Friday, September 11, 2015

கூழாக இருந்தாலும் குறித்த நேரத்தில் குடி!

கூழாக இருந்தாலும் குறித்த நேரத்தில் குடி!
காலம் தவறாமல் சாப்பிட்டால், நாம் வாழும் காலம் அதிகரிக்கும். தினமும் என்ன சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல, அதை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். உடல் ஆரோக்கியம் அதில் தான் இருக்கிறது. பலர் உணவு சாப்பிடும் நேரத்தை முறையாக கடைபிடிப்பதில்லை. இதுவே அவர்கள் நோய்வாய்ப்பட வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

சரியான நேரத்தில் உணவு சாப்பிடவில்லை என்றால், அமிர்தத்தை சாப்பிட்டாலும் அது பலன் தராது. மாறாக அல்சர் தான் வரும். குடிப்பது கூழாக இருந்தாலும், அதை குறித்த நேரத்தில் குடிக்க வேண்டும். காலம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சாப்பிடும் முன் கை, கால், வாய் கழுவிய பின் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது பேசிக்கொண்டே சாப்பிட கூடாது. இந்தியர்களை பொருத்தவரை பலர் சாப்பிடும் போதுதான், அதிகம் பேசுகின்றனர். அது ஆரோக்கிய கேடான பழக்கம்.

சூரியன் உதிக்கும் நேரத்திலும், மறையும் நேரத்திலும் சாப்பிடக்கூடாது. நிலா வெளிச்சத்தில் உணவு உண்ணக்கூடாது. இருட்டிலும், நிழல் விழும் இடங்களிலும் சாப்பிடக்கூடாது. சாப்பிடும்போது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.

அதிக கவலை, துக்கம், கோபம் ஆகிய உணர்வுகளுடன் சாப்பிட்டால் பலன் இல்லை. உணவில் உப்பு புளி, மிளகாய் அதிகம் சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. நின்று கொண்டு சாப்பிட்டால் பித்தக்கற்கள் உண்டாகும். எனவே, உட்கார்ந்து சாப்பிடுவதுதான் சரியான
முறையாகும்.

உணவின் ஜீரணம், வாயிலேயே துவங்கி விடுகிறது. வாயில் ஊறும் உமிழ்நீர் ஜீரணத்துக்கு உதவுகிறது. அவசரமாக சாப்பிடுவதால், உமிழ்நீர் உணவில் சேராமல் போய் விடுகிறது. சாப்பிடும் போது, அவசரம் அவசரமாக விழுங்கக் கூடாது. நன்றாக மென்று மெல்ல சாப்பிட வேண்டும். அது உமிழ் நீரோடு கலந்து விரைவில் ஜீரணத்துக்கு வழி வகுக்கும்.

உணவை நன்றாக மென்று உண்பதால், பல நோய்கள் தடுக்கப்படுகின்றன. வாய் தாடை, கண், மூக்கு இவைகள் நன்கு வளர்ந்து முகத்திற்கு பொலிவைத் தரும். அதனால்தான் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றார்கள். உணவில் முதலில் இனிப்பு உண்ண ஆரம்பித்து, தொடர்ந்து புளிப்பு, உப்பு, காரம், கசப்பு என்று உண்டு, முடிவில் துவர்ப்பு உண்ண வேண்டும்.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் சாப்பிடக்கூடாது. வாழை இலையில் சாப்பிட்டால், இளமை குன்றாமல் தோற்றம் அளிக்கலாம். இலையில் சாப்பிடும் போது இலையை சுத்தமாக கழுவிய பின்னர் பயன்படுத்த வேண்டும். உணவு சாப்பிடுவதில் இது போன்ற முறைகளை, பின்பற்றுவதால், ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.

No comments:

Post a Comment