Thursday, April 18, 2013

உங்கள் விசுவரூபம் எப்போது?

உங்கள் குழந்தை, பேப்பரில் எதையோ ஆர்வமாக வரைந்து கொண்டிருக்கிறது. சில விநாடிகள் உங்களையும் மறந்து ரசிக்கிறீர்கள். உடனே முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, சரி! சரி! வரைஞ்சது போதும்! பரிட்சை வருது! படிக்கற வழியைப் பாரு என்று சிடுசிடுக்கிறீர்கள். ஏனெனில், உங்கள் மனதில் பதிவாகியிருக்கிற முதல் விஷயம், உங்கள் குழந்தை மாணவ நிலையில் இருப்பது மட்டும்தான். அதைக் கடந்து அந்தக் குழந்தைக்குள் ஒளிந்திருக்கிற திறமைகள், அதன் தேர்வுத்தாள்களைத் தின்றுவிடுமோ என்று கருதுகிறீர்கள்.

நண்பருடன் ஓர் இசை நிகழ்ச்சிக்குப் போகிறீர்கள். நீண்ட நாட்களாய் சந்திக்காத உறவினர் ஒருவர் அங்கே இருக்கிறார். அவர் உங்களிடம் பேசுவதைப் போலவே உங்கள் நண்பரைப் பற்றித் தெரிந்துகொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்.இவர் ராகவன்! கலெக்டர் ஆபீசிலே வேலை பார்க்கிறார்என்று ஒற்றை வரியில் முடித்துவிட்டு வேறு விஷயங்களுக்குத் தாவுகிறீர்கள். ராகவன் நல்ல இசை ரசிகர் என்பதையோ, கிடைத்தற்கரிய பழைய இசைத் தட்டுக்கள் அவரிடம் உள்ளன என்பதையோ சொல்லத் தோன்றவில்லை. ஏனெனில், உங்கள் மனதில் பதிவாகியிருக்கிற முதல் விஷயம், அவர் கலெக்டரேட்டில் பணிபுரிகிறார் என்பதுதான்.

உங்களைப் பற்றிய உங்கள் அறிமுகம் கூட, ஒருவரியில் முடிந்து போகிற விஷயமாகவே இருக்கிறது. ஏன் தெரியுமா? நம்மைப் பொறுத்தவரை, நம் குழந்தை, நம் நண்பர், நாம் எல்லாமே ஏதோ ஒரேயொரு விஷயத்திற்காக வாழ்பவர்கள் என்கிற எண்ணம் பதிவாகி இருக்கிறது.

உங்கள் வயது நாற்பது என்று வைத்துக் கொள்ளுங்கள். 18-20 ஆண்டு காலக் கல்வி – 12 வருடப் பணி வாழ்க்கை – நண்பர்கள், உறவினர்கள், சமூகம் என்று பல தரப்பட்ட பழக்கங்களில் கிடைத்துள்ள அனுபவம் -உங்களிடம் உள்ள தனித் திறமைகள் – இவற்றின் கலவைதான் நீங்கள்!

உங்களைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் ஒரேயொரு வரியுடன் நின்று விடுவது, உங்களுக்கு நீங்களே செய்கிற அநியாயம்.

அமெரிக்காவில், மனிதர்கள் ஈடுபடக் கூடிய துறைகள் என்று மொத்தம் 22,000 துறைகளைப் பட்டியல் போட்டிருக்கிறார்கள். ஒரு தனி மனிதர், அவற்றில் குறைந்தது 100 துறைகள் பற்றியாவது கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருப்பார் என்று சொல்கிறார்கள்.எனவே, ஒரு தனிமனிதன் பல்வேறு திறமைகளின் தொகுப்பு. விதம் விதமான துறைகள் பற்றிய தகவல்களின் களஞ்சியம்.

இது உங்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, உங்கள் ஆழ்மனதுக்கு மிக நன்றாகத் தெரிகிறது.வழக்கமாகச் செய்கிற வேலையில் திருப்தியின்மை, மனக்குறை, எதையோ இழந்து விட்டது போன்ற சலிப்பு இவையெல்லாம் ஏற்படுகிறதா? இதற்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா? இந்த வேலையை விட இன்னும் சிறப்பான விஷயங்களை உங்களால் செய்ய முடியும் என்பதை உங்கள் ஆழ்மனம் உங்களுக்கு உணர்த்துகிறது. அந்த நினைவூட்டல்தான் திருப்தியின்மையாகவும், சலிப்பாகவும் வெளிப்படுகிறது.ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் என்ன முடியும் என்பதற்கும், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கும் நடுவில் ஓர் இடைவெளி இருக்கிறது.

அந்த இடைவெளியை நிரப்ப, உங்களுக்கு விருப்பமான துறைகளில், வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட வேண்டும்.

ஆனால், பலபேர் இந்த இடைவெளியை விழிப்புணர்வோடு புரிந்து கொள்வதில்லை. சலிப்பும் திருப்தியின்மையும் தங்களை நன்கு செயல்படத் தூண்டுபவை என்பது புரியாமல், இந்த இடைவெளியை நிரப்ப மது, போதை என்று பலப்பல விஷயங்களைத் தேடிப் போகிறார்கள்.மகாபலியின் கதையை நாம் மனதில் கொள்ள வேண்டும். வாமன வடிவெடுத்து வந்த விஷ்ணு மூன்றடி மண் கேட்டார். மகாபலி ஒப்புக் கொண்டார். வாமனர் விசுவரூபம் எடுத்தார். மூன்றே அடியில் பிரபஞ்சத்தை அளந்தார்.

வாழ்க்கை என்பது மகாபலிச் சக்கரவர்த்தி போன்றது. நீங்களும் நானும் மூன்றடி மண் கேட்டால், “சரி” என்று சொல்கிறது. அளந்து எடுத்துக் கொள்ளும் முன் நாம்தான் விசுவரூபம் எடுக்க வேண்டும்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? வாமன ரூபத்தில் வந்து, வாமன வடிவத்திலேயே இருந்து நம் மனதை மிகக் குறுகிய எல்லைகளால் அளந்து, வாமனர்களாகவே திரும்பிப் போகிறோம்.வாழ்க்கை, நாம் கேட்டதைத் தரத் தயாராக இருக்கிறது. வாமன உள்ளங்கள் விசுவரூபம் எடுக்கத் தயாரா?

மனிதர்களை, அவர்களது கல்வி – அவர்களது வேலை – போன்ற புற அடையாளங்கள் தாண்டிப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மையும், நம் புற அடையாளங்களைத் தாண்டிப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான், புதிய புதிய விசுவரூபங்களால் வாழ்க்கை புதிதாகும். இப்போது சொல்லுங்கள்… உங்கள் விசுவரூபம் எப்போது?

No comments:

Post a Comment