மாபெரும் சபையினில் நீ நடந்தால்…
சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம்மீது பிறர் கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்! இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது சில அபிப்பிராயங்களைக் கட்டமைக்கிறது.
நாம் நல்ல மனநிலையில் இருப்பதைப் பார்ப்பவர்கள், இவர் ரொம்ப அன்பானமனுஷன் சார்” என்று முடிவெடுக்கிறார்கள். எதற்கோ, யார் மீதோ அளவு கடந்துகோபப்பட்டதைப் பார்ப்பவர்கள் அய்யோ! சரியான சிடுமூஞ்சி என்று முத்திரைகுத்திவிடுகிறார்கள்.
மொத்தத்தில், நம்மீதான சமூக அபிப்பிராயங்களுக்கு நாமே காரணம். ஒவ்வொருதனிமனிதரையும், அவரைச் சுற்றியுள்ள சமூகம் மிக உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. எனவே, நமக்கு சமூக மரியாதை, செல்வாக்கு, மற்றவர்களின் பாராட்டுஎல்லாம் வேண்டுமென்றால் நாமே எளிதாக அவற்றை உருவாக்கிக் கொள்ளலாம்.
உங்கள் தோற்றம் : உங்களைப் பற்றிய முதல் அபிப்பிராயம், உங்கள் தோற்றத்திலிருந்தே தொடங்குகிறது. தோற்றம் என்பது வெளித்தோற்றம் மட்டுமல்ல. உங்கள் நலனில் உங்களுக்கிருக்கும் அக்கறை, உங்கள் தோற்றத்தையும்ஆரோக்கியத்தையும் நீங்கள் பேணிப் பாதுகாக்கிற விதம், எல்லாம் இணைந்துதான்உங்களைப் பற்றிய எண்ணத்தை உருவாக்குகிறது.
உங்கள் இடம்: அலுவலகச் சூழல், உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்கள் அலுவலகத்தின் ஒழுங்கு,ஆடம்பரமில்லாத அழகு, உங்கள் மேசையில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் வரிசை, எல்லாமே, எந்த விஷயத்தையும் நீங்கள் சரியாகச் செய்பவர் என்கிற அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது.உங்கள் வெளிப்பாடு : உடலசைவுகளும், உச்சரிக்கும் வார்த்தைகளும் உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தை அழுத்தமாக ஏற்படுத்தக் கூடியவை.
பலரும், மற்றவர்களுக்குப் புரியாத மாதிரி பேசுவதுதான் ஒரு துறையில் சிறந்து விளங்குவதாக அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறார்கள். ஆனால், ஒரு துறையில் நிபுணராக இருப்பவர் சிக்கலான விஷயங்களையும், எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எளிதாகச் சொல்பவர்தான். எனவே, மற்றவர்களின் சிக்கல்களை எளிதாக்குபவரே மதிக்கப்படுகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நேரந்தவறாமை : கடுகடு என்றிருக்கும் முகம்தான் கண்டிப்பை வெளிப்படுத்தும் என்றில்லை. நேரந்தவறாமை, சொன்ன சொல் தவறாமை போன்ற அம்சங்கள், “நீங்கள் கண்டிப்பானவர் என்ற உணர்வை ஏற்படுத்தும். உங்கள் மீதான மரியாதையை மேம்படுத்தும்.
நடப்புகளை நன்கறிதல் : உங்கள் துறையில் மட்டுமின்றி உலகில் பொதுவாக நடைபெறும் விஷயங்களை ஓரளவு தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. நாலும் தெரிஞ்சவர் இவர் என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டு ஒன்றும் தெரியாமல் இருக்கலாமா என்ன?
தெளிவாக வழிகாட்டுதல் : ஏதேனும் ஓர் இடத்திற்குப் போக வழி கேட்டால் கூட,தனக்குத் தெரியாது என்பதை வெளிப்படுத்த விருப்பமின்றி சுற்றிவிடுகிற இயல்பு நிறைய மனிதர்களுக்கு உண்டு.
நம்மிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களுக்கு சரியாக வழி காட்டுவது நம்முடையகடமை. ஒருவேளை நமக்குத் தெரியவே தெரியாத விஷயமென்றால், யாரை அணுகலாம் என்பதைத் தெளிவாகவும், துல்லியமாகவும் சொல்லி விடுவது நல்லது. இதன் மூலம் நமக்குத் தெரியாத விஷயங்களில் கூட “வழிகாட்டியாக” விளங்க முடியும்.
நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. எனவே, உலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால், மதிக்கும் விதமாக உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்களேன்!
No comments:
Post a Comment