Monday, April 29, 2013

சொல்லப்படாத சவாலை வெல்லத் தெரிகிறதா?


அறிவின் எல்லையைத்
தாண்டிய ஞானம்
இருந்தால் மட்டுமே
அறிவு பயன்படுகிறது.

இந்தியத் தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவராக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ம.கிருஷ்ணன், செப்டம்பர் 13ல் பொறுப்பேற்றார். சங்கத்தின் புதிய கொடியை அறிமுகம் செய்து தலைமைப் பொறுப்பினை ஏற்றார்.


தலைமை விருந்தினராக, கோவை பாரதீய வித்யாபவன் தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர், கௌரவ விருந்தினராக திரு. விஜய் மேனன் ஆகியோர் பங்கேற்றனர்.

திரு. விஜய் மேனன் நிகழ்த்திய அறிவின் அலையடிக்கும் ஊக்க உரையின் சில பகுதிகள், இங்கே உங்களுக்காக… அதற்குமுன் விஜய்மேனன் குறித்து சிறியதோர் அறிமுகம்!

முப்பதுகளில் இருக்கும் விஜய் மேனன், சுயமுன்னேற்றப் பயிற்சிகளில் கொடிகட்டிப் பறக்கிறார். கேரள மாநிலத்தில் உள்ள நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற நடுவர்களுக்குப் பயிற்சி தருகிறார்.

நாட்டிலுள்ள அனைத்து ஐ.ஐ.எம் மாணவர்களில் தலைசிறந்தவர்கள் பங்கேற்கும் அஸ்வமேதா என்னும் பயிலரங்கை ஐந்தாண்டுகளாய் நடத்துகிறார்.

650 சிபிஎஸ்இ பள்ளிகளின் முதல்வர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார்.

இவைதவிர பல முன்னணி அரசு – தனியார் நிறுவனங்களின் பயிற்சியாளர் இவர்.

ஓர் ஆசிரியர் மாணவனிடம் கேட்டார். ரோஜாவைப் பறித்ததில் இருந்தே அது வாடத் தொடங்குகிறதே, ஏன்? பறித்ததால் வாடுகிறது என்று பதில் வந்தது. ஆசிரியர் சொன்னார், தர்க்க ரீதியாய் இது சரியான பதில்தான். உண்மையான காரணம் என்ன தெரியுமா? அதன் வேரிலிருந்து பிரித்தெடுத்ததால் அது வாடுகிறது. தன்னுடைய வேருடன் தொடர்பில்லாத எதுவுமே வாடத் தொடங்கிவிடும்.

என் பயணம் எதற்காக? என் வாழ்வின் நோக்கம் என்ன? என்பதெல்லாம் வேரைத் தேடும் கேள்விகள். இந்த உலகம் அறிவைத் தேடுவதில் ஆர்வம் காட்டுகிறது. அறிவு மிகமிக அவசியம். ஆனாலும், அறிவின் எல்லையைத் தாண்டிய ஞானம் இருந்தால் மட்டுமே அறிவு பயன்படுகிறது.

வேரைத் தேடும் கேள்விகள்தான் வாழ்வை உயர்த்தும். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் சுவாமி விவேகானந்தர் பேலூர் மடத்தில், இராமகிருஷ்ணர் பெயரிலான இயக்கத்தைத் தோற்றுவிக்க முற்பட்டார். அப்போது சுவாமி யோகானந்தர் அவரிடம் கடுமையாகப் பேசினார். “இராமகிருஷ்ணர் இதையா விரும்பினார்? ஆன்மீகப் பயணத்தில் போகச் சொன்னாரா, சமூகம் பற்றிக் கவலைப்பட்டு செயல்படச் சொன்னாரா?” என்று கேட்டார்.

அதற்கு விவேகானந்தரின் பதில் வெடித்தெழுந்து கிளம்பியது. “இப்படிச் சிந்திப்பவர்கள் இராமகிருஷ்ணரை உணரவில்லை என்று அர்த்தம். நான் சில நாட்களில் என் கௌபீனத்தைக் கட்டுவதற்குக் கயிறில்லாமல் தவித்திருக்கிறேன். அடுத்த வேலை உணவுக்கு உத்திரவாதமில்லாமல் மரத்தடிகளில் கிடந்திருக்கிறேன். வறுமை என்னைத் தாக்கிய போதெல்லாம், “நான் தோற்கமாட்டேன்” என்ற உறுதி எனக்குள் உரமேறிக் கிடந்திருக்கிறது.

அதேநேரம், சிகாகோவில் உலகின் மிக உயர்ந்த மனிதர்கள், என் உடையைத் தொட்டுப் பார்க்க முண்டியடித்தனர். வாழ்வின் இருவேறு நிலைகளிலும் என் மனம் தடுமாறாமல் சமமாக இருந்தது. சமூகப் பணிகள் வழியிலான மனத் தூய்மை பரமஹம்சரின் ஆன்மீகம்” என்று பதில் சொன்னார் விவேகானந்தர்.

வாழ்க்கை என்பது மிகப்பெரிய தாகமாக இருக்க வேண்டும். வெற்றி, புகழ், செல்வம், பிரபல்யம் போன்ற இலக்குகளைத் தாண்டிய தாகமாக இருக்க வேண்டும். எல்லைகள் தாண்டிய செயலூக்கம் அந்தத் தாகத்தின் மூலமே சாத்தியம்.

சித்தார்த்தர், அந்த நள்ளிரவில் அரண்மனையை விட்டுச் செல்ல விரும்பிய போது அந்தப்புரத்தில் உறங்கிக் கொண்டிருந்த யசோதாவின் முகத்தை வந்து ஒரு முறை பார்த்தார். அவ்வளவு அழகான அப்பாவித்தனமான முகத்தைப் பார்த்தவர் கண்களை வலியப் பெயர்த்துக் கொண்டு நடந்தார். மனது கேளாமல் மீண்டும் வந்து பார்த்தார். சில அடிகள் எடுத்து வைத்தவர், மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு மானசீகமாக விடைபெறும்போது சொன்னார், “யசோதா! இதைவிட இன்னும் பெரிய குடும்பத்தைத் தேடிப் போகிறேன்!”

மனிதகுலம் என்னும் மகத்தான குடும்பத்தை விழிப்படையச் செய்ய வேண்டும் என்ற சித்தார்த்தரின் தாகமே அவரை புத்தராக்கியது.

இன்று மனிதர்கள் பலருக்கும் அறிவுச் செல்வம் நிரம்ப இருக்கிறது. ஆனால் அந்த அறிவு, இதயத்துடன் தொடர்பில்லாமல் போய்விட்டது. இந்தியாவின் தலைசிறந்த மேலாண்மை நிறுவனமாகிய ஐஐஎம் சார்பில் 800 நிர்வாகவியல் மாணவர்கள் பங்கேற்ற அஸ்வமேதா என்னும் தலைமைத்துவப் பயிற்சியை நடத்தினேன்.
பல்வேறு சுற்றுகளில் போட்டிகள், சோதனைகள் வைக்கப்பட்டு, நிறைவாக 800 பேர்களிலிருந்து 8 பேர் மட்டும் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அந்த எட்டுப்பேரும், இறுதிச் சுற்று நாளில் காலை எட்டு மணிக்கு வருமாறு பணிக்கப் பட்டார்கள். அவர்களை ஒரு பேருந்தில் ஏற்றி இந்தூர் அருகிலுள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமத்திற்கு அழைத்துச் சென்றோம். எட்டுப் பேரிடமும் சொன்னோம், “உங்களுக்குத் தரப்படுவது இரண்டு மணி நேரம்தான். அதற்குள்ளாக இங்கே ஒரு பெரிய வித்தியாசத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். இதுதான் போட்டி” என்று.

ஒருவர் பஞ்சாயத்து போர்டுக்குப் போனார். ஒருவர் சுகாதார மையத்துக்குப் போனார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையைத் தேடி நடந்தார்கள்.

கர்நாடகாவிலிருந்து வந்திருந்த ஒரேயொரு மாணவர் மட்டும், சிறிதுநேரம் கண்மூடி யோசித்தார். பிறகு எங்களைப் பார்த்து, இந்த கிராமத்தின் வரைபடம் வேண்டும் என்று கேட்டார். வரைபடத்தைப் பார்த்து அந்த கிராமத்தின் மிகச்சிறிய தொடக்கப் பள்ளியைத் தேடிப் போனார். அங்கிருந்த தலைமையாசிரியையிடம், “இந்த கிராமத்தின் முக்கியப் பிரச்சினை என்ன?” என்று கேட்டார்.

“ஒவ்வொரு வீட்டிலும் யாரேனும் ஒருவர், டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் ஒன்று பாதிக்கப்படுகிறார்கள். அல்லது மரணமடை கிறார்கள். சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்தினால் பெரிய மாற்றங்கள் ஏற்படும்” என்று அவர் சொன்னார்.

அங்கிருந்த குழந்தைகளைத் திரட்டி, சுகாதாரம் பற்றி அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாகப் பேசினார். வெளியே பார்த்தால் ஓரிடத்தில் மலைபோல் குப்பை குவிந்திருந்தது. ஊர்க்காரர்கள் பொதுவாக குப்பைகளைக் கொட்டுமிடம். அதுதான் நோய்கள் உற்பத்தி ஆகுமிடம். அந்த இடத்தை தூய்மை செய்ய பள்ளி மாணவர்களைத் தூண்டினார் அந்த இளைஞர். மாணவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, தானே களத்தில் இறங்கினார்.
தன் வகுப்பின் உடைந்த ஜன்னல் வழியே இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மூன்றாம் வகுப்பு சிறுமி ஓடோடி வந்து உதவி அங்கு நின்று கொண்டிருந்த அத்தனை பள்ளி மாணவர்களும் களத்தில் இறங்கினார்கள்.

இருபது நிமிடங்களுக்குள் அந்த இடமே தூய்மையாகிவிட்டது. செய்தது வரை சரி. திட்டம் பிரமாதம். செயல்திறன் அற்புதம். ஆனால் இங்கே நீ ஏற்படுத்தியுள்ள தீர்வு நிரந்தரமானதா? நாளை மறுபடி குப்பை கொட்டத் தொடங்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் என்று அந்த மாணவரைக் கேட்டேன்.

இது நிரந்தரமான தீர்வல்ல என்பதை அவரும் உணர்ந்தார். சிறிது நேரம் மறுபடியும் கண்களை மூடி யோசித்தார். ஒரு பெரிய சுத்தியலைக் கேட்டார். அருகிலிருந்து பாறையை செதுக்கத் தொடங்கினார். சிறிது நேரத்தில் அந்தப் பாறை ஒரு பெரிய சிவலிங்கத்தின் வடிவமெடுத்தது. குப்பை கொட்டப்பட்ட இடத்தில் அந்தப் பாறையை நிலைநிறுத்தினார்.

விஷயம் என்னவென்றால், அந்த கிராமமே காசி விசுவநாதர்பால் பக்தி கொண்ட கிராமம். “இனி குப்பை போடுவதென்றால் இவரைத் தாண்டிப் போட வேண்டும்” என்று அந்த இளைஞர் அறிவித்தபோது அங்கிருந்த அந்தத் தலைமையாசிரியை பள்ளிச் சிறுமிபோல் துள்ளிக் குதித்தார். ஒரு பிரச்சினைக்குத் தீர்வு பிறந்து விட்டது என்ற பெருமிதம் அவருக்கு. அந்த இளைஞருக்கு தனக்கு சொல்லப்படாத சவாலை வெல்லத் தெரிந்திருக்கிறது. எந்த ஒன்றும் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்வதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும்.

அந்தத் தீர்வைக் காண்பவர்களே வெற்றியாளர்கள். அவர்கள் படைப்பதே புதிய உலகம்” என்றார் விஜய்மேனன்.

No comments:

Post a Comment