Wednesday, September 9, 2015

விழுந்தாலும் எழுந்து நட, உன்னால் முடியும் – வெள்ளை மாளிகையின் உயர் விருது பெற்ற சாதனைத் தமிழன்

விழுந்தாலும் எழுந்து நட, உன்னால் முடியும் – வெள்ளை மாளிகையின் உயர் விருது பெற்ற சாதனைத் தமிழன்

வெள்ளை மாளிகையின் உயர் விருது பெற்ற சாதனைத் தமிழன் பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தனுடன் நேர்முகம்

” கேள்வி : ஆம், பேராசிரியர் அவர்களே! அமெரிக்க இராணுவத்துக்குத் தாங்கள் பங்களித்தமைக்காக, குறிப்பாக அமெரிக்கப்படைகளால் அல்கெய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட படை நடவடிக்கையில் தங்களுக்கு நேரடியான பங்களிப்பு இருந்ததாகவும், அதற்காகவே இந்த விருது கிடைத்ததாகவும் பேசப்படுகிறதே….. அது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : இது முற்றிலும் தவறானது. அமெரிக்காவின் படைத்துறைக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. பாதுகாப்பு அமைச்சகத்தின் அநுமதி கூட எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.”


தன்னம்பிக்கை + முயற்சி = சாதனை
வெள்ளை மாளிகையின் உயர் விருது பெற்ற சாதனைத் தமிழன் பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தனுடன் நேர்முகம்
செவ்வி கண்டவர் : ஆதிரையன்

பேராசிரியர் சிவநாதனைப் பற்றி

ஒன்பது பேர் அடங்கிய குடும்பத்தில் ஆறாவது பிள்ளை
பிறப்பிடம்: மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
தந்தையார்: தமிழ்ப் பண்டிதர் – ஓய்வுபெற்ற அதிபர் (ஊரிக்காடு, வல்வெட்டித்துறை), தாயார்: ஆசிரியர்
ஆரம்பக்கல்வி: மட்டுவில் சரஸ்வதி மகாவித்தியாலயம்
இரண்டாம் நிலைக் கல்வி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1967-1975)
உயர்கல்வி: பேராதனைப் பல்கலைக்கழகம் (1976-1980)
முதல் தொழில்: விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்
ஸ்தாபகத் தலைவர்: சிவநாதன் ஆய்வு மையம்
வேறு பதவி: இலினொய்ஸ் பல்கலைக்கழக நுண்பௌதீகவியல் ஆய்வுகூடத்தின் பணிப்பாளர்.
கௌரவ பட்டங்கள்: இரவின் நண்பன் (Friend of Night) – அமெரிக்க இராணுவத்தின் பட்டம் (2005) மற்றும்
“மாற்றத்துக்கான சாதனையாளன்” (Champion of Change) – 2013 வெள்ளைமாளிகை, ஐக்கிய அமெரிக்கா
பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன்,

EPIR Personnel headshots - December, 2009

அண்மைக் காலமாக சர்வதேச ரீதியாகப் பேசப்படும் ஒரு யாழ்ப்பாணத் தமிழர்.

புலம்பெயர் அமெரிக்கப் பிரஜைகளில் நாட்டுக்காகச் சேவை செய்த – முன் மாதிரியானவர்களுக்கு வழங்கப்படும் அதி கெளரவத்தை : Champion of Change எனும் விருதைப் பெற்றுக்கொண்ட முதலாவது தமிழர் என்ற பெருமைக்குரியவர்.

கடந்த மாதம் 29ஆம் திகதி வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதே போல மேலும் பல விருதுகளையும் பேராசிரியர் பெற்றிருக்கின்றார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவானந்தன் தனது ஆரம்பக்கல்வியை மட்டுவில் சரஸ்வதி மகா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றிருக்கிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பெளதீக விஞ்ஞானப்பட்டத்தைப் பெற்று, அதன் பின் தனது கலாநிதிப்பட்டத்தினை அமெரிக்காவில் சிக்காக்கோ இலினோஸ் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டவர்.

அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புலம்பெயர் தொழில்முயற்சியாளர்களுக்கும், கண்டுபிடிப்பாளர்களுக்கும் வெள்ளை மாளிகை விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். இதற்கமைய, இருளை ஊடுருவிப் பார்க்கக்கூடிய (Night Vision) தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தமைக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

பேராசிரியர் சிவநாதன் உருவாக்கிய தொழில்நுட்பம், “மேர்க்கியூரி கட்மியம் ரெலுரைட்” என்ற குறைகடத்தி மூலப் பொருளை மையமாகக் கொண்டது. இவரது சிவநாதன் ஆய்வு மையம் என்ற நிறுவனம் இலினொய்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது. இன்ப்ஃரா றெட் கதிர் தொழில்நுட்பம், கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தல், உயிரியல் உணர்கருவிகள் முதலான துறைகளில் ஆய்வு செய்து வருகிறது. அத்துடன் சூரிய மின்வலு உற்பத்தியின் அடுத்த படிமுறையை உருவாக்கும் ஆய்வு மேம்பாட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

விருது பெற்ற மகிழ்சிக்கு மத்தியிலும், தனது சிவானந்தன் ஆய்வு மையத்தில் ஆராய்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் – எமது எதிர்காலச் சந்ததியினருக்காக எம்மோடு பகிர்ந்து கொண்ட விடயங்கள் :

உங்களைப் பற்றி……….?

நான் யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவன். எனது தந்தையார் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைச் சேர்ந்தவர். “சிவலிங்கம் மாஸ்டர்” என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். தாயார் மட்டுவிலைச் சேர்ந்தவர். எனது பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். ஒன்பது பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் நான் ஆறாவது பிள்ளை. ஆரம்பம் முதலே எங்களுக்கு தாய் தந்தையரால் ஊட்டப்பட்டு வந்த ஒரு விடயம் “கல்வியைத் தவிர வேறேதும் உயர்ந்தது இல்லை” என்பது தான்.

எனது ஆரம்பக் கல்வியை மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் பயின்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெளதீகவியற்றுறைப் பட்டதாரியாக வெளியேறி, பட்டமேற்படிப்புக்களை அமெரிக்காவில் நிறைவு செய்து தற்போது சிக்காக்கோ இலினோய்ஸ் பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பேராசிரியராகக் கடமையாற்றுகிறேன். அத்துடன் சிவானந்தன் ஆய்வு மையம் என்ற ஆய்வு கூடத்தை 2009 முதல் நடாத்திவருகிறேன்.

அத்துடன் அழகான குடும்பம், அமைதியான வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அண்மையில் நீங்கள் பெற்றுள்ள Champion of Change என்ற இந்த விருது நீங்கள் எதிர்பார்த்த ஒன்றா? அதாவது இந்த விருதை அடைய வேண்டும் என்ற ஒரு உந்துதல் உங்களிடம் இருந்து வந்ததா……….?

இல்லை, இது எதிர்பார்க்காத ஒரு ஆச்சரியம். வெள்ளை மாளிகையிலிருந்து இதுபற்றிய அறிவித்தல் கிடைத்ததும் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம். நான் வேறு துறைசார் விருதுகளில் ஆர்வம் கொண்டிருந்தேன், ஆனால் இந்த விருதை எதிர்பார்த்திருக்கவில்லை. வழக்கமாக புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் பிற நாட்டவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கும், தாங்கள் வாழும் நாட்டுக்கும் செய்கின்ற சேவையின் அடிப்படையிலேயே இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த விருதைப் பெற்றுக் கொண்டமை மகிழச்சி தருகின்றது. இந்தப் பெருமை எனக்கு மட்டும் உரியதல்ல, என்னோடு சேர்ந்த சகலருக்கும் உரியது.

ஆம், பேராசிரியர் அவர்களே! அமெரிக்க இராணுவத்துக்குத் தாங்கள் பங்களித்தமைக்காக, குறிப்பாக அமெரிக்கப்படைகளால் அல்கெய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட படை நடவடிக்கையில் தங்களுக்கு நேரடியான பங்களிப்பு இருந்ததாகவும், அதற்காகவே இந்த விருது கிடைத்ததாகவும் பேசப்படுகிறதே….. அது பற்றி உங்கள் கருத்து என்ன?

இது முற்றிலும் தவறானது. அமெரிக்காவின் படைத்துறைக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. பாதுகாப்பு அமைச்சகத்தின் அநுமதி கூட எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.

அமெரிக்கப் படைத்துறையினரும் எனது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர் தான். அவர்கள் மட்டுமல்ல இராணுவ நோக்கங்களுக்காக எனது “நைட் விஷன்” (Night Vision Technology) தொழில் நுட்பத்தைப் பாவித்து வருகின்றனர் என்பதை நான் அறிவேன். ஆனால் அதற்கும் எனக்கும் சம்ந்தமில்லை.

உதாரணமாக – சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்தியைக் கண்டுபிடித்த போது, நோய் தீர்ப்பதற்கான சத்திர சிகிச்சைக்காகத்தான் அது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதே கத்தியைக் கொண்டு கொலை ஒன்றைச் செய்தால், அதைக் கண்டு பிடித்தவர் பாத்திரவாளியாக முடியுமா?

இதற்கு மேலாக விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளின் போது, சந்திரனில் நீர் இருப்பு தொடர்பான ஆய்வுக்கும், செவ்வாய்க் கிரகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கும் எனது இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் மிகப் பெரிய கட்டடத்தொகுதிகளில் ஏற்படும் தீ விபத்துக்களின் போதும், கப்பல்கள் காணாமல் போகின்ற சந்தர்ப்பங்களிலும் மீட்புப் பணிகளுக்கு – குறிப்பாக மனிதர்களைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கு இந்த “இன்ப்ஃரா ரெட் சென்ஸர்” தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

பொதுவாக விஞ்ஞானத்தில் கண்டுபிடிப்புக்கள் பொது மக்களுக்கு நன்மைபயப்பதற்காகவே கண்டுபிடிக்கப் படுகின்றன. அதனை நன்மை கருதியும் பயன்படுத்தலாம், தீமையை விளைவிக்கவும் பயன்படுத்தலாம்.

உங்களுடைய “சிவானந்தன் ஆய்வு மையம்” இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களின் சூரியக் கல ஆய்வு முயற்சிகளுக்கு ஐம்பது லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியுதவிகளை அளித்திருப்பதாக அறிய முடிகின்றது. அது பற்றிக் குறிப்பிட முடியுமா?

ஆம், உண்மையில் இது பற்றி நான் மனம் திறந்து குறிப்பிட்டு ஆகவே வேண்டும். இலங்கையிலுள்ள யாழ்.பல்கலைக்கழகம், களனி, பேராதனை, ருகுண ஆகிய பல்கலைக்கழகங்களில் இருந்து ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களை சிவானந்தன் ஆய்வு மையத்துக்கு அழைத்து ஆய்வுப் பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

நான் நினைக்கின்றேன் இலங்கையில் பல வருடங்களுக்கு முன்பே சூரியக் கல ஆய்வுகள் தொடங்கப்பட்டுவிட்டன.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுடனான இந்த சூரியக் கல ஆய்வு நடவடிக்கைகள் உண்மையில் என்னால் ஆரம்பிக்கப்படவில்லை. பேராதனைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் லக்ஸ்மன் திசநாயக்க , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெளதிகவியற்றுறை பேராசியர் ரவிராஜன் போன்றவர்களால் மிகுந்த சிரமங்களின் மத்தியில் நீண்ட காலத்துக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. நாங்கள் சிவானந்தன் ஆய்வு மையத்தினூடாக அதற்கான ஆதரவுகளைத் தான் வழங்கி வருகின்றோம்.

சூரியக் கல ஆய்வு நடவடிக்கைகளுக்கான களம் – சந்தர்பம் இலங்கையிலேயே அதிகளவில் உண்டு. அதைவிட ஆய்வாளர்களின் கடும் முயற்சி – உழைப்பு நிறையவே அங்கு உண்டு. அதனாலேயே நாம் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் ஊடாக இதனை மேற்கொள்ள நான் விரும்பினேன். உண்மையில் அங்கு உள்ளவர்கள் என்னை விட திறமைசாலிகள். சந்தர்ப்பமும், வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டால் இன்னும் முன்னேற முடியும். இது தான் எனது விரும்பமும் கூட. தனித்தனியாக ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுவதை விட கூட்டாக ஆய்வு செய்யும் போது மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். அதனையே நாங்கள் செய்கிறோம். மற்றவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்காக சிவானந்தன் ஆய்வு மையம் எடுக்கும் ஒரு முயற்சி என்றே இதனைப் பார்க்க வேண்டும். அங்கு ஆய்வுகளைச் செய்த பின் அங்கு வந்து கருத்தமர்வுகளை நடத்துவதன் மூலம் இது பற்றிய அறிவை எல்லா மட்டங்களிலும் பகிர்ந்து கொள்ள முடியும். அந்த வகையில் கண்டி, மாத்தறை ஆகிய இடங்களில் சூரியக் கல ஆய்வு தொடர்பான பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளன. அடுத்த வருடம் யாழ்.பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் சிவானந்தன் ஆய்வு மையத்தினரால் துறைசார் வளவாளர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு பயிற்சிப்பட்டறையை நடாத்த உத்தேசித்துள்ளோம். அதற்கான நிதியுதவியையும் சிவானந்தன் ஆய்வு மையமே வழங்க இருக்கின்றது.

அத்துடன் இந்த ஆய்வுகளின் நிறைவில் யாழ்ப்பாணத்தில் சூரியக் கல உற்பத்தி நிலையங்களை நிறுவ முடியும், பலருக்கு வேலைவாய்ப்புக்கள் பெறப்படக்கூடியதாக இருப்பதோடு, பொருளாதார ரீதியாக இலங்கை சூரியக் கல உற்பத்திக்கான ஒரு களமாக உருவாக முடியும் என்று நம்புகிறேன்.

இன்று சர்வதேச ரீதியாகப் பேசப்படும் ஒரு தமிழன் என்ற பெருமையோடு, புகழ்பூத்த பேராசிரியராக விளங்கும் நீங்கள், உங்கள் வாழ்க்கையில் யாரையாவது. முன்மாதிரியாகக் (“ரோல் மொடலாகக்”) கொண்டு ள்ளீர்களா? அல்லது உங்ளுடைய வெற்றிக்குக் காரணமாணவர்கள் என்று யாரையாவது குறிப்பிட விரும்புகிறீர்களா?

பதில் : எனது தந்தை தான் எனது ரோல் மொடல். நான் வேறு யாரையும் எனது வாழ்க்கைக்கான ரோல் மொடலாக வரித்துக்கொள்ளவில்லை. எனது தந்தை,தாய், மனைவி, குடும்பத்தினர், எனது சகபாடிகள் என்று அனைவருமே எனது வெற்றிக்குக் காரணமானவர்கள் தான். குறிப்பாக நான் கற்ற மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம் என்பவற்றுக்கு எனது சாதனைகளில் பெரும் பங்கு உண்டு.

எனது பெற்றோருக்கு எனது இளமைக் காலத்தில் என்னை நன்னெறிப் படுத்தியதில் பெரும் பங்குண்டு. அவர்கள் எப்போதும் எங்களுக்கு கல்வி தான் முக்கியமானது என்று அறிவுறுத்தி வளர்த்தார்கள். எங்களிடம் பெரிதாகக் வசதி வாய்ப்புக்கள் இருக்கவில்லை. காசு பணம் பெரிதில்லை, கல்வி தான் முக்கியம். கல்வி இருந்தால் கூடவே அனைத்தும் வரும். என்று போதித்தவர்கள் எனது பெற்றோர் தான்.

“விழ விழ எழலாம். விழுந்ததும் விட்டுவிடக்கூடாது. என்னாலும் எழ முடியும். “ நடக்கும் போது விழத்தான் செய்வாய் – விழுந்தாலும் எழுந்து நட, உன்னால் முடியும்” என்ற நம்பிக்கையை என்னுள் வளர்தது என் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் தான்.

அதே போல என்னுள் விஞ்ஞான அறிவை வளர்த்து, தன்னம் பிக்கையை ஊட்டியது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி தான். அங்கு தான் எனக்கு தன்னம்பிக்கையும், தலைமைத்துவமும் வளர்ந்தது. அதை நான் எக் காலத்திலும் மறந்து விட முடியாது. குறிப்பாக திரு.பொன்னம்பலம், திரு.கருணாமூர்த்தி போன்ற விஞ்ஞான ஆசிரியர்கள் இன்றும் மறக்கப்பட முடியாதவர்கள். எங்களுடைய வெற்றி தான் அவர்களின் வெற்றி என்று, எல்லாப் பிள்ளைகளையும் தங்கள் பிள்ளைகள் போல ஒவ்வொரு பிள்ளையிலும் தனித்தனி அக்கறை காட்டுவார்கள். அங்கு தான் நான் பல திறமைகளைப் பெற்றுக்கொண்டேன்.

அதே போலவே பேராதனை பல்கலைக்கழகம் என்னைப் பெளதீகவியலில் சிறக்க வைத்தது. அத்துடன் இலினோஸ் பல்கலைக்கழகம், சிவானந்தன் ஆய்வு மையம் ஆகியவற்றுக்கும் எனது வெற்றிகளில் பங்குண்டு.

நல்லது பேராசிரியர் அவர்களே, இறுதியாக ஒரு கேள்வி, எதிர்காலத்தின் சிற்பிகளான இளையோருக்கு – குறிப்பாக சாதிக்கத் துடிக்கும் யாழ்ப்பாணத்து மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஆலோசனைகள் என்ன?

வெற்றி என்பதும் சாதிப்பது என்பதும் முடியாத காரியமல்ல.. யாரும் சாதிக்கலாம்…. அதற்கான கடும் உழைப்புத் தான் பிரதானமானது. கடும் முயற்சி, தன்னம்பிக்கை கொண்ட எந்தக் கரியமும் தோற்றுப் போய் விடாது. எப்பொழும் வாழ்க்கையில் தடைகள் வரத்தான் செய்யும். ஆனால் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு மலை உச்சியை அடைவது தான் இலக்கென்றால் உடனடியாக அதனை அடைந்து விட முடியாது ஏறுவதும் இறங்குவதுமாக தடைகள் பல வரும். ஆனால் என்னால் சாதிக்க முடியூம் என்ற நம்பிக்கை வேண்டும். தடைகள் மற்றும் தோல்விகளில் இருந்து தான் கற்றுக்கொள்ள முடியும். எப்பொழுதும் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

எப்பொழுதும் உங்கள் தாய் தந்தையரை பிறந்த நாட்டை கற்றதை மறந்து விடாதீர்கள். தன்னம்பிக்கை கொள்ளுங்கள்:முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment