Sunday, February 24, 2013

வெல்ல முடியாததை வெல்வது எப்படி?


உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் இந்தியாவிலும் உருவாக முடியும் என்ற
ஆழமான நம்பிக்கையை மாணவர் சமுதாயத்தில் விதைத்து வருகிறார் டாக்டர் அப்துல் கலாம்.

இந்தியாவின் ஒவ்வொரு இடமும் அறிவு மையமாக வேண்டும் என்று கருதும் அவர் தினந்தோறும் சுற்றுப் பயணம் செய்து அறிவு புரட்சி ஏற்படுத்தி வருகிறார். மாணவர், இளைஞர்களுக்காக இங்கு தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார்...

மாணவர்களே உங்களுடன் நான் அறிவு தொடர்பாக சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அறிவுதான் உங்களை மிகப் பெரியவர்களாக்கும்.

அறிவுதான் வெல்ல முடியாதது என்று கருதப்படுவதை வெல்லக்கூடியது. இந்த அறிவு நான்கு அம்சங்களைக் கொண்டது.

1. கற்பனைத் திறன்

2. நேர்மை

3. துணிவு

4. வெல்ல முடியாத சக்தி

இந்த நான்கும் ஒன்று சேர்ந்த குணங்களைக் கொண்டவர்கள் அறிவில் சிறந்த குடிமகன்களாக திகழ்வார்கள்.

கற்பனைத்திறன் பற்றி கூற வேண்டுமானால்...

கற்றல் தருவது கற்பனைத்திறன்...

கற்பனைத்திறன் தூண்டுவது சிந்தனையை...

சிந்தனை அளிப்பது அறிவு...

அறிவு உங்களை மிகச்சிறந்தவராக்கும்...

நேர்மையின் தெய்வீக அம்சங்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அவை...

நீதி நேர்மை குடியிருக்கும் இதயங்களின் நடத்தையில் அழகு மிளிர்கிறது...

நடத்தையில் அழகு மிளிர்கிற இல்லங்களில் நல்லிணக்கம் மலர்கிறது...

நல்லிணக்கம் மலர்கின்ற இல்லங்கள் நிறைந்த தேசத்தில் ஒழுங்கு நிலவுகிறது...

ஒழுங்கு நிலவுகிற தேசங்கள் நிறைந்த உலகத்தில் அமைதி தவழ்கிறது...

இதயம், நடத்தை, தேசம் மற்றும் உலகம் ஆகிய நான்குக்கும் ஓர் அழகான இணைப்பு, தொடர்பு உள்ளது. ஒருநாட்டில் உள்ள அனைவருக்கும் நேர்மை பொதுவானாதாக இருக்க வேண்டும். குடும்பத்தில், கல்வியில், சேவையில், தொழிலில் மற்றும் வர்த்தகத்தில் நேர்மை இருக்க வேண்டும்.

நிர்வாகம், அரசியல், அரசு, நீதித்துறை ஆகிய அனைத்திலும் நேர்மை நிலை கொண்டு இருக்க வேண்டும். வெல்ல முடியாத ஒரு சக்தியை அளிக்கவல்ல இந்த நேர்மைதான் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான வல்லமை அளிக்கும்.

துணிவு பற்றியும் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வித்தியாசமாக சிந்திக்கும் துணிவு

கண்டுபிடிக்கும் துணிவு

இதுவரை யாரும் செல்லாத பாதையில் செல்லும் துணிவு

முடியாதது எது என்பதை அறியும் துணிவு

சிக்கல்களை தீர்க்கும் துணிவு

இவையே இளைஞர்களின் உயிர்மூச்சாக இருக்க வேண்டும்... அவர்கள் வெற்றி பெற வேண்டும்...

மாணவர்களின் முதல் குறிக்கோள் அவர்கள் தங்கள் படிப்பில் சிறந்து விளங்குபவர்களாக இருக்க வேண்டும். நாட்டுக்கான அவர்களது முதல் சேவை இதுதான்.

படிக்கும் காலத்தில் கேள்வி கேட்கும் தன்மை, கற்பனைவளம், தொழில்நுட்ப அறிவு, தொழில்முனையும் திறன் மற்றும் அறவழியிலான தலைமைப்பண்பு ஆகியன அவரிடத்தே உருவாகியிருக்க வேண்டும். இவை ஐந்தையும் பெற்ற ஒரு மாணவர் தன்னிச்சையாக கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு மாணவராக வளர்ந்து நிற்பார்.

தன்னைத் தானே இயக்கிக் கொள்ளக்கூடிய, தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடிய கற்றுக் கொள்பவராக அவர் உருவாவார். அதிகாரம் பெற்றவரை மதிக்கத் தெரிந்தவராக அவரிடம் முறைப்படி கேள்வி கேட்க தெரிந்தவராக இருப்பார். இவர்களைப் போன்றவர்கள் சேர்ந்துதான் வளமான இந்தியாவை உருவாக்க முடியும்.

இளம் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்கள்தான் சரியான பாதையில் அவர்களை இட்டு செல்லும். ஐன்ஸ்டீன் வாழ்க்கையில் அவர் தந்தை வாங்கித் தந்த காம்பஸ்தான் அவரை சிந்திக்க தூண்டியிருக்கிறது. அவரது 12 வயதில் பரிசளிக்கப்பட்ட புத்தகம்தான் அவருக்கு இரண்டாவது அற்புதமாக விளங்கியது. பெரிய ஆய்வுக்கூடமோ அதிக செலவு பிடிக்கும் கருவிகளோ இன்றி, இந்த பிரபஞ்சத்தின் உண்மைகளை தனது கணித அறிவால் கண்டறிந்தார்.

வெல்லமுடியாத சக்தி பற்றி சர்.சி.வி.ராமன் தனது 82 வது வயதில் உரை நிகழ்த்தினார். அது இன்றும் என் ஞாபகத்தில் உள்ளது: என் முன்னே உள்ள இளைஞர்களே! பெண்களே... நான் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்... எப்போதும் நம்பிக்கையையும் துணிவையும் இழந்துவிடாதீர்கள்.

உங்கள் முன் உள்ள சவாலை துணிச்சலான ஈடுபாட்டின் மூலமாகத்தான் வெற்றி பெற முடியும் என்று என்னால் உறுதிபட சொல்ல முடியும். இந்தியர்களின் சிந்தனை ஜெர்மன், வட ஐரோப்பியர்களுக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல. நம்மிடம் இல்லாதது துணிச்சல் மட்டும்தான்.

நம்மை இயக்கும் சக்தியை பெற நாம் தவறிவிடுகிறோம். அது இருந்தால் நம்மை எங்கோ கொண்டு சென்றுவிடும். நமக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன். இப்போது இந்தியாவுக்கு தேவைப்படுவதெல்லாம் நம்மை தோற்கடிக்கும் இந்த சக்திகளை அழிப்பதுதான். நமக்கு வெற்றிக்கான சக்தி வேண்டும்.

நம்மை சரியான இடத்துக்கு எடுத்து செல்கின்ற பாதை தேர்வு செய்கின்ற சக்தி வேண்டும்.இந்த பூமியில் மிகச்சிறந்த இடத்தை பெறக்கூடிய பெருமைமிகு நாகரிகத்தை சேர்ந்தவர்கள் என்று அங்கீகரிக்கும் சக்தி தேவை. இந்த வெல்ல முடியாத சக்திகளே நம்மை சரியான பாதைக்கு அழைத்து செல்லும் என்றார் ராமன்.

எனவே நண்பர்களே அறிவு என்பது

அறிவு = கற்பனைத்திறன் + நேர்மை + துணிச்சல் + வெல்லமுடியாத சக்தி

மாணவப் பருவத்திலேயே இந்தகுணாதிசயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் கல்வியாளர்களும் உண்மையான அறிவு மாணவர்களிடம் சென்று சேர வேண்டும் என்று விரும்ப வேண்டும்.

No comments:

Post a Comment