Wednesday, April 24, 2013

பொறுமையும் வேகமும்

வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பிய இளைஞன் ஒருவன் சாக்ரடீசை சந்தித்தான். பணிந்து அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, “ஐயா தாங்கள் எனக்கு வெற்றியின் இரகசியத்தை தெரிவிக்க வேண்டும்” என்றான்.

அவன் கண்களை உற்று நோக்கிய சாக்ரடீஸ், “நாளை காலை என்னை ஆற்றங் கரையில் வந்து பார்” என்று சொல்லியனுப்பினார்.

சொன்னபடி மறுநாள் காலை ஆற்றங் கரைக்கு வந்த அந்த இளைஞனுடன் பேசிக் கொண்டே ஆற்றில் இறங்கினார் சாக்ரடீஸ்.


கழுத்தளவு நீர் வந்ததும், திடீரென்று அவனை தண்ணீரில் அமுக்கிப் பிடித்துக் கொண்டார். தடுமாறிப் போன அந்த இளைஞன் காற்றுக்காகவும், தலையை வெளியே எடுக்கவும் போராடினான். நீரிலிருந்து வெளியே வர மிகவும் பிரயத்தனப்பட்டான்.
சற்று நேரம் கழித்து அவன் தலையை வெளியே இழுத்த சாக்ரடீஸ் அவன் ஆழ்ந்து மூச்சு விட்டுக் கொள்ளும்வரை காத்திருந்துவிட்டு பிறகு கேட்டார்.

“இப்போதைய இந்த சூழலில் எதைப் பெற நீ பெரிதும் போராடினாய்?”

“காற்றைப் பெற போராடினேன்” என பதில் சொன்ன அந்த இளைஞனை முழுமையாக விடுவித்து விட்டு புன்னகையுடன் சாக்ரடீஸ் கூறினார்,

“இதுதான் வெற்றியின் இரகசியம்.”

நாம் அடைய வேண்டிய இலக்குகள் ஒவ்வொன்றையுமே காற்றைப் போல் அவசிய மானவையாய் உயிரைக் காக்க தேவைப்படுபவை யாய் கருத வேண்டும். என்பதைத்தான் மேற்கண்ட நிகழ்ச்சி நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அதுமட்டு மின்றி ஒவ்வொரு சம்பவமும் அவரவர் சிந்தனைக்கு ஏற்றாற் போல் வெவ்வேறு படிப்பி னையைத் தரும்.

பதுங்கியிருந்து பாய்வதும், பொறுத்திருந்து பெறுவதுவும் போராட்டத்தின் உத்திகள்தான் என்பதை நாம் அறிதல் வேண்டும். எதற்கு பொறுமை தேவை, எதற்கு வேகம் தேவை என்பதில் தெளிவுதான் மிக அவசிய மானவை.

பொறுமையாய் அடக்கமாய் இருக்கி றார்கள் என்பதற்காக அறிவுகுறைந்தவர்கள் என்றோ, வலிமையற்றவர்கள் என்றோ கருதி எளிதில் அவர்களை வென்றுவிடலாம் என பிறரை யாரும் தவறாக எடைபோட்டுவிடக்கூடாது.

பொறுமையும் அடக்கமும் மிக உயர்ந்த பண்புகள். இவற்றை ஒருவர் கைக்கொள்கிறார் என்றால் அவர் அறிவுத்தெளிவு உடையவர் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி அவர்கள் ஏதோ பெரிய சாதனைக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். பெரிய சாதனைகளை செய்வதற்கு முன் பெரிதும் தேவைப்படுபவை பொறுமையும் அடக்கமும்தான் என்பதை எப்போதும் நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

இதனை மிக அழகாக ஔவை சொல்கிறாள்.
“அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.”

சிறிய மீன்கள் கண்ணெதிரிலேயே நீந்திச் செல்லுகின்ற போதும் மீனுக்காக வந்து ஒற்றைக் காலில் தவமிருக்கும் கொக்கு அவற்றைப் பிடிக்காமல் அமைதியாய் காத்துக் கொண்டிருக்கு மாம். உறுமீனாகிய பெரிய மீன் வரும்போது கொத்திக் கொண்டு பறந்துவிடும்.

வெளிச்சம் என்பது விளக்கின் தன்மை, அளவுகளைப் பொறுத்துள்ளது. நம் விளக்கின் உள்ளீட்டுப் பொருளின் சக்தி குறையாமல் பார்த்துக் கொண்டால் எப்போதும் ஒளிவிட்டுக் கொண்டே இருப்போம்.

ஒற்றை அரிசியைப் பார்க்கும்போது நமக்கு அது ஒன்றும் பெரிதாய் தெரிவதில்லை. ஆனால் அதே அரிசியின்மீது ஓர் ஓவியமோ, நம்முடைய பெயரோ எழுதியிருந்தால் சிறிய ஒற்றை அரிசியின் மதிப்பு உயர்ந்து விடுகிறது. மிகச் சிறிய பொருளையும் உயர்மதிப்பீடு செய்ய வைப்பதில் அது எதனைத் தாங்கியிருக்கிறது என்பதுதான் முடிவு செய்கிறது.

உயர உயர மேலேறும் போதுதான் ஊர் நம் கண்களுக்கு தெரிகிறது. நம் சிறகுகளின் வலிமையைப் பொறுத்தே நாம் சிகரங்களுக்கு மேலே பறக்கிறோம். இறக்கைகளின் சக்தியை அதிகப்படுத்தும் போது ஊரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நம் கண்கள் உலகைப் பார்க்கத் தொடங்குகின்றன.

அனுபவ நீரால் அடித்துச் செல்லப்படும் போது கரடுமுரடான கல்லாய் இருந்த நாம் மென்மையான கூழாங்கல்லாய் மாறிவிடுகிறோம்.

காயாக நாம் இருக்கும்வரை அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கும் விதை நம்மிடத்தில் பிஞ்சாகவே இருக்கிறது.

காற்று, வெயில், மழை எல்லாவற்றையும் தாங்கி கனிந்தபின்னர்தான் நம் விதைகள் சங்கிலித் தொடராய் புதியவற்றை படைக்கும் சக்தி பெறுகின்றன. கனிந்த பின் நம்மிடமிருக்கும் சுவையே அலாதிதான். காயாக இருக்கும்வரை நாம் கடினமாகவும், சுவையற்றும் இருக்கிறோம்.

வெந்நீரில் கொதிக்கும் போதுதான் தேயிலையின் நிறத்தை நாம் அறிய முடியும். கொதித்து வடிகட்டிய பின்னர்தான் தேநீர் உண்மையான சுவையைத் தரும். எடுத்து படிக்காதவரை எந்தப் புத்தகத் திற்கும் மதிப்பீடு தர முடியாது. பாதுகாப்பாய் கண்ணாடிப் பேழைக்குள் இருப்பதாய் கருதிக் கொண்டு நாம் படிக்கப்படாமலே இருந்தால் பளபளவென்ற தோற்றத்தினாலும், பாதுகாப்பாய் இருப்பத னாலும் என்ன பயன் வந்துவிடப் போகிறது?

உயர்ந்த திறமைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றை மற்றவர் அறிந்து கொள்ளவில்லை, உரிய வகையில் அங்கீ கரிக்கப்படவில்லை என்ற காரணங்களுக்காக நாம் அமைதியாய் இருந்துவிட முடியுமா?

No comments:

Post a Comment