மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனை நல்வழிப்படுத்தி உயர்நிலைக்கு அழைத்துச் செல்வது வழிபாடாகும். மனித மனத்தை இறைவனிடம் வழிப்படுத்துவது வழிபாடு. ஆன்மீகப் பயணத்தில் முதல்மைல் கல். உயிர்ப்புள்ள முயற்சி, அறிவார்ந்த ஆள்வினை, மனிதனை வழிப்படுத்தும் ஆன்மீக அன்பர்கள் குறைந்துவரும் சூழலில் சுகி. சிவம் அவர்களின் ஆன்மிகத் தொண்டு அளப்பெரிது. தமிழ்மறை வழங்கிய திருஞானசம்பந்தரின் அருள்மொழியான 'நல்லவண்ணம் வாழலாம்' என்ற தொடரையே நூலின் தலைப்பாகக் கொண்டு, மனித வாழ்க்கையை வழிநடத்தும் நெறிகளாக, சுகி. சிவம் அவர்கள் சிந்தனைகளைக் கோடிட்டுக் காட்டும் நோக்கத்தில் இக்கட்டுரை அமைகிறது.
வாழ்க்கை வாழ்வதற்கே!
'நல்ல வண்ணம் வாழலாம்' என்ற தலைப்பில் அமைந்த இந்நூலில், பதினாறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 'பதினாறும் பெற்றால் பெருவாழ்வு வாழலாம்' என்ற முதுமொழிக்கு ஏற்ப பதினாறு கட்டுரைகளின் வழி வாழ்ந்தால் பெருவாழ்வு அடைவது உறுதி. சுகி. சிவம் 'வாழ்க்கையில் உள்ள இடர்ப்பாடுகளை நீக்கி வெற்றிபெற வேண்டும்' என்று பல இடங்களில் எடுத்தியம்புகிறார். 'பிரச்சினையின் விளிம்பில் புதிய பிரச்சினை! அதுதானே வாழ்க்கை? சோதனைகள் வந்து ஜெயிப்பது தான் வெற்றி' (பக்.16) என்றும், 'என்னால் எதுவும் முடியாது. இது கோழைத்தனம், என்னால் எல்லாமே முடியும். இது அகங்காரமான முட்டாள்தனம். எது என்னால் முடிய வேண்டுமோ அதனை முடிக்க என்னால் முடியும். கடவுள் கருணை இருந்தால் என்பதே சரியான வாழ்க்கைப் பாதை' (பக்.22, 28) என்றும், 'உடம்பும், உயிரும் சேரும்போது உருவாகும் உள்ளம்தான் இரண்டையும் ஆட்டிப் படைக்கிறது. வாழ்வின் வெற்றி தோல்விகளை முடிவு செய்கிறது.
இந்த உள்ளம் எங்கிருக்கிறது என்று கேட்டால் விடை சொல்ல முடியாது. ஆனால் அது தான் வாழ்க்கையில் சூத்திரதாரி!' (பக். 53) என்றும், 'வாழ்க்கை என்பது ஒவ்வொரு விநாடியும் கடவுள் நமக்குக் கொடுத்த கொடை! ஒவ்வொரு விநாடியும் வாழ வேண்டியது நமது கடமை. நாளைக்கு வாழ வேண்டும் என்பதற்காக இன்றைக்குச் செத்துக் கிடக்க முடியாது' (பக். 81) என்றும், 'பணத்தைவிடக் குணம் முக்கியம். குணத்தைத் தரும் மனம் முக்கியம். பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கருத்து உருவாகாதபடி வாழ்க்கையை அமைப்பது அவசியம்' (பக். 85) என்றும் கூறுமிடங்களில் வாழ்க்கை பற்றிய உண்மையான விளக்கம் தெளிவாகிறது. வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது ஒன்று. ஆனால் வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்துவதாக சுகி. சிவம் எழுத்து அமைகிறது
நல்ல வண்ணம் வாழலாம் என்ற நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் பொன்மொழிகளாக, வாழ்க்கையில் பின்பற்றி ஒழுகும் ஒழுக்க நெறிகளாகவே அமைந்துள்ளன. கட்டுரைத் தலைப்புகள் ஒவ்வொன்றும் திருமந்திரமாகவே அமைந்திருப்பதை உணர முடிகிறது. இந்நூலின் ஆசிரியர், 'சில சொற்கள் மங்களகரமானவை, மந்திரத்தன்மை மிக்கவை. திரும்பத் திரும்ப சொல்லுபவர்கள் வாழ்வை உயர்த்தும் வலிமை உடையவை. இவையே மறைமொழி. இப்படிப்பட்ட ஓர் உயர்மறைமொழி 'நல்ல வண்ணம் வாழலாம்' என்பது. இதனைத் தலைப்பாகக் கொண்ட இந்தப் புத்தகம் ஒரு வகையில் வேதம் தான்! என்று (என்னுரை) குறிப்பிடுவதன் மூலம் தெளிவாகிறது. உண்மைகளை உள்ளவாறு தேடி உறுதியாக அறிவிக்கவே தான் விரும்புவதாகக் குறிப்பிடுகிறார். சமயச் சொற்பொழிவாளர்கள் பலரும் கடவுளை மையப்படுத்தியே பேசிவரும் போது மனிதனை மையப்படுத்தியே சிந்திக்கும் சொல்வேந்தரின் எழுத்து, ஆன்மஞான விளக்காகவே ஒளி வீசுகிறது.
நல்ல தொடக்கம்:
எந்த ஒரு செயலைத் தொடங்கும் போதும் ஒரு சிக்கல் ஏற்படுவது உண்டு. எப்படித் தொடங்குவது என்பதை அது 'பிள்ளையார் சுழி போட்டுச் செயல் எதையும் தொடங்கு' என்ற பாடலை முதன் முதலாகத் திருமணம், பண்டிகை போன்ற நிகழ்ச்சிகளில் ஒலி பெருக்கி உதவியாளர் ஒளிபரப்புவது இன்றும் நடைமுறையில் இருந்து வரும் வழக்கம். எனவே, எந்த ஒரு செயலையும் செய்யும் முன் கடவுள் துணையுடன் தொடங்க வேண்டும் என்று கூறுகிறார்.
நம்பினார்...
'வாழ்க்கையில் முன்னேற தன்னம்பிக்கை வேண்டும். வாழ்க்கை முழுமை பெறக் கடவுள் நம்பிக்கை வேண்டும். திறமைமிக்க - தன்னம்பிக்கை மிக்க சில தலைவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்திருந்தால் இன்னும் நிறைய நன்மை விளைந்திருக்கும். நாட்டு நலன் கருதி அவர்களுக்குக் கடவுள் உண்மை புரியப் பிரார்த்திக்கிறேன். என் பிரார்த்தனை வெற்றிபெறும் என்று நம்புகிறேன் கடவுள் கருணையால்' (பக். 33) என்ற நூலாசிரியரின் கருத்து மாணிக்கவாசகரின் 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்ற திருவாசகத் தொடரை நினைவூட்டுவதாக உள்ளது.
அச்சமில்லை... அச்சமில்லை...
வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் பயம் கொள்வது தேவையில்லாதது. அச்சம் மனிதகுல வளர்ச்சியின் நச்சுநோய். பக்தி அதை எதிர்க்கும் கிருமிநாசினி. அச்சமின்மை அமரத்துவம். அது வாழ்வின் இலட்சியம் என்று வாழ்க்கையில் பயம் தேவையற்றது என்பதை வலியுறுத்துகிறார். வீரம் என்பது ஆயுதங்களில் இல்லை. மனிதனின் மனத்தில் தான் இருக்கிறது. வீரம் என்பது கோழையில்லாமல் காட்டிக் கொள்வது, அஞ்சாமை நெஞ்சின் உரமாக அமைய வேண்டும்.
உள்ளம் பெருங்கோயில்
உறுதியான உடம்பில் தான் உயர்வான உள்ளம் இருக்க முடியும். உள்ளம் உயர்வாக இருந்தால்தான் உடம்பு உறுதியாக இருக்கும். எனவே தான் உடம்பையும், உள்ளத்தையும் சுகி.சிவம் பல இடங்களில் குறிப்பிடுகிறார். 'கோயிலுக்குப் போய் வருவது முதல் நிலை, நாமே கோயிலாவது நிறைநிலை, கடவுளைப் பாடுவது முன்னுரை, கடவுளாவது முடிவுரை (ப.65) என்று மனிதனின் இறுதி நிலையைச் சுட்டுகிறார். திருமூலர் இறை அனுபவம் முற்றிலும் பெற்ற ஓர் ஒப்பற்ற யோகியாவார். இறைவனைப் புறத்திலும், அகத்திலும் வழிபட்டுத் தனது யோகத்தின் வலிமையாலும், தவத்தின் சாதனையாலும் எங்கும், எவ்வுலகிலும் காணப்படும் பரம்பொருளைத் தம்முன் கண்டவராய், மோன சமாதி (மெளனத்தில் ஒடுங்குதல்) நிலையில்,
'முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்'
(திருமந்திரம்.2944)
என்று பாடுகிறார். இக்கருத்தையே வேறுவிதமாக விவேகானந்தர் 'எல்லா உயிர்களுமே கோவில்கள் என்பது உண்மைதான். ஆனால், மனிதனே மிக உயர்ந்த ஆலயம். அக்கோயிலில் என்னால் வழிபாடு செய்ய முடியவில்லை என்றால் வேறெந்தக் கோயிலாலும் பயன் இல்லை. ஒவ்வொரு மனித உடலாகிய கோயிலிலும் கடவுளே வீற்றிருப்பதை அறிந்த உடனேயே நான் ஒவ்வொரு மனித உயிருக்கு முன்னாலும் பணிவுடன் நின்று அவனிடத்தில் கடவுளையே தரிசனம் செய்கிறேன்' என்ற கருத்தும் ஈண்டு நோக்கத்தக்கது.
கற்க... கசடற...
இன்றைய கல்வி வியாபாரமாகிவிட்டது. 'இன்றைய படிப்பில் புத்தகங்கள் விழுங்கப்படுகின்றன. மனப்பாடங்கள் பட்டம் பெறுகின்றன. மனித டேப்ரிக்கார்டர்கள் டிப்ளோமாக்களுடன் படிக்கட்டு படிக்கட்டாக ஏறி இறங்குகின்றன. (ப. 35) என்று கல்வியின் நிலையை வெளிச்சம் போட்டுக் கட்டுகிறார். இன்றைய படிப்பு வாழ்க்கைக்கு உதவுவதாக இல்லை. பட்டம் பெறுவதற்கும், பணம் ஈட்டுவதற்குமே பயன்படுகிறது. பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளில் முதல் வகுப்பில் தேறிய மாணவர்கள் வாழ்க்கையில் தோல்வியைத் தழுவுகிறார்கள். கல்வி இன்று தரம் தாழ்ந்த நிலையில் கற்பிக்கப்படுகிறது. கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களே அதன்படி நடப்பதில்லை. பிறகு மாணவர்கள் எப்படிப் பின்பற்றுவார்கள். எனவே கற்கும் கல்வி,
'கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக'
(திருக்குறள். 40)
என்ற குறளுக்கு இலக்கணமாக வாழ வேண்டும் என ஆசிரியர் சுகி.சிவம் வலியுறுத்துகிறார்.
பக்தியின் அளவு:
இறைவன் மீது கொண்ட பக்தி நிலையானதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இறைவனை வழிபடுதல், பாதயாத்திரை போன்ற செயல்களைச் செய்தல் வழக்கத்தில் உள்ளது. பக்தியில் இவ்வாறு அளவு வைத்துக் கொண்டு வழிபடுபவர்களை நாவுக்கரசர் கண்டிக்கிறார். ஏதேனும் ஒரு பலன் கருதி வழிபடுதல் கூடாது என்ற பகவத் கீதையின் கருத்தையும் ஆசிரியர் வலியுறுத்துகிறார்.
இளைய தலைமுறைக்கு ஒரு செய்தி:
இந்திய சமயங்களுக்கு மதிப்பையும், மரியாதையும், பெற்றுத்தந்த அனைத்துலக ஞானி சுவாமி விவேகானந்தர், 'நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள்! நான் இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்' என்று முழங்கினார். சுகி.சிவம் அவர்களும் இளைஞர்களிடம் அதிக நம்பிக்கை கொண்டு, இரண்டாயிரத்தில் இந்தியா உலகத்தின் உன்னத வல்லரசாக வேண்டும் என்கிற நல்லெண்ணத்தைப் பெறுங்கள். பிறருக்குச் சொல்லுங்கள், உலகம் உயரும் என்று குறிப்பிடுகிறார். இந்தியத் திருநாட்டின் மூத்த குடிமகன் அப்துல்கலாம் அவர்கள் எழுதிய 'இந்தியா 2020' என்ற நூலில் இந்தியா இரண்டாயிரத்து இருபதில் வல்லரசாக மாறும் என்று குறிப்பிடுகிறார். சுகி.சிவமோ இளைஞர்களின்மீது உள்ள அதீத நம்பிக்கையில் இந்தியா வல்லரசாக குறுகிய காலமே போதுமானது என்று கூறுகிறார். எல்லா ஆயுதங்களையும் இழந்த பின்பும் நம்பிக்கையை இழக்காத அபிமன்யுவின் வீரம் இந்திய இளைஞனின் இலட்சியமாக இருக்கட்டும். அட்டைக் கத்தி செல்லுலாய்ட் வீரர்களுக்குக் கொடி காட்டுவதில் இளைஞர்களே நேரத்தை வீணாக்க வேண்டாம் (பக். 25) என்றும் சூரியன் தன்னைப் புதுப்பித்துக் கொள்வது போல இன்று புதிதாய் பிறந்தோம் என்று வாழ்வை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற பாரதியின் கருத்தையும் இளைஞர்களிடம் விதைக்கிறார் ஆசிரியர் சுகி.சிவம்.
சுவரை வைத்தே சித்திரம்:
சுவரில்லாமல் சித்திரம் எழுத இயலாது. இளைஞர்கள் உடல்நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்ற நோக்கில் 'எல்லா சுரப்பிகளும் சரிவர இயங்குவது தான் இளமையின் இலக்கணம். நாளமில்லாத சுரப்பிகளைச் சரியான இயக்கத்தில் வைத்திருப்பது தான் யோகாசனங்களின் அடிப்படை' (பக். 60) என்றும், 'காற்றை அடக்கினால் உடல் வலிமை, மன வலிமை... பிராணப் பயிற்சி அவசியம் தேவை' (பக். 32) என்றும் உடற்பயிற்சியின் அவசியத்தையும் உணர்த்துகிறார். திரு.வி.க. அவர்களும் 'இளைஞர் உடலோம்பல் மீது பெருங்கவலை செலுத்த வேண்டும். இவ்வுலக இன்பத்தைத் தேசிய வழியில் நுகர்தற் பொருட்டே கடவுளால் அளிக்கப்பெற்ற உடைமை இவ்வுடல். இவ்வுடைமையை இளமையிலேயே வளப்படுத்திக் கொள்ள வேண்டும். உடலைக் காவாது கவலை ஈனமாகக்கிடத்தில் பின்னை இவ்வுலக வாழ்வை இழந்து துன்புறுவதற்குக் கால்கொள்வதாகும்' (சீர்திருத்தம் (அ) இளமை விருந்து பக். 17) என்று குறிப்பிடுவது ஈண்டு நோக்கத்தக்கது. இந்துக்களின் சூரிய வழிபாடு, தண்டம் சமர்ப்பித்தல், பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போடுதல், கல்லூரிகளிலும் உடற்பயிற்சி, யோகாசனங்களைக் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைக்கிறார் சுகி.சிவம். இளைஞர்களுக்கு மட்டுமின்றி இல்லறத்தில் ஈடுபட்டுள்ளோருக்கும் வாழ்க்கையின் ரகசியங்களை விளக்குகிறார். மனைவி மக்கள் மீது உள்ள பற்றுக்கள் ஒழிந்து, பாசம் அகன்று, பரம்பொருளில் லயித்து பக்குவ நிலையில் மனிதன் நிற்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக துளசிதாசரின் கதையை எடுத்து விளக்குகிறார்.
உன்னையறிந்தால்...
வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் உண்டு. அந்த வெற்றி இரண்டு வகைப்படும். ஒன்று, பிறரை வெல்வது. இரண்டாவது தன்னை வெல்வது. உலகை வெல்லவும் உன்னை நீ வெல்லவும் சிறந்த இருவழிகள் உண்டு. ஒன்று சுயவிமர்சனம், மற்றொன்று சுயதரிசனம். எனவே, ஒவ்வெரு மனிதனும் விழிப்புக்கும், தூக்கத்திற்கும் இடையில் நிகழ்த்திய வாழ்க்கை நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தால் வாழ்வில் வெற்றியைப் பெறமுடியும் என்று கூறுகிறார்.
இறுதியாக...
வாழ்வின் வெற்றிக்கு உரிய வழிமுறைகளை மிக எளிய நடையில், புராண, வாழ்வியல் நிகழ்ச்சிகளுடன் எடுத்துக்காட்டி உள்ளத்தின் உயர்வே நம்முடைய உயர்வு; அதுவே வாழ்க்கையின் உயர்வு என்ற பேருண்மையை உணர்த்தி, உலக மக்களின் உள்ளங்களில் உழவாரப் பணி செய்து வரும் சுகி.சிவம் அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளைப் பின்பற்றி வெற்றி பெறுவோம்.
No comments:
Post a Comment