நாம் எவ்வாறு மதிக்கப் படுகிறோம் என்பதன் பிரதிநிதியாக அந்தக் குடம் விளங்குகிறது. அந்தக் குடத்தை நிரப்பப் பல வழிகள் உண்டு. உங்களை மற்றவர்கள் புகழ்கிற போது உங்களை உன்னதமான மனிதர் என்று போற்றும் போது, உங்கள் குடம் சிறிது நிறைவதைப் போல் உணர்வீர்கள்.
உங்களுக்குப் பிடித்தமானவர்கள் உங்களுக்கு பிடித்தமான முறையில் உங்களை அழைக்கிற போதும், அந்தக் குடம் கொஞ்சம் நிரம்பும். உங்கள் உடையை, உடைமைகளை, கடின உழைப்பை யாராவது பாராட்டுகிற போதும் குடம் இன்னும் சற்று அதிகமாக நிரம்பிவிடும். இதைப் போலவே பிறரின் குடங்களை நிரப்ப பலகோடி வழிகள் உள்ளன. பிறருக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளை சொல்வதன் மூலம், பிறரை உற்சாகப்படுத்தி அவர்களின் வெற்றி முனைப்பை அதிகரிக்கச் செய்வதன் மூலம், இழப்புகளுக்கு ஆறுதல் கூறி இன்னும் சாதிக்கத் தூண்டுவதன் மூலம், ஆற்றலை பிறருடைய குடத்தை நம்மால் எளிதாக நிரப்ப முடியும். ஒருவருடைய குடம் உணர்வுகளால் நிரப்படும் போது அன்பும், தோழமையும் அதில் பொங்கி வழியும். அதைப் போலவே நம்பிக்கையாலும், சாதிக்கும் திறனோடும் நிரப்பப்படுகிற போது வெற்றிகளாகவே வழிந்தோடும்.
நமக்குள் ஒளிந்திருக்கும் இந்தக் கண்ணுக்குத் தெரியாத குடத்தை நிரப்ப முனையும் முன் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான். நிரம்பிய உங்கள் குடங்களை குறைகுடமாக மாற்ற எண்ணற்ற கற்கள் உங்களை நோக்கி எறியப்படும். அதை சமர்த்தியமாகக் கையாள்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். நம்மில் பலரின் குடங்கள் பல நேரங்களில் காலியாகவே விடப்பட்டுவிடுகின்றன. அதன் காரணம், செய்யும் செயல்களில் நமக்கு தெளிவும் நம்பிக்கையும் இல்லாததே. ஒருவரின் குடம் நிரம்பியிருக்கிற போது அவருக்கும் இருக்கும் மனநிலைக்கும், காலியாக இருக்கிற போது அவருக்கு ஏற்படுகிற மனநிலைக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. உதாரணமாக, தன் மீதே வெறுப்புடன் காணப்படும் உங்களின் நண்பரின் குடம் காலியாக இருக்கிற போது, நீங்கள் அவரைப் பற்றி பல வகையிலும் நல்ல விதமாக எடுத்துக்கூறி அவர் குடத்தை நிரப்ப முயன்றாலும் அதை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். இது போன்ற சூழல்களில்தான் சில மனிதர்கள் வெற்றியால் நிரம்ப வேண்டிய தன் குடத்தை தானே துளை இட்டுக் கொள்கிறார்கள்.
ஒருவர் தன் குடத்தில் தானே துளையிட்டுக் கொள்கிற போது அவர்களிடம் எழுகிற கோபம், தாழ்வு மனப்பான்மை போன்றவை, அவரைச் சுற்றியிருப்பவர்களின் குடங்களையும் காலியாக்கி விடுகின்றது. இந்த நிலையைத் தடுக்க தனக்குள் இருக்கும் ஆற்றலை உணர்ந்து, வாய்ப்புகள் கிடைக்கிற போதெல்லாம் நம் திறமைகளால் முத்திரை பதித்து நம் குடங்களுக்கு எப்போதும் நீர் வார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நாம் பெரும்பாலும் நம் குடங்களை மட்டுமே நிரப்ப முயற்சிக்கிறோம். பிறரின் குடங்களை நிரப்ப நம்மில் பலருக்கும் பல வகையிலும் தயக்கங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. நாம் பிறருக்கு உதவுகிற போதும், பிறரின் திறமைகளை அங்கீகரிக்கிற போதும் நம் ஆளுமைத்திறன் இயற்கையாகவே அதிகரித்து விடுகிறது. பிறரின் குடங்களை நிரப்ப முற்படுகையில் நம் குடத்தின் நீர் சிறிதளவும் குறைவதில்லை. மாறாக நிரம்பவே செய்கின்றன.
நமக்குள் இருக்கும் திறமைகளை அடையாளம் காண்பதிலும், பிறருக்குள் இருக்கும் ஆற்றலைக் கண்டு உத்வேகம் அளிப்பதிலும் நமக்கும், பிறருக்கும் கிடைக்கவிருக்கிற வெற்றிகளும் அதன் மூலம் கிடைக்கிற மகிழ்ச்சியும் நிறைவும் நம் குடங்களை தளும்பச் செய்கிறது.
குழாயடிகளில் வரிசையிலே காத்திருக்கும் குடங்கள் காரணமாகவே சில சமயங்களில் குழாயடிச் சண்டைகள், குடுமிப்பிடி சண்டை களாகும். ஏனென்றால் குழாயைத் திறந்தால் சில நேரங்களில் தண்ணீரும் பல நேரங்களில் காற்றும்தான் வரும்.
எனவே, தன்னுடைய குடம் நிரம்பினால் போதும் என்ற எண்ணம் பலருக்கும் எழும். ஆனால் நமக்குள் இருக்கும் இந்தக் கண்ணுக்குத் தெரியாத குடத்தை நிரப்ப மிக எளியவழி அடுத்தவர்களின் குடங்களை நிரப்புவதுதான்.
என்ன… உங்களைச் சுற்றியுள்ள குடங்களை நிரப்பத் தயாராகி விட்டீர்களா?
No comments:
Post a Comment