இப்படியும் பார்க்கலாம்: சிக்னலை மீறுகிறீர்களா நீங்கள்?
சிறுநகரங்களில் 1990-களின் இறுதியில்தான் கணினிகளின் திரைகள் ஒளிரத் தொடங்கின. அப்படியொரு குட்டி நகரத்தில் ஒருவர் தன் நிறுவனத்தையும் கணினிமயமாக்க முடிவெடுத்தார். இருப்பதிலேயே இளமையான பணியாளரான 41 வயது சந்திரசேகரை இதற்கான பொறுப்பாளராகத் தேர்வு செய்தார்.
“இந்த வயசுல படிச்சு என்ன பண்ணப்போறேன்? என்னை விட்ருங்க” என்று புலம்பினார் அவர். கம்ப்யூட்டர் என்றால் அவரைப் பொறுத்தவரை கொஞ்சம் பெரிய சைஸ் கால்குலேட்டர். “வேற ஆள் கிடைக்கறவரைக்கும்தான்” என்று வெறுப்புடனேயே கணினியைக் கற்றார் சந்திரசேகர். அவர்தான் இப்போது அங்கு கணினிப் பிரிவின் மேலாளர். அவரால் இப்போது கணினிகளுக்கான புரோக்ராம்களை எழுத முடியும். சொந்தமாக கம்ப்யூட்டர் சென்டரும் வைத்திருக்கிறார். தெரிந்தவர்களின் கணினிகளுக்கும் மருத்துவம் செய்கிறார்.
செல்ல விதிகள்
அப்பாக்கள் தங்கள் இளவரசிகளைத் தெருமுனைக் கடையில் தீப்பெட்டி வாங்கக்கூட அனுப்புவதில்லை. அவ்வளவு செல்லம். நாஞ்சில் நாட்டில் அப்படி ஒரு லட்சுமி. செல்ல விதிகளின்படி வாசல்படியைக்கூடத் தாண்டவில்லை. காலம் அவளை இரண்டு கிலோ மீட்டர் நடந்து காய்கறி வாங்கச் சொல்லியது. டூ வீலரின் சாவியைக் கொடுத்தது. எல்லா விதமான பில்களையும் கட்ட அனுப்பியது. இங்கு அல்ல.மும்பையில்! இன்று அவளால் மும்பையில் எந்தக் கடையில் எந்தப் பொருள் மலிவாகக் கிடைக்கும் என்று கூற முடியும். தனியே ஊருக்கு வரத் தெரியும். இந்தியிலும், மராத்தியிலும் நாக்கைச் சுழற்ற முடியும்.
மழலைக் காயங்கள்
எந்த நிலையிலும், யாராலும் முன்னேற முடியும் என்று வழக்கமான பாணியில் நினைக்கலாம். கொஞ்சம் இப்படிப் பாருங்கள் முதன்முதலாக கம்ப்யூட்டர் வகுப்புக்குப் பயந்துகொண்டே செல்பவரின், சுற்றிலும் மராத்திப் பிரஜைகள் இருக்க கடைக்குச் சென்று திக்கித் திணறி தீப்பெட்டியை இந்தியில் “மாச்சீஸ் தோ” என்றவளின், மனநிலை எப்படி இருந்திருக்கும்?
“முதலில் இந்த சுவிட்சை போட வேண்டும் “ என்று எழுதிப் படித்தவர் இன்று பொறியியல் படித்தவருக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டிருக்கிறார். “ரச வடை சாப்டுகியா மக்கா” என்றவள் “சாபுதானா கிச்சடி காஓகே?” என்கிறாள் என்றால் நாம் அறிய வேண்டியது அவர்களின் இந்த அறிவு ஒரே நாளில் வந்திருக்காது என்பதுதான்.
இன்று வானத்தில் நீந்தும் பறவைகளின் பிஞ்சுப் பருவச் சிறகுகள் நினைவுகூரும் பிளாஸ்திரிகளைப் போல, இவர்களும் தவழ்ந்து, விழுந்து மழலைக் காயங்கள் பெற்று மெல்ல மெல்லதான் முன்னேறியிருப்பார்கள்.
உச்சிக்கு ஆணவம்
கல்விக் கடல்களாக இன்று நாம் ஆவேச அலைகளை வீசிக்கொண்டிருந்தாலும் அதன் ஆரம்பம் “இவ என்னைத் தள்ளிவிட்டுட்டா, இவன் கடிச்சிட்டான் மிஸ் “ என்னும் சிறு திவலைகள்தானே? முதல் சமையல் செய்பவரின் குழம்பில் அறுசுவைகளும் ஆர்ப்பாட்டம் செய்வதை உணர்ந்த பாத்திரங்களும் அழுதிருக்கும்தானே?
சரி, கொஞ்சம் யோசித்தால் இன்று நாம் சர்வசாதாரணமாகச் செய்யும் தப்புகளின் துவக்கமும் இப்படித் தட்டுத் தடுமாறித்தானே தங்களைத் தொடங்கியிருக்கும்?
தப்பு என்று தெரிந்தே முதன் முதலில் அதைச் செய்பவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? உள்ளம் பதைக்க, யாராவது பார்த்துவிடுவார்களோ என்று கண்கள் அலைபாயத்தான் அந்த முதல் தப்பை, சிறு தப்பைச் செய்திருப்பார். நடுங்கும் கைகளுடன் கட்டப்பட்ட அந்த அஸ்திவாரத்திலிருந்துதான் “எவங்கிட்டனாலும் போய்ச் சொல்லிக்கோ... உன்னால ஆனதைப் பாத்துக்கோ...” என்ற ஆணவம் உச்சியை நோக்கிப் பயணிக்கின்றன.
கை குலுக்கும் தப்புகள்
வேறு வழியின்றி முதல் தப்பைச் செய்தவர்களில் ரொம்பக் குறைவான நபர்களே “போதும்டா, இந்த பொழைப்பு” என்று முற்றுப்புள்ளி வைத்திருப்பார்கள். நிறையப் பேரை அந்த முதல் தப்பு தனது உறவினர் களான பிற தப்புகளிடம் கை குலுக்கச் சொல்லும்.
இந்த விதமாக ஒரு விதிமீறல் இன்னொரு விதிமீறலுக்கு இட்டுச் செல்கிறது. காரணம், அடுத்த தவறு, தனக்கான தைரியத்தை தனக்கு முந்தைய தவறிலிருந்து பெற்றுவிடுகிறது. முதல் தவறு மனசாட்சியின் வீட்டில் செருப்புடன் நுழையத் தயங்கும் என்றால், ஆயிரமாவது தவறு அதே செருப்பை இன்னொரு சோபாவில் உட்கார வைத்திருக்கும்.
சின்னத் தப்புகளை அனைவரும் அன்றாடம் ஏதாவது ஒரு விதத்தில் அவரவர் வாழ்க்கை சார்ந்து செய்துகொண்டேதான் இருக்கிறோம். அவை கண்டுகொள்ளப்படுவதும் இல்லை; யாரும் பிடிபடுவதும் இல்லை. ஆனால் யாரும் ஆட்சேபிக்க வில்லை என்பதற்காகவும்; எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காகவும் அவை எப்படி நியாயமாகிவிடும்?
தனக்கான நியாயம்
நல்ல விஷயங்களில் முன்னேறு வதை அணுஅணுவாய் ரசிப்பதைப் போல, தப்பான விஷயங்களில் எந்த அளவு பயணித்து விட்டோம் என்பதை ஆய்வு செய்யவே விரும்ப மாட்டோம். அது தப்பு என்பது நமக்குத் தெரியும் என்பதால் அதை நினைப்பதையே தவிர்க்கிறோம். அதை மறைக்கவும் மறக்கவும் விரும்புகிறோம். அது தரும் உடனடி இன்பங்களில் சுகம் கண்டு விடுவதால், அதை இழக்க நாம் விரும்புவதில்லை.
இந்தக் கட்டத்தில்தான் அதை நியாயப்படுத்தத் தொடங்குவோம். ஒருவன் தனது செயல்களை நியாயப்படுத்தத் தொடங்கிவிட்டால் அந்த நியாயம் -அடுத்தவருக்கல்ல; முதலில் அவரே அவருக்குச் சொல்லிக் கொள்கிறார் என்பதே அர்த்தம்.
முதல் தப்பு என்னும் சிறிய தப்பு, அதைவிடக் கொஞ்சம் பெரிய தப்பு ஒன்றிடம் தனது ஜோதியைக் கை மாற்றி விட்டுச் செல்வதால், நாளடைவில் எரிமலையுடன் நீங்கள் ஓடும்போது அது உங்களைப் பொசுக்கியே தீரும். அப்போது உங்களைச் சுட்டது எரிமலை என்று நினைப்பீர்கள். ஆனால், உங்களுக்குச் சூடு தந்தது நீங்கள் முதலில் சுமந்த சிறு நெருப்பு.
சிக்னல் மீறும்போது
எறும்பைப் பிடிக்க நீங்கள் தோண்டும் பள்ளங்கள் உங்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியும். அந்தத் தைரியத்தில் நீங்கள் யானையைப் பிடிக்கப் பள்ளங்கள் தோண்டும்போது உங்களின் வீழ்ச்சியைப் படம் பிடிக்க உள்ளூர் சேனல்கள் முதல் உலக சேனல்கள்வரை நின்றிருக்கும்.
என்ன, அவை உங்களுக்குத் தெரியாத அளவு உங்கள் கண் மூடியிருக்கும். யானையைப் பிடிக்க எங்கிருந்து தைரியம் வந்தது என்றால், நீங்கள் எறும்புகளைத் தான் கை காட்டுவீர்கள். யாரும் நம்பக்கூட மாட்டார்கள்.
இப்போது சொல்லுங்கள், டிராஃபிக் சிக்னலை மீறும்போது, அந்த அத்துமீறல் “ஒண்ணும் ஆகாது, பாத்துக்கலாம்” என்ற தைரியத்தை உங்களுக்குத் தருதா, இல்லையா?
அந்த தைரியம் மேலும் எவ்வளவு தவறுகளைச் செய்ய உங்களைத் தூண்டுகிறது என்று யோசித்துப்பாருங்கள்

No comments:
Post a Comment