தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்றிண்டெழுத்தினால்
ஸ்ரீராமர் அவதாரம் மிகவும் புண்ணியமானது. ராமநாமம் மிகவும் புனிதமானது. இவ்வாறு ஸ்ரீராம நாமத்திற்கு மகிமையும், சக்தியும் இருப்பதால் ஸ்ரீராமாயணத்தை அனுதினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.
வால்மீகி மகரிஷியால் எழுதப்பட்ட இதிகாச ரத்ன ராமாயணத்தை தினந்தோறும் பாராயணம் செய்வோருக்கு ஆயுள், ஆரோக்கியம், சந்தானம், செல்வம் போன்ற அஷ்ட ஐசுவரியங்களும் தானாகவே சித்திக்கும். ஸ்ரீராம மந்திரத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை. "ராம் ராம்'' என்று உச்சரித்தால் அங்கே ராமர் எழுந்தருளி விடுவார்.
ராமாயணம் படிக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் அருவமாக எழுந்தருளுவார் என்பது ஐதீகம். இதனால்தான் ராமாயண காலசேட்ப இறுதியில் ஆஞ்சநேய உற்சவம் செய்து பூர்த்தி செய்வது சம்பிரதாயம். ஸ்ரீமந்நாராயணனின் அவதாரங்களில் ஸ்ரீராமாவதாரம் மிகவும் ஒப்பற்ற வைபவங்கள் மிக்கதாகும்.
ராமபிரான் சித்திரை மாதத்தில் அவதரித்தார் என்று கூறப்பட்டாலும், பெரும்பாலும் பங்குனி மாத வளர்பிறை நவமி திதியிலேயே ராமநவமி கொண்டாடபப்டுகிறது. அஷ்டமி, நவமி ஆகிய இரு திதி தேவதைகளும் தங்களை கெட்ட திதிகளாக எல்லாரும் எண்ணுவதாக மகாவிஷ்ணுவிடம் கூறி வருதப்பட்டன.
அவர்கள் மீது கருணைகொண்டு நவமி திதியில் ராமராகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணராகவும் அவதரித்து திதி தேவதைகளின் மனக்குறையைப் போக்கினார் மகாவிஷ்ணு. முக்தி தரும் ஏழு தலங்களில் முதன்மையாகச் சொல்லப்படுவது அயோத்தி. சரயூ நதிக்கரையில் அமைந்த மீன் வடிவமுள்ள இந்த நகரில், இஷ்வாகு குலத்தில் 65-வது மன்னனாக அவதரித்தவர் ராமபிரான். தசரதனின் தாத்தாவின் பெயர் ரகு.
இவர் விஸ்வஜித் யாகம் நடத்தி தனது செல்வங்களையெல்லாம் தானமாக வழங்கினார். அதனால் ராமரின் வம்சம் ரகு வம்சம் என்றும் போற்றப்படும். ராமநவமியன்று ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா' என்று 108 முறை மனமொன்றிச் சொன்னாலே போதும். எல்லையற்ற புண்ணியம் கிட்டும்.
ராமநவமியில் விரதமிருப்பதால் லட்சுமி கடாட்சம், வியாதிகள் அகலுதல், பகைவரும் நண்பராதல், தொலைந்த பொருட்கள் கிடைத்தல், பிள்ளைப்பேறு போன்றவற்றோடு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். `ஓம் நமோ நாராயண' என்னும் எட்டெழுத்து மந்திரத்திலுள்ள `ரா'வும் `ம'வும் இணைந்து உருவானதே `ராம' எனும் மந்திரம்.
இது ராமபிரான் பிறப்பதற்கு முன்பே உருவானதாகச் சொல்வார்கள். ராம நாமம் எல்லையற்ற ஆன்ம சக்தியை வழங்கக்கூடியது. `ரா' என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கெல்லாம் வெளியேறி விடுகின்றன என்றும், `ம' என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது அந்தப் பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப்படுவதாகவும் சொல்வர்.
வால்மிகி முனிவர் ராமபிரான் பிறக்கும் முன்பே ராம சரிதத்தை எழுதி விட்டாராம். எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் ஆற்றலை பிரம்ம தேவரிடம் பெற்ற இவர், மகாவிஷ்ணுவைத் தியானித்து அவரது அவதாரத்தை உணர்ந்து எழுதினார் என்பர்.
ஸ்ரீராமநவமி பூஜை செய்வது எப்படி?
ஸ்ரீராமநவமி விழா பல இடங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும் பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற் கொள்வர். பஜனைகள்,ராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர்,சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.ஸ்ரீராம நவமியன்று வீடுகளில் மாவிலை கட்டுவர் மாக்கோலம் போடுவார்கள்.
ராமநவமி அன்று அதிகாலை எழுந்து நீராடி,பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்திற்கு பூச்சூடி, பொட்டு வைத்து பூஜைகள் செய்யப்படும்.நைவேத்தியங்கள் படைத்து ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும்.
ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடம் இருந்த போதும், ராமர்14 ஆண்டுகள் வன வாசம் இருந்த போதும், நீர் மோரையும், பானகத்தையும் தாக சாந்தியாக அருந்தினாராம். அதனால் ராம நவமியில், ராமனுக்கு நீர் மோர், பானகம் படைப்பது முக்கியம்.
படைத்து, பூஜை கைங்கரியங்கள் செய்வதோடு, ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதும்,ராம நாமத்தை பிறர் சொல்லக்கேட்பதும்,ஸ்ரீராமபிரானுடைய திருநாமத்தை எழுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும், ராமாயணம் படிக்க இயலாதவர்கள், ஸ்ரீராம....
ஸ்ரீராம என்று சொன்னாலே ராமாயணம் படித்த புண்ணியம் கிடைக்கும்.ஸ்ரீராம நவமியை, வட மாநிலங்களில் பத்து நாள் கொண்டாடி மகிழ்கின்றனர். தென் பகுதியிலும் வைணவ ஷேத்திரங்களில் உற்சவங்களோடு ராமநவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீராம நவமிக்கு பத்து தினங்களுக்கு முன்பே, ராமாயணம் படிக்கத்துவங்கி ஸ்ரீராம நவமி அன்று, ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்துடன் நிறைவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment