Wednesday, February 6, 2013

படித்ததில் பிடித்தது - மகாபாரத்த்தில் நிர்வாகவியல்


முதலில் மிகச்சிறந்த நிர்வாகிக்கு தேவையான குணங்கள் என்ன என்பதைப் பற்றி நாம் பார்ப்போம்.

1 நேரம் தவறாமை (Punctuality)
2 அர்ப்பணிப்பு (Dedication)
3 நேர்மை (Sincerity)
4 நுகர்வோர் திருப்தி (Customer Satisfaction)
5 தோல்வி கண்டு அஞ்சாமை (Bravery)
7 முதலாளிக்கு விசுவாசம் (Loyalty to boss)

இப்போது நாம் அந்தப் பண்புகள் மகாபாரத்தில் எப்படி மேலோங்கி உள்ளது என்பதைக் காணலாம்.

நேரம் தவறாமை (Punctuality)

இந்நேரந்தவறாமையை நாம், குருச்சேத்திரப் போரில் காணலாம். இக்கால போர் முறை போல் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்று இல்லாமல் சிப்பாய்கள் முதல் பேரரசர்கள் வரை சங்கு நாதம் ஒலித்த பின்னரே போரில் ஈடுபட்டனர். போர் முழுவதும் இந்த நேரந் தவறாமை நீடித்தது.

அதே போல, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கண்டிப் பாக அன்றைய போர் முடிவுற்றது. இந்த நேரந்தவறாமை இன்றும் தொழிற்சாலைகளில் வேலை நேரம் என்ற பெயரில் தொடர் கிறது.

அர்ப்பணிப்பு (Dedication)

இதையும் குருச்சேத்திரப் போரில் நாம் காணலாம்.போர் நடந்தது கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும். இரு தரப்பினரும் உறவினர்கள், சகோதர முறை ஆனவர்கள். இருப்பினும் தங்கள் தரப்பினர்க்கு தங்களை முழுமையாக அர்ப்பணிப்பு (Dedication) செய்து கொண்டனர். 

அதேபோல் இன்றைய நிர்வாகத் துறையிலும் ஒவ்வொரு நிர்வாகியும் தாங்கள் சார்ந்த ஸ்தாபனத்திற்கு தங்களையே அர்ப்பணிக்க வேண்டியது மிக முக்கியமானது.

நேர்மை (Sincerity)

தருமர் கௌரவர்களுடன் சூது விளையாடி நாட்டினை இழந்தார். அவர் நினைத்திருந்தால் அப்போதே தர்மயுத்தம் தொடங்கி இருக்கும். ஆயினும் அவர் நேர்மை யுடன் நடந்து கொண்டார். மேலும், பாண்டவர்களுக்கு பதின் மூன்று ஆண்டுகள் அஞ்ஞான வாசம் (அஞ்ஞானவாசம் – உறவினர்களால் அறியப்படாமல் காட்டில் வசிப்பது) விதிக்கப்பட்ட போதும், அவர்கள் அதனை நேர்மையாக மேற்கொண்டனர். நம்மை யார் இனம் கண்டு கொள்ளப்போகிறார்கள் என்ற நினைப்பில், தங்கள் நட்பு நாட்டரசர்களின் அரண்மனை யில் விருந்தினர்களாக வாழ்வினை அனுபவிக்கவில்லை.

இதே நேர்மை (Sincerity) ஒவ்வொரு நிர்வாகிக்கும் கட்டாயமாக தேவையாகும்.

நுகர்வோர் திருப்தி (Customer Satisfaction)

இங்கு நாம் புரோசனன் என்ற மந்திரியை உற்பத்தியாளராகவும் (Manufacturer) துரியோதனனை நுகர்வோர் (Consumer) போலவும் காணலாம்.

துரியோதனன் அரக்கினால் ஆன ஒரு மாளிகையை கட்டித்தருமாறு புரோசனனை வேண்டுகிறான். சாதாரணமாக யாரும் அரக்கினால் மாளிகை கட்டமாட்டார்கள். ஆனால் புரோசனன் அவ்வாறே ஒரு மாளிகையைக் கட்டி, துரியோதன னுக்கு திருப்தி அளித்தான் (Customer Satisfaction). 

இது, தீய செயலுக்கு பயன்பட்டாலும், நாம் இதன் உள்ளர்த்தம் (Concept) மட்டும் எடுத்துக் கொண்டால், நுகர்வோர் திருப்தி (Customer Satisfaction) எவ்வளவு முக்கியம் என அறியலாம்.

தோல்வி கண்டு அஞ்சாமை (Bravery)

குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் தரப்பில் மாவீரர்கள் பீஷ்மர், கர்ணன், அசுவத்தாமன் மற்றும் ஆச்சாரியர் துரோணர் போன்ற வீரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தெரியும் தாங்கள் அதர்மத்தின் பக்கம் உள்ளோம், நாம் கண்டிப்பாக தோல்வியினைத் தழுவுவோம் என்று. ஆனால், அவர்கள் தோல்வியினைக் கண்டு பயம் கொள்ளவில்லை.

அதே போல், ஓர் நிர்வாகி தன் நிறுவனம் மோசமான கட்டத்தில் இருந்தாலும் மனம் தளராமல் அதனை முன்னுக்கு கொண்டுவர முயலவேண்டும்.

ஊழியர்கள் நலன் (Worker’s Benefit)

அக்காலத்தில போரின் போது கிரௌஞ்ச வியூகம், பத்மவியூகம் போன்ற அமைப்புகள் இருந்தன. இவ்வியூகங்கள் மூலம் அரசர்கள் மட்டுமல்லாமல், சிப்பாய்களும் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பி மிகத்திறமையாக போரிட்டனர். மேலும் அவர்களுக்குப் போதிய ஓய்வும், உணவும், சன்மானமும் வழங்கப்பட்டன. 

இதன்மூலம் ஓர் நிர்வாகமானது தொழி லாளர்கள் அடிப்படையில்தான் முன்னேறுகிறது என்பதை, நிர்வாகிகள் நன்கு உணர வேண்டும்.

முதலாளிக்கு விசுவாசம்  (Loayalty to boss)

குருச்சேத்திரப்போரில் இருதரப்பினர்க்கும் அவர்களது நட்பு ராஜ்ஜியங்களே உதவி செய்தன. ஆனால், அவற்றின் அரசர்கள், தங்கள் நிலையை விட்டு, போரில் ஒரு வீரனாகவே, தங்கள் தலைமைக்கு விசுவாசத்தைக் காட்டினர். இதன் மூலம் ஒரு நிர்வாகி எவ்வளவு முன்னேறினாலும், தன் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டியது முக்கியம்.

நாம் மகாபாரதத்தில் மட்டும் தான் சற்று ஆராய்ந்துப் பார்த்தோம். ஆனால் மேலும் நமது பழம்பெருமை மிகுந்த நூல்களில் இன்றைய விஞ்ஞானம், மற்றும் நிர்வாகம் போன்ற துறைகள் பற்றிய செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன. சேகரிக்கத்தான் ஆள் இல்லை. இனியாவது நாம் நமது பெருமையினை உணர்ந்து கொள்வோம். உலகரங்கில் வல்லரசாக தலை நிமிர்ந்து நிற்போம்.

No comments:

Post a Comment