Tuesday, September 29, 2015

காக்கா முட்டையும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைத் தத்துவமும்

காக்கா முட்டையும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைத் தத்துவமும்..

பேசுவோம். பேசுவோம். மாற்றங்களை நோக்கி பேசுவோம்.எழுத்தும் பேச்சும் ஒரு ஆயுதம் தானே. வாருங்கள், ஆயுதம் சேய்வோம். புது மலர்களை பூக்கச்செய்வோம். வன்முறையாளர்களை, மனம் கொத்திப் பறவைகளை வெல்வோம்.

பொதுவாகவே நான் திரைப்படங்களைப் பற்றி அவ்வளவாக எழுதுவதில்லை. அதற்கு ஒன்றும் பெரிய காரணங்கள் கிடையாது. ஒன்று ஜன ரஞ்சக சினிமாக்கள் மிகவும் சினிமாத்தனமாக இருக்கும், மற்றொன்று கலைப்படங்கள் புரியாமல் போய் விடவும் வாய்ப்புண்டு.

தொலைக்காட்சிகளில் வரும் கலந்துரையாடலின்போது திரைப்படத் துறையைச் சார்ந்த சிலர் சினிமாக்களில் வரும் வன்முறை, போக்கிரித்தனம் அல்லது பெண்களை கொச்சைப்படுத்துவது போன்றவைகளைப் பற்றி பேசும் போது தாங்கள் சமுதாயத்தை பிரதிபலிப்பதாகவும் எனவே குற்றம் தங்களிடம் இல்லை எனவும் சொல்வதைக் கேட்கும்போது எரிச்சலாக வரும்.

இருந்தாலும் முன்பு தூர் தர்ஷனில் இரவு நேரங்களில் வரும் தேசிய அளவில் பரிசுகள் பெற்ற படங்களைப்பார்த்து (ஆங்கிலத்தில் sub title களுடன்) நான் லயித்துப்போன சந்தர்ப்பங்களும் உண்டு. இத்தகைய படங்கள் மனிதர்களின் உயர்வான குணங்களை போற்றத் தவறுவதில்லை. எவரையும் தரம் தாழ்த்தி காட்சிப்படுத்துவதும் இல்லை.

அத்தகைய ஒரு சந்தர்ப்பமாக வாய்த்தது நான் ‘காக்கா முட்டை’ படம் பார்த்தது. தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்.

பிள்ளைகளை மிகவும் இயற்கையாக விட்டு படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

இரு சிறுவர்களை வைத்து ஒரு பெரும் வாழ்க்கைத் தத்துவத்தை இயல்பாக நம் முன்னே வைத்திருக்கிறார்.

நான் படத்தின் மற்ற செய்திகளை விளக்கி நேரத்தை வீணாக்காமல் கீழே குறிப்பிட்டவைகளை மட்டும் இயக்குனரை பாராட்டும் பொருட்டும்,  அனைவருக்கும் இந்த அழகான வாழ்க்கைத் தத்துவம் போய்ச் சேரும் பொருட்டும் சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.

வாழ்க்கைத் தத்துவமும் படத்தில் வரும் காட்சிகளும்:
1.   வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தனது அனுபவங்களைப் பொறுத்தும் அறிவைப் பொறுத்தும் சூழலின் உந்துதலைப் பொறுத்தும் ஒரு இலக்கை நிச்சயிக்கவேண்டும். படத்தில் சிறுவர்கள் பிட்சா சாப்பிடும் அனுபவத்தை அடைய விரும்புகின்றனர்.

2.   இலக்கை நிச்சயித்தபின்னர் இலக்கை நோக்கி விவேகானந்தரின் வாக்கைப் போல யாரையும் எதையும் எதிர்பாராது நாம் நகர ஆரம்பித்தால் வழி தானாக கிடைக்க ஆரம்பித்துவிடும். படத்தில் பிள்ளைகள் கரித்துண்டுகளை பொறுக்குவதில் ஆரம்பித்து குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவர்களை வீட்டில் சேர்ப்பது வரை எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

3. இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கம் நம் வாழ்வை ஊக்குவித்து நம்மை உயர வைக்க வேண்டுமே தவிர அதுவே ஒரு வெறியாகி நம்மை நெறி பிறழ வைக்கும் செயல்களில் ஈடுபடுத்தி நெறிகொண்ட பாதையினின்றும் நம்மை மாற்றிவிடக்கூடாது. படத்தில் பிள்ளைகள் மற்றவர்களைப் போல செல்போன் வழிப்பறிச் செயலில் ஈடுபடுமளவுக்குப் போய் பின்னர் அதைக் கைவிட்டுத் திரும்புவதும், அது மட்டுமல்லாது அவர்களது பணக்கார நண்பன், தான் ‘தின்று மீந்த’ பிட்சாவை தங்களுக்குத் தருகையில் அதை தன்மானத்துடன் வாங்க மறுப்பதும்,  கையில் காசு சேர்ந்ததும் அந்தக் காசையும் பிட்சா ஆசையையும் விட தனது தாய் பாட்டியின் இறுதிச் சடங்குக்காக பணமின்றித் தவிக்கும் போது அந்தக் காரியத்திற்கு உதவியாகவேண்டும் என்ற நிலைக்கு வந்து தாம் கொண்ட நோக்கத்தை விட மனிதாபிமானமே  மிகப்பெரியது என உணர்த்துவது.

4.   நாம் கொண்ட இலக்கில்  இடர்களைப்பாராது உறுதி கொண்டு நின்றோமானால் ஒரு கால கட்டத்திற்குப் பின்னர் நமது இலக்கு நம்மைத்தேடி வரும் அல்லது இலக்கை அடைவது மிக எளிதாக கைகூடும். படத்தில் பிள்ளைகளை விரட்டிய பிட்சா கடைக்காரரே மிகுந்த வரவேற்புடன் அவர்களை வரவேற்று அவர்களுக்கு பிட்சா அளித்து உபசரிப்பது மட்டுமல்லாது இனி வாழ்நாள் முழுதும் அவர்களுக்கு பிட்சா இலவசமாகவே அளிக்கப்படும் என்று சொல்வது.

5.   வாழ்வில் நாம் இலக்கை அடைந்த பிறகு அதில் நாட்டம் குறைந்து நமது மனநிலையே மாறிவிடும் சூழல் ஏற்படுவது உண்டு. இது எல்லோரது வாழ்விலும் பெரும்பாலும் நடக்கும் ஒரு நிகழ்வு. படத்தில் அதுவரை பிட்சா சாப்பிட பாடுபட்டவர்கள் பிட்சா கையில் கிடைத்து அதைச் சுவைத்ததுமே முகம் சுளித்து ‘ஐயே…! இதுதான் பிட்சாவா? உவ்வே..! எப்படிடா இவ்வளவையும் சாப்பிடுவது..?’ என்று முகம் சுளித்து, ‘இதுக்கு ஆயா சுட்ட தோசையே நல்லா இருந்திச்சு..’ என உணர்வது மிக முக்கியமான கட்டம்.

6.   மேற்சொன்னது நாம் வாழ்வில் இலக்கை தீர்மானிப்பதில் எத்துனை கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு சரியானதொரு எடுத்துக்காட்டு. வாழ்வின் பயணம் முழுவதும் இலக்கை அடைவதில் செலவழித்துவிட்டு பின்னர் இலக்கை அடைந்தபிறகு முட்டாள் தனமாக உணருவது நாம் வாழ்வையே எளிதில் இழப்பதற்கு சமமாகும். எனவேதான் நாம் நிலையான, மாறாத, எப்போதும் போற்றத்தகுந்ததான இலக்குகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அடைய விழைய வேண்டும். இது நம் வாழ்க்கைப் பாதையை மட்டுமல்லாது வாழ்வில் நாம் கொள்ளும் எல்லா முயற்சிகளையும் பெருமைப் படுத்தும் விதமாகவும் நாம் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பயனுறும்படியாகவும் முடியும்.

7.   இது மட்டுமல்லாது வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மையும் நமது சூழலையும் தங்களின் சுய நலத்திற்கு பயன்படுத்திக் கொள்வது மட்டுமன்றி நமது நோக்கையும், எண்ணங்களையுமே திசை திருப்பிவிட்டு நம் வாழ்க்கையை புரட்டிப் போடவும் தயங்க மாட்டார்கள் என்பது வாழ்வியல் உண்மை. படத்தில் இதை மற்ற கதா பாத்திரங்களை வைத்து போகிற போக்கில் இயக்குனர் சொல்லியிருக்கிறார்.

இயல்பான, லயிக்க வைக்கும் படம்.

இன்னமும் பேசுவோம்.

No comments:

Post a Comment