உன்னால் முடியும்: தவறுகளே சரியானதைக் கற்றுக் கொடுத்தது
டி.பாலகிருஷ்ணன், ஆர்பி இன்ஜினீயரிங், கோயம்புத்தூர்.
நானே தொழில் முனைவோராக இருப்பது மாத்திரமல்ல, பல தொழில் முனைவோர்களின் தேவைகளையும் நிறைவேற்றுகிறேன் என்கிறார் கோவையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். தற்போது சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரத்தை தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு தேவைக்கு ஏற்ப பல கருவிகளையும் செய்து கொடுத்துக் கொண்டிருந்தேன். 2009க்கு பிறகு சப்பாத்தி தயாரிக்கும் இயந்திர உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன் என்றவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிலிருந்து...
இப்போது எனது நிறுவனத்தில் நாற்பது பேருக்கு நிரந்தர வேலை கொடுத்திருக்கிறேன் என்பதும், என்னிடமிருந்து இயந்திரம் வாங்கி, பலர் தொழில் செய்கின்றனர் என்பதும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்று தனது அனுபவத்தை சொல்லத்தொடங்கினார். ஆனால் இந்த வளர்ச்சிகளெல்லாம் ஜீரோவிலிருந்து தொடங்கியது. எனது உழைப்பும், அனுபவங்களும் மட்டுமே என் உடன் இருந்தது என்றார்.
எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தேன். கோயம்புத்தூர்தான் சொந்த ஊர் என்பதால் அவ்வப்போது தொழில் பட்டறைகளுக்கு வேலைக்குச் சென்று வருவேன். படித்து முடித்ததும் மின்சார துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். அதில் ஒரு வருடம்தான் நீடித்தேன். வருமானம் போதவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரே மாதிரியான வேலைகளைச் செய்வது சலிப்பாகவும் இருந்தது. எனவே தனியாக தொழில் செய்ய வேண்டும் என்கிற யோசனையோடு நிறுவனங்களுக்கான மின்சார இணைப்பு கொடுக்கும் வேலைகள், மின் இணைப்புக்கான ஏற்பாடுகள், பெரிய நிறுவனங்களுக்கு டிரான்ஸ்பார்மர் பொருத்தும் வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டேன்.
கோவை பகுதியைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு இந்த தேவை இருந்ததால் தொழிலும் நன்றாக நடைபெற்றது. ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்ட வேலை என்பதால் ஒரு பெரிய வேலைக்கு எனக்கு சேர வேண்டிய பணம் வந்து சேரவில்லை என்பதால் நஷ்டத்தைச் சந்தித்தேன். அதிலிருந்து மீண்டும் அந்த தொழிலைச் செய்ய முடியவில்லை.
திரும்பவும் ஒப்பந்த தொழில் என்கிற தவறை செய்யவில்லை. வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்வது, அவற்றுக்கான சர்வீஸ் வேலைகள் செய்வது என அடுத்த கட்ட முயற்சிகளில் இறங்கினேன். என்னுடைய தொழில்நுட்ப அனுபவத்தைக் கொண்டு சிறு சிறு இயந்திர உற்பத்திகளையும் தொடங்கினேன். இதற்காக வீட்டையே பயன்படுத்திக் கொண்டேன்.
இறக்குமதி செய்யப்படும் இயந்திரங் களுக்கான துணை கருவிகளை வெளி நாட்டிலிருந்து வாங்கினால் அதிக விலையாகும், அதற்கு பதிலாக அதேபோல குறைந்த விலையில் கருவிகளை தயாரித்துக் கொடுத்தேன். இதன் மூலம் பெரிய பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக கிடைத்தனர்.
இந்த வேலைகளை மேற்கொண் டிருக்கும்போதே தனியாக இடம் வாங்கி தொழில் நிறுவனத்தையும் தொடங்கிவிட்டேன். இங்கிருந்து சிறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கருவிகள் செய்ய தொடங்கினேன். குறிப்பாக கைகளால் செய்யக் கூடிய வேலைகளை இயந்திரங்களால் செய்வதற்கு ஏற்ப கருவிகள் செய்தேன்.
இடியாப்பம், இனிப்புகள் செய்வதற்கான இயந்திரம், தோசை தயாரிப்பதற்கான இயந்திரம் போன்றவை செய்தேன். உணவகங்கள், கல்லூரி விடுதிகள் என பெரிய அளவு தேவைகள் இருப்பவர்கள் தேடிவரத் தொடங்கினர். மேலும் இப்படி வருபவர்களின் தேவைக்கு ஏற்ப பல கருவிகளும் செய்து கொடுத்தேன். இதில் கவனம் செலுத்த தொடங்கிய பிறகு முதலில் மேற்கொண்டிருந்த தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டேன்.
உணவகங்களுக்கான கருவிகள் ஒரு பக்கம் என்றால், சுய தொழில் முயற்சிகளில் இறங்குபவர்கள் சப்பாத்தி இயந்திரங்களுக்காக தேடி வரத்தொடங் கினர். ஏதாவது தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பவர்களுக்கு இந்த இயந்திரங்கள் நம்பிக்கை கொடுத்தது. உடனடி சப்பாத்திக்கான சந்தை இப்போது எல்லா ஊர்களிலும் வந்துவிட்டது.
அதனால் இப்போது சப்பாத்தி இயந்திர உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். மாதத்துக்கு 5 இயந்திரங் களாவது விற்பனை செய்கிறேன். இதுவே எனக்கு திருப்தி தரும் விஷயம்தான். விற்பனைக்கு பிறகு அவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன். என்னிடம் இயந்திரம் வாங்குபவர்கள் தொழில் முனைவோராக அடையும் வெற்றியை எனது வெற்றியாகவே பார்ப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது.
இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது என் தவறுகள்தான் என்று குறிப்பிடுவேன். ஒவ்வொரு முறையும் புதிய முயற்சிகளில் இறங்கும்போது, நான் ஏற்கெனவே செய்த தவறுகளே ஆசான்களாக இருந்தது. அதாவது சரியானதை கற்றுக் கொள்ள தவறுகளே காரணமாக இருந்தது என்றார். இது தொழில்முனைவோர் தங்களது அனுபவத்திலிருந்து அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
No comments:
Post a Comment