நாட்களை செயல்களால் நிரப்புவோம்!
இப்போது தான் புத்தாண்டு பிறந்தது போல் இருக்கிறது. அதற்குள் பாதியை கடந்து விட்டோம். புது ஆண்டு பிறந்த போது, என்னென்னவோ தீர்மானம் செய்து, சபதமும் செய்தோம்.
ஆனால், ‘கடந்த மாதங்களில் என்ன சாதித்தோம்…’ என்று நினைத்துப் பார்த்தால், சிலரால் தான் திருப்திப்பட்டுக் கொள்ள முடியும்.
சாதித்த திருப்தியை வெளிப்படுத்தக் கூடியவர்கள் கூட, ‘உடன் இருப்போரின் தொந்தரவால் தான், இந்த அளவாவது சாத்தியமாயிற்று…’ என்பர்.
உங்களது சொந்த வாழ்வில், சுய முயற்சியில், கடந்த ஆறு மாத பணிகள் திருப்திகரமா இருந்தனவா என்று கேட்டால், ‘வீட்டுல இருக்கறவங்களோட நச்சரிப்பு தாங்க முடியாம தான் இதெல்லாம் செய்ய முடிந்தது; இல்லா விட்டால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது…’ என்று உதட்டை பிதுக்கு கின்றனர்.
ஆக, வெளியிலிருந்து வந்த நெருக்கடிகள் தான், இவர்களை உசுப்பியிருக்கின்றனவே தவிர, சுயமாக, ஆர்வமெடுத்து சாதித்தவை என்றால், கோணித்துணியிலே வடிகட்டப்பட்ட பழச்சாற்றின் கதையாக, குடிக்கிற பாத்திரத்திற்கு ஏதோ சொட்டு சொட்டாகத் தான் வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
மிக குறுகிய காலமே வாழ்ந்த பாரதியும், விவேகானந்தரும், ஜான்சி ராணியும் சாதித்தவை மகத்தானவை! 80 – 90 வயது வரை வாழ்ந்து, பூமிக்கு பாரமாய் இருந்தவர்கள், வரலாற்றுப் பக்கங்களில், ஒரு வரி கூட தேற மாட்டார்கள்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றும் போது நான் கூறுவது இது தான்… ‘உங்கள் கல்வி நிறுவன பதிவேடுகளில், உங்கள் பெயர்கள் இடம்பெறுவது இயல்பாகவே நிகழப்போகிற விஷயம்; ஆனால், உங்கள் பெயர், உங்கள் நிறுவனத்தின் ஆண்டுதழ்களில் பதிக்கப்பட வேண்டும். அடுத்து, வரவேற்பறையின் மரப்பலகைகளில், உங்கள் பெயர் பொறிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இக்கல்வி நிறுவனத்தில் படித்தீர்கள் என்பதில் கிடைக்கக் கூடிய முழுப் பெருமையை, தக்க வைத்துக் கொள்ள முடியாது…’ என்பேன்.
உண்ணல், உறங்கல், ஜீரணித்தல், கழித்தல் ஆகியவற்றை, எல்லா உயிரினங்களும் செய்கின்றன. மனிதனும் இதற்குள் அடங்கிப் போகலாமா?
நாளையும், பொழுதையும், மணித்துளிகளையும் கை வைத்து தள்ளாத குறையாய், வாழ்வதில் என்ன பயன்!
நாளையும், பொழுதையும், மணித்துளிகளையும் கை வைத்து தள்ளாத குறையாய், வாழ்வதில் என்ன பயன்!
‘பொழுதே போகமாட்டேங்குது… என்ன செய்றதுன்னே தெரியல; ஒவ்வொரு நாளையும் ஓட்றது பெரும்பாடா இருக்கு…’ என்பவர்கள், தங்களது இயலாமைகளை, முகவிலாசமாக எழுதி ஒட்டிக் கொள்கின்றனர்.
நூற்றியொரு வயதான, எம்.ஏ.எம். பழனியப்பச் செட்டியார் என்பவர் தினமும், ‘ஷேர்’ மார்க்கெட்டில் இரண்டு மணி நேரமாவது பொருள் ஈட்டுகிறார். ஈட்டுபவற்றை இயலாதவர்களுக்கு அளிக்கிறார். ‘ஒவ்வொரு நாளையும் நமக்கோ, பிறருக்கோ முன்னேற்றம் தரக் கூடிய ஏதேனும் சிறிய நற்காரியங்களையாவது செயல்படுத்த வேண்டும்…’ என்கிறார்.
நல்லவர், வல்லவர், தங்க மனசுக்காரர், பரோபகாரி, தேனீ போன்ற சுறுசுறுப்பானவர், மனிதநேயர், புனிதர், மாண்புடை நெஞ்சர் என்ற வார்த்தைகளை, பிறர் பேச நாம் விட்டு செல்ல வேண்டுமானால், நாட்களை, செயல்களால் நிரப்பினால் மட்டுமே சாத்தியம்!
No comments:
Post a Comment