Monday, February 11, 2013

எளிமையாக இருங்கள்… எதையும் சாதிக்கலாம்!


இது பரபரப்பான உலகம். எங்கும் பரபரப்பு, எதிலும் பரபரப்பு! மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும், அவசரம், ஆசை மற்றும் வேகம். ஒவ்வொருவரும், தனக்கென அதிக வேலைகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

அதிகமான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்கிறார்கள், கடமைகளை அதிகரித்துக் கொள்கிறார்கள், அதிகமாக பேசுகிறார்கள், அதிகமாக கோபப்படுகிறார்கள் மற்றும் அதிகமாக பதட்டமடைகிறார்கள்.

ஏன் இந்த நிலைமை? நிதானமடையுங்கள். உங்களின் செயல்பாடுகளையும், இயக்கத்தையும் எளிமைப்படுத்துங்கள். உலகின் வெற்றிகரமான மனிதர்கள் இதைத்தான் செய்துள்ளனர்.

ஒரு மனிதன் அடைவதற்கான மிகவும் கடினமான இலக்கு என்னவெனில், எளிமைதான்! அந்த எளிமையை கஷ்டப்பட்டு அடைந்த ஒருவன், வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவான். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக மறைந்த ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்லினை கூறலாம். பல விதமான வாழ்வியல் கருத்துக்களையும், மனித உளவியலையும் தனது படங்களில் அவர் மிகவும் எளிமையாக கூறுவார். இதனால்தான் அவர் பெரும் வெற்றி பெற்றார். எத்தனையோ ஆண்டுகள் ஆனாலும்கூட, இன்றும் அவரது படங்கள் ரசித்துப் பார்க்கும்படியாக உள்ளன.

ஒரு விஷயத்தை ஒருவர் முழுமையாக புரிந்துகொண்டால், அதை அவர் எளிய முறையில் விளக்கி விடுவார். மாறாக, அறைகுறையாக புரிந்து கொண்டிருந்தால், அதை விளக்க அதிகமான வார்த்தைகளை உபயோகிப்பார் மற்றும் அதிக நேரம் எடுத்துக் கொள்வார் மற்றும் டென்ஷனாவார். இதுதான் மனித வாழ்வின் தத்துவம். முழுமையான எந்த விஷயமும் எளிமையாக இருக்கும்.

சீன தத்துவ மேதை லாவோட்சே கூறுவார், “மக்களுக்கு போதிக்க என்னிடம், எளிமை – பொறுமை – இரக்கம் என்ற மூன்று விஷயங்கள்தான் உள்ளன. இந்த மூன்றும்தான், அவர்களின் மிகப்பெரிய செல்வங்கள். இந்த மூன்றையும் அடையப்பெற்ற ஒருவர், உலகில் வெல்லமுடியாதது எதுவுமில்லை.

உதாரணமாக, இன்றைய விளம்பர உலகத்தைப் பாருங்கள். தாங்கள் விளம்பரம் செய்யும் விஷயத்தை எவ்வாறு எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்பதை வைத்தே, அந்தப் பொருட்களின் விற்பனை இருக்கும். அந்தப் பொருளானது, சந்தையில் நிலைத்தும் இருக்கும். ரஸ்னா என்ற ஒரு குளிர்பானம் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பானத்தை இல்லத்தரசிகளிடம் வெற்றிகரமாக கொண்டு சேர்க்க, அந்நிறுவனத்தார் செய்த விளம்பரத்தை நாம் இங்கு கவனிக்க வேண்டும். ஒரு ரஸ்னா பாக்கெட் வாங்கினால், இத்தனை டம்ளர் ரஸ்னா தயாரிக்கலாம் என்பதை, அத்தனை ரஸ்னா நிரப்பப்பட்ட டம்ளர்களை காட்டி, மக்களை கவர்ந்தார்கள். இந்த உத்தி மிகவும் எளிமையானது, ஆனால் அதன்மூலம் கிடைத்த வெற்றி மிகவும் பெரியது.

ரஸ்னாவுக்கு மட்டுமல்ல, எளிமையான விளம்பரங்கள் மூலம் மக்களை கவரும், நிறுவனங்கள் பல்லாண்டுகள் சந்தையில் நிலைத்து நிற்கின்றன.

உலகின் மிகப்பெரிய உண்மைகள் எளிமையானவை. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கில கவிஞர், இயற்கையின் எளிமையான சந்தோஷங்களைப் பற்றி எழுதினார். அவர் இன்றும் போற்றப்படுகிறார். இந்தியாவின் முதன்மையான தலைவராக இருக்கும் காந்தியடிகளும், எளிமையை வலியுறுத்தியவர். அவர் அடைந்த வெற்றியைப் பற்றி நாம் விளக்க வேண்டியதில்லை.

மிகப்பெரிய மனிதர்கள், எதையும் எளிமையாகவே சிந்திப்பார்கள். சிக்கலான விஷயங்களுக்கு எளிமையான தீர்வை அளிப்பார்கள். அவர்கள் எப்போதும் எளிமையையே நம்புவார்கள். நாமும் எந்த ஒரு விஷயத்தையும் எளிமையான புரிந்துகொள்ள பழக வேண்டும். எந்த விஷயத்தைப் புரிந்துகொள்வதற்கும் பெரிய தியரி வேண்டும் என்று எண்ணக்கூடாது. தியரி பெரியதாக இருந்தால், அதனுள் அடங்கிய விஷயங்கள் தெளிவாக இருக்காது மற்றும் பெரிதாகவும் இருக்காது. சிறிய அணுவில்தான் அதிக ஆற்றல் அடங்கியுள்ளது. அதுபோலத்தான் எளிய விஷயங்களில் பெரிய அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதை உணர வேண்டும்.

மாணவர்களே! எளிய அம்சங்களை கற்றுக்கொண்டால், உங்களின் பாடங்களை நன்கு புரிந்துகொள்வதில் மட்டுமல்ல, தேர்விலும் சிறந்த மதிப்பெண்களைப் பெறலாம்.

No comments:

Post a Comment