Monday, February 18, 2013

ஆளுமைத் திறன் மேம்பாடு


1. எல்லாமும் இலக்குதான்

ஒரு மனிதனின் எல்லாவகையான செயல்பாடுகளையும் முடிவு செய்வது அவனது இலக்குதான்! எந்த குறிக்கோளும் இல்லாமல் சுற்றி திரிபவனை இலக்கில்லாமல் உள்ளான் என்கிறோம்.

இலக்குதான் ஒருவனின் அறிவை கூர்மையாக்குகிறது!
இலக்குதான் ஒருவனை சதனையாளனாக்குகிறது!
இலக்குதான் வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்துகிறது!
இலக்குதான் வாழ்வை சுவையுள்ளதாக்குகிறது!
இலக்குதான் ஒருவனை செயல்பட வைக்கிறது!
இலக்குதான் ஒருவனுக்கு அனுபவம் தருகிறது!
இலக்குதான் வாழ்வை உன்னதமாக்குகிறது!

வெள்ளையனுக்கு எதிராக கப்பல் விட வேண்டும் என்ற வ.உ.சிதம்பரனாரின் இலக்கு........

அடிமை வாழ்வில் அமிழ்ந்து கிடந்த இளைஞர்களை தாயக விடுதலைக்காக தட்டி எழுப்ப வேண்டும் என்ற மாவீரன் பகத்சிங்கின் இலக்கு.....

அம்மை நோயை உலகை விட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்ற மருத்துவ மாமேதை ஜென்னரின் இலக்கு...

அவர்களை மாமனிதர்களாக்கியது!

இலக்கு இல்லா மனிதன் உயிர் வாழும் பிணம்!

மனிதனை தொடர்ந்து இயக்கும் விசை இலக்குதான்!

2. இலக்கை வரையறுப்போம்

வாழ்வின் இலக்கை சரியான முறையில் வரையறை செய்து விட்டால் செயல்பாட்டில் சோர்வு இருக்காது. வெறுப்பு இருக்காது மற்றும் எரிச்சல் இருக்காது. இலக்கை வரையறை செய்யும்பொழுது அது அடையக்கூடிய, சாதிக்க கூடிய இலக்காய் இருப்பது அவசியம்.

நமக்கு நாமே வரையறுத்து கொண்டால் தான் அது இலக்கு! மற்றவர் நம் மீது திணித்தால் அதன் பெயர் தண்டனை!

இலக்கை வரையறை செய்வது எப்படி?

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பொதுத் தேர்வில் ஆயிரத்து இருநூறுக்கு எவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும்.

மதிப்பெண்ணை முடிவு செய்துவிட்டலே இலக்கை வரையறுத்துவிட்டதாக பொருளாகாது!

அந்த மதிப்பெண்ணை பயன்படுத்தி எந்த உயர் படிப்புக்கு செல்ல வேண்டும்?

அந்த படிப்பை முடித்துவிட்டு, எந்த பதவிக்கு செல்ல வேண்டும்?

அந்த பதவியை பயன்படுத்தி சமுதாயத்தில் எப்படி சிறப்பாக செயலாற்றவேண்டும்?

சிறப்பாக செயலாற்றுவதன் மூலம் மற்றவர்களுக்கு எப்படி முன்மாதிரியாய் விளங்க வேண்டும்?

இவையனைத்தையும் வரையறுப்பதுதான் இலக்கு!


3. இலக்கை வரையறுத்தலின் இரண்டு குணங்கள்

தன்னல அடிப்படையில் இலக்கை வரையறுக்கலாம்
பொதுநல அடிப்படையில் இலக்கை வரையறுக்கலாம்

ஒரு தொழிற்சாலையை நிறுவி எனது நாட்டு மக்கள் ஆயிரம் பெருக்கு வேலை வாய்ப்பை வுருவக்க வேண்டும் என வரையறுப்பது மறுகோணம். ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் போது கட்டாயம் நமக்கு வருவாய் கோடிகளில் வரும்.

முன்னது சுயநல இலக்கு!
பின்னது பொதுநல இலக்கு!

"அரசு பள்ளியில் ஆசிரியராகி கிடைக்கும் சம்பளத்தில் அழகிய வீடு கட்டி மகிழ்வுடன் வாழ்வேன்" என முடிவு செய்யலாம். "அரசு பள்ளியில் ஆசிரியராகி மாணவ மாணவியர்க்கு சிறப்பான கல்வி தருவேன். அரசு பள்ளியிலும் தரமான கல்வி வழங்கப்படுகிறது என்ற நல்லெண்ணத்தை சமுதாயத்தில் உருவாக்குவேன்! ஆசிரியர் பணி மூலம் சமுதாயத்தில் மண்டிக்கிடக்கும் அறியாமையை ஓட்டுவேன்" என முடிவு செய்யலாம்.

பொதுநல நோக்கில் இலக்கை வரையறுக்கும் போது நமது வருவாய் குறையாது. அதே சமயம் மனதில் இறுக்கம் குறையும். பெருமித எண்ணம் வளரும்!

"ஓர் உயர்ந்த உன்னத இலக்குக்காக செயலாற்றிக்கொண்டு உள்ளோம்" என்ற எண்ணம் நம் மனதில் உறுதியை உண்டாக்கும்! தடைகள், சிறு தோல்விகள் வந்தாலும் மனம் தளராது!

இன்றைய சமூக கருத்தியல் நமது உன்னத மனித வாழ்வை வெறும் சொத்து குவிக்கும் சுயநல வாழ்வாக சுருக்க முயல்கிறது. நமது மனிதத் தன்மையை சிறிது சிறிதாய் பூக்கி சுயநல பிண்டமாய் நம்மை மாற்ற எத்தனிக்கிறது.

பொதுநலன் - சமூக முனேற்றம் என்ற அடிப்படையில் இலக்கை வரையறுத்தல் மட்டுமே நாம் சுய நல கருத்தியலிலிருந்து தப்ப முடியும்.

இலக்கை சிறப்பாய் வரையறுத்தால் மட்டுமே திட்டமிடல் நுட்பமாய் அமையும்!


4. திட்டமிடல் (PLANNING)

இலக்கை வெற்றி கொள்ள திட்டமிடல் என்பது மிக மிக இன்றியமையாதது.

"திட்டமிட தவறுபவர்கள் தோல்வியடைய திட்டமிடுகிறார்கள்." [ If you fail to plan, you are planning to fail ]

திட்டமிடாத செயல்பாடு குழப்பத்தை விளைவிக்கும். நமக்கும் பிறருக்கும் மன உளைச்சலைத் தரும்.

திட்டமிடலில் பல நுட்பங்கள் உள்ளன.

ஒரு நாளுக்கான திட்டமிடல்
ஒரு வாரத்திற்க்கான திட்டமிடல்
ஒரு மாதத்திற்கான திட்டமிடல்
ஒரு பருவத்திற்கான திட்டமிடல்
ஒரு ஆண்டிற்க்கான திட்டமிடல்
பணியை அடிப்படையாக வைத்து திட்டமிடல்
காலத்தை அடிப்படையாக வைத்து திட்டமிடல்
பணியாளர்களை அடிப்படையாக வைத்து திட்டமிடல்

ஒட்டுமொத்த வேலைதிட்டத்தை (Project) பல கூறுகளாக (task) பிரித்து ஒவ்வொரு கூறுக்கும் தனித்தனியாக திட்டமிட வேண்டும்.

திட்டமிடல் ஒரு கலை!

சொற்களை கூர்த்து கவிதை புனைவதைபோல் திட்டமிடல் அமைய வேண்டும்.

திட்டமிடலுக்கு கணினி மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

இலக்கு எந்த அளவுக்கு சிறப்பாக வரையருக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு திட்டமிடல் நுட்பமாய் அமையும். திட்டமிடலுக்கு முன்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Rules and Conditions) பட்டியலிடப்பட வேண்டும்.

வீடு கட்ட திட்டமிடல்;
திருமணம் செய்ய திட்டமிடல்;
வங்கியில் கடன் வாங்க திட்டமிடல்;
வாங்கிய கடனை திரும்ப செலுத்த திட்டமிடல்;
நிறுவனத்தை உருவாக்க திட்டமிடல்;
நிறுவனத்தை மேலாண்மை செய்ய திட்டமிடல்;
தேர்வுக்கு படிக்க திட்டமிடல்;
பாடப்பகுதியை முடிக்க திட்டமிடல்;
அரசு நல திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல திட்டமிடல்;
ஊர் குளத்தை சீர் செய்ய திட்டமிடல்;
வேளாண்மை செய்ய திட்டமிடல்.....

இந்த சமூக அமைப்பையே மாற்றியமைக்க திட்டமிடல். என அனைத்து செயல்களுக்கும் திட்டமிடல் மிக அவசியம். எந்த திட்டமிடலும் இல்லாமல் செயலில் இறங்கினால் கால வீணடிப்பு ஏற்படும்.

மக்கள் நல அரசு [ Welfare Government ] எவ்வளவு சீரிய திட்டங்களை அறிவித்தாலும் அத்திட்டங்கள் மக்களை சென்றடைய திட்டமிடல் மிக மிக அவசியமாகும்.

திட்டமிடலுக்கு நேரம் ஒதுக்காது செயல்பாட்டில் இறங்குவது எப்படி முட்டாள்தனமோ அதேபோல் செயல்பாட்டில் இறங்காமல் திட்டமிட்டுக்கொண்டே இருப்பதும் முட்டாள் தனமே!

சில முற்போக்காளர்கள் மக்களிடம் சென்று பணியாற்றாமல், மக்கள் போராட்டங்களில் பங்கு பெறாமல் படித்துக்கொண்டும் திட்டமிட்டுக் கொண்டும் பயனற்று இருப்பதை காணலாம்!

விரைந்து திட்டமிட்டபின் உடனே செயலில் இறங்க வேண்டும்.

நமது திட்டமிடல் சரியா, தவறா என்பதை முடிவு செய்யப்போவது செயல்பாடுதான்!


5. செயல் செயல் செயல்

திட்டமிடல் முடிந்தவுடன் செயல்படத் துவங்க வேண்டும்.

வரும்முன் காப்பவன் அறிவாளி! வந்த பின்பும் காப்பவன் புத்திசாலி!

செயல்படும் பூத்து அறிவாளியாகவும் இருக்க வேண்டும், புத்திசாலியாகவும் இருக்கவேண்டும்.

வாழ்வே செயல்தான்! தொழில், குடும்பப்பணி, சமூகப்பணி, ஓய்வு, உறக்கம், பொழுதுபோக்கு என அனைத்தும் செயல்களே!

ஒரு குறிப்பிட்ட வேலையில் அல்லது பதவியில் இருக்கும்போது நமக்கு ஒதுக்கப்பட்ட கடமையை சிறப்புடன் செய்ய வேண்டும்!

நமது வேலையை ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்!

"செய்யும் தொழில் மென்மையானது, தொழில் செய்யும் இடம் உன்னதமானது" என்ற உணர்வு நமக்கு வரவேண்டும்.

தனியார் துறையில் கண்காணிப்பு கடுமையாய் இருக்கும். அதற்காக வெறுப்படையாமல் நமது கடமையை சிறப்புடன் செய்ய வேண்டும்.

அரசுத்துறையில் கண்காணிப்பே இருக்காது. அதற்காக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சோம்பல் அடையாமல் நமது கடமையை பொறுப்புடன் செய்ய வேண்டும்.

சுய தொழிலில் ஏற்றம் இருக்கும், இறக்கம் இருக்கும், தடைகள் இருக்கும். எதிர் பாராத இழப்பு இருக்கும். சுயதொழில் செய்வோர் தங்கள் வேலையை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

தனியார் துறையில் பணி நிறைவு உண்டு. பணிப்பாதுகப்பு குறைவு. சுய தொழிலில் வேலை செய்து கொண்டே இருப்பது போல் இருக்கும். ஆனால் உழைக்க உழைக்க நமக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

அரசுத்துறையில் விடுமுறை, பணிப்பாதுகாப்பு உண்டு. ஒரு சோஷலிச சமுதாயத்தில் ஒரு தொழிலாளிக்கு கிடைக்கக் கூடிய அணைத்து உரிமைகளும் அரசு ஊழியர், அரசுப்பள்ளி ஆசிரியர், அரசு கல்லூரி பேராசிரியருக்கு உண்டு. அனால் பணிநிறைவு கிடைப்பது இல்லை. குறைந்தபட்சம் வேலைகூட செய்யாத சிலபேர் மனநோயாளி ஆகின்றனர்.

அரசுப்பணியில் கடமையை சிறப்புடன் செய்யாதவர்கள் தங்கள் வருவாயின் பெரும்பகுதியை மருத்துவமனைக்கும் கோயில் பயணங்களுக்கும் செலவிடுவதை ஒரு ஆய்வு சொல்கிறது.

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் வாடும் பெற்றோர்களில் பெரும் பகுதியினர் அரசு ஊழியர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், பேராசிரிய பெருமக்கள் என்பது அதிர்ச்சி தகவல்.

சமூகத்தைப்பற்றி - கடமையைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் எந்த பிள்ளைகளுக்காக சொத்து சேர்த்து தங்கள் வாழ்வையே வீனாக்கினார்களோ அந்த பிள்ளைகளால் மிக மோசமாய் வஞ்சிக்கபடுபவர்களும் இவர்களே!

ஒரு மனிதன் மனித நியாயங்களுடன் மனிதப் பண்போடு தொடர்ந்து வாழ வேண்டும் எனில் எட்டுமணி நேரம் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும்.

செயல்தான் வாழ்கை! ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுநீர் தெளிவாய் இருக்கும்.

செயல்பட்டுக்கொண்டே இருக்கும் மனிதன்தான் தக்க சமயத்தில் சரியான முடிவு எடுக்கும் ஆற்றல் உள்ளவனாய் திகழ்கிறான்.


6. முடிவு எடுத்தல் (Decision Making)

நேர்மறையான சூழலிலும் நாம் எடுக்கும் தவறான முடிவு நமக்கு தோல்வியை தரும்.

முற்றிலும் எதிர்மறையான சூழலிலும் அல்லது தோல்வியின் விளிம்பிலும் நாம் எடுக்கும் சரியான முடிவு தோல்வியை வெற்றியாக மாற்றிக்காட்டும்.

இலக்கை வரையறுத்தல், திட்டமிடல், செயல்படல் என ஒவ்வொரு கட்டத்திலும் முடிவு எடுக்கவேண்டிய தேவைகள் வரும்.

திட்டமிடலில் எடுக்கும் முடிவு அமைதி நிலையில் எடுக்கும் முடிவு (Static Decision Making)

செயல்பாட்டில் எடுக்கும் முடிவு இயங்கு நிலையில் எடுக்கப்படும் முடிவு (Dynamic Decision Making)

என்னுடைய மாணவர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் அவர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிப்பு கிடைத்தது. கிராமப்புற மாணவர் ஒதுக்கீட்டின்படி ஸ்டான்லி கல்லூரியில் மருத்துவமும் கிடைத்தது.

"பரம்பரையில் ஒருவராவது மருத்துவராக வேண்டும்" என்ற தந்தையின் முடிவின்படி மருத்துவம் படித்தார். அவர் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது அவரது நண்பர்கள் பொறியியல் முடித்தனர். வளாகத்தேர்வில் வெற்றி பெற்றனர். பன்னாட்டு நிறுவனங்களில் மாதம் ஐம்பதாயிரம் ஈட்டத் துவங்கினர்.

எனது மருத்துவ மாணவர் கலக்கமுற்றார். தவறான முடிவு எடுத்துவிட்டோமோ என வருந்தினார். வெறும் எம். பி. பி. எஸ் - இல் பயனில்லை. மேற்கொண்டு முதுகலை படிக்க வேண்டும் என்ற நிலை. வங்கி கடனுதவியில் படித்தார். ஒரு கட்டத்தில் மனம் தளர்ந்து போனார்.

இந்த சுழலில் தகவல் தொழில் நுட்ப துறை வீழ்ந்தது. சத்யம் கம்புடேர்ஸ் இராமலிங்க ராஜு கம்பி என்ன தொடங்கினார். ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் ஐம்பதாயிரம் சம்பளம், அதை முன்மாதமே செலவு செய்யும் கடன் அட்டை கலாச்சாரம், ICICI வங்கி வீட்டுக்கடன் பெற்றிருந்த தங்கள் நிறுவன உழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினரை வெளியேற்றி அனாதைகலாகியது. சிலர் பைதியக்காரர்களானர்கள்.

எம். பி. பி. எஸ் முடித்து எலும்பு முறிவு பட்டய படிப்பு முடித்த எனது மாணவருக்கு இப்போது மகிழ்ச்சி. பெருமிதம்! "மருத்துவம் படித்தல்" என்ற தனது முடிவு சரியே என்ற எண்ணம்!

அந்தந்த சூழலுக்கு ஏற்பவே நாம் முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எனில் வெற்றியை நோக்கி பயணம் செய்ய வேண்டும். தவறான முடிவு எனில் அதிலிருந்து பாடம் கற்க வேண்டும்.

தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு தொழிற்சாலையையே நிர்வாகம் செய்யும் பொறுப்பு 1917 இல் ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்கு பின் ஏற்பட்டது. அப்போது தொழிலாளர்கள் மாமேதை லெனினிடம் எங்களுக்கு நிர்வாகம் செய்வதில் முன் அனுபவம் இல்லை என முறையீடு செய்தனர். அப்போது லெனின் சொன்னார்,

"தெரியாததை தெரிந்து கொள்வோம்
தவறுகளை திருத்திக்கொள்வோம்"

முடிவு எடுத்தலுக்கும் இது பொருந்தும்.

பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு தொடர்வண்டியை பிடிக்க ஓடுகிறோம். வண்டி புறப்பட்டுவிட்டது. அடுத்த வண்டியில் போகலாம் என்ற முடிவு பாதுகாப்பாய் நம்மை ஊருக்கு அழைத்து செல்லும். எப்படியும் இந்த வண்டியை பிடித்து விடலாம் என்ற முடிவு நம்மை ஊனமாக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும். பணத்தை ஈட்டியபின் ஒரு பொருளை வாங்கலாம் என்ற முடிவு அந்த பொருளுக்கு நம்மை அதிபராக்கும். தவணை கடனில் பொருள் வாங்கலாம் என்ற முடிவு அந்த பொருளுக்கு நம்மை அடிமையாக்கும்.

முடிவு எடுக்கும் ஆற்றலைத் தருவது ஆளுமைத் திறனே!


7. ஆளுமை (PERSONALITY)

ஆளுமை திறன் சிறப்பாய் உள்ளவர்களால் மட்டுமே நெருக்கடியான சூழலிலும் சரியான முடிவை எடுக்க இயலும்.

ஆளுமை என்பது இரண்டு கூறுகளை உடையது.

1. உருவ ஆளுமை 2. உள்ள ஆளுமை

உருவ ஆளுமை மூன்று முக்கிய காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. 1.உடை 2.உடல்நலன் 3. தோற்றப்பொலிவு

உள்ள ஆளுமை என்பது மனப்பான்மை (Attitude) மற்றும் தலைமைப் பண்புகளால் (Leadership Characters) தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட வேலையை செய்பவர், ஒரு சிறு குழுவை வழி நடத்துபவர், மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர், ஆசிரியர்களை வழிநடத்தும் தலைமை ஆசிரியர், ஊழியர்களை வழி நடத்தும் வங்கி மேலாளர், மாவட்ட நிர்வாகத்தை வழி நடத்தும் முதலமைச்சர், நாட்டை வழி நடத்தும் தலைமை அமைச்சர்.... என அனைவருக்கும் ஆளுமை திறன் இன்றியமையாதது ஆகும்.

ஆளுமை திறன் இல்லாதவர்கள் தலைமை இடத்தில இருந்தால் அவர்கள் மற்றவர்களை கண்டு அஞ்சுவர். அச்சத்தின் வெளிப்படை மற்றவர்கள் மீது கோபப்படுவர். எரிந்து விழுவர். சிறு தவறுகளையும் பெரிதாக்கி தங்களையும் மற்றவர்களையும் குழப்பிக் கொள்வர்.

ஆளுமைத் திறன் உடையவர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மீது அதிகம் கோபப்பட மாட்டார்கள். தங்களுக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளைக் கண்டு தேவையின்றி பயப்படவும் மாட்டார்கள்.

ஆளுமைத் திறன் உடையவர்கள் எப்போதும் நிகழ்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுவர். இறந்த கால நிகழ்வின் மூலம் சில படிப்பினைகளை பெறுவர். மற்றபடி இறந்தகால ஆராய்சிக்காக தங்களின் ஆற்றலை வீணாக்கமாட்டார்கள். எதிர்கால திட்டமிடல் அவர்களிடம் இருக்கும். எதிர்கால கற்பனை அவர்களிடம் இருக்காது.

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்த நாட்டு மக்களின் ஆளுமை திறனை பொறுத்தது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வழக்கமான பாடங்களுடன் ஆளுமை திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்"

என்ற திருக்குறளில் உள்ள திண்ணியர் என்ற சொல் ஆளுமை திறனை குறிக்கிறது.

ஆளுமைத் திறனை முறையான பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ளலாம். நான் என்று முதல் எனது ஆளுமை திறனை வளர்த்துக் கொள்வேன் என்ற ஆழமான உறுதியான விருப்பம் (Deep Strong Desire) இருக்க வேண்டும்.


8. உருவ ஆளுமை

உருவ ஆளுமை உடை, உடல்நலன், தொற்றப்போளிவால் முடிவு செய்யப்படுகிறது. உருவ ஆளுமையை ஒப்பனை மூலம் உருவாக்கலாம். ஆனால் அது போலியான ஆளுமை என்பது உடனே வெளிப்பட்டுவிடும்.

முருங்கைக்காய் போல கைகள் உள்ள ஒரு நடிகன் காவல்துறை அதிகாரி வேடத்தில் பாத்து பேரை புரட்டி பந்தாடுகிறான், உண்மையான சண்டையாய் அது தோன்றாமல் நமக்கு அது நகைச்சுவை காட்சியாய் தோன்றக் காரணம் அவன் உருவ ஆளுமை போலியானது என்பதாலேயே!

அறுபது வயது நெருங்க உள்ள கிழ நடிகன் உலகில் உள்ள முகப்பூச்சை எல்லாம் முகத்தில் அப்பிக் கொண்டு பதினெட்டு வயது நடிகையுடன் காதல் பாட்டு பாடுகிறான். எவ்வளவு முயன்று கற்பனை செய்தாலும் அவர்கள் நம் பார்வைக்கு காதலர்களைப் போல் தோற்றமளிப்பது இல்லை. தாத்தாவும் பேத்தியும் போல் தோன்றக் காரணம் உருவ ஆளுமை போலியானது என்பதாலேயே!

உருவ ஆளுமையில் முதன்மையானது உடை.

"ஆள்பாதி ஆடைப்பாதி" என்ற நம் முன்னோர் முதுமொழி ஆடையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்.

"கந்தையானாலும் கசக்கிக் கட்டு" என்ற ஒளவையின் பொன்மொழி உடையை எப்படி நேர்த்தியாய் உடுக்க வேண்டும் என்பதை புரியவைக்கும்.

"காந்தியைப் போல் நீங்கள் ஏன் எளிமையாய் உடுப்பதில்லை?" என அண்ணல் அம்பேத்காரை கேட்டனர். அதற்க்கு அவர், "காந்தி கந்தை துணியை கட்டினாலும் அது எளிமை என பெருமைப்படுவர். என்னைப்போல் அடித்தட்டு உழைக்கும் வர்கத்திலிருந்து முயன்று படித்து உயர்ந்த பட்டங்களை பெற்றவர் கந்தை துணியை கட்டினால் அதை ஏளனமாகவே பார்ப்பார். நேர்த்தியான உடை என்பது எமது மக்களுக்கு மிக மிக அவசியம்" என பதிலளித்தாராம் அண்ணல் அம்பேத்கார்.

உடைக்கு அடுத்து நல்ல உடல் நலன். "மிகினும் குறையினும் நோய் செய்யும்" என்பார் திருவள்ளுவர்.

உணவு, உழைப்பு, உறக்கம். இவை மூன்றும் குறைந்தாலும் நோய்! அதிகமானாலும் நோய்!!

உடலுழைப்பு இல்லாத சட்டைமடியா (White Collar) பணியாளர்களுக்கு உடற்பயிற்சி மிக மிக அவசியம்.

தோற்றப்பொலிவு என்பது சுறுசுறுப்பை அடிப்படையாய் கொண்டது.

"நிற்கையில் நிமிர்ந்து நில்! நடப்பதில் மகிழ்ச்சி கொள்!" என்பார் பாவேந்தர். இயங்கிக் கொண்டே, செயல்பட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு தோற்றப்பொலிவு தானாய் வரும்.

"நகையும் உவகையும் கொல்லும் சினம்" என்பார் திருவள்ளுவர். கோபம் நமது தோற்றப்பொலிவை உருக்குலைத்து விடும். ஒவ்வொரு நாளும் நமது உருவ ஆளுமை மேம்பட உடற்பயிற்சி, மனப்பயிற்சி செய்தல் வேண்டும்.



9. உள்ள ஆளுமை

உருவ ஆளுமையை விட உள்ள ஆளுமை ஆழமானது, ஆற்றலானது. பைத்தியக்காரனை போல் தோற்றமளிக்கும் பலர் மாபெரும் விஞ்ஞானியாய் இருந்துள்ளனர். கோமாளி தோற்றத்தில் பல புரட்சியாளர்கள் வாழ்ந்துள்ளனர்.

அமரிக்க இராணுவத்தை ஓடஓட விரட்டிய பெருமை வியட்நாம் தேசத்திற்கு உண்டு. வியட்நாம் மக்கள் ஹோசிமின் என்ற அற்புத மனிதரின் தலைமையிலயே இந்த எட்டாவது அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினர். ஹோசிமின் தோற்றத்தில் மூங்கில் குச்சியைப் போல் இருப்பார். அவரின் உள்ள ஆளுமைதான் வியட்நாம் மண்ணை விடுவித்தது. மார்சியம் - லெனினியம் என்ற அறிவு ஆயுதத்தை வியட்நாம் தேசியத்துடன் இணைத்து அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து உலகம் வியக்கும் கொரில்லா போரை நடத்தினார், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை விரட்டினார். பின்னர் பல ஆண்டுகள் போராடி பல இலட்சம் உயிர்களை இழந்து அமரிக்க இராணுவத்தை ஓடஓட விரட்டினார்.

"உள்ளம் இலாதார் எய்தார் உலகத்து
வல்லியம் என்னும் செறுக்கு" என்ற திருக்குறளில் உள்ளம் என்ற சொல் உள்ள ஆளுமையைக் குறிக்கிறது.

சிலர் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வர். அவர்களிடம் உள்ள ஆளுமை உயர்வாய் உள்ளது என பொருள்.

சிலர் சிருமைபுத்தியுடன் நடந்து கொள்வர். அவர்களிடம் உள்ள ஆளுமையை தீர்மானிப்பது மனமே!

மனம் விசித்திரமானது.

மலைபோல் பிரச்சினைகள் வந்தாலும் அதை கடுகாய் பார்க்கும் ஆற்றல் வாய்ந்தது மனமே!

கடுகளவு சிறிய குழப்பத்தையும் மலைபோல் கற்பனை செய்வதும் மனமே!

"வெறுங்கை என்பது மூடத்தனம். விரல்கள் பத்தும் மூலதனம்" என்ற கவிஞர் அமரர் தாராபாரதியின் கவிதைபடி தன்னம்பிக்கையை தருவது மனமே!

தாழ்வு மனப்பான்மை என்ற சகதியில் நம்மை சிக்கவைப்பதும் மனமே!

கோடிக்கணக்காக சொத்து இருந்தும் தங்களை எப்போதும் பிச்சைக்காரர்களாகவே பாவிக்கும் மனிதர்களுக்கு ஒவ்வொரு நாளும் குழப்பத்தை தருவது மனமே!

கொடும் சிறையிலும் மக்களுக்காக மக்களின் விடுதலைக்காக சிந்திப்பது உள்ள ஆளுமையின் உயர்வால்!

தன்னலத் தலைவர்கள் தன் பெண்டு பிள்ளைகளுக்காக கொள்கை, இலட்சியம் அனைத்தையும் காற்றில் பறக்க விடுவது உள்ள ஆளுமையின் தாழ்வால்!

உள்ள ஆளுமை உயர உயர பிறர் நலன், பொது நன்மை, அடுத்த தலைமுறை மக்கள் மீது அக்கறை... என மனம் விரியும்.

உள்ள ஆளுமை தாழ தாழ - தன்னலம், தன்பெண்டு, தன்பிள்ளை - என மனம் சுருங்கும்.

உள்ள ஆளுமையின் முதன்மைக் கூறு மனப்பான்மை.


10. மனப்பாண்மை

மனப்பாண்மை என்பது நேர்மறை மனப்பாண்மை மற்றும் எதிர்மறை மனப்பாண்மை என இருவகையில் அமைகிறது. ஓர் உண்மை நிகழ்வை விளக்கினால் இன்னும் நன்றாகப் புரியும். இரண்டு கல்லூரி மாணவர்கள் அரக்கோணத்திலிருந்து திருத்தணியை நோக்கி இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர். வழியில் கொடுமையான விபத்தை சந்திக்கின்றனர். மயக்கம் நீங்கி கண்விழித்து பார்த்த போது இருவரும் சென்னை பொதுமருத்துவமனையில்! பாவம்! இரண்டு பேரும் ஒருஒரு கையை இழந்து இருந்தனர்.

பத்து நாள் கழித்து நானும் எனது நண்பரான கல்லூரி பேராசிரியரும் சென்று அவர்களை பார்த்தோம். முதலில் சந்தித்த மாணவன் எங்களை பார்த்தவுடன் கதறி அழுதான். "ஐயா! ஒரு கை போய்விட்டதே! ஒரே ஒரு கையை வைத்துக்கொண்டு எப்படி வாழ்வேன்?" விபத்து நடந்து பத்து நாட்கள் முடிந்த பின்பும் அவனால் அந்த இழப்பை ஏற்க இயலவில்லை. அடுத்த மாணவனை சந்திக்க முதல் மாடிக்கு சென்றோம். அவன் நாங்கள் வந்திருப்பதை கூட கவனிக்காமல் இருக்கும் ஒரு கையில் "இருநகரக் கதை" என்ற சார்லஸ் டிக்கன்சால் எழுதப்பட்டு பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட நூலை படித்துக் கொண்டிருந்தான். எங்களுக்கு கோபம். அவனைப்பார்த்து "என்ன தம்பி! விபத்து நடந்து ஒரு கையை இழந்துள்ளாய்! கொஞ்சம் கூட கவலையின்றி படித்து கொண்டு இருக்கிறாயே?" என அவனிடம் கோபமாய் கேட்டோம். அந்த மாணவன் எங்களைப் பார்த்து, ஐயா! ஒரு கையாவது இருக்குதே ஐயா! இதுவும் இழந்திருந்தால் எனது நிலை என்ன?" என கூறினான்.
  • ஒரு கையை இழந்து விட்டோமே? - எதிர்மறை மனப்பாண்மை
  • ஒரு கையாவது உள்ளதே - நேர்மறை மனப்பாண்மை
  • அப்பா, அம்மா படிக்கவில்லையே! - எதிர்மறை மனப்பாண்மை
  • அப்பா, அம்மா படிக்கவில்லை என்றாலும் என்னை பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனரே - நேர்மறை மனப்பாண்மை
  • தேர்வில் பத்து மதிப்பெண்கள் குறைந்துவிடுமே - எதிர்மறை மனப்பாண்மை
  • தேர்வில் தொண்ணூறு மதிப்பெண்கள் வரும் - நேர்மறை மனப்பாண்மை
  • தொடர் வண்டியில் உட்கார இடம் கிடைக்க வில்லையே - எதிர்மறை மனப்பாண்மை
  • தொடர் வண்டியில் நிற்க தாராளமாய் இடம் கிடைத்துள்ளதே - நேர்மறை மனப்பாண்மை
  • எதிர்மறை மனப்பாண்மை நம் தன்னம்பிக்கையை வலு குறையச் செய்யும். 
  • நேர்மறை மனப்பாண்மை நம் தன்னம்பிக்கைக்கு வலு ஊட்டும்.
  • எதிர்மறை மனப்பாண்மை இறந்த காலத்தில் கவனம் செலுத்தும்.
  • நேர்மறை மனப்பாண்மை நிகழ்காலத்தில் மனதை குவியப்படுத்தும்.
  • எதிர்மறை மனப்பாண்மை நடந்து முடிந்த நிகழ்வை ஏற்க மறுக்கும். குழப்பம் விளைவிக்கும். 
  • நேர்மறை மனப்பாண்மை நடந்து முடிந்ததை அப்படியே ஏற்கும். அதன் அடிப்படையில் திட்டமிடும். 
  • நேர்மறை மனப்பாண்மை பெற தலைமைபண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும்.


11. தலைமைப் பண்புகள்
பத்து பேரை, நூறு பேரை வழிநடத்தும் தலைமை பதவியில் இருப்போர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் விளங்க வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகளே தலைமைப் பண்புகள் எனப்படுகின்றன.

இறைமாட்சி அதிகாரத்தில் திருவள்ளுவர் அரசனுக்கு வலியுறுத்தும் பண்புகளும் தலைமைப்பன்புகலே.

அஞ்சாமை
ஈகை
அறிவு
ஊக்கம்
தூங்காமை
கல்வி
துணிவுடைமை
அறம்
மறம்(வீரம்)
மானம்
காட்சிக்கு எளிமை
கடும் சொல் பேசாமை
இன்சொல் பேசுதல்
செவிகைப்ப சொற் பொறுக்கும் பண்பு
சான்றாண்மை.....
அரசியல் கட்சிகளை வழிநடத்தும் தலைவர்களுக்கு இப்பண்புகள் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஒழுக்கம்
தன்முனைப்பு
உழைப்பின் மேன்மை
கால மேலாண்மை
அறிவியல் பார்வை
கடமை உணர்வு
வாழ்வை எதிகொள்ளும் துணிவு
நாட்டு மக்கள் மீதான பட்டரு
சாதனை படைக்கும் வேட்கை
மனித நேயம்
இவையும் தலைமைப் பண்புகளே!


12. கால மேலாண்மை

காலம் நம்மை மேலாண்மை செய்யக் கூடாது. காலத்தை நாம்தான் மேலாண்மை செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் நல்ல நேரம் என எண்ணி பல மனிதர்களின் பல மணி நேரத்தை வீணாக்கும் பிற்போக்கு சமுதாய அமைப்பில் வாழ்ந்து வருகிறோம்.

முன்னேற வேண்டும், வாழ்வில் நல்லது நடக்க வேண்டும், வெற்றி கிட்டவேண்டும் என அனைவரும் விழைகிறோம். ஆனால் அதற்கெல்லாம் அடிப்படை காலத்தை செப்பமாய் பயன்படுத்துவதே!

காலம் தொடர்பான அடிப்படையான மூன்று விதிகள்.

1. காலம் அனைவருக்கும் பொதுவானது [ Time is common to all ]
2. காலம் அனைவருக்கும் இலவசமானது [ Time is free to all ]
3. காலம் உயிர் போன்றது [ Time is life ]

உயிர் போன்ற காலத்தை சிறப்புடன் நுட்பமாய் பயன்படுத்துவதிலையே வாழ்வின் வெற்றி உள்ளது!

காலம் அனைவருக்கும் பொதுவானது!
நிலம் அனைவருக்கும் பொதுவானது இல்லை.

முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாய் கிடைப்பது இல்லை.

உலக தரம் வாய்ந்த பள்ளிகளில் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு சிலருக்கு வாய்க்கிறது.

வறுமை, சூழல், பெற்றோரின் இயலா நிலை காரணமாக பள்ளிக்கு செல்லும் வாய்ப்பே பலருக்கு மறுக்கப்படுகிறது. வசதியான மாளிகையில் சிலர் பிறக்கின்றனர். போக்குவரத்து, மருத்துவம், கல்வி, பொழுதுபோக்கு, உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள நகர்புற சூழல் சிலருக்கு கிடைக்கிறது.

இந்த வசதிகள் ஏதும் இல்லாத அல்லது குறைவாக உள்ள கிராமப்புறத்தில் பலர் வாழ்கின்றனர்.

மேற்கூறிய இவர்கள் அனைவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான்.

காலம் அனைவருக்கும் இலவசமானது

தண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறோம்!

சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் காற்று கூட "தூய ஆக்சிஜன்" என்ற பெயரில் உருளையில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது.

ஆனால் காலம் நமக்கு இலவசமாய் கிடைக்கிறது. காலையில் எழுந்து கண்திறந்தால் இயற்கை அன்னை இந்தா என்று 24 மணி நேரத்தை நம் கணக்கில் இனிதாய் தருகிறாள்.

காலம் உயிர் போன்றது

காலம் பொன் போன்றது என்பது பழைய மொழி. பொன் விலை உயர்ந்ததுதான். ஆனால் நமக்கு நெருக்கடி ஏற்படும்போது மார்வாடிக் கடைக்கு செல்கிறது. பின்னர் வாய்ப்பு இருந்தால் மீண்டு வருகிறது. ஆனால் காலமும் உயிரும் சென்றால் திரும்புவது இல்லை. எனவே காலம் உயிர் போன்றது!

உயிரினும் மேலான காலத்தை சிறப்பாக நிர்வாகம் செய்வதிலேயே நமது வாழ்வின் வெற்றி அமைகிறது!

காலம் அறிதல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் எழுதியுள்ள பத்து குறட்பாக்களையும் படித்து பின்பற்ற வேண்டும்.

காலத்தின் மேன்மையை உணர்ந்து சிறப்பாக செயல்படுபவரால் மட்டுமே வெற்றி அடைய இயலும்.

2 comments: