Wednesday, April 24, 2013

அறிய வேண்டிய ஆளுமைகள்

ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆல்ஃபிரட் பி.ஸோலன். அந்த 33 வயது இளைஞருக்குக் கடிதம் எழுதி அழைத்தார். அந்த மாபெரும் நிறுவனத்தில், விரும்பிய இடத்தில் எல்லாம், புகுந்து புறப்படுகிற உரிமை அவருக்குத் தரப்பட்டிருந்தது. அப்போது ஜெனரல் மோட்டர்ஸ்சின் நிறுவன செயல்பாடுகளை ஆராய்ந்து டிரக்கர் எழுதிய புத்தகம் பெரும்புகழ் பெற்றது.

நிர்வாகவியல் என்னும் துறை உருவாகத் தொடங்கிய காலத்திலிருந்தே அதில் தன் எழுத்துக்களில் முத்திரை பதித்ததால் பீட்டர் டிரக்கருக்கு இந்த அங்கீகாரம்.

1909ல் வியன்னாவில் பிறந்தவர் பீட்டர் டிரக்கர். அவரது தந்தை அரசு அலுவலர். அவருடைய அன்னை, அப்போது மருத்துவ மாணவியாக இருந்தார். ஃபிராய்ட் போன்றவர்களை மாமா என்றழைத்து மடியிலேறி விளையாடும் அளவு குடும்ப நண்பர்கள்.

பெற்றோர் விரும்பியபடி சட்டம் படித்த பீட்டர் டிரக்கர், தினம்தினம் நடக்கும் விஷயங்களில் காட்டிய ஈடுபாடு காரணமாக பத்திரிகையாளர் ஆனார்.

எழுத்திலும் பேச்சிலும், முளைக்கும் பருவத்திலேயே முன்னேற்றம் காட்டிய டிரக்கர், 90 வது வயதிலும் பரபரப்பான எழுத்தாளராக இருந்தார். 1973ல் டோரிஸ் என்ற எழுத்தாளரை மணந்தார்.

ஒரு நிறுவனம் ஏதாவதொரு கோட்பாட்டின் அடிப்படையில்தான் உருவாக முடியும் என்பது டிரக்கர் வகுத்த சித்தாந்தம். ஒரு நிறுவனம் வெற்றிபெறவேண்டுமானால், அந்தக் கோட்பாடுகளில் என்னென்ன தேவை?
நிறுவனத்தின் அடிப்படை தகுதிகள், வணிகம் நடத்தும் சூழல், இலட்சியம் போன்றவை எதார்த்தத்துக்குப் பொருந்தி வர வேண்டும்.

- இந்த மூன்று அம்சங்களுமே ஒன்றுக்கொன்று துணையாக இருப்பதும் அவசியம்.

- வணிகத்தின் அத்தனை செயல் முறைகளுமே நிறுவனத்தில் உள்ள அனைவராலும் நன்கு புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

- வணிகத்தின் கோட்பாடு அவ்வப்போது பரிசோதிக்கப்பட வேண்டும். தேவை ஏற்படும் போது உரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
இதற்கு அதிரடியான வழிமுறை ஒன்றை அறிவித்தார் டிரக்கர். ஒவ்வொரு நிறுவனமும், தன்னுடைய தயாரிப்புகளை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்ய வேண்டும். தயாரிப்புகளை மட்டுமல்ல. ஒவ்வொரு சேவையையும், ஒவ்வொரு கொள்கையையும், ஒவ்வொரு செயலையும் மறு ஆய்வு செய்ய வேண்டும். என்ன நடந்தது? எங்கே எப்படி தவறு ஏற்பட்டது? என்றெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். மிகக்குறைவான நேரத்துக்குள் ஒரு நிறுவனம் மூன்று அல்லது நான்கு மடங்குகள் வளர்ந்தால் அந்த நிறுவனம், தன் வளர்ச்சி குறித்து மிகவும் எச்சரிக்கை அடைய வேண்டும் என்கிறார் டிரக்கர். ஜெனரல் மோட்டர்ஸின் அபாயகரமான அறிகுறியாக பீட்டர் டிரக்கர் அதைத்தான் குறிப்பிட்டார். எதிர்பாராத வெற்றி, எதிர்பாராத தோல்வி, இரண்டுமே விஷயங்கள் உங்களை மீறி நடப்பதை வெளிப்படுத்தும் கருவிகள் என்பதை வலியுறுத்திக் கொண்டே இருப்பார் டிரக்கர். ஒரு நிர்வாகியின் முக்கியக் கடமைகள் என்று ஐந்து அம்சங்களை விளக்குகிறார் டிரக்கர்.

- நோக்கங்களை வகுப்பது நிர்வாகியின் முதல் வேலை. அவற்றை எப்படி எட்டுவது, எந்த நேரத்துக்குள் எட்டுவது என்பதை வரையறுப்பதோடு, யாரெல்லாம் அதில் சம்பந்தப் பட்டுள்ளார்களோ, அவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அந்த நோக்கங்களை நிர்வாகி விளக்கிச் சொல்ல வேண்டும்.

- வேலைகளை வகுத்தும் பகுத்தும் வழங்குவது நிர்வாகியின் வேலை. வேலைகள் அது தொடர்பான முடிவுகள் ஆகியவற்றை அவரே நிர்ணயிக்கிறார். அதற்கு உரியவர்களைத் தேர்வு செய்து வேலைகளை ஒப்படைக்கிறார்.

- நிர்வாகியின் மூன்றாவது கடமை ஊக்குவிப்பதும் தகவல் தருவதும் ஆகும். சொல், செயல் மற்றும் பரிசுகள் வழியே அனைவருக்கும் உற்சாகமும் நம்பிக்கையும் தருகிறார்.

- நான்காவதாக ஒரு நிர்வாகி, அளவு கோல்களை உருவாக்குகிறார். நிறுவனத்தின் செயல்பாடு, அலுவலர்கள் செயல்திறன் என்று அனைத்தையும் ஆய்வு செய்ய, அளந்து பார்க்க அந்த அளவுகோல்கள் பயன்படுகின்றன. அளவு கோல்கள் கொண்டு அளப்பதுடன் நில்லாமல் அளந்ததன் வழியே அறிந்ததையும் தன் குழுவினருடன் பகிர்ந்து கொண்டு, விவாதிக்க வேண்டும்.

- ஐந்தாவதாக ஒரு நிர்வாகி தனிமனித ஆற்றல்களை மேம்படுத்துகிறார். தன்னுடைய ஆற்றலையும் சேர்த்து!!

இவைதான் டிரக்கர் வகுக்கும் நிர்வாகக் கடமைகள்.

“நிர்வாகவியல்” என்ற துறையையே பீட்டர் டிரக்கர்தான் கண்டுபிடித்தார் என்றொரு நம்பிக்கையும் மேல்நாடுகளில் உண்டு. 1954 நவம்பர் மாதம் ஆறாம் தேதி நிர்வாகவியல், பீட்டர் டிரக்கரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று எழுதுகிறார் ஜேக் பியட்டி. இப்படிச் சொன்னவர், வேறு யாருமில்லை! பீட்டர் டிரக்கர்தான்!! டழ்ஹஸ்ரீற்ண்ள்ங் ர்ச் ஙஹய்ஞ்ங்ம்ங்ய்ற் என்ற புத்தகத்தை நான் வெளியிட்டதன் மூலம், எப்படி நிர்வகிப்பது என்பது எல்லோருக்குமே தெரிய வந்தது.

தன்னைத்தானே சக்தி மிக்கவராக வடிவமைப்பது குறித்தும் முன்னதாகவே முத்திரைச் சிந்தனைகளை வைத்தவர் பீட்டர் டிரக்கர். ஒரு வேலையையோ திட்டத்தையோ மிகச்சிறப்பாக நிறைவேற்றவேண்டுமென்றால், அதற்கு நான்கு சிறப்பம்சங்கள் வேண்டும் என்கிறார் பீட்டர் டிரக்கர்.

- எதையும் எங்கும் கேள்வி கேட்கிற சுதந்திரம்

- பணியில் இடைவிடாத பயிற்சியும் மேம்பாடும்

- நிறுவனத்தின் இலட்சியங்கள் மீதான போதிய அறிவு, நம்பிக்கை.

- திட்டங்களை நடைமுறைப்படுத்தி வெற்றிகளை எட்டும் வல்லமை

ஒரு தயாரிப்பு பற்றிய விமர்சனப் பார்வையை நிறுவனமே துவக்கும்போது, அதனால் பல புதிய வெற்றிகளை உருவாக்க முடியும் என்று நம்பினார் டிரக்கர்.

- இந்தத் தயாரிப்பு அல்லது சேவையின் வளர்ச்சி எத்தனை காலம் இருக்கும்?

- எத்தனை காலங்களுக்கு தன்னை சந்தையில் அது தக்க வைக்கும்?

- அதற்கான நிலை மாற்றங்கள் எப்போது வரும்?

- முழுமையாக மாற்றத்திற்கு தயாரிப்பு எப்போது தயாராக வேண்டும்?

எழுபது வருட எழுத்துலக வாழ்க்கையில் 30 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ள பீட்டர் டிரக்கர், நிர்வாகவியல், சமூக – பொருளாதார – அரசியல் ஆய்வு, பொதுச்சிந்தனைகள் என்று மூன்று தளங்களில் எழுதி வந்தார்.

கல்லூரி விரிவுரையாளராகவும், தன் முனைப்புப் பேச்சாளராகவும் இருந்த டிரக்கர், ஜப்பானிய தொழில்நுட்பத்தை முதன் முதலில் அடையாளம் கண்டு எச்சரித்தவர்களில் முதன்மையானவர்.

அதே போல, பீட்டர் டிரக்கரின் நிர்வாகவியல் சிந்தனைகளை அடையாளம் கண்டு, அவரது வழிகாட்டுதல்களை புத்தகங்களிலிருந்து பெற்றுக் கொண்ட முதல் அயல்நாடு ஜப்பான்!!

எளிய வாழ்க்கை வாழ்ந்தார் டிரக்கர். அவருக்கு உதவியாளர் கிடையாது. தன்னுடைய கடிதங்களை தானே தட்டச்சுவார். வயது முதிர முதிர வீட்டிலேயே இருக்க விரும்பினார் டிரக்கர்.

விஞ்ஞானத் தொழில்நுட்பம், அவர் வீட்டுக்குள் புகுந்து அவர் பேசுவதை உலகெங்கும் பல சர்வதேசம் கருத்தரங்குகளில் ஒளிபரப்பியது.

இத்தனை ஆண்டுகள் கழித்தும் நிர்வாகவியலில் அம்புப்படுக்கையில் படுக்காத பீஷ்மராக உலகம் அவரை நன்றியுடன் போற்றுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் பிரியத்துக்குரிய பிதாமகராய் வாழ்ந்தவர்தான்… பீட்டர் டிரக்கர்!!

No comments:

Post a Comment