Wednesday, February 6, 2013

படித்ததில் பிடித்தது: அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!


அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாடா என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் கலங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!

எனக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!
பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..
மழையில் நனைந்து வர
முனுமுனுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்

இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,
அத்தி பூக்கும் தருணமாய்..!

என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!
என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

தொலைபேசியில்...
உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..!

கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , எண்ணத்தையும்
என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...
எந்தன் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "
"மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?
தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!

உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
அம்மா என்றும் உந்தன்
காலடியில்...!

No comments:

Post a Comment