Tuesday, February 26, 2013

புவி வெப்பமயமாதல் or உலக வெப்பமயமாதல்


முன்னுரை

உலகம் முழுவதும் கடந்த வாரம் "உலக ஓசோன் தினம்" என்ற ஒன்றை செப்டம்பர் 16 இல் கொண்டாடினோம்,எதற்காக வென்றால் நம் முன் தற்போதுஇருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் இந்த புவி வெப்பமயமாதல் அல்லதுஉலக வெப்பமயமாதல் என்பது தான். இந்த புவி வெப்பமயமாதல் மனிதர்கள், விலங்குகள் மற்றும் உணவு ஆதாரமான விவசாயத்தின் மீதும் ஏற்படுத்தி இருக்கும் பதிப்புகள் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.இதில் மிகவும் முக்கியமான ஒன்று என்ன வென்றால் இது மக்கள் தொகையில் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகள் மிகவும் விபரீதமாக இருக்கிறது.

இந்த உண்மைகளை பற்றி அவ்வப்போது விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன,இதில் துரதிஷ்டவசமாக இதற்கான காரணம் நாம் இல்லை என்று வாதிட்டாலும்,காரணங்களை ஒத்துகொள்ள மறுத்தாலும், உலக வெப்பமயமாதலின் விளைவுகள் உண்மை என்றும், இந்த பாதிப்பு என்பது உலகளாவியது என்றும்,அளவிட கூடிய பெரிய பாதிப்பு என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.உண்மையில் இதற்கான காரணங்கள் நாமும்,நம்முடைய போட்டி மனபான்மை கொண்ட வளர்ச்சியும்அன்றி வேறு இல்லை என்பதும் உறுதிபடுத்தபட்டுள்ளன. இதற்கான விளைவுகள் எந்த சந்தேகமும் இன்றி கடுமையானதாக தான் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.

புவி வெப்பமயமாதல் என்றால் என்ன?

புவிவெப்பமயமாதல் என்பது பூமியினுடைய சுற்றுப்புற பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் வெப்பநிலை உயர்வை குறிக்கிறது.இது கடந்த 20 ஆம் நூற்றாண்டின் பாதியில் இருந்து இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு விளைவு.குறிப்பிட்டு சொல்ல கூடிய வகையில் பூமியின் வெப்ப நிலை 1oC to 4oC ஆக உயரும் என்று கணக்கிடபட்டுள்ளது.உலக சராசரி வெப்பநிலை உயர்வு 2100 ஆம் ஆண்டில் 4°C (7.2°F) ஆக இருக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.

புவி வெப்பமயமாதல் காரணம் என்ன:

முற்காலத்தில் நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை உட்கொள்ளவும்,நாம் உட்கொள்ளும் ஆக்சிஜனை கொடுக்கவும் ஏராளமான தாவரங்களும், மரங்களும் இருந்தன,ஒரு இயற்கை சமநிலை இருந்தது,ஆனால் தற்கால தவறான மனித செயல்பாடுகளால் இயற்கையை பாதிகின்ற“பசுமை கூடக வாயுக்கள்” அல்லது “பசுமைக் குடில் வாயுக்கள்”என்று சொல்லபடுகின்ற வாயுக்களின் அதிகரிப்பால் இந்த பூமியின் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த வாயுக்கள் சூரியனில் இருந்து வரும் வெப்ப கதிர்வீச்சுக்களை எந்த தடையும் இன்றி உட்செலுத்தியும்,பூமி வெளியே எதிரொலிக்கும் வெப்பத்தை வெளிவிடாமல் செய்வதால் இந்த விளைவு ஏற்படுகிறது.

பசுமை கூடக வாயுக்கள் எவை:

• கார்பன்டைஆக்ஸைடு (CO2),மீத்தேன் (CH4), நைட்ரஸ் ஆக்ஸைடு (N2O), ஹைட்ரோஃபுளோரோ கார்பன் (HFCs),பெர்ஃபுளோரோ கார்பன் (PFCs),சல்பர் ஹெக்சா ஃபுளோரைடு(SF6)

பசுமை கூடக வாயுக்கள் எங்கிருந்து தோன்றுகின்றன?

மக்கள் தொகை பெருக்கத்தினாலும், அதன் மூலமாக மனிதர்களின் அதிகரித்து வரும் மின் பயன்பாடு,அதன் விளைவாக எரிக்கப்படும் நிலகரி மற்றும் எரிபொருள்களினால் வெளியேற்றப்படும் வாயுக்களாலும்,மனிதர்களின் அதிகரித்து வரும் வாகன பயன்பாடுகளும்,அதன் விளைவாக வெளியேற்றப்படும் வாயுக்களாலும்,இயற்கையாக மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மூலமாக வெளிப்படும் மீதேன் என்னும் வாயுவினாலும், காடுகள் அழிக்கபடுவதாலும்,செயற்கை உரங்களின் பயன் பாடுகளாலும்,அதிகமான பிளாஸ்டிக் மற்றும் மின்னணு கழிவுகளாலும் இந்த பசுமை கூடக வாயுக்கள் அதிகமாக தோன்றுகின்றன.

புவி வெப்பமயமாதலின் விளைவுகள்:

வரலாறு காணாத முறையில் அதிகரித்து வரும் வெப்பநிலை, உயர்ந்து வரும் கடல் மட்டம், வட துருவத்தில் குறைந்து வரும் பனியின் அளவு ஆகியவற்றின் மூலம் தெளிவான பின் விளைவுகள் தெரிய துவங்கிவிட்டன.
உலகளாவிய விளைவுகளில் சில :

•     கென்ய மலைபகுதிகளில் உள்ள மிகபெரிய பனிமலையில் அதன் எடையில் 92% குறைந்து விட்டது.

•      கடல் மட்டம் 10 முதல் 25 சென்டிமீட்டர் வரை அதிகரித்துள்ளது.

•     ஆர்டிக் பகுதிகளில் பனியின் தடிமன் 40% குறைந்துள்ளது.

•     ஒரு ஆய்வறிக்கை இன்னும் 100 ஆண்டுகளில் 300 கோடி மனிதர்கள் இடம்பெயர்வதர்கான சாத்தியகூறுகள்90% உள்ளதாக சொல்கிறது.உணவு பொருள்களின் தட்டுப்பாடும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

•     விஞ்ஞானிகள் இப்போது திட்டவட்டமான ஆதாரங்களை சேகரித்துள்ளனர்,அதன்படி, இனி வரும் காலங்களில் வழக்கத்திற்கு மாறான கடுமையான புயல்களும் அதன் விளைவாக கடுமையான சூறாவளி காற்றும் இருக்கும் என்றும்,இதன் விளைவுகளை 1981 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களால் உறுதிசெய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

•      நேர்முகமாகவோ ,மறைமுகமாகவோ ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் மனிதர்கள் இந்த விளைவினால் உயிரழந்து வருவதாகவும் மற்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது.

•      இன்னொரு ஆய்வறிக்கை 2050 ஆம் ஆண்டிற்குள் 10 லட்சத்திருக்கும் அதிகமான உயிரினங்கள் இந்த பூமியில் இருந்து அழிந்திருக்கும் என்றும் கூறுகிறது.

•      இந்த விளைவுகள்மோசமானால், WWF ன் ஆய்வறிக்கை படி, 2100 ஆம் ஆண்டிற்குள் கடலில் உள்ள பவளபாறைகள் முற்றிலுமாக அழியக்கூடும்,அப்படி நேர்ந்தால் இது கடல் வாழ் உயிரினங்களுக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.

இந்தியாவில் உணரப்பட்ட விளைவுகள்:

•      இந்தியாவில் இமயமலையில் தோன்றும் கங்கை நதியின் ஆதாரமான பணிபாறைகளின் அளவு 40 மீட்டர் என்ற அளவில் ஒவ்வொரு வருடமும் குறைந்து வரைகிறது.இது கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.இதில் உள்ள சில பனிபாறைகள் 2030 ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக மறையக்கூடும்என்றும் இதனால் மிக பெரிய குடிநீர் பஞ்சத்தை ஆசிய நாடுகள் சந்திக்க கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

•      இதே போன்று ஒரிசாவில் “சடவய” என்ற கடலோர பகுதியில் முன்பு 7கிராமங்கள் இருந்த பகுதி இப்போது2 கிராமங்களை மட்டுமே கொண்ட பகுதியாக காட்சி அளிக்கிறது,இதில் 5 கிராமங்கள் கடல் நீரில் மூழ்கி விட்டன.மேலும் ஒரிசாவின் கடலோர பகுதியில் புயல்களுக்கும் அதன் விளைவான கடுமையான சூறாவளிக்கு மட்டும் 3௦௦௦௦ மனிதர்கள் இறந்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.கடல் நீரின் அளவு சில பகுதிகளில் 1.5 முதல் 2.5கிலோமீட்டர் என்ற அளவில் நில பகுதியில் உட்புகுந்துள்ளது.

இவை எல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே, உண்மையான பதிப்புகள் முழுமையாக இன்னும் உணரப்படவில்லை,அவை எந்த சந்தேகத்திற்கும் இடம் இன்றி மிகவும் கடுமையானதாக தான் இருக்கும்.

தீர்வுகள்:

மனிதர்களும், மனிதர்களின் செயல்களும் தான் உலக வெப்பமயமாதலின் முழு காரணம் என்பது தெளிவு,இதற்கான முழு தீர்வுகள்,அரசியல்,பொருளாதார மற்றும் சமுதாய அமைப்புகளில் ஏற்பட வேண்டிய மாற்றத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.
பசுமை கூடக வாயுக்களை நிறுத்தினாலும், வெப்ப உயர்வு உடனே நின்று விடாது,காலத்தால் இந்த வெப்பநிலை குறைவதற்கு இன்னும் சில காலமாகும்.இப்போது உலக அளவில் இந்த வாயுக்களின் அளவை 450 முதல் 550 PPM ஆக நிறுத்துவது(குறைப்பது) தான் முதல் தீர்வாக கொண்டுள்ளனர்.இதன் தற்போதய அளவு 380 ஆக உள்ளது.அரசாங்கமும்,பல சமூக அமைப்புக்களும் இந்த பணியில் தீவிரமாக பணி ஆற்றிவருகின்றன, இன்னும் முக்கியமான சில மாற்றங்களான, இயற்கை வேளாண்மை,சூரிய சக்தி,இயற்கை பொருள்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்,சுற்றுசூழல் சீர்கேட்டை தடுக்கும் நடவடிக்கைகள்,இவற்றினால் மட்டுமே இதன் தாக்கத்தை குறைக்க முடியும்.
இப்போது நம்முடைய பங்களிப்பை தெரிந்து கொள்ளவேண்டிய நேரம் இது,நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய வேலை இந்த தாரக மந்திரத்தை கடைபிடிப்பது தான்                     

“பொருள்களின் பயன்பாட்டை குறிப்பது,

மறுமுறை பயன்படுத்துவது,

மறுசுழற்சி செய்வது.”

                                துரிதமாக செயல்படுவோம் காலம்கரையும் முன்

"காற்றுள்ளபோதே தூற்றிகொள்வோம்"

வாழ்க வையகம்            வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment