Thursday, April 18, 2013

ஆளப் பிறந்தவன் நீ!

ஆளுமைத் திறனைப் பயன்படுத்துவதில், நேரம் மிக முக்கியப் பங்கினை வகிக்கிறது. நேரம் நொடிகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஆளுமைத் திறன் பெற விரும்புவோர், ஒவ்வொரு நொடியும் மிகக் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. ஒரு அறையில் பாம்புடன் வாழ நேர்ந்தால் எத்தகைய கவனமுடன்-விழிப்புடன் இருப்போமோ, அத்தகைய கவனமும், விழிப்பும் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தேவையாய் இருக்கிறது.


- ஒரு நொடியில் ஒரு விபத்து நிகழ்ந்து விடுகிறது.
- ஒரு நொடியில் ஒரு தற்கொலை முடிந்து விடுகிறது.
- ஒரு நொடியில் ஒருவரைத் தவறாகப் புரிந்து கொள்கிறோம்.
- ஒரு நொடியில் பால் கிண்ணம் கைதவறி கவிழ்ந்துவிடுகிறது.
- ஒரு நொடியில் பேருந்தைத் தவறவிட்டு விடுகிறோம்
- ஒரு நொடியில் உணர்ச்சிகள் இடம் மாறி விடுகின்றன.

எனவே, ஆளுமைத் திறனை முறையாகப் பயன்படுத்த விழைவோர், ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் இருக்க வேண்டியது மிகமிக அவசியம்.
எவருடைய வேண்டுதலுக்கும், கோரிக்கைக்கும் உடனடியாக பதில் தராதீர்கள். நிதானமாய் இருங்கள். நேரத்தைக் கேட்டுப் பெறுங்கள்.இதுபற்றி நான் உறுதியாகக் கூற இயலாது. தயவு செய்து, யோசிக்க எனக்கு சிறிது அவகாசம் தேவைப்படுகிறது. நான் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்” என்றே பதில் கூறுங்கள். உங்கள் பதிலின் ஒவ்வொரு சொல்லிலும், உங்கள் நிதானம் மிளிரட்டும்.இவ்வாறு நீங்கள் கேட்டுப் பெற்ற நேரம், எடுத்துக் கொண்ட விஷயம் பற்றி ஆழமாகச் சிந்திக்கவும், உண்மையை நன்கு ஆராய்ந்து அறிந்து கொள்ளவும், தேவையான எதிர்வாதங்களைத் தயார் செய்து கொள்ளவும் உதவும்.

எவரேனும் உங்களிடத்தில் மிகத் தீவிரமாய் ஆளுமை செலுத்த முயல்வாரானால், அவருக்கு நீங்கள் அமைதியாய், பணிவாய், பொறுமையாய் சொல்ல ஒரு பதிலுண்டு. அது:

நீங்கள் மிகவும் பதட்டமாய் இருப்பதை என்னால் உணர முடிகிறது. நாம் பிறகு பேசுவோம்

ஆளுமைத் திறன் என்பது மிகுந்த நிதானமுடன் கவனமாய் இயங்குவது.

ஆளுமைத் திறனுக்கு ஓர் அடையாளம்

மகாகவி பாரதியே ஆளுமைத் திறனுக்கு ஓர் அற்புத அடையாளம்.
நமது ஆளுமைத் திறனை வெகுவாகப் பாதிக்கும் ஒன்று ‘அச்சம்’. அச்சம், பயம், துணிவின்மை என்கிற சொற்களால் அறியப்படுகிற ஒரு உணர்வு, நமது ஆளுமைத் திறனை மிக மோசமாகப் பாதிக்கிறது -குறைக்கிறது.

அஞ்சாதீர்கள் – எவருக்கும், எதன் பொருட்டும் அஞ்சாதீர்கள். மனிதர்களாகட்டும், பழக்கங்களாகட்டும் – எதற்கும் அஞ்சாதீர்கள்.அச்சம் என்பது ஒரு மனப் பழக்கம். மிகச் சாதாரணச் செயல் ஒன்றிற்கு, ஏதோ ஒரு தருணத்தில் அஞ்சத் தலைப்படுகிற ஒரு மனிதன், அதையே பழக்கமாக்கிக் கொள்கிறான். இப் பழக்கம் அவன் தொடர்புடைய எல்லாச் செயல்களிலும் வெளிப்படத் துவங்குகிறது. உங்களுக்குள்ளும் இத்தகைய ‘அச்சவுணர்வு’ இருக்கலாம். நன்றாக உங்கள் செயல்களை ஆராய்ந்து பார்த்தால், உங்கள் ஏதேனும் ஒரு செயலுக்கு அடியில் இவ்வச்ச உணர்வு ஒளிந்திருக்கும். மிகக் கவனமாய் இதனைக் கண்டறியுங்கள். செயல் தயக்கம், காலம் தாழ்த்துதல் கூச்சம், எதிராளியின் கண்களைப் பார்த்துப் பேசாமை, சொற்களில் தெளிவின்மை, நா குளறுதல், உச்சரிப்பில் உறுதியின்மை போன்ற செயல்களில் உங்கள் ‘அச்சவுணர்வை’ அறிந்து கொள்ளலாம்.

ஆளுமைத் திறனோடு செயல்பட விரும்புவோர், அச்சவுணர்வைத் தகர்த்தெறிய வேண்டும். மகாகவி பாரதியின் ‘அச்சமில்லை’ என்கிற பாடல் உங்களுக்காக இங்கு தரப்படுகிறது. அச்சவுணர்வை உடைத்தெறிய விரும்புவோர் காலை – மாலை இப்பாடலை தவறாது, மிகுந்த நிதானமுடன், துணிவுடன் உரக்கப் பாடிப் பழகுங்கள்.

சர்வ வல்லமை கொண்ட ஓர் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய், ஒரு சாமான்யக் கவி முழங்கிய கம்பீரக் குரல் இது. உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லிலும் துணிவும், வீரமும், ஆண்மையும் பொங்க உச்சரியுங்கள். உங்கள் மனக் கண்ணில் மகாகவியை உருவகப்படுத்திக் கொண்டு பாடத் துவங்குங்கள்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக வெண்ணிநம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

அச்சம், எல்லாச் செயல்களையும் தள்ளிப் போடத் தூண்டுகிறது. வெற்றியோ தோல்வியோ செயலில் இறங்குங்கள். வெற்றியைக் கொண்டாடுங்கள். தோல்வியை அனுபவமாய் எடுத்துக் கொள்ளுங்கள்.

அச்சம், தோல்வி பற்றி முன்னெச்சரிக்கையைக் கொடுக்கும். முன் முடிவுகளை வாரி வழங்கும். இவை பற்றியெல்லாம் ஆராய்ந்துகொண்டு, காலம் கடத்தாதீர்கள். துணிவே செயல்படத் தூண்டும். துணிவே இயல்பாக, அச்சம் விடைபெறும். ஊக்கமுடன் நீங்கள் செயல்படத் துவங்கும்போது தான், உங்கள் செயல் திறனும், முழு ஆளுமைத் திறனும் வெளிப்படும்.

அச்சத்தின் காரணமாய், செயல்படத் தயங்கி, மூலையில் கிடக்கும் கோழையை விடவும், துணிவுடன் செயல் தொடங்கி, வாழ்க்கைப் போரில், வெற்றி – தோல்வியைச் சந்திக்கத் தயாராகிவிடுகிற செயல்வீரன் ஆயிரம் மடங்கு மேலானவன். அல்லவா!
அச்சம் உதறுங்கள். செயல் துவங்குங்கள். ஆளுமை வளருங்கள்.

ஆளுமைத் திறனை வளர்த்துக்கொள்ள, கட்டாயம் பின்பற்ற வேண்டிய (10) யோசனைகள்:
(1) சரி” என்று பதில் சொல்லும் முன்பாக, எந்தச் செயலுக்கும், அவகாசம் கேளுங்கள். முதலில் அச்செயலை நீங்கள் உண்மையாகவே, உங்கள் முழு மனதோடு செய்ய விரும்புகிறீர்களா? என யோசியுங்கள். உங்கள் மனத் திருப்திக்காக மட்டும் செயல் செய்யுங்கள். வேறு எவரைத் திருப்திப் படுத்தவும் செயல் செய்யாதீர்கள்.
(2) உங்களை நோக்கி வீசப்படும் தீவிரமான வார்த்தைகளை தயவின்றி நிராகரியுங்கள். அத்தகைய தருணங்களில் “நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருக்கும் வேறு ஒரு நல்ல சமயத்தில் இந்த விஷயத்தை விவாதிப்போம்” என்று மிகத் தெளிவாக, நிதானமாகக் கூறுங்கள்.(3) நேர்மையான உங்களின் உள்ளுணர்வுகளை, மிக நேர்மையாக வெளிப்படுத்துங்கள் – அவை கேட்பதற்கு கடினமானவையாய் இருந்தால் கூட. உங்கள் பதில்: “இதைச் சொல்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனாலும்.. என்று உறுதியாகக் கூறுங்கள்.
(4) உங்களை நீங்களே தோல்வியாளராக – பலியாடாக நினைக்கும் மனப்போக்கை மிகுந்த துணிவோடு தகர்த்தெறியுங்கள் அத்தகைய எண்ணத்திற்கு துளியும் இடம் தராதீர்கள். ஆரம்ப கட்டத்தில், இத்தகைய எண்ணங்கள் உங்களையும் மீறி எழுமானால், அவ்வேளைகளில், “என்னை நான் நிச்சயம் மாற்றிக் காட்டுவேன். என்னால் எதையும் சாதிக்க முடியும் என்கிற நேர்மறையான எண்ணங்களை உங்களுக்கு நீங்களே உறுதியுடன் கூறிக்கொள்ளுங்கள்.
(5) உங்கள் எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் ஒருபோதும் மன்னிப்புக் கேட்காதீர்கள். எவரையும் காயப்படுத்தாத, சுயநலமற்ற நல்ல எண்ணங்களை எப்போதும் எண்ணுங்கள். அவற்றை மதியுங்கள். உங்கள் நல்ல எண்ணங்களை, செயல்களை மதிப்பீர்களானால், நிச்சயம் மற்றவர்களும் உங்களை மதிக்கத் துவங்குவார்கள்.
(6) ஆளுமைத் திறன் பெற்றவராய் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள தெரிவு செய்திருக்கும் தேதியை, உங்களுக்கு நீங்களே அறிவியுங்கள். என்ன சோதனை வந்தாலும், உங்கள் முயற்சியிலிருந்து பின்வாங்காதீர்கள்.
(7) தீவிர மனப்போக்குள்ள, சுயநல மனிதர்களிடம் மிகவும் கவனமாக இருங்கள் “நான் என்ன சொல்கிறேன் என்றால்…” என அவர்கள் பேசத் துவங்கும்போதே “தயவு செய்து, எனது அபிப்ராயத்தையும் சற்றுக் கேளுங்கள். நான் கூறி முடிக்கும் வரை பொறுமையாய் கேட்பது நல்லது” என்று உங்கள் வாதங்களை நிதானமுடன், உறுதிபடக் கூறுங்கள்.
(8) உங்களையோ, மற்றவர்களையோ பிறர் குறைகூறிச் செல்ல அனுமதியாதீர்கள். அவ்வாறு “குறை கூறுவதால் எவ்விதப் பயனுமில்லை” என்பதை அவர்களுக்கு நினைவூட்டத் தவறாதீர்கள்.
(9) உங்களை நோக்கிச் செய்யப்படும் கேலி, கிண்டல்களுக்கு ஒருபோதும் எதிர்வினை செய்யாதீர்கள். ஒரு மெல்லிய புன்னகையோடு அவற்றை நிராகரியுங்கள். இத்தகைய கேலியும், கிண்டலும் ஆளுமைத் திறனைச் சரியாகப் புரிந்து கொள்ளாத இதயங்களிலிருந்தே வெகுவாகப் புறப்படும். அத்தகைய சூழலில், உரையாடலை வேறு ஆக்கபூர்வமான விஷயங்களுக்குத் திருப்பிவிடுங்கள்.(10) ‘பழிக்குப் பழி – இரத்தத்திற்கு இரத்தம்’ என்கிற விதமான எவ்வித ஆக்ரோஷ விவாதங்களிலும் மாட்டிக் கொள்ளாதீர்கள். ஆனால், அவற்றைக் கண்டு, அஞ்சி ஒதுங்கி விடாதீர்கள். அத்தகைய நெருக்கடியான சமயங்களில்,சரி, இந்தப் பிரச்சனையை நாம் எவ்வாறு சமாளிக்கப்போகிறோம்?

சரி, இதை மீறி, நாம் எவ்வாறு முன்னேறப் போகிறோம்?

என்பது போன்ற ஆக்கபூர்வமான கேள்விகளை எழுப்புங்கள். அவை பற்றி மற்றவர்களை யோசிக்கச் செய்யுங்கள். அதன் மூலம், உங்கள் ஆளுமைத் திறனைப் பிறர் புரிந்து கொள்ளும் வண்ணம் பெருமிதத்தோடும், அடக்கத்தோடும் வெளிக்காட்டுங்கள்.

No comments:

Post a Comment