Sunday, February 10, 2013

வாழ்வை வளமாக்கும் எண்ணங்கள்!




வலிமையான எண்ணங்களே நம் வாழ்வை வழிநடத்திச் செல்கிறது. எது வலிமையான எண்ணம், மற்றவர்களில் இருந்து மாறுபட்ட சிந்தனையுடன் வாழ்ந்து வெற்றி பெறுவது எப்படி? 

வரலாற்றின் திசையை மாற்றி அமைக்கும் வல்லமை வலிமையான கருத்துக்களுக்கே உண்டு. 'மனித வரலாறு என்பது எண்ணங்களின் சாரமே' என்கின்றார் எச்.ஜி.வெல்ஸ் என்ற வரலாற்று அறிஞர். 'ஒரு சிறந்த கருத்து என்பது சரியான நேரத்தில் வெளிப்படும்போது அதன் தாக்கம் வலிமையானதாக அமையும்' என்கின்றார் அறிஞர் விக்டர் கியூகோ. 
   
பித்தாகோரஸ், கலிலியோ, நியூட்டன், டாவின்சி, ஜான்கூடன்பர்க், லூயி பாஸ்டியர், எடிசன், ஐன்ஸ்டீன், சர்.சி.வி.ராமன், ஹர்கோபிந் குரானா என்று மனித குலத்திற்கு பெருமை சேர்த்தவர்களின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். இவர்களெல்லாம் பலதுறைகளில் அறிவியல் ஆராய்ச்சி செய்து இறவாப் புகழ் பெற்றவர்கள்.

சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாடில், ரூசோ, கார்ல்மார்க்ஸ், விவேகானந்தர், காந்தி அடிகள் போன்றவர்கள் தங்களது அரிய கருத்துக்களின் மூலம் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இவர்களைப் போன்ற இன்னும் பலர் தங்களது வலிமையான கருத்துக்களால் வாழும் முறைகளை அனுபவ ரீதியாக உணர்த்திச் சென்றுள்ளனர்.

அறிவியல், தொழில்நுட்பம், நுண்கலைகள், ஊடகங்கள் என்று பல்வேறு துறைகளிலும் இன்று சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தொலைநோக்குடன் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.

சிந்தனையால் மலர்ந்த உலகம்
மனிதகுல வளர்ச்சி என்பது வலிமையான எண்ணங்களாலே சாத்தியமாகி உள்ளது. சாதித்தவர்கள் எல்லோருமே காலத்தின் போக்கில் சிந்தித்தவர்கள் அல்ல. காலம் காலமாக செயல்படும் வழக்கத்தில் இருந்து மாறி சிந்தனை செய்யும்போது தோன்றும் மறுமலர்ச்சி எண்ணங்களால் வெற்றி பெற்றவர்கள். அவர்கள் தங்கள் பின்னால், தங்கள் எண்ணங்களின் பின்னால் உலகை நகர்த்திச் சென்றார்கள்.

சுழலும் பண்பைக் கொண்ட 'சக்கரம்' கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் போக்குவரத்து என்பது மிகவும் குறைவாகவே இருந்திருக்கும். மின்சாரம் என்பது இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை சில மணிநேர மின்வெட்டு நமக்கு நன்றாக உணர்த்துகிறது.

மயக்க மருந்து, நோய் எதிர்ப்புத்தன்மை கொண்ட பென்சிலின் போன்றவை மருத்துவ உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அச்சுப்பொறி எந்திரம், அறிவு வளர்ச்சி மற்றும் தொடர்பு கொள்ள உதவி வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

மரபு பொறியியல், நானோ தொழில்நுட்ப பயன்பாடு, உயிரி தொழில்நுட்பம் போன்றவைகளும் உரத்த சிந்தனைகளின் வெளிப்பாட்டில் கிடைத்த பயன்பாடுகளே ஆகும். இவையெல்லாம் சிந்தனைகளாகி செயல்படாமல் போயிருந்தால் இருண்ட குகைகளில்தான் மனித வாழ்க்கை இருந்திருக்கும்.

இத்தகைய சிந்தனைகள் எங்கிருந்து வந்திருக்கும்?

'மனிதன் எப்படி வாழ்கிறானோ அப்படியே சிந்திக்கிறான்' என்றார் மக்சிம் கார்க்கி. பறவையைக் கண்டு விமானம் படைக்க வேண்டும், பாயும் மீன்களைப் பார்த்து படகையும், எதிரொலியை கேட்டு வானொலி படைக்க வேண்டும் என்று மனிதனுக்குத் தோன்றியது. அந்தச் சூழல்தான் அவனுக்கு சிந்தனையை தூண்டியது. தேவை அவனது தாயாக இருந்து வழிகண்டறிய வகை செய்தது. அந்த வலிமையான எண்ணங்களை அவன் முயற்சியால் அடைந்தபோது புதிய சரித்திரம் பிறந்தது.

உங்கள் எண்ணம் வலிமையானதா?

வளமான கற்பனையுடன் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்களின் ஈடுபாடுதான் மனிதகுலத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளது. மனதால் எதையெல்லாம் கற்பனை செய்ய முடியுமோ அதையெல்லாம் வடிவமைத்து செயல்படுத்த முடியும் என்ற அளவிற்கு இன்றைய யுகம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது சிந்தனையின் வலிமையின் அடிப்படையில் உருவானதே ஆகும்.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதைவிட சிறப்பான நடைமுறை அல்லது புதிய கருத்தை அமல்படுத்த நினைப்பதை ஆக்கப்பூர்வமான சிந்தனை எனலாம். இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வது என்பது ஒரு வகையானது. ஆனால் ஒவ்வொரு செயல்பாட்டிலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று சிந்தித்து செயல்படுவது ஒரு சிலரது சிறப்பு.

அனைவரும் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவது என்பது சாத்தியமே. வானத்தை வில்லாக வளைத்தால்தான் ஆக்கப்பூர்வமான சிந்தனை என்று கருத வேண்டியதில்லை. அவரவரது வாழ்க்கைப் பாதையில், செய்யும் தொழிலில், கற்கும் திறனில், அன்றாட நிகழ்வுகளில் கூடுதல் திறமையை வெளிப்படுத்தினாலே போதுமானது.

வரவுக்குள்ளாக அந்த மாதச் செலவுகளைச் செய்யும் குடும்பத் தலைவி ஆக்கப்பூர்வமான சிந்தனையாளரே. தொழில்வணிகம் செய்பவர்கள் வாடிக்கையாளருக்கு பயனளிக்கும் வகையில் தரமான பொருட்களை வழங்குவது சிறந்த சிந்தனையே. பொருட்களை சந்தைப்படுத்துபவர், வித்தியாசமான உத்திகளை பயன்படுத்தி வியாபாரத்தை கூட்டினால் அதுவும் உன்னதமான சிந்தனையே.

சாதாரணமாக சமைக்கும் உணவுகூட பரிமாறும் பாங்கைப் பொறுத்து சுவை கூடும். அதுபோலவே எண்ணங்களின் வலிமையைப் பொறுத்தே உயர்வும் தாழ்வும் அமைகின்றது. இதை வள்ளுவர் பாடுகிறார்...

"வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர் தம்
உள்ளத் தனையது உயர்வு''

நீர் நிலைக்கு ஏற்பவே மலரின் அழகும், வளர்ச்சியும் இருக்கும். அதுபோல மக்களின் உயர்வு அவர்களுடைய உள்ளத்தில் எழும் ஊக்கத்தின் அளவுக்கு ஏற்பவே இருக்கும். யாருடனும் யாரும் ஒப்பிட்டுப் பார்க்காமல் அவரவரது மனோதர்மத்தின் படி தங்களை உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டால் வாழ்வில் வளம் சேர்க்கலாம்.

உருவத்திற்கும் எண்ணத்தின் வலிமைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மகாகவி ரவிந்திரநாத் தாகூர் கூறுகிறார்..."உன்னதமான எண்ணங்கள் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து தோன்றி உலகை மேன்மைப்படுத்தட்டும். ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைத்து காத்திருப்போம்.''

இளைஞர்கள் அனைவரும் அவரவர்களின் எண்ணங்களுக்கு வலிமையை கூட்டி வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment