களை புரிந்து கொள்பவர் களாக எளிதில் பழகுபவர்களாக இவர்கள் இருப்பார்கள்.  ஆசிரியர்கள், நடிகர்கள், சமூக சேவகர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் இப்பிரிவினரே. மற்றவர்களின் திறன் அறிந்து அதற்கேற்றாற் போல் பேசவும் பழகவும் கூடியவர்களாக இருப்பார்கள்.

6. உடலியல் அறிவு : Bodily-Kinesthetic Intelligence

உடலை சிறப்பாக கையாள தெரிந்தவர்கள். விளையாட்டு வீரர்கள், யோகா கலைஞர்கள், உடற்பயிற்சி தரும் பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், நடன கலைஞர்கள் ஆகியோர் இவ்வகையை சேர்ந்தவர்களே.

7.தன்னையறியும் அறிவு : Intrapersonal Intelligence

தன்னை தன் சிந்தனைகளை நன்கு உணர்ந்தவர்கள். தான் தன்னை உணரவும் மற்றவர்கள் தங்களை உணரவும் உதவும் ஆன்மிகவாதிகள், மனநல நிபுணர்கள், தத்துவ வாதிகள், சிந்தனையாளர்கள் இவ்வகையை சேர்ந்தவர்கள். ரமணர், ஜகி வாசுதேவ் போன்றவர்கள் இத்துறை ஜீனியஸ்கள்.

8.கற்பனை அறிவு : Spatial Intelligence

முப்பரிணாம சிந்தனை கொண்டவர்கள். அதாவது மாறுபட்டு சிந்திக்கும் (lateral thinking) திறனுடையவர்கள். எந்த விஷயத்திலும் புதுமையை புகுத்தி தங்களை தனித் தன்மையுடன் திகழச் செய்பவர்கள். ஓவியர்கள், சிற்பிகள், கட்டிட வடிவமைப்பாளர்கள் இவ்வறிவில் சிறந்து விளங்குபவர்கள்.

9.வாழ்வியல் அறிவு : Existential Intelligence

அதிகமாக கேள்வி கேட்பவர் களாகவும், வாழ்க்கை குறித்த ஆய்வுகள் நடத்துபவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். பிரபஞ்சம் பற்றிய கடவுள் பற்றிய கேள்விகள் அதிகம் உள்ளவர்களை இவ்வகைப் படுத்தலாம்.

ஆக அறிவாளிகள் 9 வகை. அதில் நீங்கள் எந்த வகை ?

கல்வியில் மேம்பட்ட வர்கள் மட்டும்தான் அறிவாளிகள் என்றில்லை. மேற்கண்ட எந்த திறன் உங்களுக்கு இருந்தாலும் அதில் உயர்நிலையை  நீங்கள் அடைய முடியும். அப்படி அடைந்தால் நீங்களும் ஜீனியஸ்தான்.


ஜீனியஸ்கள் வசதியானவர்கள் வீட்டில்தான் உருவாகிறார்கள்

கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க உதவும் தொடர்

முதல் கட்டுரையை படித்துவிட்டு நிறைய கேள்விகளை நம் வாசகர்கள் முன் வைத்தார்கள். கேள்விகள் தான் ஜீனியஸ்களை உருவாக்குகிறது என்பதால் இந்த மாதம் கேள்வி பதில் மூலமாக நாமும் ஜீனியஸ்தான் என்பதை உணர்வோம்.


யாரெல்லாம் ஜீனியஸ் ஆகமுடியும்?

தங்கள் துறையில் உச்சக்கட்ட அறிவை பெறுபவர்கள் அதற்காக தங்களின் திறனை தொடர்ந்து வளர்த்துக் கொண்டே செல்பவர்கள்தான் ஜீனியஸ் ஆகமுடியும்.

ஜீனியஸ் என்று இந்த உலகால் அங்கீகரிக்கப்பட்டவர்களை எல்லாம் உதாரணமாக எடுத்துப் பார்த்தால் இந்த பதில் உங்களுக்கே புரியும். அவர்களில் சிலர் ஐன்ஸ்டின், லியர்னோ டாவின்சி, மொசார்ட், கணித மேதை சீனிவாச ராமானுஜம். இவர்களின் வாழ்வினை பார்த்தால் மேலே சொன்னது உடன் புரிந்துவிடும்.

ஜீனியஸ் என்று அறியப்பட்டவர்களுக்குள் ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதா?

எதையும் அறிந்து கொள்வதில் அதாவது கற்றுக்கொள்வதில் காட்டிய ஆர்வமும் துடிப்பும்தான் இவர்களுக்குள் இருந்த ஒற்றுமை.

ஜீனியஸ்கள் வசதியான குடும்பத்தில்தான் பிறக்கிறார்களா?

ஆம். அதிர்ந்து விடாதீர்கள். பதிலை முழுமையாக படியுங்கள். வசதியான குடும்பம் என்பதற்கு பொருளாதார ரீதியான அர்த்தம் என்றால் இல்லை என்பதே என் பதில். வசதியான குடும்பம் என்பதற்கு குழந்தைகளை ஊக்கப்படுத்துவதில், அன்பு காட்டி அரவணைப்பதில் என்றெல்லாம் பொருள் கொண்டால் எல்லா ஜீனியஸ்களும் வசதியான வீட்டில்தான் உருவாகிறார்கள்.

இன்றைய சூழல் ஜீனியஸ்கள் உருவாவதற்கு உகந்ததாக இருக்கிறதா?

தகவல் தொடர்பு வாய்ப்புகள் குறைவாக இருந்த கால கட்டத்தில் தங்கள் சிந்தனைகளை உலகம் முழுவதும் வெளிப்படுத்தி அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்பு சில சமயங்களில் சிலருக்கு குறைவாகக்கூட இருந்திருக்கிறது. ஆனால் இன்று உங்களுடைய புதிய ஒரு ஐடியாவை டிவியின் மூலமாகவும் இன்டர்நெட்டின் மூலமாகவும் உலகம் முழுவதற்கும் ஒரு நொடியில் கொண்டு போய் சேர்த்துவிட முடியும்.

எனவே முன்னெப்போது இருந்ததை விடவும் இன்றைய சூழலில் எல்லோருமே ஜீனியஸ்களின் வாழ்க்கையை அறியவும், தானும் பின்பற்றவும், ஜீனியஸ் ஆகவும் வாய்ப்புகள் அதிகம்.

மார்க் வாங்குபவர்கள்தான் ஜீனியஸா? அல்லது ஒரு மாணவன் பெறும் மதிப்பெண்ணை வைத்து பிற்காலத்தில் இவன் ஜீனியஸாக வருவான் என்று கண்டறிய முடியுமா?

எதையும் புரிந்து கொள்ளாமல் தேர்வெழுதி மதிப்பெண் பெற முடியும் என்பதால் மதிப்பெண்களை வைத்து நிச்சயம் ஒருவரின் தகுதியை அளக்க முடியாது. பொதுவாக ஜீனியஸ்களுக்கு இருக்க வேண்டிய தகுதி ஒன்றை நன்கு புரிந்து கொள்வது… அதையும் தாண்டி சிந்திப்பது.

எவ்வளவு சொன்னாலும் என்னால் என்னை ஜீனியஸ் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை?

இந்த உலகம் கொண்டாடிய பிறகே எல்லா ஜீனியஸும் தாங்கள் ஜீனியஸ் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். எல்லா கற்களுக்குள்ளும் சிற்பம் இருக்கிறது. சிற்பம் வெளிப்பட தேவை உளி தாங்கும் வலிவும் நல்ல சிற்பியும்.

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பம் வெளிப்பட சிற்பிக்காக காத்திருக்காதீர்கள். சிற்பமும் நானே சிற்பியும் நானே என உணர்ந்தால் நீங்கள் சீக்கிரம் ஜீனியஸ் ஆகலாம்.


கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க உதவும் தொடர்

என்ன… நான் ஒரு ஜீனியஸா? என்று ஆச்சரியப்பட வேண்டாம் அல்லது சந்தேகப்பட வேண்டாம். நீங்கள் ஒரு ஜீனியஸ் என்று ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆய்வு முடிவில் கண்டறிந்தது அனைவரிடமும் உள்ள பொதுவான அம்சம் அவர்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறது.


இந்தக் கட்டுரையை அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு படிக்கிறீர்களா? உங்களைப் பாராட்டி உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கும் ஜீனியஸ்-கான தகுதி இருக்கிறது.

நான் உங்களை ஜீனியஸ் என்று சொல்வது இதை வைத்து மட்டும் இல்லை.

ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய் இருக்கிறது. அவரை நாம் எப்படி அழைப்போம்? கோடீஸ்வரர் என்றா? லட்சாதிபதி என்றா? கோடி ரூபாய் இருப்பதால் நிச்சயம் ‘கோடீஸ்வரர்’ என்றுதான் அழைப்போம். சரி. அவர் அதை பயன் படுத்தவில்லை, பேங்கில் அல்லது தன் வீட்டு லாக்கரில் அப்படியே வைத்திருக்கிறார். பணத்தை பயன்படுத்தாத அவரை நாம் எப்படி அழைப்போம், கோடீஸ்வரர் என்றா? லட்சாதிபதி என்றா? நிச்சயம் ‘கோடீஸ்வரர்’ என்று தான் அழைப்போம். இல்லையா?

சரி. இப்பொழுது இன்னொரு கேள்வி. தாமஸ் ஆல்வா எடிசன் எத்தனை கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருக்கிறார்? ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் இல்லையா?

இதை கண்டுபிடிக்க உதவியது, அவரது மூளை. அதே மூளைதானே உங்களுக்கும் இருக்கிறது. என்ன…. அதை பயன்படுத்தாமல் பீரோவில் (தலைக்குள்) வைத்திருக்கிறோம். பயன்படுத்தாவிட்டாலும் கோடி ரூபாய் வைத்திருந்தால் கோடீஸ்வரர்தான் என்றால் பயன்படுத்தாவிட்டாலும் ஒரு ஜீனியஸ் மூளையை வைத்திருந்தால் ஜீனியஸ்தான். ஆமாம் நீங்களும் ஜீனியஸ்தான்.

நீங்கள் ஜீனியஸ் என்பதை நீங்களே உணராததிற்கு காரணம், உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் உணராததுதான். இத்தொடர் அந்த வேலையைச் செய்யும். நினைவாற்றல் திறன், கவனிக்கும் திறன், சிந்திக்கும் திறன் என உங்களின் எல்லா திறன்களையும் வளர்த்துக்கொள்ள இத்தொடர் உங்களுக்கு உதவும்.

சைக்கிள் ரேஸில் பலர் கலந்து கொள்கிறார்கள். வேகத்திற்கு தகுந்த மாதிரி முதல் பரிசு முதல் ஆறுதல்பரிசு வரை ஆளுக்கொரு பரிசை பெறுகிறார்கள். நீங்களே சொல்லுங்கள் அனைவரும் பயன்படுத்தியது ஒரே சைக்கிள்தான். வெற்றியில் மட்டும் ஏன் இவ்வளவு வித்தியாசம். காரணம் பயிற்சியும் முயற்சியும்தான். அது போலத்தான் மூளை சக்தி எல்லோருக்கும் ஒன்றுதான், அதை பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது வித்தியாசம்.

இதற்கு இன்னும் ஓர் உதாரணம் பார்ப்போம். ஒருவரின் அறிவாற்றலை அளப்பதற்கென்று சில சோதனை முறைகள் (IQ Test) இருக்கிறது. பலரையும் இச்சோதனையில் பல்வேறு கால கட்டங்களில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அப்பொழுது அவர்களிடம் அறிவாற்றல் திறன் உயர்ந்து கொண்டே இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, அறிவுத் திறன் பிறப்பில் வருவதல்ல… மரபியல் சார்ந்ததல்ல… இது முயற்சியில் வளர்த்துக் கொள்ளக்கூடியது. எனவே உங்களின் இப்பொழுதைய அறிவாற்றலை ஜீனியஸ் என்று உலகம் பாராட்டுகிற அளவிற்கு உங்களாலும் உயர்த்திக் கொள்ள முடியும்.

இத்தொடர் நீங்கள் ஜீனியஸ்தான் என்பதை முதலில் உங்களுக்கு உணர வைக்கும். பிறகு இந்த உலகுக்கே உணர வைக்கும். சந்திப்போம்.


முடியும் என்று சொல்லுங்கள் நீங்களும் ஜீனியஸ்தான்



மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

உலகம் தட்டை என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த போது, இல்லை. உலகம் உருண்டை என்று கூறியதோடு மட்டுமல்லாமல், நிரூபிக்க முடியாது என்று மற்றவர்கள் கூறியதை நிரூபித்துக்காட்டியதால்தான் கலிலியோ ஜீனியஸ்.
பலரும் இதயம்தான் அனைத்து உடலியக்கங்களையும் செய்கிறது என்று கூறிய போது மூளைதான் அனைத்தையும் செய்கிறது என்று கூறியதுதான் அரிஸ்டாட்டிலை ஜீனியஸ் ஆக்கியது.

இவனால் கல்வி கற்க முடியாது. ஏன் வகுப்பில் என்ன நடக்கிறது என்றுகூட கவனிக்க முடியாது என்று கூறியபோதும் 1000க்கும் மேற்பட்ட விஷயங்களை கண்டறிந்து தன்னால் முடியும் என்று காட்டியதால்தான் எடிசன் ஜீனியஸ்.

மனிதன் பறப்பது என்று சிந்திப்பதுகூட ஆண்டவனுக்கு எதிரான செயல் என்ற பிரசங்கம் செய்து கொண்டிருந்த பாதிரியாரின் மகன்களான ரைட் பிரதர்ஸ், விமானம் கண்டறிந்து காட்டினார்கள் தாங்கள் ஜீனியஸ் என்பதை.

கண் தெரியாது. காது கேட்காது. வாய் பேச முடியாது என்ற நிலையிலும் தன் 25 வயதில் சிறந்த கல்வியாளர் என்ற பட்டம் வாங்கிய ஹெலன் கெல்லர் ஜீனியஸ்களுக்கு ஒரு சிறந்த உதாரணம். முடியாது என்பதையே தன் பேச்சாக கொண்டிருந்தவர்களுக்கு முடியும் என்பதை மூச்சாக மாற்றிய உதாரணம்.

எனவே, மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலைப் படாதீர்கள். நீங்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

முடியாது என்று உலகமே சொன்னாலும் முடியும் என்று தன் செயல்களால் சொல்பவர்கள் தான் ஜீனியஸ். நீங்கள் இந்த உலகத்திற்கு என்ன சொல்லப்போகிறீர்கள் ?

முடியும் என்று நினைத்தால்தான் எந்த வேலையும் முழுமையாக முடியும். நீங்கள் ஜீனியஸ் ஆவது உட்பட…

ஹோம்ஒர்க்

உங்கள் வாழ்க்கையில் எந்த விஷயத்தையெல்லாம் முடியாது
என்று நினைத்தீர்களோ,
அதில் எதையெல்லாம் மாற்ற முடியும் என்று பட்டியலிடுங்கள். ‘முடியும்’ என்ற எண்ணத்தோடு ஏதாவதொன்றை முயற்சித்துப் பாருங்கள். அது முடியும் என்று தோன்றும்போது நீங்களும் ஜீனியஸ்தான் என்பதை உணர்ந்திருப்பீர்கள்.

No comments:

Post a Comment