Friday, September 11, 2015

மனதில் தோன்றும் குற்ற உணர்வுகள்

மனதில் தோன்றும் குற்ற உணர்வுகள்
குற்ற உணர்வுகள் நம்மை நெறிப்படுத்தும் கருவிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த குற்ற உணர்வுகள்சரியாகக் கையாளப் படாவிட்டால் அவைகள் மனப்பிறழ்வுகளை எளிதில் உருவாக்கிவிடும்.

இந்த குற்ற உணர்வுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று, இது மனதை சீர்படுத்தும். மற்றொன்று இதனைக் கையாள்வதில் தவறு ஏற்படின் இது பெரும்பாலான மனப் பிறழ்வுகளுக்கும் காரணமாகும். இது பற்றி விளக்கமாக பிறகு பேசுவோம். இப்போது இதன் நெறிப்படுத்தும் முறையை மட்டுமே பார்ப்போம்.

இயற்கை எல்லாவற்றையும் சரியான முறையில் தான் உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால் நாம் தான் அதன் நோக்குகளை புரிந்துகொள்ளாமல் அவைகளை எதிர்ப் பயனுக்குள்ளாக்குகிறோம் அல்லது அவைகளை பயனற்றவைகள் எனக் கருதுகிறோம். இது மிகக் கடுமையான பின்விளைவுகளை உருவாக்குகிறது. மனிதர்களுக்குத் தெரியாமலேயே எத்தனையோ படைப்புகள் மனிதனின் இந்த பூமி சார்ந்த வாழ்வுக்கு பயனளித்துக் கொண்டிருக்கின்றன. இதைப்போன்றதுதான்  உயிரும்  அதன் உடல் உறுப்புக்களும். நினைத்துப் பாருங்கள். ஒரு தொழிற்சாலை போன்றே இயங்கும் இந்த உடல். உலகின் எல்லா கழிவுகளையும் ( இயற்கையில் விளைந்தது) உரமாக்க அதற்கென தனியே உள்ள இயற்கையின் படைப்புகள். இந்த உலகில் எல்லாமே வெறும் கார்பனும் நைட்ரஜனும். உரம் உணவாகி, உயிராகி, கழிவாகி மறுபடியும் உரமாகி, உயிராகி…   . இது பிழையின்றி நடக்கும் ஒரு இயற்கைச் சுழற்சி.

இதற்கும் மேலே, மனிதர்களிடத்தில் மன மேம்பாட்டுக்கென இயற்கை உருவாக்கிய மனம் சார்ந்த சில கருவிகள் உண்டு.  அதில் ஒன்றுதான் இந்த குற்ற உணர்வு- guilty feeling - என்பது. மனிதர்களின் சிறு குற்றங்களுக்கான சிறைத்தண்டனைகள் கூட, மனிதனின் தனிமை வாசத்தில் எந்த வித இடையூறுமின்றி இந்த குற்ற உணர்வு அவனை மேம்படுத்தி குற்ற வழக்கத்திலிருந்து அவனை விடுவிக்க வாய்ப்பிருக்கிறது எனும் நோக்கில்தான் உருவாக்கப் பட்டவைகள் என்றே நான் கருதுகிறேன்.

அரிதாக இந்த குற்ற உணர்விக்கு ஆளான ஒரு சிறுத்தையின் நடவடிக்கைகளை இந்த காணொளியில் காணுங்கள். http://www.youtube.com/watch?v=yE6Z031P9rU

தனது உணவுக்காகஒரு பபூனை வேட்டையாடிய இந்தச் சிறுத்தை அந்தப் பபூனின் மடியைக் கவ்விக்கொண்டு பாலைக் குடித்துக் கொண்டிருக்கும் அதன் குட்டியை தாமதமாகத்தான் பார்க்க நேரிட்டு அதிர்ச்சியடைகிறது.   தாயைக் கொல்லத்துணிந்த சிறுத்தைக்கு அதன் குட்டியின் மீது பல் பதிக்கத் துணிவில்லை. பாலைக் குடித்துக் கொண்டிருந்த நிலையில் அதன் தாயை இழந்த பபூன் குட்டிக்கு தனது பால் காம்புகளைக் காட்டிக் கொண்டு குட்டியை பால்குடிக்கும்படிக்கு  தன்னோடு அணைக்க முயலும் சிறுத்தையிடம் தெரிவது தாயண்பா அல்லது குற்ற உணர்வா? குழப்பமே. இதையும் மீறி அந்தக் குட்டியை ஒரு கழுதைப் புலியிடமிருந்தும்  காப்பாற்றுகிறது சிறுத்தை. இது மனிதர்களிடமே கூட காண முடியாத செயல்தான்.

சிறுத்தைகளே இப்படியிருக்கையில் பெரியவர்கள் மேல் கொண்ட வன்மத்தை அவர்களது குழந்தைகளை கொன்று தீர்த்துக் கொள்ளும் ஈனர்களை என்ன சொல்வது.  இவர்கள் தங்கள் மனதை நெறிப்படுத்தும் மனசாட்சியையும்   ( குற்ற உணர்வுகளையும் ) கொன்றவர்களே.

குற்ற உணர்வுகள் மட்டும்தான் நம் செயல்களைக் குறித்து நம்முன் வன்மையான கேள்விகளை வைக்கும்.  இது நமது நோக்கினை மறு பரிசீலனை செய்ய நம்மை வற்புறுத்தும். நமது செயல்களால் நாம் அடையும் / அடைந்த பலன்களைக் குறித்து மறு கோணத்தில் அலசி எடைபோடும். நாம் எந்தச் செயல் குறித்தும் மற்றும் அதன் மேம்பாடு குறித்தும் பல விதமான அழுத்தமான கேள்விகளை முன்னிறுத்தி அதில் கிடைக்கும் பதில்களால் நமது மேம்பாடுதலை அல்லது  மேம்படுதலை  நோக்கி  நம்மை வளர்க்கும். நம்மை வழி நடத்தும்.  இந்த குற்ற உணர்வையே அல்லது இந்த கேள்வி கேட்கும் உணர்வையே நாம் மனசாட்சி என்கிறொம்.

இது ஏதோ ஒருவழிப்பாதை செயலைப்போல, பற்பசைக் குழல் மீது அழுத்தத்தை கொடுத்தால் வழியும் பற்பசையைப் போல, நம்மிடமிருந்து எதையும் எதிர்பாராது நடக்கும் செயல் அல்ல. இந்த செயல் மிக முக்கியம் வாய்ந்தவை.  இந்தக் கேள்விகளுக்கு நாம் அளிக்கும் பதில்கள் ஒரு   வரைமுறைக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். மேலும் நாம் கொள்ளும்  இந்த வரைமுறைகளும் சமுதாயத்திற்கு எதிரானதாகவோ அல்லது மிகுந்த சுயநலமிக்கதாகவோ மாறி மறுபடியும் நமது குற்ற உணர்வைத் தூண்டி அதை மீண்டும் கேள்வி கேட்க வைத்து விடக்கூடாது. அப்படி நடந்தால் விளைவு கடுமையாக இருக்கும்.  இந்த மனசாட்சி நமது செயல்களுக்கு நம்மை கேள்வி கேட்டு அதற்கு சரியான பதில் கிடைக்காவிடில் நம்மைக் கொன்று போடும். அல்லது சரியான பதில் பெற்று நம்மை உண்மையை உணரத் தூண்டி நம்மை நெறிப்படுத்தும்.

ஊடகங்களில் எத்துனையோ செய்திகளில் இந்த குற்ற உணர்வால் நெறிப்பட்டோரைக் காணலாம். தர்க்கம் செய்து கொண்டிருந்த போது  தற்செயலாய் தள்ளியதில்  தாயைக் கொன்ற ஒருவர், இறந்த தாயை அடக்கம் செய்து மூன்றே நாளில் தன் மன உளைச்சல் தாளாது காவல் நிலையத்தில் சரணடைந்து தன்னை கைது செய்யச்சொல்லி அழுததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இது மட்டுமல்ல, தன் மணைவியைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற கணவன் தினமும் அவள் தன் கனவில் வந்து தொல்லை தருவதால் அதைத் தாங்கமாட்டாமல் தன் மணைவி இறந்து இரண்டு வருடங்கள் கழித்து தானே காவல் நிலையம் சென்று சரணடைந்த  நிகழ்வும்  ஊடகங்களில் வந்தது.

நாம் செய்யும் செயல்களுக்கு சரியான காரணங்கள் கிடைக்காவிடின் இந்த குற்ற உணர்வு நமக்குள் எழுந்து நம்மைக் கொன்று போடும். ஆனால் இதைத்தடுக்க இந்த குற்ற உணர்விலிருந்து தப்பிக்க நாம் ஏதேனும் ஒரு காரணங்களைக் கண்டுபிடித்து நம்மைச் சமாதானப் படுத்திக் கொண்டோமானால் இந்த நெறிப்படுத்தல் நடக்காது. அதுவுமல்லாது இந்த குற்ற உணர்வும் நம்மைக் கொல்லாத வாறு நாம் சமாதானமடைவோம்.  இந்த  defensive  mechanism  நம்மை மனப்பிறழ்விடமிருந்து காப்பாற்றினாலும் நம்மை ஒரு - anti social  - சமுதாய எதிரியாக்கிவிடும். இது மிக மிக ஆபத்தானது. இந்த நிலை ஒரு   cumulative effect ஐ உண்டு பண்ணி நம்மை காலந்தாழ்த்தியேனும் அழித்துவிடும்.

சொல்லப்போனால் இப்போது பெண் விடுதலைக்கெதிராக பேசும் சிலர் சொல்லும் காரணங்கள் மேலே சொன்ன குற்ற உணர்வைத் தவிர்க்க அவர்கள் கையாளும் ஒரு defensive mechanism  தான்.  இதற்காகவே இவர்கள் ஒரு  natural justice  இல்லாது ஒரு மனிதரின்  உணர்வுகளுக்கும் ஒரு மனிதரின் சுதந்திரத்திற்கும் எதிரான தங்களது கோட்பாடுகளும், நடவடிக்கைகளும் அவர்களின் பாதுகாப்பு கருதியே என காரணம் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள்.  இந்தக் காரணங்கள்  இல்லாவிடில்  இவர்கள் செய்யும் காரியங்களுக்காக குற்ற உணர்ச்சிகள் மிகுந்து இவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, ஒன்று இவர்களை நெறிப்படுத்தும் அல்லது இவர்களை கடுமையான மனப் பிறழ்வுகளுக்குள்ளாக்கிவிடும்.

No comments:

Post a Comment