Friday, September 11, 2015

நினைத்ததை சாதிக்க வேண்டும்.

நினைத்ததை சாதிக்க வேண்டும்.
 
மனிதனால் முடியாத காரியம் எதுவும் இல்லை. நம்மால் எதையும் செய்து முடிக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். மனித சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியானாலும் காரியங்களை செய்து முடிக்க முடியாது.
 
இந்த சக்தியை தெரிந்து பயன்படுத்தி பலவிதமான சித்துக்களையும் காட்டி மறைந்த பெரியோர்கள், ஞானிகள், சித்தர்கள், நாயன் மார்கள், ஆழ்வார்கள், மகான்கள் போன்றவர்கள் எல்லா மதத்திலும் தோன்றி மறைந்து இருக்கிறார்கள்.
 
இவைகளை தெரிந்தும், படித்தும், கேட்டும் இன்னமும் செயல்படாமல் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். காரணம் நம்மை நாம் அறியாததே. நமது சக்தியின் தன்மையை நாம் தெரிந்து செயல்பட்டால் இவ்வுலகில் நாம் சுகபோக வாழ்வு வாழலாம். அதற்கு,
 
• முதலில் நமது எண்ணங்களை நமக்கு எது தேவையோ அதிலேயே நிறுத்தி வைக்க வேண்டும். மனதில் வேறு பல எண்ணங்கள் புகவிடாமல் மனம் அலைபாயாமல் – நமது என்ன அலைகளை சிதறவிடாமல் ஒரு பிடியாக நாம் நினைத்த காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
 
• ஆத்ம சக்தி என்ற நமது மனோதிட சக்தியை நமது எண்ணம் எதுவோ அதிலேயே இருக்கச் செய்ய வேண்டும்.
 
• நமது விருப்பங்களை இடைவிடாமல் ஏற்றத் தாழ்வு இல்லாமல் சமநிலையில் வைராக்கியத்துடன் எண்ணி அதிலேயே ஊன்றி கவனத்தைச் செலுத்தி வரவேண்டும்.
 
• நாம் விரும்பும் காரியம் முடியும்வரை அதிலேயே மனதை வைத்து செயல்பட வேண்டும். வேறு சிந்தனை கூடாது. எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் மனதைத் தளரவிடாமல் நம்பிக்கையுடனும் வைராக்கியத்துடனும் இருந்து நினைத்ததை சாதிக்க வேண்டும்.
 
நமக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஒரு எண்ணத்தை மனதில் நிறுத்தி தொடர்ந்து அமைதியாவும், அழுத்தமாகவும் அந்த எண்ணத்தை பற்றியே மனதில் தியானத்துக் கொண்டு இருப்பதே மனதை ஒரு நிலைப்படுத்தும் நிலையாகும்.
 
இந்த மனதை ஒரு நிலைப்படுத்தும் விதத்தைப் பயிற்சிகளினால் தான் பழக்கத்துக்குக் கொண்டுவர முடியும். மனதை ஒரு நிலைப்படுத்தி நிற்பது கடினம். காரணம் மனதில் ஆயிரக்கணக் கான எண்ணங்களை வைத்துக்கொண்டு நம் சிந்தனையை பல வழிகளிலும் சிதரவிட்டுக் கொண்டு பலவற்றையும் எண்ணிக்கொண்டே இருப்பதுதான்.
 
நமக்கு எது வேண்டுமோ அந்த எண்ணத்தையே அடிக்கடி மனதில் எண்ணி அதே எண்ணத்தில் விடாப்பிடியாக இருந்தால் நாம் நினைத்ததை அடைய முடியும்.

வாழ்க்கையில் தினசரி நாம் நமது மனதை ஒரு முக்கியமான கருவியாக எல்லா வகையிலும் நல்லது-கெட்டது இரண்டுக்குமே உபயோகப் படுத்தி வருகிறோம். மனம் இயங்காமல் எதையும் செயல்படுத்த முடியாது.

No comments:

Post a Comment