Tuesday, February 12, 2013

இலட்சியமில்லாத வாழ்க்கை


ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஏதாவதொரு இலட்சியத்தோடு இருக்கின்றான். இலட்சியமில்லாத மனித வாழ்க்கை ஒரு முடிவில்லாத பயணமென்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனின் மூளையில் எத்தனையோ எண்ணங்கள் பிறக்கின்றன. மனிதனுடைய உணர்வுகள் இந்த எண்ணங்களுக்கு வடிவத்தைக் கொடுக்கின்றது. வடிவமாக்கப்பட்ட எண்ணங்கள் செயலாக்கம் பெறுவதற்கு தகுந்த வழியை அமைத்துக் கொள்கின்றது. மனிதன் வகுத்த பாதையில் அவனுடைய எண்ணங்கள் இலட்சியத்தோடு செயல்படுத்த முற்படுகின்றன.

மனிதன் எதற்காக பிறவி எடுக்கின்றான்? இந்த மனிதப் பிறவியின் அர்த்தமென்ன? உலகத்திலுள்ள எந்த ஜீவராசியும் அர்த்தமற்ற பிறவியைப் பெறுவதில்லை. அந்தந்த ஜீவராசி ஏதோ ஒரு அர்த்தத்தோடு செயல்படுகின்றது. அதனுடைய செயல் இந்த உலகத்திற்கு ஏதாவது ஒரு வழியில் பலனைக் கொடுக்கிறது. அது போல மனிதனுடைய ஒவ்வொரு செயலும் இந்த உலகத்துக்கு ஏதாவது ஒரு வழியில் பலனைக் கொடுக்கிறது. மனிதனுடைய ஒவ்வொரு ஆக்கமும் அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தோடு இணைத்துப் பேசப்படுகிறது. மனிதன், அவனுக்குள்ளிருக்கும் சக்தியை செயலாக்கத்தில் மாற்றுவதற்கு முயற்சி எடுத்துக் கொள்கிறான். அவனுடைய ஆக்கத்தால் இந்த சமூகம் பயன் பெறுகிறது. தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தாமல் முடங்கிக் கிடக்கும் மனிதனின் வாழ்க்கை அர்த்தமில்லாதது.

தன்னுடைய எண்ணத்தை செயல்படுத்துவதற்கு ஒவ்வொரு மனிதனும் அதை இலட்சியமாகக் கொண்டு செயல்படுகிறான். இந்த இலட்சியம் அவனிடம் ஒரு தொலைநோக்குப் பார்வையை உருவாக்குகிறது. அதற்கென தனிப் பாதையை வகுத்துக் கொள்கிறான். அந்தப் பாதையில்தான் அவன் பயணிக்கிறான். அவனுடைய இலட்சியம் நிறைவேறிய பின்பு அவனுடைய பயணம் முடிந்து விடுவதில்லை. மீண்டும் மற்றொரு எண்ணம் தோன்றுகிறது. அடுத்து ஒரு இலட்சியம் உருவாகிறது. இப்படியே மனிதன் மறுபடியும் இன்னொரு பாதையில் பயணம் செய்கிறான். அவனுடைய வாழ்க்கைப் பயணச் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது.

ஒரு மனிதன் இலட்சியத்தை எந்த நோக்கத்தோடு பார்க்கிறான் என்பது முக்கியமானது. உதாரணத்திற்கு ஒரு மனிதன் வருங்காலத்தைப் பிரகாசமாகப் பார்க்கிறான். இதையே இன்னொரு மனிதன் இருட்டாக பார்க்கிறான். அனைத்தையும் நல்லதாகப் பார்த்தால் தீமையும் நல்லதாக தெரியும், அதையே மற்றொருவன் கெட்டதாக பார்த்தால் நல்லதும் கெட்டதாக தெரியும். ஒரு ஆக்கத்தை செயல்படுத்தும் ஒவ்வொரு மனிதனுடைய பார்வையும் வேறுபடுகிறது. மனிதனுடைய ஆக்கம் அவனுடைய பார்வையில் நல்லதாக தோன்றி செயல்படுத்தப்பட்டால், அவனின் ஆக்கத்தால் சமூகம் பயனடைகிறது. இதையே வேறு விதத்தில் எடுத்துக் கொண்டால் சமூகம் நிச்சயமாக துன்பப்படப் போகிறது. மனிதனுடைய பயணம் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தால் அவன் நல்லதொரு முடிவைப் பெறுகிறான். அவன் தொடங்கிய ஒவ்வொரு பயணமும் முடிவைப் பெறும் போது, அந்த பயணத்தின் முடிவு நல்லதாகவோ, கெட்டதாகவோ அமைவதற்கு அவன் வகுத்துக் கொண்ட பாதையே காரணமாக இருக்கிறது. 

இலட்சியம் மனிதனுடைய வாழ்க்கையை அர்த்தமுள்ள வாழ்க்கையாக அமைக்கிறது. இலட்சியமில்லாத வாழ்க்கையை வாழும் மனிதன் முடிவில்லாத பாதையில் பயணித்து தன் வாழ்க்கையையும் தன்னைச் சார்ந்தவர்களது வாழ்க்கையையும் துன்பத்தில் முடிக்கிறான். மனிதனுடைய வாழ்க்கை ஏதாவது ஒரு வகையில் இந்த சமூகத்தோடு இணைத்துப் பார்க்கப்படுகிறது. மனிதனுடைய எண்ணம், செயல், ஆக்கம், நோக்கம், இலட்சியம் எல்லாமே சமூக நலனைச் சார்ந்ததாதாக இருக்க வேண்டும். எடுத்துக் கொண்ட இலட்சியம் மனித சமுதாயத்திற்குப் பயனுள்ளதாய் இருந்தால் அவன் மறைந்தாலும் சில காலத்திற்காவது நினைக்கப்படுகிறான். மற்றவர்கள் மனிதாபிமானமற்றவர்களாக இருக்கும்போதே ஒதுக்கப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment