Friday, September 11, 2015

ஏன் தமிழ்? யார் தமிழர்?

ஏன் தமிழ்? யார் தமிழர்?

மொழி என்பது ஒரு இனத்துக்கான அடையாளம். மேலும் மொழியானது,அந்த‌ இனம் அவர்களுக்காக சமைத்துக்கொண்ட முதல் ஊடகம்.  மொழி இல்லாமல் இனம் இல்லை. இனம் இல்லாமல் மொழி இல்லை. மொழி ஒரு இடத்தில் தோன்றினாலும், காலப்போக்கில் அது சார்ந்த‌ மனிதர்களுடன் அதுவும் பயணித்து, எல்லா இடங்களிலும் அவர்களுடன் சேர்ந்தே வாழும். அப்படி புலம் பெயர்ந்தவர்கள், அந்த மொழியைப் பேணாவிடில், மொழி அழிந்து போகும் என்பது வர‌லாற்று உண்மை. யுனஃச்கோ-வின் ஆராய்ச்சிப்படி, செத்துமடியும் மொழிகள் http://www.unesco.org/culture/languages-atlas/en/atlasmap.html

மொழி என்பது, தலைமுறைகளுக்கு இடையேயான‌ ஒரு வரலாற்றுத் தொடர்பு சாதனம்.

இனம் இனமாய் இருக்க, மொழி முக்கியமான ஒன்று . அதே நேரத்தில் மொழி வாழ வேண்டும் என்றால், இனம் அதை தொடர்ச்சியாகப்பயன்படுத்த வேண்டும்.  மொழியும் இனமும் சேர்ந்தே இருக்கும். ஒன்று இல்லாமல் மற்ற ஒன்று இல்லை.

தமிழ் மொழியானது , இந்தியாவில் பண்டைய தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டாலும், மணப்பெண் சீர்போல, தமிழர் குடும்பங்களுடன் பயணித்து, உலகில் எல்லா இடங்களிலும் நீக்கமற‌ நிறைந்துள்ளது. தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதென்பது, உலகின் எல்லா இடங்களிலும் கிளைபரப்பி வாழும் அனைத்து தமிழர்களுக்குமான ஒரு கடமை. இந்தக் கடமையை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோமா?

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இருக்கும் அடையாளக் குழப்பங்களில் முக்கியமானது "நான் தமிழரா?" என்பதே. புதுக்குடித்தனம் செய்ய ஆரம்பிக்கும் பெண் , தன் தாய்வீட்டில் இருந்து எடுத்துவரும் சீர்தனங்கள் போல, சாதி மத சம்பிரதாய கட்டுச் சோற்றை எங்கு போனாலும் எடுத்துவரும் நாம் , தமிழன் என்ற பெருமைமிகு அடையாளத்தை இயல்பாக மறந்துவிடுகிறோம். தமிழனாய் பிறப்பது என்பது ஒருவனின் தனிப்பட்ட முடிவு அல்ல. இன்றுவரை இயற்கையும் , அறிவியலும் அப்படி ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கவில்லை. தமிழர் தம்பதிகளுக்குப் பிறக்கும் ஒரு குழந்தை, விரும்பியோ விரும்பாமலோ தமிழராகவே அடையாளம் காணப்படுகிறது . எனவே, ஒரு குழந்தை தமிழராய் பிறப்பதென்பது, அதன் முடிவு அல்ல. ஆனால், வளர்ந்து பதின்ம வயது வந்தவுடன் , தமிழராய் வாழும் முடிவு என்பது, தனிப்பட்ட மனிதனின் கையில்தான் உள்ளது. அப்படி ஒரு குழந்தை தமிழராய் வாழ முடிவு செய்தால், அப்படி வாழ்வதற்கு முக்கியமான கருவி "மொழி". அதைக் குழந்தைகளிடம் சேர்ப்பது பெற்றோர்களின் கடமை அல்லவா? அதற்கு நாம் என்ன செய்கிறோம்?

முதலில் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் "நாம் தமிழராய் வாழ்கிறோமா?" என்று அவரவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. அதைவிட முக்கியம் "ஏன் தமிழராய் வாழ வேண்டும்?" என்பதும், அப்படி முடிவு செய்துவிட்டபின்னர் "எப்படி தமிழராய் வாழ்வது?" என்பதும், தனக்குள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள். அதற்கான விடைகள் நம்மிடம் உள்ளதா? அல்லது குறைந்த பட்சம் இந்தக் கேள்விகளை நமக்குள் கேட்டுள்ளோமா? இன்னும் நம்மில் எத்தனைபேர்கள்  "மத" அடையாள‌ங்களையும் "தமிழ் இன" அடையாளத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாமல், சர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி - யார் குருதி போனால் எனக்கென்ன என்று, தமிழ் மொழிக்கு சம்பந்தமே இல்லாத  வார்த்தைகளில் வரும் ஆண்டுகளை, அறியாமையின் காரணமாக‌ தமிழாண்டாக எண்ணிக் கொண்டாடி வருகிறோம்? இது ந‌மது அறியாமை அல்லவா? அழகிய "தை"மகள் இருக்கும்போது எதற்கு வேற்றுமொழிக் குறியீடு?

தமிழ் என்ற இனமும் தமிழ் என்ற மொழியும் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். தமிழ் என்ற அடையாளத்தை மட்டும் முன்னிருத்தி, மற்ற சாதி ,மத, ஈயம், பித்தளை அடையாளங்களை  முற்றிலும் துறந்து (அல்லது இரண்டாம் இடத்தில்  வைத்து விட்டு) தமிழுக்காக மட்டும் சங்கமிப்பது, இணைந்து செயல்படுவது என்பது இன்னும் நம்மில் சாத்தியமாகவில்லை என்பது கசப்பான உண்மை.  நமக்குள்தான் எத்தனை பிரிவுகள். Jallianwala Bagh - யும் Holocaust -யும் அறிந்து வைத்துள்ள நாம், இன்று நம் கண்முன்னால் முள்ளிவாய்க்காலை மையமாகக் கொண்டு நடந்தேறிய கொடூரங்களை எந்த அளவு அறிந்துள்ளோம்? எந்த அள‌வில் நாம் ந‌ம் இன வரலாற்றை நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம்? வரும் காலங்களில் இது போன்ற சின்ன சின்ன வட்டங்களைத் துறந்து "தமிழ் இனம்" என்ற ஒரே பெரிய வட்டத்தில், வரும் தலைமுறையினராவது காலடி வைக்கவேண்டும். அதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள் பாதை வகுப்பார்கள் என்று நம்புவோமாக. அதற்கான முக்கியக் கருவி மொழி. தமிழைக் கொண்டு சேர்ப்போம் குழந்தைகளிடம்.

தமிழனாய் பிழைத்திருப்பது (Survival) முக்கியமல்ல. தமிழனாய் உணர்வதும் (Feel) வாழ்வதும்  (Living)முக்கியம்.

No comments:

Post a Comment