யாரைக்கண்டும் நீங்கள் பயப்படாதீர்கள்
வாழ்க்கை என்பது ஒரு அழகான பூந்தோட்டம். வண்ண மலர்கள் உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி உங்கள் மனதிலே இருக்கின்றசுமைகளை இறக்கி வைத்து ஆனந்தக் களிப்பிலே உங்களை வாழ்த்துகிறது. வாழப்பிறந்த நீங்கள் கவலையில்லாமல் மகிழ்வோடு இருந்துவிட்டுப் போங்கள். உங்களுடைய நோக்கங்கள், உங்களுடைய செயல்கள், உங்களுடைய கடமைகள் ஆகியவைகளை நீங்கள்தான் நிறைவேற்றவேண்டும். மற்றவர்கள் உங்கள் பாதையில் குறுக்கிட அனுமதிக்காதீர்கள். மற்றவர்கள் நம்மைப் பற்றித் தவறாக எண்ணி விடுவார்களோ என்று ஏன் நினைக்கின்றீர்கள்? அப்படி நீங்கள் நினைக்கும்போதே உங்களுடைய மனம் கனத்துப் போய்விடுகிறது. இனம் தெரியாத அச்சத்தில் நீங்கள் மூழ்கிவிடுவதால் தேவையில்லாமல் கவலையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் இது நியாயந்தானா? மற்றவர்களைக் கண்டு நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்? மற்றவர்கள் உங்களைக் கண்டபடி விமர்சனம் செய்யட்டும், அறநெறி பிறழ்ந்தவர்கள் அனைவரும் கூடி உங்களுக்கு அர்ச்சனை செய்யட்டும். நீங்கள் ஒழிய வேண்டும் என்று கர்ஜனை செய்யட்டும். தகாத வார்த்தைகளால் உங்களை மறைமுகமாகத் திட்டட்டுமே. இதனால் உங்கள் கௌரவம் பாதிக்கப்பட்டுவிடுமா? எப்படி வாழ வேண்டும் என்றகொள்கையும், அதன்படி செல்கின்றஉரிமையும் நமக்கு மட்டுமே இருக்கிறது. இதில் மற்றவர்கள் நம்மைவந்து பரிகாசம் செய்வதற்கும், கிண்டலாகப் பேசி நம்மை மட்டம் தட்டுவதற்கும் அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? மற்றவர்களைப் பற்றிய அர்த்தமில்லாத பயம் உங்களுக்குத் தேவையில்லாதது. எனவே யாரைக் கண்டும் பயப்படாதீர்கள்.
உங்களுக்கு ஏற்படும் மனச்சோர்வை விரட்டுங்கள்
உங்களுக்குப் பல வகையிலும் துன்பங்கள் வந்துசேரும். இதை நீங்கள் தவிர்க்க முடியாது. உங்களுடைய மனைவி உங்களைக் ‘காய்ச்சும்’ போது உங்களுக்குப் பல கவலைகள் வந்து சேரும். உறவினர்களால் பல உபத்திரவங்கள் உங்களுக்கு உற்பத்தியாகிக் கொண்டிருக்கும். நண்பர்கள் அருகில் இருந்துகொண்டு உங்களுக்கு அழகாகக் குழி பறிப்பார்கள். உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களைப் பலவாறு உங்களை ‘மட்டம்’ தட்டிப் பேசுவார்கள். அலுவலகத்தில் உங்களுடைய மேலாளர் எதற்கெடுத்தாலும் உங்களைத் திட்டிக்கொண்டே இருப்பார். உங்களைப் பிடிக்காத சிலர் உங்கள் மேல் எரிந்து விழுவார்கள். எது நடந்தாலும் நடக்கட்டும், எனக்குக் கவலையில்லை என்றமனோதிடத்துடன் உங்கள் கடமையில் கண்ணாய் இருந்து பிழையில்லாமல் செயலாற்றுங்கள். நீங்கள் மனச்சோர்வில்லாமல் மகிழ்வோடு இருக்கலாம்.
எப்பொழுதும் சிரித்தபடி இருங்கள்
எப்பொழுதும் சிரித்தபடி வாழ்கின்றவர்களுக்கு வாழ்நாள் நீண்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மனதிலே கவலையை ஏன் ஏற்றிக்கொண்டு துன்பப்படுகிறீர்கள்? கவலையை நீங்கள் துரத்தியடியுங்கள். மகிழ்வை மற்றவர்களிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ளும்போது, அதில் பெறுகின்றஇன்பம், கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. மகிழ்வோடு இருப்பவர்களிடம் நாம் பேசுவதற்குத் துடிக்கின்றோம். என்றைக்கும் கவலையோடு இருப்பவர்களைக் கண்டால் அவரை விட்டு விலகிஓட எண்ணுகின்றோம். அவர்களிடமுள்ள அந்தக் கவலை அலைகள் நம்மையும் வந்து தாக்கக்கூடாது என்றகவலை நமக்கு வந்துவிடுகிறது. எனவே நீங்கள் எப்பொழுதும் சிரித்தபடி கலகலப்போடு இருங்கள். வாய்விட்டு, மனம்விட்டு நீங்கள் சிரிக்கின்றசிரிப்பு, உங்களுடைய சிந்தனைகளைப் பெருக்குவதோடு, உங்கள் வாழ்நாளையும் கூட்டும் என்பதில் ஐயமில்லை. “சிரித்து வாழ வேண்டும்… பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே…” இது எவ்வளவு பெரிய உண்மை. வாழத் தெரிந்தவன் சிரிக்கும் கலையிலே தேர்ச்சி பெற்றவனாக விளங்குவான். நீங்கள் மிகவும் சோர்வோடு வீட்டுக்குச் செல்லும்போது, உங்கள் மனைவி புன்னகையோடு உங்களை வரவேற்கும்போது உங்கள் மனம் காஷ்மீரின் எல்லைக்கே போய்விடும். புன்னகையால் சாதிக்க முடியாத காரியம் எதுவுமே இல்லை. 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை நிகழ்த்திய இலங்கையின் கிரிக்கெட் வீரர் முரளீதரன் முத்தையா, எப்பொழுதும் சிரித்த படியே இருப்பார். சாதிக்கப் பிறந்த நீங்கள் புன்னகை மன்னனாக விளங்குங்கள். சிரிக்கத் தெரிந்தவன் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருப்பான். மகிழ்ச்சி இருந்தால் ஆனந்த மயமான வாழ்க்கைக் கப்பலில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கலாம்.
என்றைக்கும் அசைக்க முடியாத நெஞ்சுறுதியோடு வாழ வேண்டும்
மனதில் உறுதி இருந்தால் உங்களுக்கு மலை கூடக் கடுகாகக் காட்சியளிக்கும். மனதில் உறுதி இல்லாதவர்கள்தான் மரண வேதனையைக் கட்டித் தழுவ விழைகிறார்கள். மனதில் நீங்கள் உறுதியைக் கொண்டுவிட்டால், உங்கள் முன் இருக்கும் எந்தப் பிரச்சனையையும் நீங்கள் வெகு எளிதாகச் சமாளித்து விடுவீர்கள். “என்னால் எதையும் சாதிக்க முடியும்” என்று நூறுமுறைவாய்விட்டுச் சொல்லுங்கள். காலைக் கடன்களை முடித்துவிட்டு, உங்கள் வாழ்வை வளப்படுத்தக்கூடிய இந்த மந்திரத்தை மனஉறுதியோடு சொல்லுங்கள். இந்த மந்திர அலைகள் உங்கள் உடம்பில் இயங்கிக் கொண்டிருக்கின்றநாடி நரம்புகளில் பாய்ந்து உங்களுக்குப் புத்துணர்வை எப்பொழுதும் நல்கிக் கொண்டே இருக்கும். உறுதியில்லாத கட்டிடம் எதுவும் நிலைத்து நிற்பதில்லை. உறுதியில்லாத மனமும், பாசியும், அழுக்கும், சேறும் நிறையப் பெற்று துர்நாற்றம் மிகுந்த குளமாகக் காட்சியளிக்கும். இந்தக் குளத்தினால் யாருக்காவது பயன் உண்டா? அதுபோலத்தான் உறுதியற்றமனமும். உறுதியற்றமனம் இருக்குமானால் அது உங்களுக்கே பயன்படாதே. எனவே மனதில் உறுதியோடு இருங்கள்.
எவரையும் பழித்துப் பேசாதீர்கள்
“இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஏதேனும் ஒரு வகையில் ஆற்றல் இருந்தே தீரும். இந்த ஆற்றலை நாம் பயன்படுத்தாத காரணத்தால் நாம் வீணாகி வீழ்கிறோம். நீங்கள் எவரையும் இழிவாக நினைக்காதீர்கள். அவர்களைப் பழித்தும் பேசாதீர்கள். மற்றவர்களைப் பேச நமக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மற்றவர்களைப் பழித்துப் பேசுவதன் மூலம், நாம் நம்முடைய பொறாமை எண்ணங்களை இந்த உலகத்திற்குப் பறைசாற்றுகிறோம். மற்றவர்கள் மேல்கொண்ட காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம். மற்றவர்களை நமக்குப் பிடிக்கவில்லை என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறோம். மற்றவர்களை நீங்கள் கேவலமாகப் பேசுவதன் மூலம் உங்களுக்குள்ளே உரிமையோடு திரிந்து கொண்டிருந்த பண்பையும், அன்பையும், மனிதநேயத்தையும் நீங்கள் உங்களது மனமாகிய வீட்டைவிட்டே துரத்தியடிக்கின்றீர்கள். நீங்கள் இவ்வாறு செய்யலாமா? எனவே எவரையும் இழிவாகப் பேசாதீர்கள்.
எவரிடமும் தற்பெருமை பேசாதீர்கள்
“இந்த ஊரில் எனக்குச் செல்வாக்கு அதிகம், என்னைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது” என்று சிலர் தங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். நீங்கள் அவ்வாறு தற்பெருமை பேசிக் கொண்டு திரிய வேண்டாம். தற்பெருமை பேசுவதன் மூலம் உங்களுடைய தகுதியை நீங்கள் இழந்து விடுகிறீர்கள். அடக்கம் என்று சொல்லக்கூடிய மிக உயர்ந்த குணம், நீங்கள் தற்பெருமை பேசுவதன் மூலம் உங்களை விட்டு விலகி ஓடும். அடக்கம் போனபின் உங்கள் வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடுமே. மற்றவர்களை நீங்கள் மனதாரப் புகழுங்கள். உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ளாதீர்கள். “என்னால் முடியும்” என்று சொல்வது தன்னம்பிக்கை, “என்னால் மட்டுமே முடியும்” என்று சொல்வது தற்பெருமை. ஆணவத்திற்குச் செல்லக்கூடிய கரடுமுரடான பாதைதான் தற்பெருமை.
எல்லோரும் உங்களை மதிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்
“எவரும் என்னை மதிக்க மாட்டேன் என்கிறார்கள்” என்று நீங்கள் வருத்தத்துடன் கூறுகிறீர்கள். மற்றவர்கள் உங்களை மதித்தால் என்ன, மதிக்காவிட்டால் என்ன? மற்றவர்கள் உங்களை மதித்து உங்களுக்கு கிடைக்கப் போவதென்ன? தன்னம்பிக்கையோடு தளராத நெஞ்சத்தோடு நீங்கள் இடைவிடாமல் முயற்சி செய்து உழைத்துக் கொண்டே இருங்கள். எவரைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நல்ல வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு, பெரும் பணக்காரராக நீங்கள் ஆகும்போதும், செய்வதற்கரிய செயல்களைச் செய்து சிறந்த புகழைப் பெற்றுப் புகழின் உச்சிக்கே நீங்கள் செல்லும்போதும், அனைவருடைய கவனமும் உங்கள் பக்கம் திரும்பும். எல்லோரும் உங்களை மதிப்பார்கள். உங்களை இந்திரன் என்றும், சந்திரன் என்றும் வானளாவப் புகழ்ந்து பேசும்போது நீங்கள் உணர்ச்சியற்றஜடமாக மாறிவிடுங்கள். ஒருவர் உங்களைப் புகழும்போதோ, அல்லது உங்களை இகழும்போதோ உங்கள் மனம் உணர்ச்சியலைகளால் தடுமாறித் தத்தளிக்கிறது. நீங்கள் பக்குவப்பட்ட நிலைக்கு வந்துவிட்டால் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் உங்களுக்கு ஒன்றுதான். இந்தநிலை எல்லோருக்கும் கிட்டாது. தன்னம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமே இந்தப் பக்குவநிலை கிட்டும்.
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே
நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாமே வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கின்றீர்கள். வெற்றி பெற்றால் மகிழ்ச்சியினாலே துள்ளிக் குதிக்கின்றீர்கள். தோல்வி ஏற்பட்டால் உடனே துவண்டு போய்விடுகிறீர்கள். இது சரியா என்பதை எண்ணிப்பாருங்கள். தோல்வியடையாதவர் எவருமே வெற்றி பெற்றதாகச் சரித்திரமே இல்லை. நீங்கள் அடைகின்றதோல்விகளைத் துணிந்து ஏற்றுக் ùôகள்ளுங்கள். அவைகளின் மூலம் நீங்கள் நல்ல அனுபவத்தைப் பெறுவதோடு, எவராலும் சிதைக்க முடியாத மனோதிடத்தைப் பெறுவீர்கள். “தோல்வி அடைந்து விட்டோம்” என்று கவலைப்படாதீர்கள். வள்ளுவரும் “இடுக்கண் வருங்கால் நகுக” என்று கூறியிருக்கின்றார். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அந்தச் செயலில் கருமமே கண்ணாக இருந்து முடித்துவிடுங்கள். பலனை எதிர்பார்க்காமல் நீங்கள் கடுமையாக உழைக்கும்போது, அற்புதமான பலன்கள் உங்களுக்குக் கிடைத்து உங்களை ஆச்சரியப்பட வைக்கும் “நான் மிகக் கடுமையாகச் செயலாற்றுகிறேன். பலன்களை, நினைத்து நான் கவலைப்படுவதே இல்லை” என்கிறார் ஹென்றி போர்டு. எனவே ஒரு செயலைத் துணிந்து செய்துவிட்ட பிறகு, பின் விளைவுகள் எதுவாக இருந்தாலும் அவைகளைப் பக்குவ நெறியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். தோல்வி வந்துவிட்டதே என்று துயரம் கொள்ளாதீர்கள். வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தன்னம்பிக்கையுடன் அயராது பாடுபடுங்கள். நீங்கள் வெற்றிக் கனியை அடைவது உறுதி.
No comments:
Post a Comment