Wednesday, April 24, 2013

மாற்றங்களின் பலம் மகத்தானது

சாதாரண மனிதர்களுக்கும் சாதனை மனிதர்களுக்குமான வேறுபாடுகளைப் பலரும் பலவிதமாகப் பட்டியலிடுவார்கள். அவற்றில் முக்கியமான ஒன்று உண்டு. நாளை செய்ய வேண்டியதை நேற்றே செய்து முடித்தவர்கள் சாதனையாளர்கள். நான்கு நாட்களுக்கு முன்னர் செய்திருக்க வேண்டியதை இன்னும் செய்யாதவர்கள் சாதாரண மனிதர்கள்.

ஒரு கட்டிடத்தை உருவாக்கியவர்கள் காலத்துக்கேற்ற மாற்றங்களை அவ்வப்போது செய்து வருவதன் மூலம், நிகழ்காலத்துக்கு உகந்த தன்மையை அந்தக் கட்டிடத்துக்குத் தருகிறார்கள்.

முழுக்க முழுக்க அந்த உரிமையாளர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு காலத்திற்கேற்ற மாற்றங்கள் தேவையென்றால், பலருடன் சம்பந்தப்பட்ட தொழிலிலும் வணிகத்திலும் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும்.

நகர்த்தமுடியாத தடைகள் தொழிலிலோ பணியிலோ ஏற்படுகின்றன என்றால் அதற்கான முக்கியக் காரணங்களில் இரண்டு புதுப்பிக்காததும் புதுமை செய்யாததும்தான்.

நிகழ்கால நீரோட்டத்தின் மாற்றங்களை நுட்பமாக கவனிப்பவர்களால் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்று நிச்சயமாகத் தெரியும்.
மரத்தின்மேல் அமர்ந்திருந்த சிறுவனிடம் ஒரு பாட்டி பழம் பறித்துப் போடச் சொல்வது எந்தக் காலத்திலும் இயல்பாக நடக்கக்கூடிய விஷயம்தான். ஆனால் பழம் கேட்ட பாட்டியிடம், ==சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா++ என்ற கேள்வியை போட்ட இடத்தில்தான் அந்தக் கதை எப்போதைக்குமான புதிய வெளிச்சத்தைப் பெற்றது.

இது நிகழ்ந்த உண்மையா? புராணக் கற்பனையா? என்கிற கேள்வி இங்கே அவசியமில்லை. வழக்கமான கதையாகப் போய்விடாமல் ஒரு வித்தியாசம் விளை விக்கப்பட்டதுதான் மிக நல்ல உத்தியாக உருவானது.

அன்றாட வாழ்க்கை முறையில்கூட மாற்றங்களை மனம் எதிர்பார்க்கிறது. எல்லா விஷயங்களும் எப்போதும் போல் நடக்கிறபோது, அங்கே சலிப்பு தோன்று கிறது. சலிப்பு தோன்றிவிட்டால் சாதாரண மான காரியங்கள்கூட சாத்தியமேயில்லாத விஷயங்களைப் போல் தோன்றுகின்றன.

புதுமைகளை விரும்புகிற மனது தான் புதிது புதிதாக முயற்சிகளை ஏற்படுத்தும். அந்த முயற்சிதான் மனம் ஏற்படுத்திய தடைகளைக் கடக்க உதவும்.
ஒரு தடையைக் கடப்பதற்கான முயற்சிகளை விடவும் முக்கியம், தொடர் முயற்சிகள். தொழிலில் பலபேர் தேங்கி நிற்பதற்கான முக்கியக் காரணம் முயற்சியின்மை அல்ல. தொடர்ந்து முயற்சி செய்யாமைதான் காரணம்.
மனித சமூகம் காடுகளைத் திருத்தி நாடு கண்டது. மலைகளைக் குடைந்து பாதை கண்டது. பூமியைத் திருத்தி பயிர் வகை கண்டது. இடைவிடாமல் செப்பனிட வேண்டும். சீர்ப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமே எல்லா வற்றையும் உருவாக்கித் தந்தது.

1970களில், ரஷ்யாவைச் சேர்ந்த கண் மருத்துவர் ஒருவரை, காலம் புதிய மாற்றங்களுக்கான கருவியாகத் தேர்வு செய்த கதை சுவாரசியமானது. சிறுவன் ஒருவன் கீழே விழுந்து, கண்களில் வெட்டுக் காயத்துடன் வந்தான்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவனின் பார்வைத்திறன் பெருமளவு பாதிக்கப்பட்டது. அந்த ரஷ்ய மருத்துவர் ஆழமாக யோசித்தார். மிகச்சிறிய கூர்க் கருவியால் கார்னியாவைச் சுற்றி சக்கரத்தின் ஆரக்கால்கள் போல் கோடுகள் போட்டு பிசிறுகளை அகற்றுவதென்று முடிவெடுத்தார். இந்த சிகிச்சைக்கு ரேடியல் கரடடாடமி என்று பெயர்.

இதன்மூலம் அந்தச் சிறுவனின் கண்பார்வை மீட்கப்பட்டது. இந்த சிகிச்சையை ரஷ்ய மருத்துவர் உருவாக்கிய அதே நேரத்தில்தான், கம்ப்யூட்டர் சிப்களின் எல்லை களை நுட்பமாக சீர்செய்வதற்காக எக்ஸிமர் லேசர் தொழில் நுட்பத்தை உருவாக்கியது. 1988ல், அமெரிக்க மருத்துவர் ஒருவரின் வேண்டுகோளுக் கிணங்க ஐ.பி.எம்.மின் எக்ஸிமர் லேசர் சிகிச்சையும் ஆர்.கே. முறையும் ஒன்று சேர்ந்து வாஸிக் அறுவை சிகிச்சை முறை உருவாக்கப்பட்டது.

உலகம் முழுவதும் காபி சாப்பிடப் போவது போல் கண்அறுவை சிகிச்சைக்கு உள்ளே போனதும் வெளியே வருகிறார்கள் என்றால், இந்த சிகிச்சை முறையை சீரமைக்கத் தொடர்ந்து முயன்றதுதான் காரணம்.

சின்னஞ்சிறியதாகத் தொழில் தொடங்கி, புதுமைகள் செய்வதில் ஏற்படும் ஆர்வம் காரணமாக சின்னச்சின்ன மாற்றங்களை செய்து கொண்டே வந்து வெற்றிகரமான தொழில் சாம் ராஜ்யங்களை உருவாக்கியவர்கள் நம்நாட்டில் எத்தனையோ பேர்.
திரையரங்கம் ஒன்றில் கீரை வடைக்கும் காபிக்கும் பெரும் பெயர் பெற்று அந்தத் துறையில் சிறிது சிறிதாய் விரிவாக்கம் செய்து வளர்ந்த நிறுவனம்தான் ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரி சங்கர் உணவகங்கள்.

நம்நாட்டில் இன்றுகூட மதியம் மட்டுமே செயல்படுகிற உணவகங்கள் உண்டு. இரவு நேர இட்லிக் கடைகள் உண்டு. பகுதி நேரமாய் பந்தி போடுகிற உணவகங்கள் பல உண்டு.

ஆரம்பத்தில் மேக்டொனால்ட்ஸ் அப்படித் தான் இருந்தது. மதிய உணவுக்கும் இரவு உணவுக்குமான இடமாக மேக்டொனால்ஸ் இருந்து அதன் பெரும்பாலான கிளைகள் பதினோரு மணிக்குமேல்தான் திறக்கும். இப்படியே கதை ஓடிக்கொண்டிருந்த போது பிரான்சைஸி உரிமம் பெற்ற ஒருவர், காலை நேரத்தில் முட்டை சாண்ட்விச் விற்றால் என்ன என்று யோசித்தார்.

அறிமுகப்படுத்திய நாளிலேயே நல்ல வரவேற்பு இருந்தது. மேக்டொனால்ட்ஸ் உரிமையாளர் ரேக் ராக்கிடம் முட்டை சாண்ட்விட்சை ருசிபார்க்கக் கொடுத்தார். அந்த மனிதருக்கு ஒரு விஷயம் தெரியாது. ரேக்ராக், சாண்ட்விச் பிரியர் என்பதுதான் அது. தன்னுடைய கிளைகள் அனைத்திலுமே காலை நேரங்களில் சாண்ட்விச் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்தார். அப்புறம்தான் ரேக்ராக் இன்னொன்றையும் யோசித்தார்.

எந்த நேரங்களில் உணவு விற்பனை செய்வதென்று நாம் ஏதோ முடிவெடுத்து செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதர்களுக்கு எல்லா நேரமும் பசிக்குமே என்று யோசித்தார். மூன்று வேளை உணவு போக, மற்ற நேரங்களில் பிரெஞ்ச் ஃப்ரை, ஸ்நேக் ராப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை வடிவமைத்தார். இதில் அமெரிக்கர்களுக்கு நாம் அண்ணன்கள். கிராமப் புறங்களில் சின்னஞ்சிறிய பெட்டிக்கடைகளில் எப்போதும் எல்லா நேரமும் ஏதாவது கிடைக்கும். அதேநேரம், சில கில்லாடி வாடிக்கையாளர்களும் தாங்கள் அணுகுமுறைகளைப் புதுப்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இனிப்பக உரிமையாளர் ஒருவர் சொன்ன உண்மைச் சம்பவம் இது. கார வகைகளை வாடிக்கையாளர்களுக்கு, ==தின்று பார்க்க++ சாம்பிள் கொடுக்கும் வழக்கம் உண்டு. ஒருவர், கடைக்கு வந்து ஐந்தாறு கார வகைகளை சாம்பிள் வாங்கி, தின்று பார்த்தாராம். முதல் ரவுண்டு முடிந்து இரண்டாவது ரவுண்டும் ஒருவர் ஒருகை பார்த்தாராம். பிறகு எதிரே இருந்த தேநீரகத்துக்குப் போய் ஒரு தேநீர் பருகிவிட்டு நடையைக் கட்டினாராம்.

இதை முதன்முதலாகப் பார்த்த உரிமையாளர், ஊழியரை விசாரிக்க ஊழியர் பவ்யமாக சொன்னாராம். ==இவரு தெனமும் வருவாருண்ணே! நீங்கதானே எப்ப யார் கேட்டாலும் சாம்பிள் தரச் சொல்லியிருக்கீங்க! அதனால அவர் கேட்டுகிட்டே இருந்தாலும் நாங்க கொடுத்துகிட்டே இருக்கோம்!++

மாற்றம் வந்தால் ஏற்றம் வரும்
ஏற்றமே வெற்றியைத் தரும்.

No comments:

Post a Comment