கணியன் பூங்குன்றனார் என்ற சங்கப் புலவரின் பாடல் வரி ஒன்று, அனேகமாக எல்லாத் தமிழருக்கும் தெரிந்திருக்கும். ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்…” என்பதே அவ்வரி. சிலர், இந்த வரியை, ‘யாதும் ஊரே; யாவரும் கேளீர்…’ என்று, தவறாகப் புரிந்து கொள்ளலும் உண்டு.
இந்த வரியுடன் தொடங்கும் பாடலின் இரண்டாம் வரி, “தீதும் நன்றும் பிறர் தர வாரா…” என்பது. அடிப்படையில் ஊழின் வலிமையைக் கூறும் பாடல் இது என்றாலும் பாடலில் உள்ள ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா…’ என்னும் வரி, ‘முயற்சியால் எதனையும் சாதிக்க இயலும்…’ என்கிற விதிக்கொள்கைக்கு நேர் எதிரான கருத்தினை வலியுறுத்தும்.
எந்தச் சூழலிலும், மனம் தளராத முயற்சியுடன் செயல்படும் எவரும், வெற்றியின் சுவையை ருசிக்காமல் போவதில்லை என்பதை நமது பழைய இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன.
வள்ளுவன் ஊழ் என்பதனை வலியுறுத்திப் பேசவே செய்கிறான். ‘ஊழிற் பெருவலி யாவுள…?’ என்று கேட்கிறான். ஊழைவிட வலிமையானது ஒன்றில்லை என்று சொல்வதன் வாயிலாக, ‘என்ன நடக்கவேண்டுமென்று விதி இருக்கிறதோ அதுதான் நடக்கும்…’ என்கிற கருத்தினை அழுத்தமாகப் பேசுகிறான்.
ஆனால் அதே வள்ளுவன், ‘ஓய்வின்றி முயன்று உழைப்பவர்கள், ஊழைப் புறமுதுகிட வைப்பார்கள்’ என்றும் பேசுகிறான்.
‘உனக்கு இதுதான் நடக்கும் என்று இறைவன் வகுத்துள்ளான்; அதை மீறி உன்னால் எதையும் அனுபவத்து விட முடியாது…’ என்று சொல்லும் வள்ளுவனே,
‘தெய்வத்தால் ஆகாதெனினும், முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்’
என்றும் எழுதுகிறான். இவை ஒன்றுக் கொன்று முரண்பட்டக் கருத்துக்களும் அல்ல. வள்ளுவன் தெய்வ நம்பிக்கைக்கு எதிரான கருத்தைக் கூறவும் இல்லை.
ஒரு மருந்துக்கடையில், எல்லா நோய் களுக்கும் மருந்து இருக்கும். உயர் ரத்த அழுத்தத்திற்கும் மருந்து இருக்கும். குறைந்த ரத்த அழுத்தத்திற்கும் மருந்து இருக்கும். மலச் சிக்கலுக்கும் மருந்து இருக்கும்; வயிற்றுப் போக்கை நிறுத்தவும் மருந்து இருக்கும். நமது நோய்க்குத் தகுந்த மருந்தைத்தான் நாம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
வள்ளுவன் திறந்து வைத்திருப்பதும் மருந்துக்கடைதான். ‘நான்’, ‘எனது’, ‘என்னால்தான் அனைத்தும் செய்ய முடியும்’… என்ற எண்ணங் களுடன் மண்டை வீங்கி உள்ளவர்களுக்கு, ‘ரொம்ப ஆடாதே! உன் கையில் ஒன்றுமில்லை… ஊழ்தான் அனைத்தையும் நிர்ணயிக்கும்’ என்ற மருந்தைத் தருகிறான் வள்ளுவன்.
அச்சத்தாலோ, தயக்கத்தாலோ, தாழ்வு மனப்பான்மையில் ஆழ்ந்து கிடப்பவருக்கு, ‘தெய்வத்தை வேண்டி நிற்பதால் நடக்காத செயல்கள்கூட, முயற்சியினால் நிறைவேறும்…’ என்னும் நம்பிக்கை மருந்தினைத் தருகிறான்.
சரியான காலத்தைத் தேர்ந்தெடுத்து, மிகச்சரியாகத் திட்டமிட்டு, சரியான துணையுடன் இணைந்து, சோர்வின்றி உழைப்பவர் எவரும் தோல்வி அடைவதே இல்லை என்பதுதான் நாம் உணர வேண்டிய செய்தி.
முயன்று வெற்றி பெறாதவர் எவருமில்லை என்பதற்கு, அவ்வை ஓர் அழகிய உதாரணம் சொல்கிறாள்.
‘………………….. நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்கு விடாப் பாறை, பசு மரத்தின்
வேருக்கு நெக்கு விடும்’.
மிக உறுதியாகக் கட்டப்பட்டக் கட்டிடங்களில்கூட நீங்கள் சின்னச் செடிகளைப் பார்த்திருக்கலாம். சற்றுப் பராமரிக்காமல் விட்டிருந்தால், ஏதோ ஓரிடத்தில் வேர்விட்டு, செடி ஒன்று தலைகாட்டிக் கொண்டிருக்கும். விளைநிலமில்லாத, மிகக்கடினமான பாறைகளைப் பிறந்து கொண்டும் சிறுசெடிகள் எட்டிப்பார்க்கும். ‘இரும்புக் கடப்பாரையால் குத்தினாலும் துளை விடாதப் பாறை, சின்னஞ்சிறிய செடியின் வேருக்கு வழி விடும்…’ என்று அவ்வை சொல்வது சூழலைக் காரணம் காட்டி சலித்துக் கொள்ளாமல் உழைப்பவர் வாழ்வில் வெல்வது உறுதி என்னும் செய்தியை நமக்குத் தருகிறது.
இதுவரை சிறு வெற்றியைக்கூட வாழ்வில் நாம் சந்திக்கவில்லையென்றால் கோளாறு நம்மிடம்தான் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
நம்மிடம் உள்ள பலவீனங்களை இனம் கண்டு கொள்வதும், அவற்றை நீக்க வேண்டும் என்று மனத்தில் உறுதி பூணுவதும், அந்த உறுதியை நிறைவேற்ற ஒவ்வொரு கணமும் முயல்வதும்தான் வெற்றியின் வாசலுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
திரிகடுகம் என்ற பழந்தமிழ் இலக்கியம், நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடிய, ஓர் அசைவ உதாரணத்தைச் சொல்கிறது. நெய்யில் வெந்த மாமிசம் மணத்துடனும் சுவையானதாகவும் இருக்கும் என்பதனை அசைவப் பிரியர்கள் அனைவரும் அறிவார்கள். ‘இந்த நெய்யின் மூலத்தை எண்ணிப்பார்…’ என்கிறது திரிகடுகம்.
கால்நடைகள் பால் தருகின்றன. பால் தயிராகிறது; தயிர் மோராகிறது; மோர் வெண்ணையாகிறது; வெண்ணை நெய்யாகிறது. நெய்யைத் தருவன கால்நடைகள்தான்.
அசைவம் தந்த நெய்யில் அவற்றின் மாமிசமே வெந்து கொண்டிருப்பதைப் போன்றுதான் பலர், தங்கள் சிந்தனைகளில், செயல்களில் தோன்றும் பலவீனங்களால் அழிகிறார்கள்! பாடலைப் பாருங்கள்.
‘அச்சம் அலைகடலின் தோன்றலும், ஆர்வுற்ற
விட்டகல இல்லாத வேட்கையும் – கட்டிய
மெய்ந்நிலை காணா வெகுளியும், இம்மூன்றும்
தம்நெய்யில் தாம் பொரியுமாறு’.
அடங்காமல் பொங்கி வரும் அச்சமும், ‘இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது’ என்று எதன் மேலோ வைக்கும் வெறித்தனமான ஆசையும், உண்மையை சிந்திக்கவிடாமல் கண்ணை மறைக்கும் கோபமும், ஒரு மனிதனின் வீழ்ச்சிக்குக் காரணமாகி விடுகின்றன.
இப்படிப் பட்ட குறைகள் ஏதும் தன்னிடம் உள்ளனவா என்று அகழ்ந்து ஆராய்ந்து, அவற்றில் இருந்து மீள்பவரே சாதனை படைக்கிறார்கள். ‘உன் வெற்றி உன் கையில்’ என்று சொல்லப்படுவதன் காரணம் அதுதான்.
நமது நோயை நாம் அறிந்து, அதற்கான மருந்தையும் நாமே தேடிக் கொள்ளவேண்டுமே தவிர, ‘எனக்குத் துணையாக யார் இருக்கிறார்கள்..?’ என்று புலம்பிப் பயனில்லை. ஒருவரின் அகநோய் களுக்கும், பலவீனங்களுக்கும் இன்னொருவர் காரணமாகவும் முடியாது; மருத்துவராகவும் முடியாது. உனது நோய்களுக்கு நீதான் மருத்துவனாக இருக்க முடியும் என்று, பழமொழி நானூறு என்னும் நமது இலக்கியம் பேசுகிறது.
‘இது எனது விதி; எனது தலையில் இப்படித்தான் என்று எழுதப்பட்டுவிட்டது. அதை யாரால் மாற்றமுடியும்?’ என்ற எண்ணத்தினை நமது முன்னோர்கள் ஏற்றுக் கொண்டதில்லை.
‘முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்..?’
என்று பழமொழி நானூறின் ஒரு பாடல் கேட்கிறது. இப்படிக் கேட்பதுடன் நிற்கவில்லை! “தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் நீ தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தால், உன் தலையில் எழுதியிருப்பதாக நீ எண்ணிக்கொண்டி ருக்கிறாயே ஒருவனை, அவனே, ‘அடடா! இவ்வளவு தொடர் முயற்சிகள் செய்கிறானே… இவன் வெற்றி பெற்றாக வேண்டுமே… நாம்தான் இவன் தலையில் பழுதாக எழுதிவிட்டோம்; எழுதியிருப்பதை நாம் மாற்றி எழுத வேண்டும்…’ என்று எண்ணுவான்” என்றும் ஊக்கம் தருகிறது.
வெற்றி என்பது அடுத்தவர் வந்து தருவதல்ல. அப்படித் தந்தாலும் அது வெற்றியாக இருக்காது. வெற்றாகத்தான் இருக்கும்.
நமது முயற்சியால் கிடைப்பதே உண்மையான வெற்றி.
No comments:
Post a Comment